Thursday, 9 February 2017

கடவுள் இல்லை என்று சொல்பவர்களுக்கு என்ன பதில் சொல்ல போகிறீர்கள்?


கேள்வி.....கடவுள் இல்லை என்று சொல்பவர்களுக்கு என்ன பதில் சொல்ல போகிறீர்கள்?
-
சுவாமி வித்யானந்தர்.....
-
கடவுள் இருக்கிறார் என்று நம்புபவனும், இல்லை என்று நம்புபவனும், இரண்டுபேரும் உண்மையை நேருக்கு சேர் காணாதவர்கள். இரண்டுபேரும் தங்கள் நினைப்பது தான் சரியாக இருக்கும் என நம்புகிறார்கள்.
கடவுளை நம்பும் ஒருவனிடம், நீ ஏன் கடவுளை நம்புகிறாய் என்று கேட்டால், எனது முன்னோர்கள் கடவுளை நம்பினார்கள் அல்லது எனக்கு நம்பிக்கைக்குரியவர்கள் கடவுள் இருப்பதாக சொன்னார்கள் என்று அவனது நம்பிக்கைக்கு பிறரையே ஆதாரம் காட்டுகிறான்.
-
அதே போல் கடவுள் இல்லை என்று நம்புபவனிடம், ஏன் கடவுளை நம்பவில்லை ? என்று கேட்டால், அவனும் இன்னார்,இன்னார் கடவுள் இல்லை என்று சொன்னார்,அதனால் அவன் சொன்னதை நான் நம்புகிறேன் என்று சொல்வான்.
-
இரண்டு பேரும் தங்கள் கருத்திற்கு நம்பிக்கைகளையே ஆதாரமாக கொண்டிருக்கிறார்கள்.
-
கடவுளை நேரில் கண்டவன் நம்புகிறேன் என்ற வார்த்தையை பயன்படுத்த மாட்டான். எனக்கு தெரியும் நான் கண்டிருக்கிறேன் என்று சொல்வான்.
-
அப்படியானால் கடவுளை கண்ட ஒருவர் நான், கடவுளை கண்டிருக்கிறேன் என்று மற்றவர்களிடம் ஏன் கூறுவதில்லை?
-
ஏனென்றால், அவர் யாரிடம் இதுபற்றி சொல்கிறாரோ, அவன் ஒருவேளை இவர் கடவுளை கண்டிருப்பார் என்று நம்புவான்,அல்லது இவர் கடவுளை கண்டிருக்கமாட்டார் என்று நம்புவான். அங்கேயும் நம்பிக்கை தான் வேலை செய்கிறது.
-
அப்படியானால் இதற்கு தீர்வே இல்லையா? இருக்கிறது.
-
கணிதம் தெரியாத ஒருவன் கணிதத்தின் முக்கோணவிதியை கற்கவேண்டும் என்று உங்களிடம் வந்தால், நீங்கள் முதலில் என்ன கேட்பீர்கள்? கணிதத்தில் இதுவரை என்ன கற்றிருக்கிறாய்? என்று கேட்பீர்கள். ஒருவேளை அவன் கூட்டல்,கழித்தல் போன்ற அடிப்படை கணிதம் எதையும் கற்கவில்லை என்று சொன்னால், நீங்கள் என்ன சொல்வீர்கள்? முதலில் கணிதத்தின் அடிப்படையை கற்றுக்கொள்,அதன் பிறகு தான் முக்கோணவிதியை பற்றி,நான் சொல்வது உனக்கு புரியும் என்பீர்கள்.
-
எழுத படிக்க கற்றுக்கொள்ளும் போது,முதலில் மிகவும் சிரமப்பட்டு கற்றுக்கொண்டோம், தற்போது அது எளிதாக இருக்கிறது. எழுதப்படிக்க கற்றுக்கொள்ளாத பெரியவர் ஒருவர் , எவ்வளவு தான் வளர்ந்திருந்தாலும், அவர் ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவனை விட படிப்பாற்றலில் கீழானவர் தான்.ஆகவே உடல் வளர்ச்சியை வைத்து ஒருவரை எடைபோட முடியாது.
-
நம்மை நாம் ஆராய வேண்டும். நமது மனத்தில் எழும் எண்ணங்களை முறைப்படுத்தி, அவைகளை கட்டுப்படுத்த வேண்டும். பிரம்மச்சர்யம் காக்க வேண்டும். இன்னும் பல பயிற்சிகளை முறையாக மேற்கொண்ட பிறகு தான், கடவுளை காணமுடியும்.
-
ஒருவர் ஒரு மாம்பழத்தை சாப்பிட்டுவிட்டு இனிப்பாக இருக்கிறது என்றார். அதை இதுவரை சாப்பிடாத ஒருவன், எனக்கு இனிக்கவில்லையே என்றானாம். அட,முட்டாளே மாம்பழத்தை சாப்பிடாத உனக்கு எப்படி இனிக்கும்? அதை சாப்பிட்டுபார் உனக்கும் இனிக்கும் என்றான்.
அதே போல் கடவுளை காணாத உனக்கு கடவுளை பற்றி என்ன தெரியும்? அதை உனக்கு புரியவைக்கவே முடியாது. நீயும் கடவுளை கண்டால், உனக்கு அது பற்றி புரியும். கடவுளை கண்டபிறகு உன்னாலும், அடுத்தவனுக்கு புரியவைக்க முடியாது.
-

No comments:

Post a Comment