Monday, 10 October 2016

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 27

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 27
---
சுவாமிஜி 1892 ல் பம்பாய் ரயில் நிலையத்தில் பாலகங்காதர திலகரை சந்தித்தார்.திலகரின் வீடு பூனாவில் இருந்தது.சுவாமிஜி 10நாட்கள் திலகரின் வீட்டில் தங்கினார்.திலகருடன் வேதாந்தம் பற்றியும் அத்வைதம் பற்றியும் நிறைய பேசினார்.சுவாமிஜியின் பெயர் என்ன என்று திலகர் கேட்டார்.தனக்கு எந்த பெயரும் இல்லை,நான் ஒரு சன்னியாசி என்றார்.அவருடன் தங்கியிருந்த காலத்தில் பலர் சுவாமிஜியை காணவந்தார்கள்.ஆனால் மக்கள் கூட்டத்தை சுவாமிஜி விரும்பவில்லை,தனிமையில் வாழவே விரும்பினார்.
---
1892 அக்டோபர் மாதம் பெல்காம் சென்றார்அங்கே ஜி.எஸ் பாட்டே என்பவரது வீட்டில் தங்கினார்.சுவாமிஜியையின் பழக்க வழக்கங்கள் மற்றதுறவியிலிருந்து மிகவும் வித்தியாசமாக இருந்தது.அதை பற்றி தன் நாள் குறிப்பில் இவ்வாறு எழுதினார்
---
.சுவாமிஜி காவியுடை உடுத்திருந்தார் ஆனால் பனியனும் அணிந்திருந்தார்.பரம்பரை துறவிகள் பனியன் அணிவதில்லை. பரம்பரை துறவிகள் யோகதண்டம்,கமண்டலம். வைத்திருப்பார்கள்.ஆனால் இவரிடம் அது எதுவும் இல்லை,கையில் ஒரு கைத்தடி வைத்திருந்தார்.ஆங்கிலம் பேசும் துறவிகளை அக்காலத்தில் யாரும் பார்க்க முடியாது,ஆனால் இவர் சரளமாக ஆங்கிலம் பேசுகிறார்.பரம்பரை துறவிகளுக்கு பல விஷயங்கள் தெரியாது,ஆனால் இவருக்கு தெரியாத விஷயங்களே இல்லை,அந்த அளவுக்கு அறிவுகளஞ்சியமாக இருந்தார்.அவரது உணவு பழக்க வழக்கம் மேலும் திகைப்பூட்டுவதாக இருந்தது.சாப்பிட்டு முடித்ததும் தாம்பூலம் கேட்டார்,பிறகு புகையிலை கேட்டார்.இதை நாங்கள் அவரிடமிருந்து எதிர்பார்க்கவில்லை.எங்கள் உணர்ச்சிகளை புரிந்துகொண்ட அவர் நான் பரம்பரை துறவியல்ல,பரம ஹம்ச துறவி.இந்த நிலையை அடைந்தவர்களுக்கு இதனால் பாதகம் எதுவும் இல்லை.அவர்களது மனம் எப்போதும் உயர்ந்த நிலையிலேயே இருக்கும் என்று விளக்கினார்.நீங்கள் அசைவ உணவு உண்பீர்களா?என்று கேட்டேன் அதற்கு அவர் ஆம்.நாங்கள் எந்த உணவையும் உண்ணலாம்.ஜாதி மத பேதமின்றி யாரிடமிருந்தும் எந்த உணவையும் உண்ணலாம் என்றார்.அப்படியானால் நீங்கள் இந்துக்கள் அல்லாதவர்களிடமிருந்தும் உணவை வாங்கி உண்பீர்களா என்று கேட்டேன்.(அந்த காலத்தில் இந்துக்கள் முஸ்லீம்களிடமிருந்து உணவை வாங்கி சாப்பிடுவதில்லை)அதற்கு சுவாமிஜி, பல நேரங்களில் எனக்கு உணவளித்தவர்கள் முஸ்லீம்களே என்றார்.
--

