Sunday, 28 January 2018

ஸ்ரீமத்பகவத்கீதை -அத்தியாயம்-2



ஸ்ரீமத்பகவத்கீதை -அத்தியாயம்-2
-
ஸஞ்சயன் சொன்னது
-
2.1 இரக்கத்தால் நெகிழ்ந்து, கண்ணீர் நிறைந்ததால் பார்வை மறைந்து, சோகத்தில் மூழ்கியிருந்த அர்ஜுனனிடம் ஸ்ரீகிருஷ்ணர் இவ்வாறு சொல்லத் தொடங்கினார்
-
ஸ்ரீகிருஷ்ணர் சொன்னது
-
2.2.அர்ஜுனா, நெருக்கடியான இந்த நேரத்தில்,ஆரியனுக்கு இருக்காத,சுவர்க்கத்திற்கு தடையான,புகழை தடுக்கின்ற, இந்த மனச்சோர்வு எப்படி உன்னிடத்தில் வந்தது?
-
2.3.பார்த்தா, அலியின் இயல்பை அடையாதே. இது உனக்கு பொருந்தாது. எதிரியை வாட்டுபவனே, இழிவான இந்த மனத்தளர்ச்சியை விட்டுவிட்டு எழுந்திரு.
-
2.4. அர்ஜுனன் சொன்னது.
-
எதிரிகளை வென்றவரே,மது என்ற அரக்கனை கொன்றவரே,நான் போற்றக்கூடிய பீஷ்மரையும், துரோணரையும் யுத்தத்தில் எப்படி எதிர்த்து போரிடுவேன்?
-
2.5.மேன்மை பொருந்திய ஆச்சார்யர்களை கொல்வதைவிட இவ்வுலகில் பிச்சைஏற்று உண்பது நிச்சயமாக நல்லது. ஆனால் பெரியவர்களை கொன்றால் ரத்தம்கலந்த பொருளையும் போகத்தையும் இவ்வுலகில் அனுபவிப்பவனாவேன்
-
2.6.எது மேலானது என்று எனக்கு புரியவில்லை. நாம் ஜயிப்போமா அல்லது இவர்கள் நம்மை ஜயிப்பார்களா. யாரை கொன்றபின் நாம் உயிர்வாழ விரும்பமாட்டோமோ அந்த உறவினர்களான திருதராஷ்டிர மைந்தர்கள்
போர்புரிய நம் எதிரில் வந்து நிற்கிறார்கள்.
-
2.7 மற்றவர்கள் இகழும்படியான நிலையில், தர்மத்தை பற்றி புரிந்துகொள்ள முடியாத குழப்பமான மனநிலையில் உம்மை கேட்கிறேன். எனக்கு எது சிறந்ததாக இருக்கிறதோ அதை நிச்சயமாக சொல்லும். நான் உம்முடைய சிஷ்யன்.உம்மை சரணடைகிறேன். எனக்கு உபதேசிக்கவேண்டும்
-
2.8 பூமியில் எதிர்ப்பில்லாத அழிவில்லாத ராஜ்யத்தையும் மகாவீரர்களையும் பெற்று அதிபதியாக இருந்தாலும். என்னுடைய இந்திரியங்களை பொசுக்குகின்ற இந்த சோகத்தை போக்காது.
-
2.11 ஸ்ரீகிருஷ்ணர் சொன்னது.
-
துக்கப்பட தேவையில்லதவர்கள் குறித்து துக்கப்படுகிறாய். ஞானிகளை போன்று ஞானவார்த்தைகளை பேசுகிறாய். பண்டிதர்கள் இறந்தவர்களை குறித்தோ, உயிருடன் இருப்பவர்கள் குறித்தோ புலம்புவதில்லை
-
2.12. நான் முன்பு இல்லாத காலம் என்ற ஒன்று இல்லை. அதேபோல் இந்த அரசர்கள் இல்லாத காலம் என்பதும் இல்லை. இனிமேல் நாமெல்லாம் இருக்கமாட்டோம் என்பதும் இல்லை. (அதாவது நாம் எல்லோரும் எப்போதும் இருக்கிறோம்)
-
2.13. எப்படி உடலில் குடியிருப்பவனுக்கு, இந்த உடலில் குழந்தைப்பருவம், இளமைப்பருவம், முதுமைப்பருவம்
ஏற்படுகிறதோ அதேபோல்தான் வேறு உடலை எடுப்பதும் அமைகிறது. தீரன் இதைகுறித்து குழப்பமடைவதில்லை
-
2.14 அர்ஜுனா, கண்,காது,மூக்கு,நாக்கு,தோல் போன்ற ஐந்து இந்திரியங்களும், அதற்குரிய பார்த்தல்,கேட்டல்,நுகர்தல்,கேட்டல்,சுவைத்தல்,உணர்தல் போன்ற ஐந்து இந்திரியார்த்தங்களில் உள்ள இணக்கத்தினால் குளிர்-வெப்பம், சுகம்-துக்கம் முதலியவை உண்டாகின்றன.தோன்றி மறையும் நித்தியமில்லாத இவைகளை பொறுத்துக்கொள்.
-
2.15 மனிதனின் சிறந்தவனே, இந்த சுக-துக்கங்களை சமமாக ஏற்றுக்கொண்ட தீரனான மனிதன் எதற்கும் அசைவதில்லை. அவன் நிச்சயமாக அமிர்தம்போன்ற சாகாநிலையை அடைய தகுதியானவன்.
-
2.16 இல்லாமல் இருப்பது ஒருபோதும் இருப்பதில்லை. இருப்பது ஒருபோதும் இல்லாமல்போவதில்லை. தத்துவத்தை தர்சித்தவர்களாலேயே இவ்விரண்டின் முடிவை காணமுடியும்.
-
2.17 எதனால் இந்த உலகம் வியாபிக்கப்பட்டிருக்கிறதோ, அது அழியாதது என்று உறுதியாக தெரிந்துகொள். மாறாத தன்மையுள்ள அதை யாராலும் அழிக்க இயலாது
-
2.18 எப்போதும் இருக்கும், அழியாத, அளவிடமுடியாத உடலில் குடியிருக்கும் அதற்கு(ஆன்மாவிற்கு), சொந்தமான உடல்கள் அழியக்கூடியது, என்று சொல்கிறார்கள். ஆகவே பாரதா, யுத்தம் செய்
-
2.19 யார் இதை அதாவது இந்த உடலில் குடியிருப்பவனை (ஆத்மாவை அல்லது ஆன்மாவை), கொல்லுகிறவன் என்று நினைக்கிறானோ, அதே போல் யார் இதை கொலைசெய்யப்பட்டு இறந்தவன் என்று நினைக்கிறானோ அவர்கள் உண்மையை அறிந்தவர்களல்ல. இந்த உடலில் குடியிருப்பவனை(ஆத்மாவை) யாராலும் கொல்ல முடியாது. அதேபோல் இந்த ஆத்மாவும் யாரையும் கொல்லாது.
-
2.20 இது(ஆத்மா) ஒருபோதும் பிறப்பதில்லை. அது போல் ஒருபோதும் இறப்பதில்லை. முன்பு இல்லாமல் இருந்து இப்போது உருவானதல்ல,அதேபோல் இப்போது இருந்து, இனிமேல் இல்லாமல் போவதுமில்லை. இது பிறவாதது, இறவாதது,தேயாதது,வளராதது,முன்பே இருப்பது. உடலை கொன்றாலும், இதை கொல்லமுடியாது.
-
2.21 பார்த்தா, யார் இதை அழியாததாகவும், மாறுபடாததாகவும்,பிறவாததாகவும்,குறையாததாகவும் அறிகிறானோ அந்த மனிதன் எப்படி யாரை கொல்வான், யாரை கொல்ல சொல்வான்.
