விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 21

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 21
------------------
ஒருநாள் கேத்ரி மன்னரின் அரச சபையில் நடனமாது ஒருத்தியின் சங்கீத நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.அதில் கலந்து கொள்ளுமாறு விவேகானந்தரை அழைத்தார் மன்னன் அதற்கு அவர்,தாம் ஒரு துறவி இத்தகைய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கில்லை என்று கூரிவிட்டார் .இந்தச் செய்தி எப்படியோ அந்த நடன மாதிற்கு எட்டியது
.ஒரு மகான் என்று பிரபலமடைந்த விவேகானந்தார் ,தமது சங்கீத நிகழ்ச்சிக்கு வர மறுத்ததைக் கேள்விப்பட்ட அந்தப் பெண் மிகுந்த வேதனைக்கு உள்ளானாள் .அவள் செய்வதற்கு எதுவுமில்லை. இருப்பினும் தனது மனவேதனையை விவேகானந்தரிடம் எப்படியாவது தெரிவிக்க வேண்டும் என்று மட்டும் உறுதி செய்து கொண்டாள் .
சங்கீத நிகழ்ச்சி தொடங்கியது .அவள் பாடியது சூர்தாசரின் ஓர் அருமையான பாடல் :
பிரபு எந்தன் குறைகளை மனதிற்கொள்ளதே
சமபாவனை உனது பண்பல்லவா ?-நீ
திருவுளம் கொண்டால் என்னைக் கரை சேர்ப்பாய் !
வழிபாடும் சிலையாய் எழுந்தருளுவதும்
கத்தியாக உயிரை வகைத்து மாய்ப்பதும்
ஒரே இரும்பு என்பதே உண்மை;
பரிசமணியால் தொட்டால் இரண்டும்
ஒருபோல் பொன்னாக ஆவதும் உண்மை .
பரிசமணியின் மனத்தில் வேற்றுமை உணர்வு தகுமா ,
அது அழகா ?…….
அருகிலுள்ள அறையில் தான் விவேகானந்தரின் தங்கி இருந்தார் .இந்த பாடலின் ஆழ்ந்த கருத்து அவரைச் சிந்தனையில் ஆழ்த்தியது .
'இது தான் என் துறவு நிலையா ? நான் ஒரு துறவி வேற்றுமை காணும் மனம் என்னிடம் இருப்பது தகுமா? எங்கும் இருப்பது இறைவன் என்றால் , அந்த அனுபூதி எங்கும் இருப்பது உண்மை என்றால் நான் யாரையும் ஒதுக்கக்கூடாது .'-இத்தகைய முடிவுக்கு வந்த விவேகனந்தர் உடனடியாகச் சென்று சிங்கீத நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் .
சுவாமிஜி வாழ்ந்தபோது ராஜபுதனத்தின் மிகப்பெரிய சம்ஸ்கிருதப் பண்டிதரான நாராயன் தாசைச் சந்தித்தார். இதனை ஒரு வாய்ப்பாகக் கொண்டு சம்ஸ்கிருத இலக்கணப் படிப்பைத் தொடர்ந்தார் சுவாமிஜி. பாணினியின் இலக்கண சூத்திரங்களுக்கு பதஞ்ஜலி எழுதிய மகாபாஷ்யத்தைக் கற்கத் தொடங்கினார் சுவாமிஜி. சில நாட்கள் கற்பித்த உடனேயே பண்டிதருக்கு சுவாமிஜியின் அறிவாற்றல் புரிந்தது. எனவே அவர் சுவாமிஜியிடம், அறிவாற்றல் புரிந்தது. எனவே அவர் சுவாமிஜியிடம், 'சுவாமிஜி, உங்ளைப் போன்ற ஒரு மாணவன் கிடைப்பது அரிது. நான் சொல்லித் தந்து நீங்கள் கற்பதற்கு இனி எதுவும் இல்லை. எனக்குத் தெரிந்தவை அனைத்தையும் உங்களுக்குக் கற்றுத் தந்துவிட்டேன். நீங்களும் அவற்றைப் புரிந்துகொண்டீர்கள்' என்றார். சுவாமிஜி அவருக்குப் பல முறை வணக்கமும் நன்றியும் தெரிவித்து விடைபெற்றார்.

மன்னரும் சுவாமிஜியும் பல நேரங்களில் குதிரை சவாரி செய்து அருகிலுள்ள காடுகளுக்குச் செல்வதுண்டு. ஒரு நாள் காட்டில் ஒரு குறுகலான பாதை வழியாக இருவரும் சென்று கொண்டிருந்தனர். இரு பக்கங்களிலும் வளர்ந்து நின்ற முட்செடிகள் சுவாமிஜியின்மீது குத்திவிடக் கூடாது என்பற்காக மன்னர் தமது கைகளால் அவற்றை ஒதுக்கிப் பிடித்தார். அப்போது முட்கள் குத்தி மன்னரின் கைகளிலிருந்து ரத்தம் வழியத் தொடங்கியது. நெகிழ்ந்து போனார் சுவாமிஜி. சுவாமிஜியின் உணர்ச்சியைப் புரிந்து கொண்ட மன்னர் சிரித்தபடியே, 'விடுங்கள் சுவாமிஜி, நாங்கள் க்ஷத்திரியர்கள் அல்லவா?தர்மத்தைக் காப்பது எங்கள் கடமை அல்லவா?' என்று கேட்டார்.

மற்றொரு நாள் மன்னரும் சுவாமிஜியும் பரிவாரங்களுமாக வேட்டைக்குச் சென்றனர்.எல்லோருடைய கையிலும் துப்பாக்கி இருந்தது. சுவாமிஜியுடம் கைத்தடி மட்டுமே இருந்தது. வழியில் ஓரிடத்தில் அனைவரும் அமர்ந்தனர். சுவாமிஜி சற்று தொலைவில் ஒரு மரத்தின் அடியில் அமர்ந்தார். திடீரென்று ஒரு புலி அந்த மரத்தின் பக்கமாகப் பாய்ந்து சென்றது. சுதாரித்துக் கொண்ட மன்னரும் மற்றவர்களும் சுவாமிஜியின் அருகில் விரைந்தனர். அதற்குள் புலி மறைந்து விட்டிருந்தது. ஒரு துப்பாக்கியை வைத்துக் கொள்ளுமாறு அப்போது மன்னர் சுவாமிஜியிடம் கேட்டுக்கொண்டார். அதற்கு சுவாமிஜி, 'பாதுகாப்பிற்காக ஒரு துறவிக்குத் துப்பாக்கி தேவையில்லை. எந்தப் புலியும் அவர்களை எதுவும் செய்யாது. என்னால் எந்த உயிரும் பயம் கொள்ளக் கூடாது என்றார்.
-----
தொடரும்...
--
சுவாமி விவேகானந்தரின் வாட்ஸ்அப்குழுவில் இணைய-9003767303 அட்மின்-சுவாமி வித்யானந்தர்

Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?

Gemini AI and I Scientific Research Papers-6