துறவிகள் காட்டிலோ அல்லது மடங்களிலோதானே இருக்க வேண்டும். மக்களிடம் அவர்களுக்கு என்ன வேலை?
-
இந்த கேள்வி பொதுவாக பலர் கேட்கும் கேள்விதான். ஞானம் பெற வேண்டுமானால் மனிதர்களின் தொடர்பைவிட்டு
புத்தரைபோல தனி இடத்திற்கு சென்று வாழவேண்டும்.பல ஆண்டுகள் தொடர்ந்த பயிற்சியின் காரணமாக ஞானம் கிடைக்கும். அவ்வாறு ஞானம் கிடைக்கும்வரை பயிற்சிகள் மேற்கொள்ளவேண்டும்.ஒருவேளை இந்த பிறவியல் ஞானம் கிடைக்காமலும் போகலாம். சிலருக்கு விரைவில் ஞானம் கிடைத்துவிடும்.அதற்கு குருவின் அருள் காரணமாக இருக்கலாம் அல்லது முற்பிறவிகளில் அவர்கள் செய்த தவத்தின் காரணமாக இருக்கலாம்.அவ்வாறு ஞானம் கிடைத்த பின் அதில் நிலைத்திருக்க வேண்டுமா அல்லது அந்த ஞானத்தை மற்றவர்களுக்கு தெரிவிக்க வேண்டுமா என்பது அவர்களது விருப்பம்
-
சிலர் ஞானம் பெற்ற பிறகும் சில ஆண்டுகள் தனிமையிலேயே வாழ்ந்து உடலைவிட்டு விட்டு முக்தி அடைவார்கள். சிலர் ஞானம் பெற்ற பிறகு அந்த ஞானத்தை மக்களுக்கு கொடுப்பதற்காக மக்களிடம் வருவார்கள். மக்கள் எல்லோரும் ஞானம் பெற தகுதி உடையவர்களாக இருக்கமாட்டார்கள்.பலர் பல படிகளில் இருப்பார்கள்,அவர்களுக்கு ஏற்றாற்போல உபதேசமோ,அல்லது வழிகாட்டவோ செய்வார்கள்.
-
அவ்வாறு மக்களிடம் வந்து உபதேசம் செய்தாலும்,அவர்கள் மற்றவர்களை போல இருக்கமாட்டார்கள்.இந்த உலகத்தில் மக்கள் சிக்கிக்கிடக்கிறார்கள்,ஆனால் அந்த துறவிகள் அப்படியல்ல.அவர்கள் ஜீவன்முக்தர்கள்,இந்த உலகத்தை பற்றி நன்கு தெரிந்தவர்கள்.இவ்வாறு மக்களிடம் வந்து உபதேசம் செய்யும் துறவிகளை சிலர் தவறாக விமர்சிப்பார்கள்.அவ்வாறு தவறாக விமர்சிப்பவர்கள், பாவம் உண்மை அறியாதவர்கள்.
-
உலக வாழ்க்கையை விட்டு விலகி முதலில் ஞானம்பெற வேண்டும்.பிறகு மக்களிடம் வந்து அவர்களுக்கு சேவைசெய்ய வேண்டும். இது ஒரு பாதை.
-
இன்னொரு துறவு பாதை உள்ளது.அதை சுவாமி விவேகானந்தர் வலியுறுத்துகிறார்.துறவிகளே முதலில் மக்களுக்கு சேவை செய்யுங்கள்.அந்த சேவையின் மூலம் உங்களை படிப்படியாக தூய்மைப்படுத்திக்கொள்ளுங்கள்,பிறகு ஞானம் கிடைக்கும்.அதன்பிறகு மக்களிடமிருந்து விலகிவிடுங்கள்,உலகத்திற்கு மீண்டும் வரத்தேவையில்லை.முக்தி பெற்றுவிடலாம்.
-
இந்த பாதை மெதுவான பாதை இந்த பாதை வழியாக சென்று ஞானம் பெறுவதற்கு பல ஆண்டுகள் ஆகும்,இருந்தாலும் வெற்றிபெறுவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.அவை என்ன?
-
1.. பல துறவிகள் ஓரிடத்தில் சேர்ந்து வாழலாம் அதனால் ஒரேயடியாக தனிமை வாழ்க்கைக்கு செல்லாமல் படிப்படியாக முன்னேறலாம்.
-
2. சிறுசிறு ஆசைகள் எதாவது இருந்தால் அதை நிறைவேற்றிக்கொள்ளலாம்.
-
3.மூத்ததுறவிகளின் அனுபவங்களை கேட்டு தெரிந்துகொள்ளலாம்
-
4. சாஸ்திரங்களை படித்து நமது சந்தேகங்களை போக்கிக்கொள்ளலாம்
-
5. மக்களுக்கு சேவை செய்வதன் மூலம் நமது பாவத்தை போக்கிக்கொள்ளலாம்
-
6. வீட்டில் உள்ளவர்கள் தேவைப்பட்டால் வந்து பார்த்து செல்லலாம் . இன்னும் பல நன்மைகள் உள்ளன.
-
இங்கே இரண்டு விதமான துறவிகள் பற்றி பார்த்தோம் 1. முதலில் தனிமையான வாழ்க்கைக்கு சென்று ஞானத்தை பெற்ற பிறகு மக்களிடம் வந்து சேவை செய்பவர்கள். 2. மக்களுக்கு சேவை செய்து அதன் மூலம் படிப்படியாக தனிமை வாழ்க்கைக்கு தயார்படுத்திக்கொண்டு,ஞானத்தை பெறுவது
-
மக்களிடம் பழகிக்கொண்டிருக்கும் இந்த இரண்டு வகையான துறவிகளையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடாது.
-
1. ஞானம் பெற்றவர்கள் பெண்களிடம் பழகினாலும் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது. ஞானம் பெறாதவர்கள் பெண்களிடமிருந்து கண்டிப்பாக விலகி இருக்க வேண்டும்.
-
2. ஞானம் பெற்றவர்கள் அனைவரையும் சமமாக நேசிப்பார்கள். ஞானம் பெறாதவர்களுக்கு வேறுபாட்டு உணர்ச்சி இருக்கும்.சிலரை நேசிப்பார்கள்,சிலரை வெறுப்பார்கள்
-
3.ஞானம் பெற்றவர்களால் தனிமையிலும் வாழமுடியும்,மக்களோடு சேர்ந்தும் வாழமுடியும். ஞானம் பெறாதவர்களால் இந்த இரண்டும் முடியாது.அவர்கள் தங்களை போன்ற துறவிகளுடன் மட்டுமே சேர்ந்து வாழமுடியும்
-
4.ஞானம் பெற்றவர்கள் ஆச்சார்யர்கள். உணர்வு கடந்த நிலையை அடைந்தவர்கள். அவர்கள் சுயமாக கருத்துக்களை சொல்லும் ஆற்றல் படைத்தவர்கள். ஞானம் பெறாதவர்கள் மற்றவர்களின் கருத்துக்களை மேற்கோள் சொல்லி பேசுவார்கள்.
-
5.ஞானம் பெற்றவர்களை மக்கள் பின்தொடர்ந்து செல்லலாம்,அது அவர்களுக்கு நன்மை செய்யும். ஞானம் பெறாதவர்களை மக்கள் பின்தொடர்ந்து செல்லக்கூடாது.அது அவர்களுக்கு நன்மை தராது
-
இன்னும் இதேபோல் பல வேறுபாடுகளை காட்ட முடியும்.
-
கட்டுரை...சுவாமி வித்யானந்தர் (28.1.2018)
No comments:
Post a Comment