-
2.22 மனிதன் எப்படி பழைய உடைகளை விட்டுவிட்டு புதிய உடைகளை அணிந்துகொள்கிறானோ, அவ்வாறே தேகத்தில் இருப்பவன்(ஆத்மா) இறந்துபோன உடல்களை விட்டுவிட்டு புதிய உடல்களை அடைகிறது
-
2.23 ஆயுதங்கள் இதை வெட்டுவதில்லை. தீ இதனை எரிப்பதில்லை. நீர் இதனை நனைப்பதில்லை. காற்றும் இதை உலர்த்துவதில்லை
-
2.24 இது(உடலில் குடியிருப்பவன்) வெட்டுப்படாதவன், எரிக்கப்படாதவன்,நனையாதவன்,உலராதவன். இது எப்போதும் இருப்பவன், எங்கும் நிறைந்தவன், எங்கும் செல்லாதவன், அசைவற்றவன், ஆதிகாலம் முதலே இருப்பவன்
-
2.25 இதை(உடலில் குடியிருப்பவன்) பார்க்க முடியாதது, இது சிந்தனைக்கு அப்பாற்பட்டது,இது மாறுபடாதது .ஆகையால் இங்ஙனம் இதை அறிந்து துன்பத்தை அகற்று
-
2.26 அர்ஜுனா, ஒரு வேளை இது எப்போதும் பிறந்து எப்பொழுதும் இறப்பதாகவும் நினைத்தால், அப்போதும் நீ இதைக்குறித்து வருந்தக்கூடாது
-
2.27 பிறந்தவனுக்கு மரணம் நிச்சயம், இறந்தவனுக்கு மறுபிறப்பு நிச்சயம் ஆகையால் நீக்க முடியாத இந்த விஷயத்தில் துக்கப்படுவதற்கு ஒன்றுமில்லை
-
2.28 பாரதா, உயிரினங்கள் துவக்கத்தில்(பிறக்கும் முன்) தென்படாதவைகளாகவும், இடையில் (வாழும்போது) தென்படுபவைகளாகவும், முடிவில் (இறந்தபின்) தென்படாதவைகளாகவும் இருக்கின்றன. ஆகையால் அதுவிஷயத்தில் வருந்துவதற்கு என்ன இருக்கிறது?
-
2.29 ஒருவன் இதை(ஆத்மாவை) ஆச்சர்யமானது என விழிக்கிறான், இன்னொருவன் ஆச்சர்யமானது என பேசுகிறான், இன்னொருவன் ஆச்சர்யமாக கேட்கிறான், மற்றொருவன் இதை குறித்து கேட்டாலும் இதை அறிவதில்லை
-
2.30 பாரதா, எல்லோருடைய தேகத்திலும் உள்ள இந்த ஆத்மாவை ஒருபோதும் துன்புறுத்தமுடியாது. ஆகையால் நீ எல்லா உயிர்களைக்குறித்து வருத்தப்படவேண்டாம்
-
2.31 சுயதர்மத்தை பார்த்தாலும் மனம் நடுங்க தேவையில்லை. ஏனென்றால் உனது தர்மமான யுத்தம்புரிவதைவிட சத்திரியனுக்கு வேறு சிறப்பு எதுவும் இல்லை
-
2.32 பார்த்தா, தற்செயலாய் நேர்ந்துள்ள சுவர்க்கத்தை தருவதான, இதுபோன்ற தர்மயுத்தம், பாக்கியவான்களான சத்திரியர்களையே வந்து சேர்கின்றன.
-
2.33 ஆனால், நீ இந்த தர்மயுத்தத்தை செய்யாமல்போனால் அதனால் சுயதர்மத்தை இழந்து, புகழை இழந்து, பாபத்தை அடைவாய்
-
2.34 மேலும் அனைவரும் உன்னைப்பற்றி எப்போதும் இகழ்ந்து பேசுவார்கள். பலரால் போற்றப்பட்ட ஒருவன் இகழப்படுவது மரணத்தைக்காட்டிலும் நிச்சயம் இழிவானதே.
-
2.35 மகாவீரர்கள் உன்னை பயத்தால் யுத்தத்திலிருந்து பின்வாங்கினான என்றுதான் நினைப்பார்கள். எவர் உன்னை புகழ்ந்து பேசினார்களோ அவர்களே உன்னை இகழ்ந்து பேசுவார்கள்.
--
2.36 உன்னுடைய பகைவர்கள் உன்னுடைய திறமையை பழித்து, பல சொல்லத்தகாத வார்த்தைகளை சொல்லுவார்கள். அதைக்காட்டிலும் பெரிய துன்பம் எது உள்ளது?
-
2.37 போரில் கொல்லப்பட்டார், சொர்கத்தை பெற்றிடுவாய். ஜயித்தால் பூமியை அனுபவிப்பாய். ஆகையினால் குந்தியின் மைந்தா, போர்புரிய உறுதியோடு எழுந்திரு
-
2.38 சுக- துக்கங்களை , லாப- நஷ்டங்களை, வெற்றி- தோல்விகளை சமமாக கருதி போர்புரிய புறப்படு. அதனால் பாபத்தை அடையமாட்டாய்
-
2.39 பார்த்தா, ஸாங்கிய தத்துவத்தின் படி இந்த புத்தியை உனக்கு சொன்னேன். இனி யோக தத்துவத்தில் சொல்லப்பட்டிருப்பதை கேள். அந்த புத்தியை தெரிந்துகொண்டால், கர்மபந்தத்திலிருந்து விடுபடுவாய்.
-
2.40 இதில் முயற்சி வீண்போவதில்லை. குற்றம் ஒன்றும் வராது. இந்த யோக தர்மத்தை சிறிதளவு பின்பற்றினாலும் பெரும் பயத்திலிருந்து இது காப்பாற்றும்
-
2.41 அர்ஜுனா, இந்த நெறியில் உறுதிகொண்டவனுக்கு நிச்சயமான புத்தி ஒன்றே. உறுதிகொள்ளாதவர்களின் புத்திகள் பல கிளைகளை உடையவையாக, பலவகைப்பட்டவையாக இருக்கின்றன.
-
2.42,43,44 பார்த்தா விவேகமற்றவர்கள், வேதம் கர்மத்தை பற்றி சொல்கின்ற வார்த்தைகளை ரசித்து, சுவர்க்க இன்பத்தை தவிர வேறு ஒன்றும் மேலானது இல்லை என்று வாதிடுகிறார்கள். இவர்கள் சுவர்க்க லாபத்தை முக்கியமான லட்சியமாக கொண்டவர்கள். இது புதிய பிறவிகளை உருவாக்கும் கர்மபலனை கொடுக்கும். போகத்தையும், ஐசுவர்யத்தையும் அடைவதற்கு தேவையான, பல கர்மங்கள் நிறைந்ததுமான இப்படிப்பட்ட அலங்கார வார்த்தைகளை அவர்கள் சொல்கிறார்கள். அந்த வேத வார்த்தையினால் அபகரிக்கப்பட்ட மனதையுடையவர்களாக, போகத்திலும், ஐசுவர்யத்திலும் பற்றுடையவர்களான இவர்களுக்கு உறுதியான புத்தி உள்ளத்தில் உண்டாவதில்லை.
-
2.45 அர்ஜுனா, வேதங்கள் முக்குணமான (சத்வ,ரஜஸ்,தமஸ்) பிரபஞ்சத்தை சாரமாக கொண்டது. நீ
முக்குணங்களிலிருந்து விடுபட்டவனாக , இருமைகளிலிருந்து(இன்பம்-துன்பம்) விடுபட்டவனாக, எப்பொழுதும் சத்வத்தில் இருப்பவனாக . யோகத்தில் நிலைபெற்றவனாக ,தன்னில் நிலைத்தவனாக இரு.
