Monday, 10 October 2016

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 26

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 26
----
சுவாமி விவேகானந்தர் குஜராத்திலுள்ள லிம்ப்டியில் துறவிகள் தங்குவதற்கான இடம் ஒன்று இருப்பதை அறிந்து அங்கு சென்றார்.அங்கிருந்த துறவிகள் அவரை அன்பாக உபசரித்து,அவர் விரும்பும்வரை தங்கலாம் என்று தெரிவித்தனர்.பரியாலும் களைப்பாலும் சோர்ந்துபோயிருந்த சுவாமிஜி அவர்களின் உபசரிப்பை ஏற்று அங்கே தங்கினார்.ஆனால் அந்த இடத்தில் உள்ள ஆபத்தை அவர் அப்போது உணரவில்லை.இரண்டுநாள் கழிந்த பின்னர் பக்கத்து அறையிலிருந்து ஆண்களும் பெண்களும் ஆடுவதும் பாடுவதுமாக இருந்தார்கள்.ஆன்மீகம் என்ற பெயரில் காமத்தை நாடுபவர்களாக இருந்தார்கள்.அதற்கு மேல் அங்கு தங்குவது சரியில்லை என்று உணர்ந்து வேறு இடம் செல்வதற்காக கதவை திறக்க முயற்சி செய்தார்.ஆனால் கதவு வெளியிலிருந்து தாளிடப்பட்டிருந்தது.காவலுக்கு ஆட்களும் இருந்தார்கள்.ஆனாலும் சுவாமிஜி கலங்கவில்லை.
--
அந்த மதப்பிரிவின் தலைவன் சுவாமிஜியை அழைத்து,நீங்கள் ஓர் அபூர்வமான துறவி.அசாதாரணமான சக்தி உங்களிடம் உள்ளது.நீங்கள் வருடக்கணக்கில் பிரம்மச்சர்யம் கடைபிடித்தவராக இருக்கிறீர்கள்.உங்கள் நீண்டகால தவத்தின் பலனை நாங்கள் பெறப்போகிறோம்.அதற்காக நடைபெறப்போகும் சங்கில் உங்கள் பிரம்மச்சர்யத்தை கலைக்கப்போகிறோம்.இதனால் எங்களுக்கு அசாதாரணமான சக்தி கிடைக்கும்.பல ஆற்றல்கள் கிடைக்கும் என்று ஒரு அதிர்ச்சியான தகவலை சொன்னார்.
--

அங்கே சுவாமிஜியை அடிக்கடி காணவந்த ஒரு இளைஞனும் இருந்தான்.அவன்மூலம் சுவாமிஜி அந்த நாட்டு இளவரசரான தாகூர்சாகிப் என்பருக்கு விவரத்தை தெரியப்படுத்தச்சொன்னார்.இளவரசர் உடனடியாக வீரர்களை அனுப்பி சுவாமிஜியை அங்கிருந்து வெளியே கொண்டுவந்தார்.அதன் பிறகு இளவரசரின் அழைப்பை ஏற்று அவரது அரண்மனையில் தங்கினார்.
---
1892 ஜுலை கடைசியில் பம்பாயை அடைந்தார் சுவாமிஜி.அங்கே ராம்தாஸ்சாபில்தாஸின் வீட்டில் தங்கியிருந்தார்.அங்கே வேதங்களை படிப்பதற்காக அதிகநேரம் செலவுசெய்தார்.அங்கிருந்து 20 மைல் தொலைவிலுள்ள அழகிய சால்செட் தீவிற்கு சென்று கனேரி குகைகளை கண்டு மகிழ்ந்தார்.பௌத்தர் காலத்தை சேர்ந்த 109 குகைகள் இருந்தன.அந்த காலத்தில் இந்த குகைகள் இருப்பது ஒருசிலருக்கே தெரிந்திருந்தது.சுவாமிஜி அங்கே சென்றபோது அவரது முற்பிறவிநினைவு வந்ததாக அவர் தெரிவித்தார்.அந்த குகைகளில் இருக்கும்போது பரவசநிலையை அடைந்தார்,முற்பிறவியில் இந்த குகைளில் வாழ்ந்து தவம் செய்ததாக அவர் உணர்ந்தார்.
--
சுவாமிஜி வாழ்ந்தபோது ராஜபுதனத்தின் மிகப்பெரிய சம்ஸ்கிருதப் பண்டிதரான நாராயன் தாசைச் சந்தித்தார். இதனை ஒரு வாய்ப்பாகக் கொண்டு சம்ஸ்கிருத இலக்கணப் படிப்பைத் தொடர்ந்தார் சுவாமிஜி. பாணினியின் இலக்கண சூத்திரங்களுக்கு பதஞ்ஜலி எழுதிய மகாபாஷ்யத்தைக் கற்கத் தொடங்கினார் சுவாமிஜி. சில நாட்கள் கற்பித்த உடனேயே பண்டிதருக்கு சுவாமிஜியின் அறிவாற்றல் புரிந்தது. எனவே அவர் சுவாமிஜியிடம், அறிவாற்றல் புரிந்தது. எனவே அவர் சுவாமிஜியிடம், 'சுவாமிஜி, உங்ளைப் போன்ற ஒரு மாணவன் கிடைப்பது அரிது. நான் சொல்லித் தந்து நீங்கள் கற்பதற்கு இனி எதுவும் இல்லை. எனக்குத் தெரிந்தவை அனைத்தையும் உங்களுக்குக் கற்றுத் தந்துவிட்டேன். நீங்களும் அவற்றைப் புரிந்துகொண்டீர்கள்' என்றார். சுவாமிஜி அவருக்குப் பல முறை வணக்கமும் நன்றியும் தெரிவித்து விடைபெற்றார்.

