Thursday, 18 January 2018

வேதங்களின் பார்வையில் யார் பிராமணன்?

வேதங்களின் பார்வையில் யார் பிராமணன்?
-
சாமவேதம்-  வஜ்ரஸுசிகோபநிடதம்
-
1.ஓம். வஜ்ரஸுசீ என்ற உபநிடதத்தை கூறுகிறேன்.அது அஞ்ஞானத்தைப் பிளக்கும் சாஸ்திரம். ஞானமில்லாதவர்களுக்கு தூஷணமாகவும் ஞானக்கண் படைத்தவர்களுக்கு பூஷணமாகவும் விளங்குவது அது
-
2. பிராமணர் சத்திரியர்  வைசியர் சூத்திரர் என்று நான்கு வர்ணங்கள் அவற்றுர் பிராமணர் முக்கியமானவர் என்று வேதத்தின் கருத்தையொட்டி ஸ்மிருதிகளும் கூறும்.அதைப்பற்றி ஆராயவேண்டும். பிராமணன் என்றால் யார்? ஜீவனா,தேகமா,ஜாதியா,ஞானமா,கர்மமா,தர்மமா?
-
3.முதலில் ஜீவன் பிராமணன் என்றால் அது வருவதும் போவதுமாக பல பிறவிகள் பிறக்கிறது.பல தேகங்களில் ஜீவன் ஒரே வடிவாயிருப்பதாலும்,ஒருவனேயாயிருப்பதாலும்,கர்ம வசத்தால் பல உடல்கள் ஏற்படுவதாலும்,எல்லா உடல்களிலும் ஜீவன் ஒரேமாதிரி இருப்பதாலும் ஜீவனை பிராமணன் என்று கூற இயலாது.(ஜீவன் பல பிறவிகளில் பல உடல்களில் பிறக்கிறது.சில பிறவிகளில் மிருக உடல்கள்கூட கிடைக்கலாம். ஆகவே ஜீவன்.பிராமணன் அல்ல)
-
4. ஆனால் தேகம் பிராம்மணன் என்று நினைத்தால் அதுவும் பொருந்தாது. உயர்ஜாதிமுதல் தாழ்ந்தசாதிவரை உள்ள அனைவருக்கும் உடல் ஒரே வடிவாக பஞ்சபூதங்களால் ஆக்கப்பட்டிருக்னகிறது. பிறப்பு.இறப்பு.முதுமை போன்றவை ஒரேபோலவே இருப்பதாலும், ஒவ்வொரு ஜாதியினரின் உடலும் தனித்தனி வண்ணமாக இல்லாமல் ஒரே போல் இருப்பதாலும். உடலை அடிப்படையாக கொண்டு ஒருவனை பிராமணன் என்று கூறமுடியாது
-
5.ஆனால் பிறப்பால் வந்த  ஜாதியால் ஒருவன் பிராமணனா என்றால்,அதுவும் இல்லை. பிற  ஜாதிகளிலும்,அனேக ஜாதிகளிலும் பல ரிஷிகள் தோன்றியிருக்கிறார்கள்.வால்மீகி, வியாசர், வசிஷ்டர் உட்பட பலர் கீழ்ஜாதியில் பிறந்திருக்கிறார்கள்.ஆகையால் பிறப்பின் அடிப்படையில் வரும் ஜாதியால் ஒருவனை பிராமணன் என்று கூறமுடியாது
-
6.அறிவால் ஒருவனை பிராமணன் என்று அழைக்கலாமா என்றால் அதுவும் பொருந்தாது. சத்திரியர் முதலான பிற ஜாதியிலும் மிக்கஅறிவு பெற்றவர்கள் பலர் இருக்கிறார்கள்.ஆகையால் அறிவால் ஒருவனை பிராமணன் என்று அழைக்க முடியாது
-
