Thursday, 9 February 2017

இந்து கோவில்களில் கிடைக்கும் காணிக்கைகள் இந்துக்களின் நலன்களுக்கு மட்டும் பயன்படாமல்


கேள்வி....இந்து கோவில்களில் கிடைக்கும் காணிக்கைகள் இந்துக்களின் நலன்களுக்கு மட்டும் பயன்படாமல், அரசாங்கம் பிற மதத்தினரின் நலன்களுக்கும் பயன்படுத்துகிறதே, இது என்ன நியாயம்?
-
சுவாமி வித்யானந்தர்.....
-
இதில் உள்ள அரசியல் விசயங்களை தற்போது விவாதிக்க முடியாது. ஆனால் இதில் உள்ள ஆன்மீக விசயத்தை விவாதிக்கலாம்.
-
மேலோட்டமாக பார்த்தால் இந்துக்கள் கொடுக்கும் காணிக்கைகள் இந்துக்களின் நலன்களுக்கு தான் பயன்பட வேண்டும் என்ற எண்ணத்தையே தோற்றுவிக்கிறது.
-
ஆனால் இதை சற்று ஆழமாக சிந்திக்க வேண்டும். ஒருவன் எதற்காக கோவில்களுக்கு சென்று பணத்தையோ, நகைகளையோ காணிக்கையாக செலுத்துகிறான்? 
-
ஒரு வேளை தனது வேண்டுதல்கள் ஏதாவது நிறைவேறியிருக்கலாம். அல்லது அவனுக்கோ, குடும்பத்திற்கு ஏற்பட்ட பாவத்தை போக்குவதற்காகவோ, அல்லது ஏதாவது நோக்கத்திற்காகவோ, இறைவனுக்கு காணிக்கை செலுத்துகிறான்.
-
அவன் இறைவனுக்கு காணிக்கை செலுத்துகிறான். அது அவனுக்கும் இறைவனுக்கும் இடையே உள்ள உறவு.
-
இறைவன் என்பவர் ஒரு குறிப்பிட்ட ஜாதி,மத மக்களுக்கு மட்டும் சொந்தமானவர் இல்லை. அவர் பிரபஞ்சத்திலுள்ள அனைத்து மக்களுக்கும்,அனைத்து உயிர்களுக்கும் சொந்தமானர். 
-
ஆகவே இந்த ஜாதியினருக்கு தான் நன்மை செய்ய வேண்டும். இந்த மத்தினருக்கு தான் நன்மை செய்ய வேண்டும் என்ற உங்கள் குறுகியபுத்தி அவருக்கு கிடையாது. யாருக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் இறைவனுக்கு உபதேசிக்க முடியாது. 
-
தற்போது கோவிலில் கிடைக்கும் பணத்தை அரசாங்கத்திற்கு கொடுத்து. அதன் மூலம் தன்பணியை அவர் செய்வார். இன்னும் வரும் காலங்களில் வேறுஏதாவது செய்ய வேண்டுமானால் அதையும் அவரே தீர்மானிப்பார்.
-
உங்களுக்கு ஒருவேளை, கோவிலில் செலுத்தப்படும் பணம் தவறான வழிகளில் செல்வதாக தோன்றினால், அது குறித்து இறைவனிடம் பிரார்த்திப்பதற்கு மட்டுமே உங்களுக்கு உரிமை உள்ளது. 
-
நீங்கள் இறைவனுக்கு காணிக்கை செலுத்திவிட்டால், அதை அவர் என்ன செய்கிறார். யார் யாருக்கு கொடுக்கிறார் என்று இறைவனை கேள்வி கேட்க கூடாது. அதற்கான உரிமை உங்களுக்கு இல்லை. அது இறைவனது சுயவிருப்பத்தை பொறுத்தது. இறைவா நான் கொடுக்கும் பணத்தை யார்யாருக்கு கொடுக்கிறாய்,அதை பற்றிய கணக்கு காட்டு என்று கேள்வி கேட்டால், அது அவரை அவமதிப்பதாகும். நீங்கள் இறைநம்பிக்கை இல்லாதவன் என்பதை நீங்களே ஒப்புக்கொள்வதாகும். அவ்வாறு இறைவன்மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லாவிட்டால் நீங்கள் செலுத்திய காணிக்கையால் உங்களுக்கு எந்த பலனும் ஏற்படாது.
-
சிலர் இந்த பிறவியிலேயோ அல்லது முற்பிறவியிலேயோ சிலருக்கோ, அல்லது பலருக்கோ பல பாவங்களை செய்திருப்பார்கள். அது பற்றிய விபரம் அவனுக்கு தெரியாது. ஆனால் இறைவனுக்கு தெரியும். ஆகவே எதை செய்தால் பக்தனுக்கு நன்மை ஏற்படும் என்பது இறைவனுக்கு தான் தெரியும். நீங்கள் வெறுக்கும் சிலருக்கு உங்கள் காணிக்கையின் பலன் சென்று சேரலாம். அது குறித்து நீங்கள் கோபப்படலாம்.அப்போதும் அது குறித்து நீங்கள் கேள்வி கேட்க முடியாது. அது இறைவனை கேள்வி கேட்பதாகும்.
-
ஆகவே இறைவன்மீது நம்பிக்கை கொண்டவர்கள்,கோவில்களில் காணிக்கையை செலுத்திவிட்டால், அதோடு உங்கள் கடமை முடிந்துவிடுகிறது.
-
சில வேளைகளில் திருடர்கள் அந்த காணிக்கையை திருடிவிடலாம். சிலர் கூட்டாக கொள்ளையடிக்கலாம். அப்போது என்ன செய்வது என்று நீங்கள் கேட்கலாம்.
