Friday, 21 October 2016

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி -43

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி -43
--
சுவாமிஜி ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டிருந்தார். அவரைக் காண அமெரிக்காவிலிருந்து இரண்டு கிறிஸ்தவர்கள் வந்திருந்தார்கள். அவர்களது நோக்கம் தூய்மையானதல்ல. சுவாமி விவேகானந்தர் இந்தியாவில் இந்து மதத்திற்குப் புது ஊக்கத்தையும் வீரியத்தையும் வழங்கியுள்ளார். இந்தப் போக்கு இப்படியே நீடித்தால் இந்தியாவில் கிறிஸ்தவ மதம் தலையெடுக்க முடியாது. அதனால் அதைத் தடுத்து நிறுத்த அந்த மூவரும் அமெரிக்காவிலிருந்து கிறிஸ்தவ மிஷனரிகளால் அனுப்பப்பட்டிருந்தனர்.
சுவாமி விவேகானந்தர் ஏசுநாதர் மீது பக்தி கொண்டவர். அவர் ஏசுநாதரின் மகிமைகளைப் பற்றிக் கூறினால் அது இந்துக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்; அது கிறிஸ்தவத்திற்குப் பெரிதும் துணை செய்யும் என்று அவர்கள் நம்பினார்கள். அதனால் ஏதோ ஒரு வகையில் விவேகானந்தரை “வளைத்துப் போட்டுவிட்டால்’ தங்கள் காரியம் சுலபமாகும் என்று சுவாமிஜிக்காகக் காத்திருந்தார்கள்.
சிறிது நேரத்தில் சுவாமிஜி தமது தியான நிலையிலிருந்து விடுபட்டுக் கண்களை லேசாகத் திறந்தார். அப்போதிருந்த அந்தச் சூழல் மிக அருமையானது. சுவாமிஜியின் தியான நிலையினால் தெய்வ சாந்நித்தியம் அங்கு நிரம்பியிருந்தது. அங்கிருந்த ஒவ்வொருவரின் உள்ளும் புறமும் ஓர் இனம் புரியாத பேரமைதி வந்தமைந்தது. கவலைகள் யாவும் தொலைந்தன. ஆனந்தம் அலைமோதியது.
அந்தப் பரவச அனுபவம் இந்துக்களுக்கு மட்டுமா சொந்தம்? இல்லை. அங்கு வந்திருந்த அந்த இரு கிறிஸ்தவர்களும் அதை உணர்ந்தார்கள்.
அந்தச் சமயத்தில் யாரோ ஒரு துறவி சுவாமிஜியிடம் அந்த கிறிஸ்தவர்களை அறிமுகம் செய்து வைத்தார். அவர்கள் இருவரின் அகத்திலும் ஏதோ மாற்றம் நிகழ்ந்தது. ஏதோ ஓர் உந்துதல் அவர்களது உள்ளத்திலிருந்த அற்ப நோக்கத்தை உதறித் தள்ளிவிட்டது.
பல காலமாக ஏசுநாதரின் மீது அவர்கள் செய்த பிரார்த்தனைகளும் தியானங்களும் சித்தியடைந்ததுபோல் ஓர் அனுபவத்தைப் பெற்றார்கள். ஆம், அவர்கள் வந்த நோக்கத்தை மறந்து, பிறந்த நோக்கத்தை உணர்ந்தார்கள்.
உடனே சுவாமிஜியிடம், “”சத்தியத்தை எங்கே தரிசிப்பது?” என்று வினயத்துடன் கேட்டார்கள்.
தியான சித்தரான சுவாமிஜி சத்தியமான ஆன்மிக அனுபவத்தை அவர்களது உள்ளத்தில் ஏற்படுத்தும் வகையில், “”சத்தியம் உங்களுடனேயே என்றும் உள்ளது” என்றார்.
சுவாமிஜி அவ்வாறு கூறியதும் அந்த இருவரும் எல்லையில்லா ஆனந்தம் அடைந்தார்கள். பிறகு சுவாமிஜியின் சீடர்களாகவும் ஆனார்கள்.
வெல்ல வந்தவர்கள் வெல்லப்பட்டு விரைந்தார்கள். எங்கே? அமெரிக்காவிற்கா? இல்லை. இந்தச் சந்திப்பிற்குப் பிறகு அவர்கள் இந்தியாவிலேயே தங்கி இறைவனை அடைவதற்கான எல்லா முயற்சிகளிலும் முழுமையாக ஈடுபட்டார்கள்.
ஆம், அமெரிக்காவிற்கு அவர்கள் திரும்பவே இல்லை
--
-
தொடரும்...
--
சுவாமி விவேகானந்தரின் வாட்ஸ்அப்குழுவில் இணைய-9003767303 அட்மின்-சுவாமி வித்யானந்தர்

No comments:

Post a Comment