7. செய்யும் தொழிலை(கர்மத்தை) வைத்து ஒருவனை பிராமணன் என்று அழைக்கலாமா என்றால் அதுவும் இல்லை. எல்லா உயிர்களுக்கும் பிராரப்தம் ஸஞ்சிதம் ஆகாமி என்ற மூன்று கர்மங்களும் பொதுவாக இருக்கிறது. முன்ஜன்மத்தால் தூண்டப்பட்ட மக்கள் பலர் கிரியைகளை செய்கிறார்கள்.ஆகையால் கர்மத்தால் பிராமணன் இல்லை
-
8.தர்மம் செய்பவர்கள் பிராமணன் என்று கூறலாமா என்றால் அதுவும் இல்லை. சத்திரியர் உட்பட பிறரும் தர்மம் செய்கிறார்கள்.
-
9.அப்படியானால் யார்தான் பிராம்மணன்? இரண்டற்ற சச்சிதானந்த ஸ்வரூபனாகவும் ஜாதி,குணம்,கிரியை அற்றதும்,பிறப்பு,இறப்பு முதலிய ஆறு நிலைகள் அற்றதும் சத்தியம்,ஞானம்,ஆனந்தம் என்ற ஸ்வரூபமுடையதும்,தோசங்கள் அற்றதும் , தான் நிர்விகல்பமாயும் எல்லா கற்பனைகளுக்கும் ஆதாரமாயும்,எல்லா உயிர்களுக்கு உள்ளே நின்று இயங்குவதாயும்,ஆகாயத்தைபோல் உள்ளும் வெளியும் வியாபித்துப் பிளவுபடாமல்  ஆனந்த வடிவாயும் மனதிற்கெட்டாததாயும்,அனுபவத்தில் மட்டும் அறியக்கூடியதாயும்,அபரோக்ஷமாய் பிரகாசிப்பதாயும் உள்ள ஆத்ம வடிவினனாயும்,விரும்பு வெறுப்பு முதலிய தோசங்கள் அற்றவனாயும். சமம்,தமம் முதலியவைகளுடன் கூடி மாச்சர்யம்,ஆசை,மோகம் முதலியவை நீங்கியவனாயும் அகங்காரம் முதலியவற்றால் தொடப்படாதவனாகவும் முக்தலக்ஷணம் வாய்ந்தவன் எனனோ அவனே பிராம்மணன் என்பது வேதம்,ஸ்மிருதி,புராணம்,இதிகாசம் முதலியவற்றின் முடிவான கருத்து. இதற்கு புறம்பாக பிராமணத் தன்மை இல்லவே இல்லை. இரண்டற்ற ஸச்சிதானந்தமானதுமான பிரம்மமாக ஆத்மாவை உணவவேண்டும்.
-
இங்ஙனம் சாமவேதத்தில் இடம்பெற்றுள்ள  - வஜ்ரஸுசிகா உபநிடதம் கூறுகிறது.
-
சாரம்சம்
-
1.ஒரே ஜீவன்தான் பல பிறவிகளில் பிறந்தாலும் ஜீவன் பிராம்மணன் அல்ல.2.எல்லோரது உடலும் ஒரேபோல் இருப்பதால் உடல் பிராம்மணன் அல்ல.3.எல்லா ஜாதியிலும் ரிஷிகள் பிறப்பதால்.பிறப்பால் ஒருவன் பிராம்மணன் அல்ல.4.எல்லா ஜாதியிலும் அறிவாளிகள் இருப்பதால் அறிவை வைத்து ஒருவனை பிராம்மணன் என்று கூறமுடியாது. 5. செய்யும் தொழிவை வைத்து பிராமணன் என்று கூறமுடியாது. ஏனென்றால் அந்த தொழிலை எல்லோராலும் செய்ய முடியும்.6.தான தர்மங்கள் எல்லோரும் செய்கிறார்கள்.அதனால் அதைவைத்தும் கூறமுடியாது 7. பிரம்மத்தை உணர்ந்து,உடல் இருந்தாலும் உடலற்ற நிலையில் ஜீவன்முக்தனாக வாழ்பவன்தான் பிராமணன்.
-
இந்துமதம் வாட்ஸ் அப் குழுவில் இணைய 9789 374 109-அட்மின் சுவாமி வித்யானந்தர்

No comments:

Post a Comment