Wednesday, 24 January 2018

சுவாமி விவேகானந்தருக்கு நோய் வந்தது எதனால்- அவர் சிறுவயதில் இறந்தது ஏன்


சுவாமி விவேகானந்தருக்கு நோய் வந்தது எதனால்? அவர் சிறுவயதில் இறந்தது ஏன்?
-
ஆன்மீக வாழ்க்கை வாழ்பவர்கள் அனைவரையும் ஒரேமாதிரி அளவிட முடியாது. பொதுவாக ராஜயோகம் பயில்பவர்கள் தனிமையில்,அமைதியான வாழ்க்கையை நாடி சென்றுவிடுவார்கள்.ஆகவே அவர்களுக்கு நோய் வருவதற்கான வாய்ப்பு குறைவு.உடல் நலன் பாதிக்கப்பட்டால் அதை சரி செய்யவும் அவர்களால் முடியும்.
-
பக்தியோகத்தில் செல்லும் ஒருவருக்கு உடல் நலன் பாதிக்ப்பட்டால் அது இறைவன் தந்த பரிசு என்று நினைத்து அதை அப்படியே ஏற்றுக்கொண்டு வாழ்வார்கள்.அதை நீக்கவேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்ய மாட்டார்கள்
-
ஞான யோகத்தில் செல்பவர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்படால் அதைக்குறித்து கவலைப்பட மாட்டார்கள்.உடல் என்பது பொய்த்தோற்றம் என்பதால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது என்று நினைப்பார்கள்.
-
கர்மயோகத்தில் செல்லும் ஒருவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டால். தன்னுடைய முன்வினை பயன்களால்தான் இவ்வாறு நடக்கிறது அவைகளை அனுபவிப்பதன் மூலம் பாவங்கள் போகும் என்று நினைப்பார்கள்.ஆகவே அதற்காக வருத்தப்பட மாட்டார்கள்.
-
மருத்துவரிடம் பார்க்க கூடாதா என்று நீங்கள் கேட்கலாம். நாம் இங்கு விவரிப்பது மருத்துவரிடம் காண்பித்த பிறகும்,நோய் தீராமல் தொடர்ந்து வரும் அதைப்பற்றி.அதாவது தீராத நோய்கள் பற்றி..
-
சுவாமி விவேகானந்தர் இந்தியாவில் பிச்சையேற்று வாழும் நாட்களில், சரியான உணவு கிடைக்கவில்லை. அந்த காலத்தில் பட்டினியால் பல லட்சம் பேர் உயிழப்பது சர்வ சாதாரணமாக இந்தியாவில் நிகழ்ந்தது. எனவே பிச்சைக்காரர்களுக்கு உணவு கிடைப்பது கடினம்.அவ்வாறு உணவு கிடைத்தாலும் கெட்டுப்போன,மற்றவர்கள் உண்ண முடியாத உணவுகளே கிடைத்தன.சுவாமி விவேகானந்தர் பல நாட்கள் உணவு இல்லாமல் பட்டினியில் வாடினார்.இதனால் பல முறை அவருடைய உடல்நலம் பாதிக்கப்பட்டது.சில சமயங்களில் மரணத்தில் விழிம்புவரை சென்று வந்துள்ளார்.
-
பின்பு அவர் வெளிநாடுகளில் இந்துமதத்தை பிரச்சாரம் செய்யும்போது,தேவையான உணவு கிடைத்தது.ஆனால் பெரும்பாலும் மாமிச உணவுகளே கிடைத்தன. சுவாமி விவேகானந்தர் போன்ற உயர்ந்த ஞானநிலையில் இருப்பவர்களுக்கு மாமிச உணவு என்பது விஷம்போன்றது.ஆனால் அமெரிக்காவில் தற்போது கிடைப்பதுபோல காய்கறி உணவு அந்த நாட்களில் கிடைக்கவில்லை.அந்த காலத்தில் அனைவருமே மாமிசம் உண்பவர்களாகவே இருந்தார்கள்.சுவாமிஜி பெரும்பாலும் அவர்களின் வீட்டில் விருந்தாளியாகவே இருந்தார்.அவர்கள் கொடுக்கும் உணவையே உண்டு வந்தார்.சில நாட்களில் அவராகவே காய்கறி உணவை சமைத்து உண்டிருக்கிறார்.ஆனாலும் அலைச்சல்மயமான அவரது வாழ்வில் சமைத்து உண்ணும் அளவு போதிய நேரம் இல்லை.
-
இவ்வாறு தொடர்ந்து உணவு கட்டுப்பாடு இல்லாததால் ரத்தத்தில் கொழுப்பு அதிகம் சேர்ந்தது.அது மட்டுமல்ல ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்தது.அந்த காலத்தில் சர்க்கரை வியாதி என்பது தீர்க்க முடியாத வியாதியாக கருதப்பட்டது. ரத்த அழுத்தம்,ஆஸ்துமா போன்ற நோய்களும்,சிறுநீர் கோளாறுகளும் தொடர்ந்து வந்தது.இவை அனைத்திற்கும் காரணம் உணவுதான் என்று அவரே பலமுறை கூறியிருக்கிறார்.
