Thursday, 18 January 2018

ஞானிகளுக்கு சமூக பிரச்சினைகளில் அக்கரை இல்லையா?


ஞானிகளுக்கு சமூக பிரச்சினைகளில் அக்கரை இல்லையா?
-
பெரும்பாலானவர்கள் என்னிடம் கேட்பது இதுதான்-தற்காலத்தில் சமூகத்தில் இந்துமதத்திற்கு எதிராக பல பிரச்சினைகள் நடந்துகொண்டிருக்கின்றன,இவைகளை எதிர்த்து பெரும்பாலான ஆன்மீகவாதிகள் ஏன் குரல் கொடுபப்தில்லை?
-
இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு தர்மம் உள்ளது.அவரவர் தர்மத்தை அவரவர் பின்பற்றுவதுதான் சிறந்தது. இந்துமதத்தின் தத்துவங்கள் எதுவும் தெரியாத ஒருவன் இருக்கிறான் என்று வைத்துக்கொள்வோம்,இந்துமதத்தை பற்றி அவதூறாக யாராது பேசினால் அவன் எதிர்க்க வேண்டும்.எதிர்த்து 
தர்மத்தின் வழியில் போராடவேண்டும்.அவ்வாறு எதிர்ப்பதுதான் அவனது தர்மம். அவ்வாறு எதிர்ப்பதன் மூலம் மதத்தை பற்றி மேலும் அறிந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கும்.இறைவனின் அருள் கிடைக்கும்.
-
எல்லாம் இறைவன் செயல் என்பதை அனுபவத்தில் உணர்ந்த ஒரு ஞானி இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம்.அவர் அமைதியாக உட்கார்ந்திருப்பார். எதையும் கண்டிப்பதில்லை.ஏனென்றால் எல்லாம் இறைவன் விருப்பப்டிதான் நடக்கிறது என்பது அவருக்கு தெரியும்.சும்மா இருப்பது தான் அவரது தர்மம்.அதை அவர் மீற முடியாது.அவ்வாறு அவர் மீறி போராடினாலோ அல்லது பிறரையும் தன்னைப்போல் சும்மா இரு என்று சொன்னாலோ அவர் தர்மம் தவறியவராவார்.இந்துமதத்திற்காக போராடும் ஒருவனின் பார்வையில் அவரை போன்றவர்கள்,சோம்பேரிகளாக தெரியலாம்.அல்லது கண்டும் காணாமல் இருப்பவர்களாக தெரியலாம்.அதைப்பற்றி அந்த ஞானி கவலைப்படக்கூடாது.
-
அதேபோல் ஒரு சாதாரண மனிதன் ஞானி செய்வது தான் சரி நாமும் அதேபோல் போராடாமல் எல்லாம் இறைவன் செயல் என்று சும்மா இருப்போம் என்று நினைத்தால் அது தவறு. அவன் கடமை தவறியவனாவான். அவன் உண்மையை உணரவில்லை.முதலில் எதிர்த்து போராடவேண்டும். அதன் பிறகு தான் ஞானியின் நிலை கிடைக்கும்.ஞான நிலையை அடையாத ஒருவன் எதிர்த்து போராடாமல் தன்னையும் ஒரு ஞானி என்று நினைத்துக்கொண்டால்,அவன் பிற்காலத்தில் மிகப்பெரிய துன்பங்களை சந்திக்கவேண்டிவரும்.பாபத்தை அடையவேண்டி வரும்
-
அப்படியானால் இந்த உலகத்தில் நடக்கும் பாவச்செயல்களை கண்டும் காணாமல் இருந்தால் ஞானிக்கு பாவம் வராதா என்று கேட்கலாம். 
-
ஞானியின் பார்வை பரந்தது. நீங்கள் தற்காலத்தை மட்டும் பார்க்கிறீர்கள் ஞானியால் ஆயிரம் ஆண்டுகளையும், அதையும் தாண்டியும் பார்க்க முடியும்.எல்லாம் கடந்துவிடும் என்பது அவனுக்கு தெரியும் தற்போதைய குழப்பங்கள் போராட்டங்கள் எல்லாம் படிப்படியாக மறைந்துவிடும்.பிறகு வேறு குழப்பங்களும் போராட்டங்களும் வரும்.பிறகு அதுவும் மறைந்துவிடும் என்பதை அவன் காண்கிறான். ஒரு காலத்தில் மதநம்பிக்கை என்ற பெயரில் மக்களை துன்புறுத்தினார்கள், பின்பு மதநம்பிக்கை இல்லை என்ற பெயரில் மக்களை துன்புறுத்தினார்கள்.இனி வரும் காலத்தில் மதநம்பிக்கை என்ற பெயரில் துன்புறுத்துவார்கள்.இவைகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் என்பது ஞானிக்கு தெரியும்.ஆகவே அவனது பார்வை விரிந்தது..அதேநேரத்தில் சமூக பிரச்சினைகளில் போராடுபவர்களை அவன் தடுக்க மாட்டான்.ஏனெனில் அதுவும் இறைவனின் விருப்படிதான் நடக்கிறது.சமூகத்தில் குழப்பத்தை உருவாக்குபவனையும் தடுக்க மாட்டான் ஏனெனில் அதுவும் இறைவனின் விருப்பப்டிதான் நடக்கிறது என்பது அவனுக்கு தெரியும்.
-
அப்படியானால் ஞானியின் நிலையில் வாழ்ந்தால் இந்த நாட்டுக்கு என்ன நன்மை?அவர்கள் வாழ்ந்தால் என்ன மடிந்தால் என்ன என்று நீங்கள் கேட்கலாம். 
-
அவர்களை சதாரணமாக எடைபோட்டுவிடாதீர்கள்.அவர் இறைவனின் கருவி. சூரியன் இருப்பதால் எப்படி இந்த உலகம் இயங்குகிறதோ,அப்படியே அவர்கள் இருப்பதால்தான் இந்த உலகமும் இயங்குகிறது.நீங்கள் இந்த உலகத்தில் வாழ்வது எப்படி என்று யோசிக்கிறீர்கள். ஞானியோ இந்த உலகத்தை வாழவைப்பது எப்படி என்று யோசிப்பார்கள். அப்படிப்பட்ட ஞானிகள் இந்த உலகத்தில் எல்லா காலமும் இருக்கிறார்கள்.அவர்கள் இல்லாவிட்டால் இந்த உலகம் ஒரு நிமிடம்கூட இருக்காது அழிந்துவிடும். அவர்கள் இந்த பிரபஞ்ச கனவை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள்.நீங்கள் அதில் வந்துபோய்க் கொண்டிருக்கிறீர்கள்.அவர் பிரபஞ்ச நாடகத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்.நீங்கள் அதில் நடித்துக்கொண்டிருக்கிறீர்கள்.
-
கடடுரை...சுவாமி வித்யானந்தர் (16.1.2017)

No comments:

Post a Comment