Thursday, 9 February 2017

பிறமதத்தை திட்டி உங்கள் கோபத்தை வெளிக்காட்டும் இந்துக்களுக்காக இந்த பதிவு

பிறமதத்தை திட்டி உங்கள் கோபத்தை வெளிக்காட்டும் இந்துக்களுக்காக இந்த பதிவு...
-
சமீப காலமாக பிற மதங்களை திட்டியும், அவர்களது வழிபாடுகளை குறைகூறியும் கருத்து பதிவிடுபவர்கள் அதிகரித்து வருகிறார்கள். இவர்கள் தங்களை தீவிர இந்து விசுவாசிகள் என்று பிறருக்கு காட்டிக்கொள்கிறார்கள்.
-
அவர்களிடம் நான் கேட்பது இது தான்
-
நீங்கள் உங்கள் சொந்த மதத்தை பற்றி எந்த அளவுக்கு தெரிந்துவைத்திருக்கிறீர்கள்?
-
இறைவனை காண்பதே இந்துமதத்தின் லட்சியம் என்பது உங்களுக்கு தெரியுமா? அதற்காக ஏதாவது முயற்சி எடுத்திருக்கிறீர்களா?
-
இந்துமதத்தை பற்றி தெரியாத எத்தனை பேருக்கு இந்து மதத்தின் தத்துவங்களை கற்றுக்கொடுத்திருக்கிறீர்கள்?
-
உங்களை ஒருவன் முட்டாள் என்று திட்டினால், பதிலுக்கு அவனை முட்டாள் என்று திட்டுவது சிறந்ததா? அல்லது அவன் உங்களை புத்திசாலி என்று உணரும் படி உங்கள் நடவடிக்கைகளை மாற்றிக்கொள்வது சிறந்ததா?
-
உங்களுக்கு இந்துமதத்தின் தத்துவம் எந்த அளவுக்கு தெரியும்? நீங்கள் ஏன் இந்துக்களிடையே இந்துமதத்தை போதித்து, மக்களை மதம் மாறாமல் காப்பாற்க்கூடாது?
-
இந்துமதத்தை பற்றி தெரியாததால் தானே மக்கள் மதம்மாறுகிறார்கள். பணத்திற்காகவும், வாளுக்காகவும் மதம் மாறியவர்கள், இந்துமதத்தை பற்றி தெரியாதவர்கள் தான்.
-
நீ என்னை தொடாதே! இதை படிக்காதே! இதை செய்யாதே என்று தான் நமது அதிபுத்திசாலிகள் ஆயிரம் ஆண்டுகளாக பேசிவந்தார்கள். யாராவது இந்துமதத்தை பாமரமக்களுக்கு புரியவைத்தார்களா?
-
இவர்களும் இந்துமதத்தை பற்றி தெரிந்துகொள்ளமாட்டார்கள். மற்றவர்களுக்கும் அது பற்றி உபதேசிக்கமாட்டார்கள்
-.
ஆகவே பிறரை திட்டுவதை முதலில் நிறுத்துக்கள். ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடுங்கள். உண்மையான இந்து ஒருபோதும் மதம்மாறுவதில்லை.
-
ஏற்கனவே மதம்மாறிய இந்துக்களுக்கு, நீங்கள் இந்துமதத்தை போதிக்கவில்லை.அது உங்கள் தவறு. அதற்காக உங்களை நீங்களே குறைகூறி கொள்ளுங்கள். மதம் மாறியவர்களை குறைகூறாதீர்கள்.
-
இந்துமதத்தை பற்றி மிகவும் தரக்குறைவாக பேசுகிறார்கள். டிவியில் பேசுகிறார்கள். சமூக ஊடகங்களில் பேசுகிறார்கள், அரசியல்வாதிகள் பேசுகிறார்கள், கோவில்களின் முன் பேசுகிறார்கள், தெருக்களில் கூட்டம்போட்டு பேசுகிறார்கள், வீட்டிற்கு வந்தே பேசுகிறார்கள். அதெல்லாம் உங்களுக்கு தெரியவில்லையா என்று நீங்கள் புலம்புவது புரிகிறது.
-
அவர்கள் ஏன் இவ்வாறு பேசுகிறார்கள்? அப்போதாவது உங்களுக்கு உணர்ச்சி வருமா என்று உங்களை சோதிக்கத்தான். நீங்கள் மண்ணாங்கட்டிபோல வாழ்ந்து வருகிறீர்கள். உங்களுக்கு சூடுசொரணை இல்லை. நீங்கள் சோம்பேரிகள்.
உங்களை இவ்வாறு பல வழிகளில் தாக்க வேண்டும். உங்களை இந்த நாட்டிலே வாழ முடியாத படி நெருக்கடி தரவேண்டும். அப்போதாவது உங்களுக்கு, உலகத்தில் சிறந்த மதமான இந்துமதத்தை கற்றுக்கொள்ள ஆர்வம் வருகிறதா என்று பார்க்கத்தான்,இத்தனை சோதனைகள் வருகிறது.