-
2.46 எங்கும் நீர் நிறைந்திருக்கும்போது கிணற்றின் பயன் எவ்வளவு குறைவோ,அதேபோல் பிரம்மஞானிக்கு அந்த அளவு குறைவாகவே வேதங்களினால் பயன் ஏற்படுகிறது
-
2.47 கர்மம் செய்யவே உனக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒருபோதும் கர்ம பலன்களில் அதிகாரம் செலுத்தாதே. கர்ம பலன்களை உண்டு பண்ணுபவனாகவும் இருக்காதே. கர்மம் செய்யாமலும் வெறுமனே இருக்காதே
-
2.48 அர்ஜுனா, யோகத்தில் நின்று பற்றை விட்டுவிட்டு ,வெற்றி தோல்வி ஏற்படும்போது சமமான மனநிலையில் இருந்து கர்மங்களை செய். சமமான நிலையில் இருப்பதே யோகம் என்று சொல்லப்படுகிறது
-
2.49 அர்ஜுனா, புத்தி யோகத்தில் நிலைபெற்று கர்மம் செய்வதை விட,ஆசையில் பலன் வைத்து செயல்புரிவது மிகக்கீழானது. புத்தியில் சரணடை. பலனை விரும்புபவர்கள் கீழானவர்கள்.
-
2.50 புத்தியுள்ளவன், இவ்வுலகில் நன்மை தீமை இரண்டையும் கடக்கிறான். ஆகையால் யோகத்தில் நிலைபெற்றிரு. திறமையாக கர்மம் செய்தல் யோகம் எனப்படுகிறது
-
2.51 புத்தியில் நிலைபெற்ற மேலான மனிதர்கள், கர்மத்தினால் வரும் பலனை ஏற்றுக்கொள்ளாமல், மறுபடி பிறக்கவேண்டிய பிறவி பந்தத்திலிருந்து விடுபட்டு, துன்மற்ற மேலான நிலையை நிச்சயமாக அடைகிறார்கள்.
-
2.52 எப்பொழுது உன்னுடைய புத்தியானது மோகம் என்றும் குற்றத்தை தாண்டுமோ, அப்போது கேட்கவேண்டியதிலும், கேட்டவைகளிலிருந்தும் விடுபட்டு வாக்கு கடந்த நிலையை அடைவாய்.
-
2.53 எப்பொழுது பலவற்றை கேட்டு கலக்கமடைந்துள்ள உன்னுடைய புத்தியானது, சமாதியில் அசைவற்றதாய், உறுதியாக, நிற்குமோ அப்பொழுது யோகத்தை அடைவாய்
-
2.54 அர்ஜுனன் சொன்னது,
கேசவா, சமாதியில் நிலைபெற்றவர்களுடைய நடவடிக்கைகள் என்ன? உறுதியான அறிவுடையவன் எதை பேசுவான்? எப்படி இருப்பான்? அவனது செயல்பாடு எப்படி இருக்கும்?
-
2.55 பார்த்தா, எப்பொழுது மனதில் எழுகின்ற எல்லா ஆசைகளையும் விட்டு விடுகிறானோ, அவன் தன்னில் தானே திருப்தியடைகிறான். அப்பொழுது ஸ்திதப்ரக்ஞன்(மனத்தை நிலைநிறுத்தியவன்) என்று சொல்லப்படுகிறான்.
-
2.56 துன்பம் வரும்போது அசையாத மனதையுடையவன், சுகத்தில் நாட்டமில்லாதவன், பற்று, பயம், கோபம்
போன்றவை இல்லாதவன் முனி என்றும், உறுதியான அறிவுடையவன் என்றும் சொல்லப்படுகிறான்.
-
2.57 யார் எதிலும் பற்றில்லாமல், ஒவ்வொன்றிலிருந்தும் வரும் இன்ப துன்பங்களை கண்டு மகிழாமலும், துன்பப்படாமலும்,வெறுப்படையாமலும் இருக்கிறானோ அவனது அறிவு நிலைபெற்றுவிட்டது
-
2.58 ஆமை தன் உள் உறுப்புகளை ஓட்டிற்குள்ளே சுருக்கிக்கொள்வது போல், எப்போது இந்த யோகி இந்திரியவிஷங்களிலிருந்து (பார்த்தல்,கேட்டல்,சுவைத்தல்,நுகர்தல்,தொடுதல்) இந்திரியங்களை (கண்,காது,மூக்கு,நாக்கு,தோல்)முழுவதும் இழுத்துக்கொள்கிறானோ, அவனுடைய அறிவு நிலைபெற்றுவிட்டது
-
2.59 இந்திரியங்களை இவ்வாறு அடக்கிவைப்பவனுக்கு, இந்திரிய விஷயஅனுபவங்கள் வருவதில்லை. ஆழ்மனதில் ஆசை எஞ்சியிருக்கிறது. மேலானதை(பிரம்மத்தை) தரிசித்தபின் அந்த ஆசையும் அழிகிறது
-
2.60 குந்தியின் மைந்தா, நிச்சயமாக தவவாழ்வில் உள்ள விவேகமுள்ள மனிதனுடைய மனதையும், கொந்தளிப்புள்ள இந்திரியங்கள் பலவந்தமாக இழுத்துசெல்கின்றன.
-
2.61. யோகம் பயில்பவன் அவைகளையெல்லாம் அடக்கிக்கொண்டு, மேலானதை(பிரம்மத்தை) நினைத்துக்கொண்டு இருக்கிறான். ஏனெனில் யாருடைய இந்திரியங்கள் வசப்பட்டிருக்கிறதோ, அவனுடைய அறிவு நிலைபெற்றது.
-
2.62 இந்திரிய விஷயங்களை நினைக்கின்ற மனிதனுக்கு அவைகளிடமிருந்து பற்று உண்டாகிறது. பற்றிலிருந்து ஆசை உண்டாகிறது. ஆசை நிறைவேறாவிட்டால் கோபம் வளர்கிறது.
-
2.63 கோபத்தால், மனக்குழப்பம் உண்டாகிறது. குழம்பியபின் சுயநினைவை இழக்கிறான், பின் புத்தி செயல்படுவதில்லை. புத்தி இல்லாமல் அழிந்துபோகிறான்.
-
2.64 ஆனால் விருப்பு,வெறுப்பிலிருந்து விடுபட்ட தன்னைதான் அடக்கிய, இந்திரியங்களை(கண்,காது,மூக்கு,நாக்கு,தோல்) அதற்குரிய விஷயங்களில் அலைபாயாமல் அடக்கிய மனதை உடையவன் பிரசாதத்தை (மனத்தெளிவை) அடைகிறான்
-
2.65 மனம் அமைதியடைந்தவனுக்கு எல்லா துக்கங்களுக்கும் அழிந்துபோகின்றன. ஏனெனில் மனம் தெளிந்தவனுடைய புத்தி விரைவில் உறுதிபெறுகிறது.
-
2.66 யோகம் பயிலாதவனுக்கு புத்தி தன் வசம் இருப்பதில்லை. யோகம் பயிலாதவனால் தியானம் செய்ய முடியாது. தியானம் இல்லாதவனுக்கு அமைதி கிடைக்காது. அமைதி இல்லாதவனுக்கு சுகம் எப்படி கிடைக்கும்?
-
2.67. நீர்மேல் செல்லும் கப்பலை காற்று நிலைகுறைய செய்வது போல். அலைபாயும் இந்திரியங்களை (கண்,காது,மூக்கு,நாக்கு,தோல்) யாருடைய மனம் பின்பற்றி செல்லுமோ, அவனுடைய அறிவை அது (இந்திரியங்கள்) நிலைகுலைய செய்கின்றன.
