Thursday, 9 February 2017

அவதாரம் என்றால் என்ன?


கேள்வி....அவதாரம் என்றால் என்ன? ராமர், கிருஷ்ணர் போன்றவர்களை அவதாரம் என்கிறார்களே இது எப்படி?
-
சுவாமி வித்யானந்தர்....
-
நாம் மறுபிறவி கொள்கையை ஏற்றுக்கொள்கிறோம். ஒருசெல் உயிரிலிருந்து பரிணாமம் அடைந்து கடைசியில் மனிதனாகிறது என்பதோடு நின்றுவிடாமல், கடைசியில் அந்த உயிர் இறைவனோடு ஒன்று கலந்து இறைவனாகிவிடுகிறது. முக்தியடைந்துவிடுகிறது என்கிறோம். 
-
இறைவன் உருவம் உள்ளவராகவும் அதேபோல் உருவம் இல்லாதவராகவும் இருப்பதாக நமது தத்துவங்கள் கூறுகின்றன. இறைவனை பற்றி தெரிந்துகொள்ள துவைதம்,விசிஷ்டாத்வைம்,அத்வைதம் ஆகிய மூன்று தத்துவங்களையும் படிக்க வேண்டும். அது பற்றி இங்கே விவாதிக்கவில்லை
-
இந்த பரிணாமம் என்பது இறைவனிலிருந்து தொடங்கி படிப்படியாக கீழ்நிலையை நோக்கி செல்கிறது.அதாவது தேவர்கள்,மனிதர்கள்,விலங்குகள்,பறவைகள்,தாவரங்கள்.....இப்படியே சென்று ஒரு செல் உயிர் வரை பரிணமிக்கிறது. அதே போல் ஒரு செல் உயிர்...படிப்படியாக பரிணமித்து மனிதனாகி, தேவனாகி, இறைவனாகிறது. இது ஒரு வட்டம் போல் உள்ளது. முதலில் தோன்றியது ஒரு செல் உயிரியா? தேவனா? என்று கேட்டால், இது ஒரு வட்டம் போல உள்ளது. என்று தான் பதில் சொல்ல முடியும். எது முதலில் உள்ளதோ,அது தான் முடிவிலும் உள்ளது.
-
இறைவனுக்கு உருவம் இல்லை. இந்த இறைவன் ஒரு செல் உயிரிலிருந்து தேவன் வரை அனைவருக்குள்ளும் ஒரே போல் இருக்கிறான். உடல்கள் தான் மாறுகின்றன.இறைவன் மாறுவதில்லை. உடல்கள் எண்ணிக்கையில் அதிகரிக்கலாம். ஆனால் இறைவனுக்கு எண்ணிக்கை இல்லை.
-
இவ்வாறு மனிதன் பல்லாயிரம் பிறவிகளை கடந்து கடைசியில் முக்தி அடைகிறான். ஆகவே ஒவ்வொரு மனிதனின் தற்போதைய பிறவிக்கு முன்னால் முற்பிறவி ஒன்று இருக்கும்
-
ஆனால் எப்போமே உயிர்கள் கீழிலிருந்து மேல் நோக்கி சென்று முக்தி பெறுவதில்லை. சிலவேளைகளில் முக்தி நிலையிருந்து உயிர் மனிதனாக பிறக்கிறது. அந்த உயிருக்கு முற்பிறவி இல்லை. அது அதன் முதல் பிறவி. அவ்வாறு மேலிருந்து, முக்தியிலிருந்து, இறைவனிலிருந்து யார் மனிதனாக பிறக்கிறாரோ, அவர் தான் அவதாரம்.
-
சில காலங்களில் இந்த உலகத்தில் அதர்மம் அதிகரித்துவிடுகிறது. அதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.அது பற்றி தற்போது விவாதிக்க வேண்டாம். அவ்வாறு அதர்மம் அதிகரிக்கும் போது, அதை மனிதனால் சீர்படுத்த முடியாத நிலை வரும்போது, இதை சரிசெய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. அப்போது அவதாரம் ஏற்படுகிறது.
-
ஒரு அவதாரம் ஏற்படும்போது, அவர் மனித உடலில் தனது பணியை முடித்தபிறகு, சூட்சும உடலோடு பலவருடங்கள் வாழ்கிறார். தேவை ஏற்பட்டால் மீண்டும் மனிதனாக பிறந்து மக்களுக்கு உதவமுடியும். அவ்வாறு மீண்டும் மனிதனாக பிறந்தால், அவரை அந்த பிறவியில் அவதாரம் என்று சொல்ல முடியாது. இப்போது இந்த பிறவி பக்தர்களுக்கு பக்தியை பற்றியோ, ஞானத்தை பற்றி போதிப்பதற்காகவோ இருக்கலாம். இவ்வாறு இந்த அவதாரம் தனது பணியை நிறைவு செய்த பிறகு சூட்சும உடலோடு வாழும் இடம் சொர்க்கம் என்று அழைக்கப்படுகிறது.
-
இவ்வாறு பல சொர்க்கங்கள் இந்த பிரபஞ்சத்தில் உண்டு. இவர்கள் இருப்பது ஒரு சொர்க்கம். இவர்களது சொர்க்கத்தை இவர்களே உருவாக்குகிறார்கள் . இந்த அவதாரபுருஷனை கண்டு பக்தி செலுத்த வேண்டும்.அவருடனே வாழவேண்டும் என்று விரும்பும் பக்தர்கள், இந்த சொர்க்த்திற்கு வருகிறார்கள். பல காலம் இங்கேயே வாழ்கிறார்கள். படிப்படியாக இந்த சொர்க்கத்தில் உள்ளவர்கள் முக்திநிலையை அடைகிறார்கள். இந்த சொர்க்கத்தின் அதிபதியாக இருக்கும் அவதாரபுருஷரும் முக்தி அடைகிறார்.
--
இனி இந்த உலகத்தில் மீண்டும் அவதாரம் ஏற்படுவதற்கான சூழ்நிலை ஏற்படுகிறது. அப்போது அதேபோல் ஒருவர் பிறக்கிறார். அவருக்கு அது தான் முதல் பிறவியாக இருக்கும். அவரும் அதே போல் இந்த உலகத்தில் தர்மத்தை நிலைநாட்டுகிறார்.
-
இங்கே கேள்வி எழுகிறது. அப்படியானால் முதலில் தோற்றிய அவதாரமும் இப்போது தோன்றிய அவதாரமும் வேறு வேறா? 
-
ஏற்கனவே வந்தவர் தனது பணியை முடித்து விட்டு எங்கிருந்து வந்தாரோ,அந்த முக்தியில் ஒன்றுகலந்துவிட்டார். உருவமற்ற இறைவனில் ஒன்று கலந்துவிட்டார். தற்போது வந்திருக்கும் அவதாரமும் அந்த உருவமற் இறைவனிலிருந்து வந்தவர்தான். ஆகவே இரண்டு பேரும் வேறு வேறு என்று சொன்னாலும் சரி தான். இரண்டு பேரும் ஒருவர் தான் என்று சொன்னாலும் சரி தான். உடல் என்ற நிலையில் இருந்து பார்த்தால் இருவரும் வேறு வேறு. தோற்றிய இடம் என்ற இடத்தில் இருந்து பார்த்தால் இருவரும் ஒருவர் தான்.
-

No comments:

Post a Comment