மன்னரும் சுவாமிஜியும் பல நேரங்களில் குதிரை சவாரி செய்து அருகிலுள்ள காடுகளுக்குச் செல்வதுண்டு. ஒரு நாள் காட்டில் ஒரு குறுகலான பாதை வழியாக இருவரும் சென்று கொண்டிருந்தனர். இரு பக்கங்களிலும் வளர்ந்து நின்ற முட்செடிகள் சுவாமிஜியின்மீது குத்திவிடக் கூடாது என்பற்காக மன்னர் தமது கைகளால் அவற்றை ஒதுக்கிப் பிடித்தார். அப்போது முட்கள் குத்தி மன்னரின் கைகளிலிருந்து ரத்தம் வழியத் தொடங்கியது. நெகிழ்ந்து போனார் சுவாமிஜி. சுவாமிஜியின் உணர்ச்சியைப் புரிந்து கொண்ட மன்னர் சிரித்தபடியே, 'விடுங்கள் சுவாமிஜி, நாங்கள் க்ஷத்திரியர்கள் அல்லவா?தர்மத்தைக் காப்பது எங்கள் கடமை அல்லவா?' என்று கேட்டார்.

மற்றொரு நாள் மன்னரும் சுவாமிஜியும் பரிவாரங்களுமாக வேட்டைக்குச் சென்றனர்.எல்லோருடைய கையிலும் துப்பாக்கி இருந்தது. சுவாமிஜியுடம் கைத்தடி மட்டுமே இருந்தது. வழியில் ஓரிடத்தில் அனைவரும் அமர்ந்தனர். சுவாமிஜி சற்று தொலைவில் ஒரு மரத்தின் அடியில் அமர்ந்தார். திடீரென்று ஒரு புலி அந்த மரத்தின் பக்கமாகப் பாய்ந்து சென்றது. சுதாரித்துக் கொண்ட மன்னரும் மற்றவர்களும் சுவாமிஜியின் அருகில் விரைந்தனர். அதற்குள் புலி மறைந்து விட்டிருந்தது. ஒரு துப்பாக்கியை வைத்துக் கொள்ளுமாறு அப்போது மன்னர் சுவாமிஜியிடம் கேட்டுக்கொண்டார். அதற்கு சுவாமிஜி, 'பாதுகாப்பிற்காக ஒரு துறவிக்குத் துப்பாக்கி தேவையில்லை. எந்தப் புலியும் அவர்களை எதுவும் செய்யாது. என்னால் எந்த உயிரும் பயம் கொள்ளக் கூடாது என்றார்.
தொடரும்...
--
சுவாமி விவேகானந்தரின் வாட்ஸ்அப்குழுவில் இணைய-9003767303 அட்மின்-சுவாமி வித்யானந்தர்

No comments:

Post a Comment