Monday, 10 October 2016

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 30





விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 30
ரிஷிகேசத்தில் மகானான ஒரு துறவியைச் சந்தித்தார் விவேகானந்தர். அவர் ஆன்மிகத்தில் உயர்நிலைகளை அடைந்தவராகத் தோன்றவே விவேகானந்தர் அவரிடம் சென்று பேசத் தொடங்கினார். பேச்சின் இடையே தமது பயணங்களைப் பற்றி கூறினார்; தாம் சந்தித்த மகான்களைப் பற்றி கூறினார். அவர்களில் ஒருவர் பவஹரி பாபா.
அவரது பெயரைக் கூறியதும் அந்தத் துறவியின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. தழுதழுத்த குரலில் அவர், ‘சுவாமிஜி, உங்களுக்கு பாபாவைத் தெரியுமா?’ என்று கேட்டார். ‘தெரியும்’ என்றார் விவேகானந்தர். ‘அவரது ஆசிரமத்தில் நடந்த திருட்டைப் பற்றி தெரியுமா?’ என்று கேட்டார் அந்தத் துறவி. ‘தெரியுமே’ என்றார் விவேகானந்தர்.
‘ஒரு நாள் அவரது ஆசிரமத்தில் திருடன் ஒருவன் நுழைந்து விட்டான். அவரைக் கண்டதும் பயந்து போய், தான் திருடிய பொருட்களின் மூட்டையை அப்படியே போட்டுவிட்டு ஓட்டமெடுத்தான். அவரோ அந்த மூட்டையை எடுத்துக் கொண்டு, திருடனைத் தொடர்ந்து பல மைல் தூரம் ஓடி அவனைப் பிடித்தார்.
பிறகு அவனது காலடியில் அந்த மூட்டையை வைத்து, குவித்த கைகளோடும் கண்களில் கண்ணீரோடும் ‘அப்பா, இது உனது சொத்து. உனது சொத்தை நீ எடுத்த போது தலையிட்டதற்கு என்னை மன்னித்து விடு. இவற்றைப் பெற்றுக் கொள் என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்’ – என்று விவேகானந்தர் அந்தக் கதையைக் கூறி விட்டு, ‘உண்மையிலேயே பாபா ஓர் அற்புத மனிதர்’ என்றார்.
கதையை மவுனமாகக் கேட்டுக் கொண்டிருந்த துறவி கதை நிறைவுற்றதும், விவேகானந்தரை அமைதியாகப் பார்த்து ‘சுவாமிஜி, அந்தக் கதையில் வரும் திருடன் நான் தான்’ என்றார். விவேகானந்தர் திகைத்துப் போனார். துறவி தொடர்ந்தார்…
‘அன்று பாபாவைச் சந்தித்தது என் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பம் ஆயிற்று. எனது வழிகள் தவறு என்பதை நான் புரிந்து கொண்டேன். செல்வங்களில் எல்லாம் பெரிய செல்வமாகிய இறைவனையே பெறுவதற்காக இந்த வழியைத் தேர்ந்தெடுத்தேன்.’
அதன் பிறகு அவர் விவேகானந்தரிடம் தாம் துறவியாக அடைந்த அனுபவங்களைக் கூறினார். இரவு நீண்ட நேரம் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அவரைச் சந்தித்தது விவேகானந்தருக்கும் ஓர் இனிய அனுபவம் ஆயிற்று.
---
சென்னையில் சுவாமிஜிக்கு வினோதமான அனுபவம் ஒன்று ஏற்பட்டது. சில ஆவிகள் அவரைத் தொந்தரவு செய்தன. அவரது மனம் கலங்கும் விதமாக ‘இது நடக்கப் போகிறது’, ‘அது நடக்கப் போகிறது’ என்றெல்லாம் அவரிடம் கூறின. அவை பொய் என்பது பின்னால் தெரிய வரும். ஆரம்பத்தில் சுவாமிஜி அதனைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
