Wednesday, 24 January 2018

இந்துமதம் என்பது இந்தியாவில் உள்ள அனைத்து மதங்களின் பொதுக்கருத்துக்களை

இந்துமதம் என்பது பல்வேறு மதங்கள் சேர்ந்த ஒரு பொதுபெயர் என்று நான் குறிப்பிட்டிருந்தேன். சிலர் அதை ஏற்கவில்லை. மாறாக இந்துமதம் என்பது தாய்போலவும், சைவம்,வைணவம்,சாக்தம் போன்ற மதங்கள் அதன் குழந்தைகள் போன்று என்றும் குறிப்பிட்டார்கள்..
-
சுவாமி விவேகானந்தரின் கண்ணோட்டத்தில் இதை சற்று விரிவாக பார்ப்போம்.
-
சுவாமி விவேகானந்தர் இந்தியா முழுவதும் பயணம்மேற்கொண்டு பல்வேறு மக்களை சந்தித்தார்.பல மதங்களை கற்று அறிந்தார்.மதங்களில் கொள்கைகளில் தவறு இருப்பதாக அவர் ஒரு இடத்தில்கூட கூறவில்லை,மாறாக தங்கள் மதமே மேலானது மற்றது தாழ்ந்தது என்ற கொள்கைவெறி நிலவுவதை பார்த்தார்.ஆனவே இந்த மதங்களில் உள்ள பொதுக்கருத்துக்களை எடுத்துக்கூறி ஒற்றுமையை உருவாக்க வேண்டும்.எதிர்கால இந்தியாவிற்கு மதநல்லிணக்கம் அவசியம் என்பதை மேலும்மேலும் வலியுறுத்தினார்.இலங்கையில் சுவாமி விவேகானந்தரை சைமதத்தினர் வரவேற்றார்கள்,தங்களுக்குள் ஒருவராக கருதினார்கள்.சென்னையில் வைணவர்கள் வரவேற்றார்கள்,தங்கள் நெறியை சேர்ந்தவராக அவரை கருதினார்கள்.சுவாமி விவேகானந்தர் அனைத்து மதங்களும் வளரவேண்டும் என்பதை விரும்பினார்
-
முற்காலத்தில் தனித்தனியாக இயங்கிய பல மதங்களை ஆதிசங்கரர் ஒன்றிணைத்தார்.அதேபோல் தற்காலத்தில் சிலர் சைவம்,வைணவம்,சாக்தம் உட்பட அனைத்து மதங்களையும் ஒன்றிணைத்து அவைகளுக்கு இந்துமதம் என்ற ஒரேபெயரில் அழைக்கலாம் என கருதுகிறார்கள்.சிவன்,விஷ்ணு,சக்தி போன்ற அந்த அந்த மதங்களில் இஷ்டதெய்வத்தை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்கள்.
-
இந்த கருத்து கேட்பதற்கு நன்றாக இருந்தாலும்,சுவாமி விவேகானந்தரின் பார்வை இதுவல்ல. சைவசமயத்தை எடுத்துக்கொண்டால். அது ஒரு முழுமைபெற்ற மதமாக விளங்குகிறது.அந்த மதத்தில் குறிப்பிடப்பட்ட வழிமுறைகளை பின்பற்றி ஒருவன் நடந்தால் முக்தி அடைவது நிச்சயம்.அந்த மதம் வளர்வதற்கு புதிய கருத்துக்கள் எதுவும் இனிதேவைப்படவில்லை. அதேபோலவே வைணவ மதமும் ஒரு முழுமை பெற்ற மதமாகவே உள்ளது.அதை பின்பற்றினால் முக்திபெறுவது நிச்சயம். அப்படி இருக்கும்போது இவைகள் அனைத்தையும் ஒன்று கலக்கவேண்டிய அவசியம் இல்லை.இவைகள் தனித்தனியாகவே வளரமுடியும்.இவைகளுக்குள் மதச்சண்டை மட்டும் தவிர்க்கப்பட வேண்டும்
-
இந்துமதம் என்பது இந்தியாவில் உள்ள அனைத்து மதங்களின் பொதுக்கருத்துக்களை திரட்டி ஓரிடத்தில் வைப்பதாகும்.அந்த கருத்துக்களை சுவாமி விவேகானந்தர் துவைதம்,விசிஷ்டாத்வைதம்,அத்வைதம் என்று மூன்றாக பிரித்தார்.சில மதங்களில் துவைத கருத்துக்கள் அதிகமாகவும்,சில மதங்களில் விசிஷ்டாத்வைத கருத்துக்கள் அதிகமாகவும்,சில மதங்களில் அத்வைத கருத்துக்கள் அதிகமாகவும்.சில மதங்களில் இந்த மூன்று கருத்துக்களும் சேர்ந்தும் காணப்படுகிறது.
-
இந்த பொதுக்கருத்துக்களை அனைவரும் தெரிந்துகொள்வதன் மூலம் மதங்களுக்கிடையே உள்ள வேறுபாடு நீங்கும்.மதஒற்றுமை மலரும் என்பதுதான் சுவாமி விவேகானந்தரின் கருத்து. இந்துமதத்திற்கென்று தனியாக வழிபாடுகள்,சடங்குகள் போன்றவற்றை உருவாக்கி, ஏற்கனவே உள்ள சைவம்,வைணவம் போன்ற மதங்களின் வளர்ச்சியை தடுப்பது அவரது கருத்து அல்ல. ஒவ்வொரு மதமும் மேலும் மேலும் விரிவடைய வேண்டும் சைவசமயம் மேலும் வளரவேண்டும்,வைணவம் மேலும் வளரவேண்டும் இவைகளை கடந்து இன்னும் இந்தியாவில் உள்ள பல்வேது மதப்பிரிவுகளும் மேலும் மேலும் வளரவேண்டும் என்பதே சுவாமி விவேகானந்தரின் விருப்பம்.
-
கட்டுரை... சுவாமி வித்யானந்தர்(23-1-2018)

No comments:

Post a Comment