கேள்வி..லிங்க வழிபாட்டின் தத்துவம் என்ன?
-
சுவாமி வித்யானந்தர்....
-
லிங்கம் என்பது சமஸ்கிருத சொல். அதன் அர்த்தம் உடல். பும்லிங்க என்றால் புருஷஉடல் அதாவது ஆண்உடல். ஸ்திரீலிங்க என்றால் பெண் உடல். வெறும் லிங்கம் என்றால் உடல் என்று பொருள். ஆகவே உறுப்பு என்ற பொருள் இல்லை என்பது தெளிவு.
-
அடுத்ததாக இந்துக்கள் ஏன் லிங்கத்தை வழிபடுகிறார்கள்?
-
லிங்கம் என்பது ஒரு சின்னம். ஒரு குறியீடு. பழைய காலத்தில் நிலவிய பல சின்னங்கள் இன்று வழிபடும் பொருளாக மாறியிருக்கின்றன. உதாரணமாக உடல் என்பது ஆன்மா உறையும் கோவில் என்று வேதாந்தம் சொல்கிறது.அதை விளக்கும் விதமாக கோவில்கள் கட்டப்பட்டன. ஆன்மா என்பது தேரில் வீற்றிருக்கும் அரசன் போன்றது என்பது ஒரு உவமை.இதை விளக்கும் விதமாக பிற்காலத்தில் தேர் உருவாக்கப்பட்டது. குண்டலி சக்தி என்பது பாம்புவடிவில் இருக்கும் சக்தி என்று சொல்லப்பட்டது. இதை விளக்குவதற்காக சிவனின் தலையில் பாம்பும், திருமால் பாம்பில் படுத்திருப்பதாகவும், சித்தரிக்கப்பட்டது. இவ்வாறு ஆதி காலங்களில் சின்னங்களாகவும், உதாரணமாகவும் சொல்லப்பட்டவை பிற்காலத்தில் வளர்ச்சியடைந்து வழிபடும் பொருளாக மாறியுள்ளது.
-
தொல்பொருள் ஆராய்ச்சி கண்ணோட்டத்தில் பார்த்தால் கூட சுமார் 20,000 வருடங்களுக்கு முன்பாகவே மக்கள் இதை ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.
-
லிங்கம் எதை குறிக்கிறது?
-
இந்த படைப்பு தோன்றுவதற்கு முன்பு, ஆணும் இருக்கவில்லை,பெண்ணும் இருக்கவில்லை. இறைவன் ஆணும்பெண்ணும் ஒன்று கலந்த ஒருவராக இருந்தார். ஆண்உடல்,பெண்உடல் எப்படி இருக்கும் என்பது நமக்கு தெரியும். இரண்டும் ஒன்று கலந்து, பிரிக்கமுடியாத படி இருக்கும் உடல் எப்படி இருக்கும்?
-
அதை கற்பனை செய்து பார்த்தால் ஒரு 6 அடி நீளம் கொண்ட ஒரு ஸ்தூபி போல இருக்கும். இறைவன் அப்போது ஒரே உடலாக இருந்தார். பின்னர் ஆணாகவும், பெண்ணாகவும் தன்னை பிரித்துக்கொண்டார், இவ்வாறு படைப்பு ஆரம்பமானது.
-
இதே கோட்பாட்டின்படி பிரபஞ்ச ஒடுக்கம் என்று நாம் குடுப்பிடுவதும் நடக்கும். அதாவது பிரிந்திருக்கும்,ஆணும் பெண்ணும் ஒன்றாகும் போது பிரபஞ்சத்தின் ஒடுக்கம் நிகழ்கிறது.
-
படைப்பு நடப்பதற்கு முன்பு உள்ள இறைவனை குறிப்பது லிங்கம்.அதாவது ஒரே உடல். ஆண்பெண் என்ற இரண்டுஉடலும் ஒன்று கலந்த ஒரே உடல். லிங்கம் என்பது இறைவனது உடலை குறிக்கிறது. ஒடுங்கிய நிலையில் உடல் இயக்கம் நிற்கிறது. மனத்தின் இயக்கம் நிற்கிறது.அப்போது இறைவன் தனது சொந்த நிலையான சத்சித்ஆனந்தம் எனப்படும் உருவமற்ற நிலையை அடைகிறார். சில தத்துவங்களில் இதை அவ்யக்தம் என்கிறது. லிங்க உடல் இயங்காத நிலையை குறிக்கிறது.
-
இறைவனின் லிங்க உடலை யாராலும் காண முடியாது. ஏன் முடியாது? ஏனென்றால் அது படைப்பு ஒடுங்கியிருக்கும் நிலை. அப்போது மனிதர்கள், விலங்குகள்,சூரிய சந்திரன் உட்பட பிரபஞ்சம் முழுவதுமே ஒடுங்கியிருக்கும். எதுவுமே இல்லாத அந்த நிலையை காண்பது யார்?அப்போது யாருமே இல்லை. இந்த பிரபஞ்சமே அந்த லிங்கத்திற்குள் ஒடுங்கிவிட்டது. அடுத்து துவங்கவிருக்கும் படைப்பும் அந்த லிங்கத்திலிருந்தே தான் ஆரம்பமாகும்.அப்போதும் அதை காணமுடியாது ஏனென்றால் அப்போது அது ஆணாகவும் பெண்ணாகவும் பரிணமித்திருக்கும். ஆகவே இறைவனின் லிங்க உடலை யாராலும் காணமுடியாது.அது நமது அறிவை கடந்தது என்று பொருள் அல்ல. அதை காணமுயலும் போது நமே அதற்குள் அடங்கிவிடுவோம்.