-
நீங்களும் அவ்வப்போது விழித்துஎழுகிறீர்கள்.ஆனால் இந்துமதத்தை கற்கவேண்டும் என்ற ஆர்வம் அப்போதும் வரவில்லை. மாறாக அவர்களை நீங்கள் திட்டுகிறீர்கள், அவர்களது மதத்தை திட்டுகிறீர்கள். பிறகு மறுபடியும் சோம்பேரிகளாகிவிடுகிறீர்கள்.
-
உங்களுக்கு ஒரு பொறுப்பு உள்ளது. உங்களை திட்டுபவர்களை பதிலுக்கு திட்டாதீர்கள். மாறாக இந்துமதத்தை அவர்களுக்கு போதியுங்கள். அவர்கள் அறியாமையை நீக்குங்கள். அந்த திறமையை வளர்த்துக்கொள்ளுங்கள். ஒருவேளை இந்துமதத்தை பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாவிட்டால்,அப்போதும் திட்டாதீர்கள். இந்துமதத்தை பற்றி தெரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.
-
இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறதே,இவ்வாறே சென்றால் இந்துமதம் அழிந்துவிடுமே என்று சிலர் பயந்து நடுங்குகிறார்கள்.
-
அந்த உணர்வு உங்களுக்கு இருந்தால் என்ன செய்ய வேண்டும்?
-
இந்துமதத்தை பற்றி தெரியாத,அதே நேரம் தெரிந்துகொள்ள ஆர்வமாக பல நாடுகளில் பலர் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு இந்துமதத்தை போதியுங்கள் கூட்டம்கூட்டமாக அவர்களை இந்துவாக்குங்கள். அப்போது உலக அளவில் இந்துக்கள் எண்ணிக்கை அதிகரித்துகொண்டே செல்லும்.
-
இந்துமதத்தை காப்பாற்ற இரண்டு வழிகள் தான் உள்ளது. 1. இந்துமதத்தை நாம் கற்றுக்கொள்வது 2. இந்துமதத்தை பிறருக்கும், பிறநாடுகளுக்கும் கற்றுக்கொடுப்பது.
-
இந்துக்களுக்கு என்று உலக நாடுகளிடையே ஒரு நல்ல பெயர் இருக்கிறது. அதை உங்கள் கெட்டசெயல்களால் கெடுத்துவிடாதீர்கள். வெளிநாடுகளில் பலர் இந்துக்களாக இல்லாவிட்டாலும், இந்துமதவிசுவாசிகளாக இருக்கிறார்கள்.அவர்கள் மனதில் இந்துக்கள் பற்றிய கெட்ட எண்ணத்தை விதைக்காதீர்கள்.
-
ஒரு நாடு சிறந்த நாடாக இருக்க வேண்டுமானால், அந்த நாட்டில் வாழ்பவர்கள் சிறப்பானவர்களாக,அந்த நாட்டின்மீது விசுவாசமும்,நல்ல எண்ணமும் கொண்டவர்களாக இருக்க வேண்டும். அதேபோல் ஒரு மதத்தில் எவ்வளவு தான் சிற்ந்த கருத்துக்கள் இருந்தாலும், அந்த மதத்தை பின்பற்றுபவர்கள் நல்லவர்களாகவும், அன்புள்ளம் கொண்டவர்களாகவும் இருக்கவேண்டும்.
-
பிறர் நமக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கெடுதல் செய்ய போதும். நாம் அவர்களுக்கு கெடுதல் செய்யவில்லை. அதனால் தான் இன்னும் வாழ்ந்து வருகிறோம். எதிர்காலத்தில் நமது மதம் சிறப்பாக வாழவேண்டுமானால்,இதே நடைமுறையை தான் பின்பற்ற வேண்டும்.
-
நமது மதத்தை இகழ்ந்து பேசுபவர்களை வாழ்த்துவோம், அது அவர்கள் மனத்தை மாற்றி நமது மதத்தின் மீது நல்ல எண்ணத்தை உருவாக்கட்டும்.
வெறுப்பு மேலும் வெறுப்பை தான் விளைவிக்கும், அன்பு ஒன்று தான் வெறுப்பை வெற்றிகொள்ளும்.
-
..சுவாமி வித்யானந்தர்
--

No comments:

Post a Comment