-
இதைவிட இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும்.சுவாமி விவேகானந்தர் சிறந்த கர்மயோகி. முற்பிறவியில் அவர் ஒரு ரிஷியாக இருந்தார். மற்றவர்களுக்கு நன்மை செய்வதற்காக மனிதனாக பிறந்தார். ஒரு மனிதனை ஆன்மீகத்தை நோக்கி திருப்ப வேண்டுமானால் தன்னுடைய சக்தியை அவன்மீது செலுத்தவேண்டும்.அதாவது தன்னிடம் உள்ள புண்ணியத்தின் பலனை அவனுக்கு கொடுத்து, அவனிடம் உள்ள பாவத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதுதான் குரு சீடனுக்கு இடையே உள்ள கொடுக்கல் வாங்கல். சுவாமி விவேகானந்தர் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்த்தும்போது அவரிடமிருந்து அளவுக்கு அதிகமான ஆன்மீக சக்தி வெள்ளம்போல் பாய்ந்தது.அவரது பேச்சை கேட்பவர்கள் மெய்மறந்து அதிலேயே ஒன்றி போனார்கள்.அவர்களது மனத்தை மிக உயர்ந்த நிலைக்கு சுவாமிஜி அழைத்து சென்றார். இதன் காரணமாக பலரது பாவம் அவருக்கு வந்தது. சாதாரண குருவால் இவ்வாறு செய்ய முடியாது.அவர்களால் ஒரு சிலரது மனத்தை உயர்ந்த நிலைக்கு அழைத்து செல்ல முடியும்,ஆயிரக்கணக்கானவர்களை ஒரே நேரத்தில் உயர்ந்த ஆன்மீக தளத்திற்கு அழைத்து செல்ல முடியாது.
-
அமெரிக்காவில் வாழ்ந்த காலத்தில் சுவாமிஜி பெரும் சக்தியை அங்கு செலவிட்டார். அதன்பிறகு இந்தியாவில் அவர் சொற்பொழிவாற்றும் போதும் பெரும் சக்தியை செலவிட்டார்.இவ்வாறு 12 ஆண்டுகள் கடினமான உழைப்பிற்கு பிறகு அவரது உடல்பிநிலை சீர்செய்ய முடியாத அளவுக்கு கெட்டுவிட்டது.சுவாமி விவேகானந்தர் வெளிநாட்டில் வாழ்ந்த நாட்களில் அன்னை காளியின் காட்சி அவ்வப்போது கிடைத்துவந்தது. பின்பு காளியின் காட்சி கிடைக்கவில்லை. தன்னுடைய உடல் மூலமாகஅன்னை காளி செய்ய வேண்டி பணிகளை செய்து முடித்துவிட்டாள் அதனால்தான் தற்போது அவள் வரவில்லை என்பதை அவர் உணர்ந்தார்.இனி இந்த உலகத்தில் தனக்கென்று எந்த பணியும் இல்லை. தேவைப்பட்டால் மீண்டும் பிறந்து வருவேன் முடிக்க வேண்டிய பணிகளை முடிப்பேன் அதன்பிறகு எங்கிருந்து வந்தேனோ அங்கேயே அதாவது சப்தரிஷி மண்டலத்திற்கே சென்றுவிடுவேன் என்று கூறினார்
-
சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் வாழ்ந்த நாட்களில்,அவருக்கு எதிராக சிலர் இவ்வாறு பிரச்சாரம் செய்தார்கள்.அதாவது யோகிக்கு உடல்நலம் பாதிக்காது.அவர்களுக்கு நோயே வராது.அவர்களது நோயை அவர்களாலேயே நீக்க முடியும்.இவர் உண்மையான யோகி அல்ல என்று கூறினார்கள். சுவாமிஜி இவைகளை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.ஸ்ரீராமகிருஷ்ணர் புற்றுநோயால் அவதிப்பட்டுகொண்டிருக்கும்போது பலர் அவரிடம் வருவதை நிறுத்திக்கொண்டார்கள்.இவரது நோயையே இவரால் நீக்க முடியவில்லையே இவர்என்ன பெரிய யோகியா? என்று மக்கள் அப்போது நினைத்தார்கள்.ஸ்ரீராமகிருஷ்ணர் அன்னை காளியிடம் இதுபற்றி கேட்டார். பிறரது பாவங்களை நீ ஏற்றுக்கொண்டதால் உனக்கு நோய் வந்திருக்கிறது என்று காளி கூறினாள்.
-