-
2.68 அர்ஜுனா, ஆகையினால் யாருடைய இந்திரியங்கள் (கண்,காது,மூக்கு,நாக்கு,தோல்), இந்திரியார்த்தங்களிலிருந்து(பார்த்தல்,கேட்டல்,சுவைத்தல்,நுகர்தல்,தொடுதல்) முற்றிலும் அடக்கப்பட்டிருக்கிறதோ, அவனுடைய அறிவு நிலைபெற்றுள்ளது.
-
2.69 எல்லா உயிர்களுக்கும் எது இரவோ அதில் யோகம் பயில்பவன் விழித்திருக்கிறான். எப்போது உயிர்களெல்லாம் விழித்திருக்கிறதோ அது அந்த முனிவனுக்கு இரவு. (யோகி ஒருபோதும் தூங்குவதில்லை.அவன் தூக்கத்தை கடந்தவன்.இரவில் யோகி தியானத்தில் ஈடுபட்டிருப்பான். பகலில் மக்கள் செயல்புரிகிறார்கள். ஆனால் யோகி ஓய்வில் இருக்கிறான்.)
-
2.70 முழுக்க நிறைந்து அசைவற்ற நிலையில் இருக்கும் சமுத்திரத்தில், எப்படி ஆறுகள் ஒன்று கலக்குமோ,( ஆர்ப்பரித்து ஓடும் ஆற்றுநீர் சமுத்திரத்தில் கலந்ததும் அடங்கிவிடுகிறது) அப்படியே, எல்லா ஆசைகளும் முனிவனுள் பிரவேசித்தாலும் அவன் அமைதியில் நிலைத்திருப்பான். ஆசையை அனுபவிக்க நினைப்பவனுக்கு இது கிடைக்காது.
-
2.71. எந்த மனிதன் எல்லா ஆசைகளையும் விட்டுவிட்டு, ஆசைகள் எதுவும் இல்லாமல், அகங்காரம் இல்லாமல், நான் செய்கிறேன் என்ற எண்ணமில்லாமல் நடமாடுகிறானோ, அவன் அமைதியை அடைகிறான்.
-
2.72 பார்த்தா, இது தான் பிரம்மதில் நிலைபெறுவதாகும். இதை அடையப்பெற்று அவன் மோகத்தை கடக்கிறான். இறக்கும் தருவாயிலாவது இதில் நிலைத்திருப்பவன் பிரம்மநிர்வாணத்தை அடைகிறான்.
--
அத்தியாயம் இரண்டு முடிந்தது
--
HINDUMATHAM WHATSAPP GROUP 9789 374 109

ஸ்ரீமத்பகவத்கீதை-அத்தியாயம்-1


ஸ்ரீமத்பகவத்கீதை-அத்தியாயம்-1
-
திருதராஷ்டிரர் சொன்னது
-
1.1 ஓ ஸஞ்சயா! தர்ம சேத்திரமாகிய குரு சேத்திரத்தில் யுத்தம் செய்ய விரும்பித் திரண்ட நம்மவர்களும் பாண்டவர்களும் என்னதான் செய்தார்கள்?
-
1.2 ஸஞ்சயன் சொன்னது
அப்பொழுது ராஜாவாகிய துர்யோதனன் அணிவகுத்து நின்ற பாண்டவர்களுடைய படையைப் பார்த்தும் (துரோண) ஆச்சாரியரை அணுகி சொன்னான்
-
1.3 ஆச்சாரியரே, உமது சிஷ்யனும் துருபதன் புதல்வனுமாகிய அவ்வல்லவனால் அணிவகுக்கப்பட்டிருக்கும் இப்பெரிய பாண்டவப் படையைப் பாரும்
-
1.4,5,6 இங்கே சூரர்களாகவும், பெரிய வில்லாளிகளாகவும், யுத்தத்தில் பீமனுக்கும் அர்ஜுனனுக்கும் சமமானவருமான யுயுதானனும், விராடதேசத்தரசனும், மகாரதனாகிய துருபததேசத்து அரசனும், திருஷ்டகேதுவும், சேகிதானனும், வீரியமுடைய காசிராஜனும்,புருஜித் என்பவனும், குந்தி போஜனும், மனிதருள் முதன்மை வகிக்கும் சைகியன் என்பவனும், பேராற்றல் படைத்திருக்கும் யுதாமன்யுவும், வல்லமையுடைய படைத்திருக்கும் உத்தமௌஜஸ் என்பவனும், சுபத்திரையின் புதல்வனும், திரௌபதியின் புதல்வர்களும் கூடியிருக்கின்றனர். இவர்கள் எல்லோரும் மகாரதர்களேயாவர்
-
1.7 பிராம்மண சிரேஷ்டரே, நம்மவர்களுள் யார் சிறந்தவர்களோ அவர்களைக்கூடத் தெரிந்துகொள்ளும். என்னுடைய சேனையின் நாயகர்களைப்பற்றி உமக்குத் தகவல் தெரிவித்தற்பொருட்டு சொல்லுகிறேன்
-
1.8 தாங்களும், பீஷ்மரும்,கர்ணனும் போர்முனையில் வெற்றியே வடிவெடுத்துள்ள கிருபாசாரியரும், அச்வத்தாமாவும், விகர்ணனும், சோமதத்தன் புதல்வன் பூரிசிரவஸும், ஜயத்ரதனும் இருக்கின்றீர்கள்
-
1.9 மேலும் எல்லோரும் என்பொருட்டு உயிரைக் கொடுக்கத் துணிந்தவர்களாயும் பலவிதமான ஆயுதங்களையும் அம்புகளையும் உடையவர்களாயும் யுத்தத்தில் மிகத் தேர்ந்தவர்களாயும் பல சூரர்கள் இருக்கின்றனர்
-
1.10 பீஷ்மர் பாதுகாக்கும் நமது படை பரந்து அளவுகடந்து இருக்கிறது. பீமன் பரிபாலிக்கும் அவர்கள் படையோ கட்டுக்குள் அடங்கியது
-
1.11 படை வகுப்புகள் அனைத்திலும் அவரவர் இடங்களில் நின்றுகொண்டு எல்லோரும் பீஷ்மரையே காப்பாற்றுக
-
1.12 வல்லமை வாய்ந்தவரும், குருகுல வயோதிகருமாகிய பாட்டனார் , துரியோதனனுக்கு உற்சாகத்தை ஊட்ட உரக்க சிம்மநாதம் செய்து சங்கை ஊதினார்
-
1.13 பிறகு சங்குகளும், பேரிகைகளும் தம்பட்டங்களும் பறைகளும் கொம்புகளும் திடீரென்று முழங்கின. அது பேரொலியாயிருந்தது.