எங்களுக்கு அவரைப்பற்றி சரியான புரிதல் இல்லாமல் குழப்பமாக இருந்தது.துறவிகள் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று நினைத்திருந்தோமோ அவ்வாறு இல்லாமல்,சாதார சாமானிய மனிதன் போலவே இருந்தார்,அதே நேரத்தில் துறவிகளக்கெல்லாம் குருவைப்போல அசாத்திய ஆன்மீக சக்திகளையும் பெற்றிருந்தார்.இப்படிப்பட்ட பழக்கம் உள்ளவர்கள் இவ்வாறு ஆன்மீகத்தில் உயர்ந்த நிலையை அடைய முடியும் என்பதை எங்களால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.
எங்களது தவிப்பை புரிந்துகொண்டு அவர் பேசினார்.இதோ பாருங்கள் மதம் என்பது அவர்களது உணவு,உடை போன்ற பழக்கவழக்கங்களில் இல்லை.அது அகத்தை சம்மந்தப்பட்டது.புறபழக்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் தான் நாம் இன்று பலவீனம் இடைந்திருக்கிறோம். புறபழக்கங்கள் அவசியமாக அல்லது அகவளர்ச்சி அவசியமாக என்று கேட்டால்,அகத்தை வளர்க்க உதவாத புறப்பழக்க வழக்கம் தேவையில்லை என்பேன் என்றார்.
--
அங்கே பல பண்டிதர்களுடன் அவர் விவாதம் செய்தார்.எந்த நேரத்திலும் அமைதியை இழக்கவில்லை,கட்டுப்பாட்டை இழக்கவில்லை.பண்டிதர்கள் பொதுவாக சுவாமிஜியின் ஓரிரு வாத்திலிலேயே தொற்றுவிடுவார்கள்,பிறகு ஆத்திரம் அடைந்தவர்களாக கத்துவார்கள்,சுவாமிஜியை ஏசுவார்கள்.ஆனால் சுவாமிஜி அனைத்தையும் ஏற்றுக்கொண்டு கம்பீரமபகவும்,அமைதியாகவும் இருப்பார்.
--
இந்த துறவு வாழ்க்கையில் அவர் அனுபவிக்காத துன்பங்களே இல்லை.திருடர் என்று நினைத்து அவரை துரத்தியடித்ததும், காரமாக பொருட்களை சாப்பிட கொடுத்து அவரை துன்புறுத்தியதும்,ஏதோ ஒற்றர் என்று நினைத்து அவருக்கு தொந்தரவு கொடுத்ததும்.கரடு முரடான பாதைகளில் நடந்து திரிந்து.பட்டினியால் துன்புற்று அவர் பட்ட வேதனைகள் அவருக்கு மட்டுமே தெரிந்த ஒன்று.இந்த பயனங்களில் மூலம் அவர் சாதாரண மக்களின் வாழ்க்கையையும் அவர்கள் படும் துன்பங்களையும் அறிந்துகொண்டார்.பெரும்பாலும் அவர்களிடமிருந்தே உணவை உண்டு வந்தார்.அதே நேரத்தில் அரசர்கள்,வசதி படைத்தோர் இவர்களையும் சந்தித்தார்,இவர்களுடனும் பழகினார்.அவர்களுடனும் தங்கினார்.மிகப்பெரிய இந்தியாவில் பல்வேறு சூழ்நிலைகளை புரிந்துகொண்டார்.தான் இந்த மண்ணிற்கு ஆற்ற வேண்டிய பணி ஒன்று இருப்பதால் தான் இறைவன் தன்னை இப்படிப்பட்ட பல அனுபவங்கள் வாயிலாக அழைத்துச்செல்வதாக உணர்ந்தார்.
--
ஒரு முறை செய்தித்தாளை படித்துக்கொண்டிருந்தார்.இதில் உண்ண உணவின்றி பசியின் கொடுமையால் மக்கள் சாவதாக எழுதியிருந்தது.சுவாமிஜியின் மனம் மிகவும் பாதிக்கப்பட்டது அவர் ஹரிபாத மித்தரிடம் தெரிவித்தார். பட்டினியால் மக்கள் சாகிறார்கள் என்ற செய்தி தற்போது தான் நடக்கிறது.இத்தனை ஆண்டுகளில் எப்போதாவது இந்தியாவில் மக்கள் பட்டினியால் இறந்து போனதை கேள்விப்பட்டிருக்கிறாயா?