-
அது இறைவனது வேலை. அதை பற்றி நீங்கள் மூளையை குளப்பிக்கொள்ள வேண்டியதில்லை. நீங்கள் இறைவனுக்கு தானே கொடுத்தீர்கள். இப்போது அந்த பணம் யாருடையது? இறைவனுடையது. இறைவனது பணத்தை தானே கொள்ளையடித்தார்கள். அதற்கு பின்னால் இருக்கும் விசயங்கள் உங்கள் மூளைக்கு எட்டாது. அது இறைவனது வேலை. சில வேளைகளில் திருடர்கள் அந்த பணத்தை திருடவேண்டும் என்பது இறைவனது விருப்பமாக இருக்கலாம், சில வேளைகளில் கூட்டமாக கொள்ளையர்கள் கொள்ளையடிக்க வேண்டும் என்பது இறைவனது விருப்பமாக இருக்கலாம். 
-
இறைவனது விருப்பம் இன்றி எதுவும் நடக்காது என்று தானே நீங்கள் இத்தனை காலம் நம்பினீர்கள். இப்போது மட்டும் ஏன் நம்பமறுக்கிறீர்கள். ஆகவே இதுவும் இறைவனது விருப்படியே நடக்கிறது.
-
அது எப்படி இறைவனது விருப்படி நடக்கும் என்று நீங்கள் கேள்வி கேட்டால்? நீங்கள் இறைவனை நம்பவில்லை. இறைவனையே கேள்வி கேட்கிறீர்கள் என்பது தெளிவாகிறது. இறைவனை குறித்து சந்தேகப்பட்டால், அப்போது நீங்கள் பக்திமார்க்கத்தில் செல்ல முடியாது. கோவில்கள் உங்களுக்கு உதவாது. அனைத்தையும் ஆராய்ந்து அறியும், ஞானமார்க்கத்தையோ, அல்லது கர்மமார்க்கத்தையோ தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.
-
ஞானமார்க்கத்தில் செல்லும் ஒருவன் இறைவன் தனக்குள்ளேயே இருப்பதாக நினைக்க வேண்டும். ஆகவே கோவில்வழிபாடு அவனுக்கு பயன்தராது. கர்ம மார்க்கத்தில் செல்லும் ஒருவன், பிறருக்கு நன்மை செய்தால் நல்லது நடக்கும் ,தீமை செய்தால் தீமை நடக்கும் என்பதை புரிந்துவைத்திருப்பான். ஆகவே அவன் பிறருக்கு தொடர்து நன்மைகள் செய்துகொண்டே செல்வான்.முடிவில் முக்தி பெறுவான். கோவிலையோ கடவுளையோ அவன் நம்பவேண்டியதில்லை.
-
ஒரு சாதாரண மனிதன் அரசனது செயல்பாடுகளை நேரில் கண்டு அறிய வேண்டும் என்றுவிரும்பினான். ஆகவே அரசசை கவரும் பொருட்டு, பல வேலைகளை செய்துவந்தான். பல வருடங்கள் கழித்து ஒரு நாள் அரசன் இவனை பற்றி கேள்விப்பட்டு, இவனை தன்னை காணவருமாறு அழைத்தார். அவனும் மிக்க மகிழ்ச்சியோடு வந்தான். அப்போது அரசர் அவனை அருகே அமரவைத்து, அவர் செய்து கொண்டிருக்கும் பணிகளை பற்றி விவரித்தார், ஓரளவு கேட்டவுடனேயே இந்த மனிதன், அரசே! உங்கள் பணிகள் சிறப்பானவை.ஆனால் எனது சாதாரண அறிவால் அனைத்தையும் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் அனைத்தும் மகத்தானவை, சிறந்தவை என்பது மட்டும் புரிகிறது. என்னை அன்போடு வரவேற்று எனது ஆசையை நிறைவேற்றியதற்கு நன்றி என்றான்.
-
இந்த கதையில் வரும் அரசன் போன்றவர் தான் இறைவன். அவரது செயல்களை பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமானால், நீங்கள் அவரை நேரில் சந்திக்க வேண்டும். அவரது பணிகள் பற்றி அவரிடமே தான் கேட்க வேண்டும். அப்போது சில விசயங்கள் புரிந்துகொள்ள முடியும். இறைவனது பணியை அவரை தவிர மற்றவர்கள் யாரும் புரிந்துகொள்ள முடியாது.
-
ஒரு வேளை உங்களுக்கு இந்துக்களுக்கு மட்டுமே நன்மை ஏற்பட வேண்டும் என்று நினைத்தால், அதற்காக தனியாக அமைப்புகளை உருவாக்க வேண்டும். அதன் மூலம், உங்கள் விருப்படி மக்களுக்கு உதவலாம். 
-
மீண்டும் சொல்கிறேன், கோவிலில் குடியிருக்கம் இறைவன் என்பவர் ஒருகுறிப்பிட்ட சாதியினருக்கோ, ஒருகுறிப்பிட்ட மத்தினருக்கோ சொந்தம் அல்ல. 
அவ்வாறு அவர் ஒரு குறிப்பிட்ட மத்தினருக்கு மட்டுமே சொந்தம் என நீங்கள் நினைத்தால், அவர் இறைவன் இல்லை என்பதை நீங்களே ஏற்றுக்கொள்வதாக தான் அர்த்தம்.
----

No comments:

Post a Comment