ஆனால் இவ்வாறு சில நாட்கள் தொடர்ந்து நடந்தபோது சுவாமிஜியின் பொறுமை எல்லை மீறியது. அவரது கோபத்தைக் கண்ட அந்த ஆவிகள் அவரிடம் வந்து, தங்கள் பரிதாபகரமான நிலைமையை எடுத்துக்கூறி, தங்களுக்கு நற்கதி அளிக்குமாறு வேண்டின. அவற்றின் பிரார்த்தனையை ஏற்றுக்கொண்ட சுவாமிஜி ஒருநாள் மெரினா கடற்கரைக்குச் சென்றார். கையில் ஒரு பிடி மணலை எடுத்துக் கொண்டு, அதையே தர்ப்பணப் பொருட்களாகப் பாவித்து, அந்த ஆவிகளுக்கு நற்கதி கிடைக்க வேண்டும் என்று இதய பூர்வமாகப் பிரார்த்தித்தார். அதன்பிறகு இந்த ஆவிகள் வரவில்லை.
----
கேத்ரியில் நடந்த ஒரு சம்பவம். ஓர் ஊரில் மக்கள் சுவாமிஜியிடம் கூட்டம் கூட்டமாக வந்தார்கள். சுவாமிஜி அவர்களிடம் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார். சுவாமிஜியின் வார்த்தைகளிலேயே அந்த நிகழ்ச்சியைப்பற்றி கேட்போம். 'நம்புவதற்கே கடினமாகத்தான் இருக்கும். ஆனால் மூன்று நாட்கள் இரவும் பகலும் எனக்கு ஒரு கணம்கூட ஓய்வே கிடைக்கவில்லை. தூக்கம், உணவு எதுவும் கிடையாது. யாரும் அதைப்பற்றி கவலைப்படவும் இல்லை. அவர்கள் வந்துகொண்டே இருந்தார்கள், நானும் பேசிக் கொண்டே இருந்தேன். மூன்றாம் நாள் இரவு வந்தது. அனேகமாக எல்லோரும் போய்விட்டார்கள்.
அப்போது தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்த ஒருவன் என்னிடம் வந்தான். 'சுவாமிகளே மூன்று நாட்களாக உணவோ உறக்கமோ இல்லாமல் நீங்கள் பேசுவதை நான் பார்க்கிறேன். என் மனம் வேதனையில் துடிக்கிறது. பசியும் களைப்பும் உங்களுக்கும் இருக்கத்தானே செய்யும்!" என்று பரிவுடன் கூறினான். அவனது அன்பு என்னை நெகிழச் செய்தது. "சாப்பிட ஏதாவது நீ தருவாயா?" என்று அவனிடமே கேட்டேன். "தர வேண்டும் என்று தான் என் இதயம் ஏங்குகிறது. ஆனால் என்ன செய்வேன்? நான் தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்தவன். நான் சப்பாத்தி செய்து உங்களுக்குத் தர முடியாது. மாவும் மற்ற பொருட்களும் கொண்டு தருகிறேன். நீங்களே செய்து சாப்பிடுங்கள்" என்றான் அவன். அதற்கு நான், 'வரவாயில்லை. நீயே செய்து கொண்டு வா. நான் சாப்பிடுகிறேன்" என்றேன். அவன் நடுங்கிப் போனான். செருப்பு தைப்பவனான அவன் ஒரு துறவிக்கு உணவளித்தது தெரிந்தால் தண்டிக்கப்படுவான் ஏன், நாடுகடத்தவே செய்வார்கள். ஆனால் நான் அவனை ஆசுவாசப்படுத்தினேன். "தண்டனை கிடைக்காமல் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று உறுதியளித்தேன். அவன் எனது உறுதியை அவ்வளவாகச் நம்பவில்லை, இருந்தாலும் என்மீதுள்ள அன்பு காரணமாகச் சப்பாத்தி கொண்டு வந்தான். நானும் சாப்பிட்டேன். தேவர் தலைவனான இந்திரன் ஒரு தங்கக் குவளையில் தேவாமிர்தத்தைத் தந்திருந்தால், அதுகூட இவ்வளவு ருசித்திருக்காது என்றே எனக்குத் தோன்றியது. என் நெஞ்சம் அன்பாலும் நன்றியாலும் நிறைந்தது. கண்கள் கண்ணீரைப் பொழிந்தன.
'கேத்ரி மன்னருடன் எனக்குப் பழக்கம் ஏற்பட்ட பிறகு நான் அவரிடம் இதனைத் தெரிவித்தேன். அவர் உடனடியாக அவனை வரவழைத்தார். தனது தவறுக்குத் தண்டனை கிடைக்கப் போகிறது என்று அவன் நடுங்கியபடியே வந்தான். மன்னர் அவனைப் புகழ்ந்ததுடன் அவனுக்குப் பொன்னும் பொருளும் ஏராளமாகக் கொடுத்து அனுப்பினார்.
--
தொடரும்...
--
சுவாமி விவேகானந்தரின் வாட்ஸ்அப்குழுவில் இணைய-9003767303 அட்மின்-சுவாமி வித்யானந்தர்

No comments:

Post a Comment