Friday, 21 October 2016

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி -37

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி -37
--
தான் சம்பாதித்து வைத்திருந்த அத்தனை பணத்தையும் ஒன்று சேர்த்து, கச்சா எண்ணெய் சுத்திகரித்து விற்கும் வியாபாரத்தில் இறங்கினார் ராக்ஃபெல்லர். நீராவியில் ஓடிய ரயில் மட்டுமே அப்போது பெரிய போக்குவரத்துச் சக்தியாக விளங்கியது என்பதால், பெட்ரோலின் மகத்துவம் எவருக்கும் புரியவில்லை.

ஏற்கனவே இந்தத் தொழில் இருந்தவர்களைவிட பெட்ரோல், மண்ணெண்ணெய் போன்றவற்றைக் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டும்; அதே நேரம், அதிக பணம் சம்பாதிப்பதிலும் வெற்றி பெற வேண்டும் என விரும்பினார் ராக்ஃபெல்லர். உற்பத்தி இடத்திலிருந்து விற்பனை இடங்களுக்கு அனுப்புவதற்கான ரயில் கட்டணம் மிக அதிகமாக இருந்தது. ரயில்வே நிர்வாகத்திடம் பேசி, தினமும் குறிப்பிட்ட பேரல்கள் அனுப்புவதாகவம், அதற்காக கட்டணச் சலுகை தரவேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் வைக்க நிர்வாகம் ஏற்றுக் கொண்டது. போக்குவரத்துச் செலவு கணிசமாகக் குறையவே விலையை குறைத்து விற்பனை செய்தார். வியாபாரம் சூடுபிடித்ததும் போட்டியில் இருந்த சில கம்பெனிகளை அதிகவிலை கொடுத்து வாங்கினார். விற்பனைக்கு மறுத்தவர்களைக் கூட்டாளியாக்கிக் கொண்டார்.

கார்கள் கண்டுபிடிக்கப்பட்டு பெட்ரோல், டீசல் போன்ற பொருட்களின் விற்பனை உச்சத்தைத் தொட்ட 1872ம் வருடம் அமெரிக்க முழுவதும் ஆயில் வியபாரம் செய்யும் ஒரே நிறுவனமாக இருந்தது ராக்ஃபெல்லரின் '‘ஸ்டாண்டர்டு ஆயில் கம்பெனிதான்”. போட்டி நிறுவனம் இல்லை என்பதால், பணம் கொட்டோ கொட்டென்று கொட்ட, உலகின் நம்பர் ஒன் பணக்காரர் ஆகிவிட்டார்.
--
ராக்ஃபெல்லர் மாபெரும் பணக்காரர். ஆனால், மகா கஞ்சன்; எதுவும் நிரந்தரமில்லை என்பதை உணராமல், பணம்... பணம் என்று அலைந்த மனிதர். 1895-ல் பத்து லட்சம் டாலர்களுக்கு அதிபதி!

திடீரென, வியாபாரத்துக்காக அவர் செய்த முறைதவறிய சில விஷயங்கள் கசிந்து, பத்திரிகைகளில் பரபரப்பாக வெளியாகி, அமெரிக்க மக்களின் வெறுப்புக்கு ஆளானார். சமூகத்தின் எதிர்ப்பும், வெறுப்பும் அவரை மனநோயாளி ஆக்கியது.

பரிதாபத்துக்கு உரிய அந்த நிலையில்... அவரது நண்பர் ஒருவர், தனது இல்லத்துக்கு வந்திருக்கும் இந்து மதத் துறவியைக் காண வரும்படி அழைத்தார். இவரோ மறுத்துவிட்டார்.அந்தத் துறவி வேறு யாருமல்ல; நமது சுவாமிஜிதான்! அவரைப் பார்ப்பதென்றால், அது அவ்வளவு சுலபமா என்ன? ஆனால், ராக்ஃபெல்லருக்கு அதற்கான நேரம் வாய்த்தது என்றே சொல்ல வேண்டும். முதலில் மறுத்தவர், பிறகு என்ன நினைத்தாரோ... தன் நண்பருக்குக்கூடத் தகவல் சொல்லாமல், அவரது வீட்டுக்கு வந்தார். திடும் என்று சுவாமிஜி தங்கியிருந்த அறைக்குள் நுழைந்தார்.