-
1.14 பின்பு வெள்ளைக் குதிரைகள் பூட்டிய சிறந்த தேரில் வீற்றிருந்த மாதவனும் பாண்டவனும் தங்கள் தெய்வீக சங்குகளை உரக்க ஊதினார்கள்
-
1.15 ஹிருஷீகேசன் பாஞ்சஜன்யம் என்ற சங்கை ஊதினான். தனஞ்ஜயன் தேவதத்தம் என்ற சங்கை ஊதினான். பெருவினையாற்றுபவனாகிய பீபசேனன் பௌண்ட்ரம் என்ற பெரிய சங்கை ஒலித்தான்
-
1.16 குந்தியின் புதல்வன் ராஜாயுதிஷ்டிரன் அனந்தவிஜயம் என்ற சங்கையும், நகுலனும் சகாதேவனும் சுகோஷம்,மணிபுஷ்பகம் என்ற சங்குகளையும் ஊதினார்கள்
-
1.17 விற்படையில் தலைசிறந்த காசிராஜனும், மகாரதிகனான சிகண்டியும், திருஷ்டத்யும்னனும், விராட தேசத்தரசனும், பிறரால் வெல்லப்படாத சாத்யகியும்
-
1.18 மண்ணாள்பவனே! துருபதனும், திரௌபதியின் புதல்வர்களும், தோள்வலிமையுடையவனாகிய சுபத்திரையின் மகனும் ஆக எல்லோரும் தனித்தனியே சங்குகளை ஊதினார்கள்
-
1.19 மேலும் அப்பெருமுழக்கம் விண்ணையும் மண்ணையும் சேர்ந்தொலிக்கச் செய்வதாய், திருதராஷ்டிரக் கூட்டத்தாரின் நெஞ்சுகளை வீறப்பிளந்தது
-
1.20 அரசே! அப்பால் குரங்குக் கொடியுடையோனாகிய அர்ஜுனன் போர் துவக்கத் தலைப்பட்டிருந்த திருதராஷ்டிரக் கூட்டத்தாரைப் பார்த்து, அம்புகள் பறக்க ஆரம்பிக்கும் முன் வில்லை ஏந்திக்கொண்டு, கிருஷ்ணனிடம் இச்சொல்லை உரைத்தான்
-
1.21,22 அர்ஜுனன் சொன்னது
அச்யுதா, படைகளிரண்டுக்குமிடையில் என் தேரை நிறுத்துக. இப்போரில் நான் யாரோடு யுத்தம் செய்ய வேண்டும் என்பதையும், போரை விரும்பி முன் நிற்பவர்கள் யார் என்பதையும் கவனிக்கிறேன்
-
1.23 புல்லறிவாளனாகிய துரியோதனனுக்கும்ப் மகிழ்ச்சி தரும் பொருட்டு, போர்புரிய இங்கு திரண்டு நிற்போரை நான் காணவேண்டும்
-
1.24,25 ஸஞ்ஜயன் சொன்னது
திருதராஷ்டிரரே குடாகேசனால் இங்ஙனம் சொல்லப்பட்ட ஹிருஷீகேசர் இரண்டு சேனைகளினிடையில் பீஷ்மத் துரோணர்களுக்கெதிரிலும் எல்லா வேந்தர்களுக்கெதிரிலும் மாண்புடைய தேரை நிறுத்தி “பார்த்தா, கூடியுள்ள இக்கௌரவர்களை பார் ” என்று கூறினார்
-
1.26 அங்கே இரண்டு படைவீரர்களில் இருக்கும் தந்தையரையும்,பாட்டன்மாரையும், ஆச்சாரியர்களையும், மாமன்மார்,அண்ணன்,தம்பிகளையும்,மக்களையும்,பேரன்மார்களையும்,அன்பர்களையும் அவன் பார்த்தான்
-
1.27 குந்தியின் மகனாகிய அர்ஜுனன் நிற்கின்ற பந்துக்கள் எல்லாரையும் உற்றுப்பார்த்துப் பேரிரக்கம் படைத்தவனாய் பதட்டத்துடன் இவ்வாறு கூறினான்
-
1.28 அர்ஜுனன் சொன்னது
கிருஷ்ணா, போர்புரிவதற்கு கூடியுள்ள உற்றாரைப் பார்த்து என் உறுப்புகள் சோர்வடைகின்றன,வாயும் வறள்கிறது
-
1.29 என் உடலில் நடுக்கமும் மயிர்ச்சிலிர்ப்பும் உண்டாகின்றன. கையினின்று காண்டீவம் நழுவுகிறது. உடலெல்லாம் தோல்எரிகிறது
-
1.30 கேசவா, என்னால் நிற்க இயலவில்லை. மனது சுழல்கிறது. கேடுடைய சகுணங்களையும் காண்கிறேன்
-
1.31 கிருஷ்ணா, போரிலே சுற்றத்தாரைக் கொல்லுதலில் நன்மையை நான் காணவில்லை. வெற்றியையும், ராஜ்யத்தையும்,இன்பங்களையும் நான் விரும்பவில்லை
-
1.32,33,34 கோவிந்தா, யாக்காக நாம் ராஜ்யத்தையும், இன்பங்களையும் விரும்புகிறோமோ ந்த ஆச்சாரியர்கள்,தந்தையர்,மக்கள்,பாட்டன்மார்,மாதுலர்,மாமனார்,பேரர்,மைத்துனர்,சம்பந்திகள் முதலானவர்கள் உயிரையும் செல்வத்தையும் துறந்தவராய் இங்கு வந்து நிற்கின்றனர். நமக்கு (இவர்களை கொன்றபின் கிடைக்கும்) ராஜ்யத்தால்,போகத்தால் அல்லது வாழ்வதால் என்ன பயன்?
-
1.35 மதுஸுதனா, நான் கொல்லப்படினும்,மூவுலகை ஆளுவதாக இருந்தாலும் இவர்களை கொல்லமாட்டேன். மண்ணிற்காக(ராஜ்யத்திற்காக) இவர்களை கொல்வதா?
-
1.36 ஜநார்தனா, திருதராஷ்டிரப் புதல்வர்களைக் கொன்று நமக்கு என்ன இன்பம் வரப்போகிறது? இந்த பாபிகளை கொல்வதால் நமக்கு பாபமே வந்தடையும்
-
1.37 ஆதலால் நம் சுற்றத்தாராகிய திருதராஷ்டிர புத்திரர்களைக் கொல்லுதல் நமக்கு தேவையில்லாதது. மாதவா, உறவினர்களைக் கொன்று நாம் இன்புற்றிருப்பது எப்படி?
-
1.38,39 ஆசை மிகுதியால் அறிவிழந்த இவர்கள் குலநாசத்தால் விளையும் கேட்டையும்,நண்பனை கொல்வதால் வரும் பாதகத்தையும் பார்க்கவில்லை. குல நாசத்தால் உண்டாகும் கேட்டை நன்கு உணர்ந்த நாம் ஏன், ஜநார்தனா, இப்பாபத்திலிருந்து பின்வாங்கக்கூடாது?
-
1.40 குலம் அழிந்தால் என்றுமுள்ள குலதர்மங்கள் அழிகின்றன. தர்ம நாசத்தால் குலம் முழுவதையும் அதர்மம் சூழ்கிறது
-
1.41 அதர்மம் மிகுந்தால் குலப்பெண்கள் கற்பிழக்கின்றனர். கிருஷ்ணா, மாதர் கற்பிழந்தால் ஜாதிக்கலப்பு ஏற்படும்
-
1.42 கலப்பினால் குலத்தார்க்கும் அதனை அழித்தார்க்கும் நரகமே ஏற்படுகிறது. அவர்களுடைய பித்ருக்கள் பிண்டத்தையும் நீரையும் இழந்து அழிகின்றனர் (பித்ரு லோகத்தில் வாழும் முன்னோர்கள் கைவிடப்படுவார்கள்)
-
1.43 குலநாசகர்கள் செய்யும் வர்ணக்கலப்பை விளைவிக்கும் இக்கேடுகளால் நிலைத்துள்ள ஜாதி தர்மங்களும் குல தர்மங்களும் அழிக்கப்பட்டுவிடும்
-
1.44 ஜநார்தனா, குல தர்மத்தை இழந்தவர் நரகத்தில் பல காலம் வசிக்கின்றனர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்
-
1.45 அரசு சுக ஆசையினால் சுற்றத்தாரைக் கொல்லத் துணிதல் என்ற பெரும் பாபத்தைச் செய்ய இருந்தோம். அந்தோ!
