விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 24

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 24
------------------
சுவாமிஜி உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள தாரிகாட் என்ற ஊருக்குப் புறப்பட்டார். ரயிலில் இவர் பயணம் செய்யும் போது, நண்பர்கள், தெரிந்தவர்கள், இவரைப் பின்பற்றுவோர் யாராவது டிக்கட் எடுத்துக் கொடுப்பார்கள். செலவுக்கு பணம் கொடுத்தால் சுவாமி வாங்கமாட்டார். 
இறைவன் யார் மூலமாவது உணவு கொடுத்தால் சாப்பிடுவார். இல்லாவிட்டால் பட்டினி கிடப்பார். பட்டினியும் கூட இறைவன் திருவிளையாடலே என்றெண்ணி மகிழ்ச்சியடைவார். எதற்கும் அஞ்சாதவர், கேவலம்... பசிப்பிணி கண்டா அஞ்சுவார்!
ரயிலில் மூன்றாம் வகுப்பு பெட்டியில் பயணம். அவர் அமர்ந்திருந்த இருக்கையின் எதிரே ஒரு வியாபாரி அமர்ந்திருந்தார். விவேகானந்தருக்கு கடும் தாகம். ஸ்டேஷன்களில் ரயில் நிற்கும்போது, காசு கொடுத்தால் தண்ணீர் கொடுப்பார்கள்.சுவாமிஜியிடம் காசு இல்லை. அந்த வியாபாரி தண்ணீர் வாங்கி குடித்தார்.
சுவாமிஜியின் கையில் காசு இல்லை என்பது அவருக்கு புரிந்தது.
""ஐயா சாமி! உமக்கு எதற்கு இவ்வளவு சின்ன வயசில் சன்னியாசம்? உழைக்க பிரியமில்லையோ உமக்கு? இந்த நாட்டுக்கு பாரமாக இருக்கிறீரே!'' என்றார்.
சுவாமிஜி அவரிடம் எதுவும் பேசவில்லை.
இதற்குள் தாரிகாட் வந்துவிட்டது. சுவாமிஜியும் வியாபாரியும் அதே ஊரில் இறங்கினர். பயணிகள் அமர்வதற்கு அங்கே நிழற்குடை இருந்தது. களைப்பில் இருந்த விவேகானந்தர் நிழற்குடை நோக்கிச் சென்றார். அங்கிருந்த ஒரு ஊழியன், ""ஐயா சாமி! காசு கொடுத்தா தான் இங்கே தங்க அனுமதிப்பேன். இல்லாட்டி ஓடிப்போயிரும்,'' என்றான்.
சுவாமிஜி அவனிடம் ஏதும் பேசவில்லை. அமைதியாக எழுந்து சென்று, கொளுத்தும் வெயிலடித்த வெட்ட வெளியில் அமர்ந்தார். அந்த வியாபாரி இப்போது சுவாமிஜியைப் பார்த்து கைகொட்டி சிரித்தார். அவர் முன்னால் பூரி, சப்பாத்தி குருமா இருந்தது.
அதை சாப்பிட்டபடியே, ""பார்த்தீரா! என் உழைப்பால் நான் சுகமாக நிழலில் அமர்ந்து சாப்பிடுகிறேன். நீர் கடைபிடிக்கும் ஆன்மிகம், உம்மை கொளுத்தும் வெயிலில் அமர வைத்துவிட்டது,'' என்றார்
கிண்டலாக.
இதுமாதிரி சந்தர்ப்பங்களில் பொதுவாக என்ன நடக்கும்? பசி எடுத்தவன் எரிச்சல் தாளாமல், தன்னைக் கேலி
செய்தவனை நையப்புடைத்திருப்பான். உணர்ச்சி அதிகமானால், கொலையே கூட நடந்துவிடும். ஆனால், சுவாமிஜி, அவரது பேச்சைக் கண்டு கொள்ளவே இல்லை. சிறுவயதில் சேஷ்டைகளின் கதாநாயகனாய் இருந்த அவர், ஆன்மிக சாதனைகள் தந்த பக்குவத்தால் அமைதியாய் இருந்தார்.
அப்போது, ஒருவன் சுவாமிஜியை நோக்கி ஓடிவந்தான்.