உள்ளே சுவாமிஜி ஏதோ படித்துக்கொண்டிருந்தார். நம்மையெல்லாம் போல அவர் சட்டென்று தலையைத் தூக்கிப் பார்க்கவில்லை. தலையைக் கவிழ்த்தவண்ணம் அப்படியே படித்துக்கொண்டிருந்தார். ராக்ஃபெல்லர் நிச்சயம் வியந்திருப்பார்.
-
அதுமட்டுமல்ல... ராக்ஃபெல்லரைப் பற்றி அவருக்கு மட்டுமே தெரிந்த, மற்ற யாருக்குமே தெரியாத அவருடைய வாழ்க்கை ரகசியங்களை எல்லாம் கூறிய சுவாமிஜி, அவரிடம் இருக்கும் பணம் கடவுள் கொடுத்தது என்றும், அதை மக்களுக்கான சேவைகளுக்குச் செலவு செய்வதற்காகவே கடவுள் கொடுத்திருக்கிறார் என்றும் கூறி, ஆண்டவன் அளித்த இந்த அரிய சந்தர்ப்பத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தினார்.

மற்றவர்கள் தன்னிடம் சொல்வதற்கு அஞ்சும் விஷயங்களை, சுவாமிஜி தன்னிடம் இப்படி வெளிப்படையாகப் பேசியதில் அதிர்ந்துபோன ராக்ஃபெல்லர், சட்டென அறையை விட்டுக் கிளம்பிப் போய்விட்டார்.ஒரு வாரத்துக்குப் பின், மீண்டும் பழைய மாதிரியே விருட்டென சுவாமிஜியின் அறைக்குள் நுழைந்த ராக்ஃபெல்லர், ஒரு காகிதத்தை சுவாமிஜி முன் வீசி எறிந்தார். அப்போதும் சுவாமிஜி அதைக் கண்டுகொள்ளாமல் ஏதோ படித்துக்கொண்டிருந்தார். ''அதை எடுத்துப் படியுங்கள். நீங்கள் எனக்கு நன்றி கூறுவீர்கள்'' என்றார் ராக்ஃபெல்லர்.அவர் அளித்த நன்கொடைகளின் விவரங்கள் அந்தக் காகிதத்தில் இருந்தன. அதைப் பார்த்த சுவாமிஜி, ''நல்லது! இப்போது நீங்கள் கொஞ்சம் திருப்தி அடைந்திருப்பீர்களே! இதற்கெல்லாம் நீங்கள்தான் எனக்கு நன்றி கூறவேண்டும்'' என்றார்.சுவாமிஜியுடனான இந்த இரண்டு சந்திப்புகளுக்குப் பின்னர், கஞ்சனான ராக்ஃபெல்லர் பெரும் கொடையாளியாகி, மனித குலத்துக்குப் பெரும் நன்மைகள் விளையக் காரணமானார். 'பென்ஸிலின்’ மருந்தைக் கண்டுபிடிக்கப் பணத்தை அள்ளி வழங்கியதும் அவர்தான்.

தனக்கென்று சேர்த்து வைத்தபோது அடையாத மகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும், திருப்தியையும் பிறருக்கெனக் கொடுத்தபோது அடைந்த ராக்ஃபெல்லர், புத்துயிர் பெற்று ஆரோக்கிய மனிதராகி, 93 வயது வரை வாழ்ந்தார்.நமது சுவாமிஜின் அன்பினாலும் கருணையினாலும் ஆட்கொள்ளப்பட்ட மனிதர், இன்று மனித குலம் நன்றியோடு நினைக்கும் மாமனிதராக மாறினார்
--
--
தொடரும்...
--
சுவாமி விவேகானந்தரின் வாட்ஸ்அப்குழுவில் இணைய-9003767303 அட்மின்-சுவாமி வித்யானந்தர்

No comments:

Post a Comment