-
1.46 எதிர்க்காமலும் ஆயுதமில்லாமலும் இருக்கின்ற என்னைக் கையில் ஆயுதம் பிடித்து , திருதராஷ்டிர மக்கள் யுத்தத்தில் கொல்லுவார்களானால் அதுவே எனக்கு பெரும் நன்மையாகும்
-
1.47 ஸஞ்ஜயன் சொன்னது
இங்ஙனம் சொல்லி, அம்பையும் வில்லையும் எறிந்துவிட்டு துயரம் நிறைந்த மனத்தை உடையவனாய், அர்ஜுனன் தேர்த் தட்டில் உட்கார்ந்தான்
-
அத்தியாயம் ஒன்று நிறைவுற்றது

சூத்திரன் காலில் பிறந்தான் என்பது தவறு-புருஷ சூக்தத்தில்

சூத்திரன் காலில் பிறந்தான் என்பது தவறு.
-
புருஷ சூக்தத்தில்,
-
"பிராமணஸ்ய முகமாஸீத், பாஹூ ராஜன்ய: க்ருத:
ஊரு ததஸ்ய யத்வைஸ்ய:,பத்ப்யாகும் சூத்ரோ அஜாயத"
-
என்று உள்ளது.இந்த வரிகளுக்கு திராவிட &மிஷனரி வாதிகள் கொடுத்த விளக்கம் யாதெனில்,
-
இந்த.வேத புருஷனின் முகம் கழுத்து. தொடை, பாதம் போன்றவற்றில் இருந்து சாதி தோன்றியது .எனவே வேதம் சாதிரீதியாக பிரிக்கின்றது என பிரச்சாரம் செய்தனர்.
இவ்வாறு பிரச்சாரம் செய்தால்தான் இந்து தர்மத்தை தாழ்த்தமுடியும்.
-
ஆனால் இதன் உண்மையான அர்த்தம் யாதெனில்,
-
பிராமணன் முகத்தில் பிறந்தான் என்பது தவறு.
பிராமனணுக்கு முகமே பலம்.ஏனெனில் வேதம் ஓதும் பிராமணன் முகலட்சணத்தோடு விளங்கவேண்டும்.மேலும் வாயால் நல்லாசி வழங்கவும்.நல் உபதேசம் செய்யவும்,நல் மந்திரம் உச்சாடனம் செய்யவும் முகமே துணை.எனவே பிராமணணுக்கு முகபலம் தேவை.
-
அதுபோல் ஷத்திரியன் தோளில் பிறந்தான் என்பதும் தவறு.
சத்திரியனுக்கு தோள் பலம் தேவை.ஏனெனில் சத்திரியன் வாள் கொண்டு எதிரிகளிடம் இருந்து மக்களை காப்பாற்றவும்,பாதுகாக்கவும்.வறியவர்களுக்கு கொடை அளித்து ஆதரிக்கவும் தோள் பலம் கொண்ட கரங்கள் தேவை.
-
அதேபோல் வைசியன் இடுப்பில் பிறந்தான் என்பதும் தவறு.
வைசியன் உட்கார்ந்த நிலையில் வியாபாரம் செய்பவன்.எனவே வியாபாரம் செய்யவும்,கணக்கு வழக்குகளை பார்க்கவும் வைசியனுக்கு தொடை பலம்மிக்கதாக விளங்க வேண்டும்.
-
அதேபோல் சூத்திரன் காலில் பிறந்தான் என்பதும் தவறு. சூத்திரன் உழவு செய்பவன்.உழவு செய்பபவனுக்கு கால் பலம் தேவை. கால்கள் பலமாக இருந்தால் தான் பயிரிடவும் விவசாயத்தை பராமரிக்கவும் முடியும்.
-
இவ்வாறு புருஷ சூக்தம் கூறும் உண்மை அர்த்தம் வேறு.
-
கடந்த நூறு ஆண்டுகளில் திராவிட&நாத்திகவாதிகள் செய்த வெறுப்பு பிரச்சாரம் வேறு.
-
பொதுவாகவே தமிழகத்தை பொருத்தவரை 1900 க்கு பின் வந்த அனைத்து நூல்களையும், முக்கியமாக வரலாற்று &சமய நூல்களை படிக்கும்பொழுது அதில் திராவிட &மிஷனரி மாயைகள், புரட்டு வரலாறுகள், இடைச்சொருகல்கள் உள்ளதா என்று ஆராய்ந்தே அந்நூலை ஏற்க்கவேண்டும் அங்கீகரிக்கவேண்டும்.
-
பதிவு:
சிவார்ப்பணம்.
@தில்லை கார்த்திகேயசிவம்.

இந்துமதத்தில் உள்ள விஞ்ஞானத்தை தெரிந்துகொள்வோம்-1


இந்துமதத்தில் உள்ள விஞ்ஞானத்தை தெரிந்துகொள்வோம்-பாகம்-1
-
பகவத்கீதையில் இந்த பிரபஞ்சம் சத்வம்,ரஜஸ்.தமஸ் என்ற முக்குணங்களால் ஆக்கப்பட்டிருக்கிறது என்று கூறுகிறது.(கீதை7.13)(14.5)(2.45) இதைப்பற்றி ஆராய்வோம்.
-
ரஜஸ் என்பது விலக்கும் சக்தி. தமஸ் என்பது கவரும் சக்தி. சத்வம் என்பது இரண்டையும் சமன்படுத்தும் சக்தி.இதை முதலில் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும்.
-
ஒவ்வொரு பொருளிலும் இந்த மூன்று சக்திகளும் எப்படி இயங்குகிறது என்பதை பார்ப்போம். முதலில் ஒரு அணுவை எடுத்துக்கொள்வோம். அணுவில் நியூட்ரான்,எலக்ட்ரான்,புரோட்டான் என்ற மூன்று இருக்கிறது. எலக்ட்ரான் என்பது சுற்றிக்கொண்டே இருக்கும்.எலக்ராானின் வேகம் காரணமாக அது மையத்திலிருந்து விலகிசெல்ல முயன்றுகொண்டே இருக்கும்.புரோட்டான் என்பது மையத்தில் இருப்பது எலக்ட்ரானை தன்னை நோக்கி கவர்ந்து இழுத்துக்கொண்டே இருக்கும். எலக்ரானின் சுற்றும்வேகம் குறைந்துவிட்டால் அது புரோட்டனுடன் ஒன்றாகிவிடும். அவ்வாறு நிகழாமல் தடுப்பது நியூட்ரான் என்ற இன்னொன்று. எலக்ரானும் புரோட்டானும் ஒன்று சேராமலும்,இரண்டும் தனினத்தனியே விலகிவிடாமலும் பாதுகாப்பது நியூட்ரானின் வேலை.இந்த நியூட்ரான் மையத்தில் இருக்கிறது.
-
எலக்ட்ரான் என்பது ரஜஸ். புரோட்டான் என்பது தமஸ்.நியூட்ரான் என்பது சத்வம்
-
இனி பிரம்மாண்டமான சூரிய குடும்பத்தை எடுத்துக்கொள்வோம். சூரியனை மற்ற கிரகங்கள் சுற்றி வருகின்றன.இதில் சூரியன் மற்ற கிரகங்களை தன்னை நோக்கி கவர்ந்துகொண்டே இருக்கிறது.இதற்கு ஈர்ப்புவிசை என்று பெயர்.மற்ற கிரகங்கள் வேகமாக சுற்றிக்கொண்டே இருப்பதால் அந்த விசைகாரணமாக சூரியனைவிட்டு விலகி செல்ல முயன்றுகொண்டே இருக்கிறது.இதற்கு விலக்குவிசை என்று பெயர்.மற்ற கிரகங்கள் தங்கள் வேகத்தை குறைத்துகொண்டால் சூரியனின் ஈர்ப்புவிசை காரணமாக சூரியனில் சென்று ஒட்டிக்கொள்ளும். மற்ற கிரகங்களின் வேகம் அதிகமானால் விலக்குவிசை காரணமாக சூரிய குடும்பத்தைவிட்டு விலகி சென்றுவிடும்.இவ்வாறு நடக்காமல் இவைகளை சமன்படுத்திவைக்க சூரிய குடும்பத்தில் சமன்படுத்தும் சக்தி ஒன்று செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.இந்த சக்தி சூரிய குடும்பத்தின் மையத்தில் இருக்கிறது.