(அந்த காலத்தில் வெள்ளையர்களின் ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது.அவர்களின் சூழ்சியின் படி இந்தியாவில் எந்த பகுதியில் எதை பயிரிடவேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்வார்கள். பெரும்பாலும் பணப்பயிர்களே பயிரிடப்பட்டன.அவைகளை அவர்கள் இங்கிலாந்திற்கு எடுத்து சென்றுவிடுவார்கள்.திரும்ப நம்மிடமே அதை விற்பார்கள்,அதை அதிகவிலை கொடுத்து நாம் வாங்க வேண்டும். நம்மிடம் பருத்தி இருக்கும் ஆனால் நாம் ஆடை நெய்யக்கூடாது.பருத்தியை அவர்கள் எடுத்துக்கொள்வார்கள் அவர்களிடமிருந்து ஆடையை அதிகவிலைக்கு வாங்க வேண்டும்.இதனால் ஒரு துணி வாங்க கூட முடியாமால் பலர் காலம் கடத்தவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.அதேபோல் நம்மிடம் தாராளம் உப்புகிடைக்கும் ஆனால் அந்த உப்பை நாம் பயன்படுத்த கூடாது.அவர்களிடமிருந்து தான் உப்பை வாங்க வேண்டும்.இதனால் கறிக்கு உப்புகூட வாங்க சக்தியற்று பலர் வாழ்ந்தார்கள். ஒரு வேளை உணவு கிடைப்பதே பெரும் பாடாக இருந்தது.வழக்கமாக நடைபெற்றுவந்த பண்டமாற்று முறை அடிமோடு நிறுத்தப்பட்டது. இந்தியாவில் விளையும் அனைத்தும் வெள்ளைக்காரர்களுக்கு சொந்தம்.நமக்கு தேவைப்படுவதை அவர்களிடமிருந்தே வாங்கிக்கொள்ள வேண்டும்.வெள்ளையர்கள் வருவதற்கு முன்பு வரை பஞ்சத்தால் இந்தியாவில் மக்கள் இறந்தது இல்லை. பஞ்சகாலத்தில் அரசர்கள் தானியக்கிடங்கிலிருந்து ஏழைகளுக்கு உணவளிப்பார்கள்.அதேபோல் தர்மசிந்தனை உள்ள மக்கள் ஒரு பகுதி உணவை உணவின்றி வருபவர்களுக்காக கொடுப்பதற்காக எடுத்து வைத்திருப்பார்கள்.ஒரு வாய் சோறு இல்லாமல் செத்தான் என்ற செய்தி அப்போது அரிதானது. )வெள்ளையர்கள் இந்தியாவில் செய்து கொண்டிருக்கும் கொடுமைகள் சுவாமிஜிக்கு மிகுந்த மனவேதனையை உண்டாக்கியது. ஆனால் இதற்கெல்லாம் யார் காரணம் என்று அவர் திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டார். பதில் நாமே தான் காரணம் என்பதை புரிந்து கொண்டார். நாம் மற்ற நாடுகளுக்கு செல்லவில்லை.அவர்கள் எவ்வாறு முன்னேறுகிறார்கள் என்பதை அறியவில்லை.வாழ்க்கை போராட்டத்தில் அவர்கள் நம்மைவிட பல மடங்குமுன்னேறிவிட்டார்கள்.நாம் நமது நாட்டு மக்களை அடிமைப்படுத்துவதற்காக நமது சக்திகளை செலவு செய்தோமே தவிர,ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபடவில்லை.ஒரு காலத்தில் இந்தியா உலகின் செல்வவளம் மிக் நாடாக,அன்னியர்கள் வரதுடிக்கும் கனவுதேசமாக.அறிவின் சிகரமாக,ஆற்றலின் உறைவிடமாக இருந்தது.திடீரென இந்தியா ஏன் இவ்வாறு ஆனது.இதை எவ்வாறு சரி செய்வது என்பதை நினைத்து நினைத்து வேதனை அடைந்தார். அதற்கான வழியை கண்டு பிடித்தாரா? அடுத்துவரும் பகுதிகளில் அதை பார்க்கலாம்..
---
தொடரும்...
--
சுவாமி விவேகானந்தரின் வாட்ஸ்அப்குழுவில் இணைய-9003767303 அட்மின்-சுவாமி வித்யானந்தர்

No comments:

Post a Comment