அவனது கையில் ஒரு பொட்டலம். இடதுகையில் மண்கூஜா இருந்தது.
""பாபாஜி! நீங்க இங்கே தான் இருக்கிறீர்களா? இந்தாங்க! இதில் நிறைய பட்சணம் இருக்கு! கூஜாவில் தண்ணீர் கொண்டாந்து இருக்கேன், சாப்பிடுங்க,'' என்றவன், பொட்டலத்தைப் பிரித்து அவர் முன்னால் வைத்தான்.
அதில் புத்தம் புதிதாக சமைக்கப்பட்ட உணவு வகை சூடாக இருந்தது. கூஜாவில் இருந்து அவனே தண்ணீரும் ஊற்றி வைத்தான். சுவாமிஜியை தொட்டு வணங்கினான்.
""பாபாஜி! என்னால் முடிந்ததை அவசர அவசரமாய் செய்து கொண்டு வந்திருக்கேன். பெரிய மனசு பண்ணி சாப்பிடணும்,'' என்றான்.
சுவாமிஜி அவனை ஆச்சரியமாய் பார்த்தார்.
""தம்பி! நீ ஏதோ தப்பா புரிஞ்சுகிட்டு எனக்கு இதையெல்லாம் தர்றே! நீ தேடி வந்த ஆள் நானில்லை. எனக்கு இந்த ஊரில் யாரையும் தெரியாது. நான் இங்கு வருவதைப் பற்றி யாரிடமும் சொல்லவும் இல்லை,'' என்றார் விவேகானந்தர்.
""சுவாமி! உங்களை நான் ஏற்கனவே பார்த்திருக்கிறேன். நீங்க களைப்பா இருக்கீங்க! முதலில் சாப்பிடுங்க! அப்புறமா மற்றதைப் பேசுவோம்,'' என்றான்.
சுவாமிஜி இன்னும் ஆச்சரியத்துடன் அவனைப் பார்க்கவே, ""சுவாமி! நடந்ததைச் சொல்றேன். நான் இந்த ஊரில் பட்சணம் செய்து விற்று பிழைக்கிறேன். ஸ்ரீராமபிரான் தான் என் குலதெய்வம். அவர் நேற்று என் கனவில் வந்தார். உங்கள் உருவத்தைக் காட்டி, "இவன் என் பக்தன். பட்டினியால் களைப்படைந்திருக்கிறான். நாளை இங்கே இந்த இடத்தில் இருப்பான். இவனுக்கு புதிதாக சமைத்த உணவு கொண்டு கொடு,'' என்றார். நான் ஏதோ கனவு தானே என்று அதைப் பெரிதாக எண்ணவில்லை. மீண்டும் உறங்கிவிட்டேன். திரும்பவும் அந்த ராகவன் என் கனவில் வந்தார். "நான் சொன்னது நினைவிருக்கிறதல்லவா! நாளை மறக்காமல் சென்றுவிடு,'' என்றார்.
நான் திகிலடைந்து எழுந்தேன். அவர் சொன்னபடியே, அவர் சொன்ன நேரத்தில், சொன்ன இடத்திற்கு, சொன்னபடியே வந்தேன். அவர் கனவில் காட்டியது உங்கள் உருவத்தைத் தான். சாப்பிடுங்கள் மகராஜ்!'' என்றார்.
சுவாமிஜிக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை.
""ஸ்ரீராமா! உன் கருணையே கருணை! இந்த சாதாரணமானவனின் மீது நீ இவ்வளவு அன்பு வைத்திருக்கிறாயா? நான் பட்டினி கிடப்பது உனக்கு பொறுக்கவில்லையா?''என்றார். இதை ரயிலில் வந்த வியாபாரியும், இடம் கொடுக்க மறுத்த ஊழியரும் கவனித்துக் கொண்டிருந்தனர். வேகமாக வந்து சுவாமிஜியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டனர்.
பின்னர் சுவாமிஜி அங்கிருந்து ஹரித்துவாருக்கு கிளம்பினார்.
------
தொடரும்...
--
சுவாமி விவேகானந்தரின் வாட்ஸ்அப்குழுவில் இணைய-9003767303 அட்மின்-சுவாமி வித்யானந்தர்

Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?