-
ஈர்ப்புவிசை-தமஸ். விலக்குவிசை-ரஜஸ்.சமன்விசை-சத்வம்
-
இனி ஒரு மனிதனின் செயல்பாடுகளை எடுத்துக்கொள்வோம். மனிதன் காலையிலிருந்து இரவு வரை தொடர்ந்து பல வேலைகளை செய்துகொண்டே இருக்கிறான்.இவ்வாறு அவனை வேலைசெய்ய வைக்கும் சக்திக்கு ரஜஸ் என்று பெயர்.சிலநேரங்களில் எந்த வேலையும் செய்யாமல் சோம்பேரியாக இருக்கிறான். இரவில் இந்த உலகத்தை மறந்து தூங்குகிறான்,இதற்கு தமஸ் என்று பெயர். சில நேரங்களில் அமைதியாக உட்கார்ந்து இயற்கையை ரசிக்கிறான்,பிறரிடம் அன்பை பொழிகிறான்.சத்வ குணம் இதற்கு காரணமாக இருக்கிறது. அப்போது அவன் உடல்சார்ந்த வேலை செய்யவும் இல்லை,சேம்பேரியாக அமர்ந்திருக்கவும் இல்லை.ஆழ்ந்த ஆனந்தத்தில்,அமைதியில்ஈஅறிவில் இருக்கிறான்.
-
இவ்வாறு இந்த பிரபஞ்சத்தில் எங்குமே இந்த மூன்று குணங்களும் பல்வேறு பெயர்களில் பல்வேறு விதங்களில் இயங்கிக்கொண்டே இருக்கிறது.இந்த பிரபஞ்சம் இயங்குவதற்கு இந்த மூன்றும் தேவை என்பதை நமது முன்னோர்கள் நன்கு தெரிந்துவைத்திருந்தார்கள்.
-
கட்டுரை...சுவாமி வித்யானந்தர் (28-1-2018)

துறவிகள் காட்டிலோ அல்லது மடங்களிலோதானே இருக்க வேண்டும். மக்களிடம் அவர்களுக்கு என்ன வேலை



துறவிகள் காட்டிலோ அல்லது மடங்களிலோதானே இருக்க வேண்டும். மக்களிடம் அவர்களுக்கு என்ன வேலை?
-
இந்த  கேள்வி பொதுவாக பலர் கேட்கும் கேள்விதான். ஞானம் பெற வேண்டுமானால் மனிதர்களின் தொடர்பைவிட்டு
புத்தரைபோல தனி இடத்திற்கு சென்று வாழவேண்டும்.பல ஆண்டுகள் தொடர்ந்த பயிற்சியின் காரணமாக ஞானம் கிடைக்கும். அவ்வாறு ஞானம் கிடைக்கும்வரை பயிற்சிகள் மேற்கொள்ளவேண்டும்.ஒருவேளை இந்த பிறவியல் ஞானம் கிடைக்காமலும் போகலாம்.  சிலருக்கு விரைவில் ஞானம் கிடைத்துவிடும்.அதற்கு குருவின் அருள் காரணமாக இருக்கலாம் அல்லது முற்பிறவிகளில் அவர்கள் செய்த தவத்தின் காரணமாக இருக்கலாம்.அவ்வாறு ஞானம் கிடைத்த பின் அதில் நிலைத்திருக்க வேண்டுமா அல்லது அந்த ஞானத்தை மற்றவர்களுக்கு தெரிவிக்க வேண்டுமா என்பது அவர்களது விருப்பம்
-
சிலர் ஞானம் பெற்ற பிறகும் சில ஆண்டுகள் தனிமையிலேயே வாழ்ந்து உடலைவிட்டு விட்டு முக்தி அடைவார்கள். சிலர் ஞானம் பெற்ற பிறகு அந்த ஞானத்தை மக்களுக்கு கொடுப்பதற்காக மக்களிடம் வருவார்கள். மக்கள் எல்லோரும் ஞானம் பெற தகுதி உடையவர்களாக இருக்கமாட்டார்கள்.பலர் பல படிகளில் இருப்பார்கள்,அவர்களுக்கு ஏற்றாற்போல உபதேசமோ,அல்லது வழிகாட்டவோ செய்வார்கள்.
-
அவ்வாறு மக்களிடம் வந்து உபதேசம் செய்தாலும்,அவர்கள் மற்றவர்களை போல இருக்கமாட்டார்கள்.இந்த உலகத்தில் மக்கள் சிக்கிக்கிடக்கிறார்கள்,ஆனால் அந்த துறவிகள் அப்படியல்ல.அவர்கள் ஜீவன்முக்தர்கள்,இந்த உலகத்தை பற்றி நன்கு தெரிந்தவர்கள்.இவ்வாறு மக்களிடம் வந்து உபதேசம் செய்யும் துறவிகளை சிலர் தவறாக விமர்சிப்பார்கள்.அவ்வாறு தவறாக விமர்சிப்பவர்கள், பாவம் உண்மை அறியாதவர்கள்.
-
உலக வாழ்க்கையை விட்டு விலகி முதலில் ஞானம்பெற வேண்டும்.பிறகு மக்களிடம் வந்து அவர்களுக்கு சேவைசெய்ய வேண்டும். இது ஒரு பாதை.
-
இன்னொரு துறவு பாதை உள்ளது.அதை சுவாமி விவேகானந்தர் வலியுறுத்துகிறார்.துறவிகளே  முதலில் மக்களுக்கு சேவை செய்யுங்கள்.அந்த சேவையின் மூலம் உங்களை படிப்படியாக தூய்மைப்படுத்திக்கொள்ளுங்கள்,பிறகு ஞானம் கிடைக்கும்.அதன்பிறகு மக்களிடமிருந்து விலகிவிடுங்கள்,உலகத்திற்கு மீண்டும் வரத்தேவையில்லை.முக்தி பெற்றுவிடலாம்.
-
இந்த பாதை மெதுவான பாதை இந்த பாதை வழியாக சென்று ஞானம் பெறுவதற்கு பல ஆண்டுகள் ஆகும்,இருந்தாலும் வெற்றிபெறுவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.அவை என்ன?
-
1.. பல துறவிகள் ஓரிடத்தில் சேர்ந்து வாழலாம் அதனால் ஒரேயடியாக தனிமை வாழ்க்கைக்கு செல்லாமல்  படிப்படியாக முன்னேறலாம்.
-
2. சிறுசிறு ஆசைகள் எதாவது இருந்தால் அதை நிறைவேற்றிக்கொள்ளலாம்.
-
3.மூத்ததுறவிகளின் அனுபவங்களை கேட்டு தெரிந்துகொள்ளலாம்
-
4. சாஸ்திரங்களை படித்து நமது சந்தேகங்களை போக்கிக்கொள்ளலாம்
-
5. மக்களுக்கு சேவை செய்வதன் மூலம் நமது பாவத்தை போக்கிக்கொள்ளலாம்
-
6. வீட்டில் உள்ளவர்கள் தேவைப்பட்டால் வந்து பார்த்து செல்லலாம் . இன்னும் பல நன்மைகள் உள்ளன.