-
பழைய காலத்தில் மனிதர்கள் இறைவனை குறிப்பதற்கு பயன்படுத்திய சின்னம் லிங்கம்.
-
பழைய காலத்தில் இப்போது இருப்பது போல மனிதன் சிற்ப கலையில் சிறந்து விளங்கவில்லை. ஆகவே இறைவனை குறிக்கும் இந்த லிங்கத்தை, ஒரு நீள கல்போல வடிவமைத்து கொண்டான். லிங்கத்தின் கீழ் இருக்கும் பீடம் போன்ற அமைப்புகள் மிகவும் பிற்காலத்தை சேர்ந்தது. இறைவனை விளக்குவதற்கு மகான்கள் லிங்கத்தின் தத்துவத்தை விளக்கினார்கள்.
-
அந்த காலத்தில் பிச்சையேற்று அலைந்து திரியும் சித்தர்கள் சமாதி நிலை அடையும் இடத்தில் லிங்கத்தை வைப்பார்கள்.உண்மையில் அவர் லிங்கமாகிவிட்டார். இறைவனில் ஒன்றுகலந்துவிட்டார். இவர் இறைவனாகிவிட்டார் என்பதை மக்களுக்கு தெரிவிப்பதற்காக இவ்வாறு அவர் சமாதியடைந்த இடத்தில் லிங்கத்தை வைத்தார்கள். இந்த இடம் ஒரு புனிதஸ்தலமாக விளங்கியது. நீங்கள் சற்று ஆராய்ந்து பார்த்தால் தற்போது இருக்கும் பல கோவில்கள் முன்பு சித்தர்கள் சமாதியடைந்த இடங்களிலேயே கட்டப்பட்டிருப்பதை பார்ப்பீர்கள். அந்த இடங்களில் முன்பு சிறிய அளவில் லிங்க வழிபாடு நடந்திருக்கும். பிற்காலத்தில் அரசர்கள் அங்கே பிரம்மாண்ட ஆலயங்களை கட்டியுள்ளார்கள்.
-
ஆனால் இந்த லிங்கம் என்பது காலப்போக்கில் சாதாரண மக்கள் சமாதிகளிலும் லிங்கம் வைக்கப்பட்டது. இது பல நாடுகளில் பரவியது. மக்களின ் அன்றாட வாழ்வில் ஒன்று கலந்தது. பல நாடுகளில் அதன் வடிவங்கள் மாறின. இதுவே சிலுவையாக மாறியது என்று சுவாமி விவேகானந்தர் கூறுகிறார். சமாதிகளில் வைக்க தூக்கி செல்வதற்கு எளிதாக இருக்கவேண்டும் என்பற்காக குறுக்கே ஒரு கோடுபோன்ற அமைப்பு சேர்க்கப்பட்டுள்ளது அவ்வளவு தான்.
-
முற்காலத்தில் மக்கள் பயன்படுத்திய இந்த லிங்கம் என்பது நாம் தற்போது காணும் லிங்கம் போன்றது அல்ல. அது ஒரு நீள கல். அவ்வளவுதான். உயர்ந்த தத்துவங்கள் சாதாரண மக்களிடம் செல்லும் போது இவ்வாறு தான் மாறிவிடுகிறது. யோகத்தின் மிகஉயர்ந்த கோட்பாடான குண்டலினி சக்தி என்பது பாம்புபோல உள்ளது.ஆகவே அதை வழிபடலாம் என்பது யோகிகளின் கருத்து. இது சாதாரணமக்களிடம் சென்றபோது, அவர்கள் பாம்புகளை பிடித்து வழிபட ஆரம்பித்துவிட்டார்கள்.பாம்பு புற்றுகளை வழிபடுகிறார்கள். பாம்புக்கும் கடவுளுக்கும் என்ன சம்மந்தம்? ஏன் வழிபடுகிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது. ஆனால் பாம்பு பற்றிய இந்த கருத்தை முறைப்படுத்தி ஆராய்ந்து பார்த்தால், இதுவும் லிங்கவழிபாட்டை போலவே உயர்ந்த தத்துவத்தை குறிக்க பயன்படுத்திய சின்னம் என்பதை புரிந்துகொள்ளலாம்.
-
ஒரு உயர்ந்த தத்துவத்தை மக்களிடம் கொண்டு செல்லும் போது, அதன் உள் அர்த்தத்தை அவர்களால் புரிந்துகொள்ள முடியாது. இறைவன் எப்படி இருப்பார் என்று ஒரு மகானை பார்த்து பகெ்காதவன் கேட்டால், அவர் ஒரு லிங்கத்தை அவனுக்கு கொடுத்து, இது இறைவனை குறிக்கிறது என்பார். அந்த பாமரனும் இது இறைவனை நியாபகப்படுத்துவதால்,இதை வழிபடலாம் என முடிவுசெய்து பல்வேறு வழிகளில் வழிபடுகிறான்.
-
வரலாற்று காலத்திற்கு முன்பே,பல ஆயிரம் ஆண்டுகளாக மக்கள் வழிபட்டு வந்த லிங்கம் என்பது இறைவனை குறிக்கும் ஒரு சின்னம். அது ஆண்குறியோ பெண்குறியோ அல்ல. ஆண்குறி,பெண்குறி இணைந்திருக்கும் நிலையை குறிப்பதும் அல்ல. குறைபாடு உள்ளவர்கள்கள்,அதை குறைபாடு உள்ளதாக காண்கிறார்கள். உண்மை புரிந்தவர்கள் அதை இறைவனை குறிக்கும் சின்னமாக பார்க்கிறார்கள்.
-
No comments:
Post a Comment