சிலர் ஸ்ரீராமகிருஷ்ணரிடம் இவ்வாறு கூறினர்-சுவாமி யோகிகளால் நோயை நீக்க முடியும்.நீங்கள் இந்த நோய் குணமடையட்டும் என்று நினைத்து உங்கள் மனத்தை உடல்மீது செலுத்தினால் நோய் குணமடைந்துவிடும் என்று கூறினார்கள். பிறரது பாவத்தை ஏற்றுள்ளதால் நோய் வந்திருக்கிறது ,இப்போது அந்த நோயை குணப்படுத்தினால் ,மீண்டும்பாவங்கள் அந்த மக்களிடமே சென்றுவிடும் என்பதால் ஸ்ரீராமகிருஷ்ணர் அதை செய்ய மறுத்துவிட்டார். எனது மனம் இறைவனிடம் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது,இந்த உடல் இறைவனின் கருவி,அவர் விரும்பியதால் நோய் வந்திருக்கிறது, இறைவனிடம் கொடுக்கப்பட்ட இந்த கருவியை.அவரிடமிருந்து எடுத்துக்கொள்வதா? அது நடக்காது என்று கூறினார்.
-
ஆகவே சுவாமி விவேகானந்தர் போன்ற மகான்கள் மக்களின் பாவத்தை ஏற்றுக்கொண்டதால்தான் நோய்களுக்கு உள்ளாகவேண்டிய சூழல் ஏற்பட்டது. மற்றவர்களின் பாவத்தை ஏற்றுக்கொள்ள விரும்பாமல் வெறும்உபதேசங்களை மட்டும் கொடுக்கும் யோகிகளுக்கு நோய்வருவதில்லை.
-
சுவாமி விவேகானந்தரின் பணி முடிந்துவிட்டது என்று அவர் உணர்ந்ததால் ஒரு நல்ல நாளை அவரே முடிவு செய்தார்
கிழக்கு வங்காளத்திலிருந்து வந்திருந்த விரஜேந்திரர் என்ற இளைஞர் அப்போது சுவாமிஜிக்கு பணிவிடைகள் செய்து வந்தார்.
-
அவரிடம் சுவாமிஜி கூறினார்,” இன்று என் உடம்பு லேசாகவும் நன்றாகவும் இருக்கிறது. நான் நன்றாக இருக்கிறேன் ”என்றார்.தமது அறையில் வடமேற்கு நோக்கி ஜெபமாலையுடன் ஜெபம் செய்ய தொடங்கினார்.அறையின் வெளியே விரஜேந்திரரை அமர்ந்திருக்குமாறு கூறினார்.
-
சுமார் 6.30 மணியளவில் சீடரை கூப்பிட்டு,உஷ்ணமாக இருக்கிறது,அதை ஜன்னல் கதவுகளை திறந்து வை என்றார். பிறகு தமது தலையில் விசிறிமூலம் சிறிது வீசுமாறு கூறினார், சிறிது நேரம் சென்ற பிறகு போதும் இனி என் கால்களை பிடித்துவிடு என்றார். அப்போது அவர் கையில் ஜெபமாலையுடன் ஜெபம் செய்துகொண்டிருந்தார்.
-
சுவாமிஜி இடது பக்கமாக லேசாக படுத்திருந்தார், சிறிது நேரத்திற்கு பிறகு ஒரே ஒருமுறை லேசாக வலது பக்கமாக திரும்பி படுத்தார்.
-
திடீரென அவரது கைள் நடுங்கின. கனவு கண்ட குழந்தை அழுவதுபோல சுவாமிஜியிடமிருந்து ஒரு சத்தம் எழுந்தது. சிறிது நேரத்தில் ஆழ்ந்த மூச்சை உள்ளிழுத்தார். அவரது தலை தலையணையில் சாய்ந்தது. மீண்டும் ஒருமுறை அதேபோல் ஆழ்ந்த மூச்சை இழுத்தார். பிறகு எல்லாம் நிசப்பதம்.
-
-
அப்போது சுவாமிஜிக்கு வயது 39வருடம் , 5மாதம் 24 நாள் ஆகியிருந்தது. அவர்40வது வயதை பார்க்கவில்லை
-
அப்போது அவர் ஒரு கௌபீனம் மட்டுமே உடுத்தியிருந்தார். அவரது கண்கள் மேல் நோக்கியவாறு இருந்தது.
-
சுவாமிஜி மகாசமாதி அடைந்த அந்த நேரத்தில் அவருக்கு பிரியமான சென்னையில் இருந்த சகோதர துறவி ராமகிருஷ்ணானந்தருக்கு(சசி) ஒரு குரல் தெளிவாக கேட்டது.-சசி!நான் உடம்பை உதறிவிட்டேன்!
-
”கிழிந்த ஆடையை வீசி எறிவதுபோல் என் உடம்பை களைந்துவிடுவது நல்லதென்று ஒருநாள் தோன்றலாம்,ஆனாலும் நான் வேலை செய்வதை நிறுத்தமாட்டேன். உலகம் முழுவதும் உள்ள மனிதர்களை தூண்டிக்கொண்டே இருப்பேன்.அவர்கள் அத்தனை பேரும் தாங்கள் இறைவனுடன் ஒன்றுபட்டிப்பதை உணரும்வரை நான் உழைத்துக்கொண்டே இருப்பேன்”
என்று அவர் கூறிய வார்த்தைகள் இன்னும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது



கட்டுரை....சுவாமி வித்யானந்தர் (24-1-2018)

No comments:

Post a Comment