-
இங்கே இரண்டு விதமான துறவிகள் பற்றி பார்த்தோம் 1. முதலில் தனிமையான வாழ்க்கைக்கு சென்று ஞானத்தை பெற்ற பிறகு மக்களிடம் வந்து சேவை செய்பவர்கள். 2. மக்களுக்கு சேவை செய்து அதன் மூலம் படிப்படியாக தனிமை வாழ்க்கைக்கு தயார்படுத்திக்கொண்டு,ஞானத்தை பெறுவது
-
 மக்களிடம் பழகிக்கொண்டிருக்கும் இந்த இரண்டு வகையான துறவிகளையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடாது.
-
1. ஞானம் பெற்றவர்கள் பெண்களிடம் பழகினாலும் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது. ஞானம் பெறாதவர்கள் பெண்களிடமிருந்து கண்டிப்பாக விலகி இருக்க வேண்டும்.
-
2. ஞானம் பெற்றவர்கள் அனைவரையும் சமமாக நேசிப்பார்கள். ஞானம் பெறாதவர்களுக்கு வேறுபாட்டு உணர்ச்சி இருக்கும்.சிலரை நேசிப்பார்கள்,சிலரை வெறுப்பார்கள்
-
3.ஞானம் பெற்றவர்களால் தனிமையிலும் வாழமுடியும்,மக்களோடு சேர்ந்தும் வாழமுடியும். ஞானம் பெறாதவர்களால் இந்த இரண்டும் முடியாது.அவர்கள் தங்களை போன்ற துறவிகளுடன் மட்டுமே சேர்ந்து வாழமுடியும்
-
4.ஞானம் பெற்றவர்கள் ஆச்சார்யர்கள். உணர்வு கடந்த நிலையை அடைந்தவர்கள். அவர்கள் சுயமாக கருத்துக்களை சொல்லும் ஆற்றல் படைத்தவர்கள். ஞானம் பெறாதவர்கள் மற்றவர்களின் கருத்துக்களை மேற்கோள் சொல்லி பேசுவார்கள்.
-
5.ஞானம் பெற்றவர்களை மக்கள் பின்தொடர்ந்து செல்லலாம்,அது அவர்களுக்கு நன்மை செய்யும். ஞானம் பெறாதவர்களை மக்கள் பின்தொடர்ந்து செல்லக்கூடாது.அது அவர்களுக்கு நன்மை தராது
-
இன்னும் இதேபோல் பல வேறுபாடுகளை காட்ட முடியும்.
-
கட்டுரை...சுவாமி வித்யானந்தர் (28.1.2018)

Friday, 26 January 2018

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை- இறைவனின் சித்தம் மகாத்மாகாந்தி மூலம் செயல்பட்டது

-
இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை- இறைவனின் சித்தம் மகாத்மாகாந்தி மூலம் செயல்பட்டது
-
இந்திய சுதந்திரத்தின்போது முஸ்லீம்கள் தனிநாடு கேட்டு போராடினார்கள்.அதற்கு அவர்கள் கூறிய காரணம் என்வென்றால்,இந்துக்களுடன் சேர்ந்து வாழமுடியாது. அவ்வாறு சேர்ந்து வாழ நேர்ந்தால் தினமும் மதம் சார்ந்த படுகொடுகொலைகள் பல இடங்களில் நடக்கும்.அதை தடுக்க வேண்டுமானால் முஸ்லீம்களுக்கு தனி நாடு வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். முதலில் இந்துக்கள் இதை எதிர்த்தார்கள். தனிநாடு உருவானால் அந்த நாட்டிற்குள் உள்ள புனித தலங்களுக்கு,கோவில்களுக்கு செல்ல முடியாது,அங்குள்ள கோவில்கள் இடிக்கப்பட்டுவிடும் என்று கூறினார்கள்.ஆனால் முஸ்லீம்கள் தனிநாடு கேட்டு பிடிவாதமாக இருந்தார்கள்.வெள்ளைக்காரர்களும் இந்தியாவை பிரிக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்கள்.இந்தியாமீது உள்ள கோபத்தை வெளிக்காட்ட இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டார்கள்.
-
முடிவில் இந்தியாவில் உள்ள முஸ்லீம்கள் அனைவரும் மேற்கு பாகிஸ்தான்,கிழக்கு பாகிஸ்தான்(பங்களாதேஷ்) செல்ல வேண்டும். அங்கு உள்ள இந்துக்கள் அனைவரும் இந்தியாவிற்கு வரவேண்டும் என்று முடிவானது. மிகக்குறிய காலத்தில் ஒரு மாத்திற்குள் இந்த இடம்பெயர்தல் நடக்க வேண்டும் என்று முடிவு செய்தார்கள். அதன்படி பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள் அங்கிருந்து இந்தியாவிற்குள் இடம்பெயர்ந்தார்கள்.ஆனால் இந்தியாவில் உள்ள முஸ்லீம்கள் பாகிஸ்தான் செல்ல தயக்கம்காட்டினார்கள்.அதற்கு காரணமும் இருந்தது. தென் இந்தியாவிலிருந்து நடந்து சென்று பாகிஸ்தான் செல்வதற்கு ஒருமாதம் போதாது.அதற்குள் உணவு கிடைக்காமல் இறந்துபோக நேரலாம்.
-
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு இந்துக்கள் இடம்பெயர அனுமதி மறுக்கப்ட்டது.அவர்கள் கட்டாயமதமாற்றம் செய்யப்பட்டார்கள் மறுத்தவர்கள் கொலைசெய்யப்பட்டார்கள். இந்த இடம் பெயர்தலில் பல லட்சம் இந்துக்கள் கொலை செய்யப்ட்டார்கள்..அதுபற்றிய வரலாற்று சம்பவங்களை தனியாக படித்து ஒவ்வொரு இந்துக்களும் தெரிந்துகொள்ள வேண்டும்.
-
பாகிஸ்தானில் இந்துக்கள் படுகொலை செய்யப்படுவதை அறிந்து இந்தியாவிலும் பல இடங்களில் கலவரங்கள் ஏற்பட்டன.இதனால் இந்தியாவிலிருந்து முஸ்லீம்கள் பாகிஸ்தான் செல்வதில் சில்கல் ஏற்பட்டது.
-
இந்த காலகட்டத்தில் நடந்த நிகழ்ச்சிதான் இந்துக்களை கொதிப்படையவைத்தது. இந்தியாவில் வாழும் முஸ்லீம்கள் தேவைப்படால் இந்தியாவிலே வாழலாம்.அவர்கள் பாகிஸ்தான் செல்லத்தேவையில்லை,இங்கே அவர்களுக்கு சம உரிமை வழங்கப்படும் என்று மகாத்மா காந்தி அறிவித்தார்.இது இந்துக்களுக்கு கோபத்தை உருவாக்கியது. பாகிஸ்தானில் இந்துக்கள் கொல்லப்படுகிறார்கள் அதை தடுக்க நம்மால் முடியவில்லை,இங்கே இந்தியாவில் உள்ள முஸ்லீம்கள் பற்றி இவர் அக்கரை காட்டுகிறாரே என்று பலர் எரிச்சலடைந்தார்கள்.அவரது அந்த அறிவுப்பு காரணமாக கோட்சேவால் சுட்டுக்கொல்லப்பட்டார்
-
மகாத்மா காந்தியின் அந்த முடிவைப்பற்றி விவாதிப்பது தான் இந்த கட்டுரையின் நோக்கம்.
-
இன்று இந்தியாவில் பலர் காந்தியின் அந்த முடிவை குறித்து கடுமையாக விமர்சிக்கிறார்கள். நியாயப்படி, சட்டப்படி பார்த்தால் அந்த முடிவு தவறானதுதான்.
-
மகாத்மாகாந்தி என்பவர் சாதாரண மனிதர் அல்ல,அவர் ஒரு மகாத்மா என்பதில் பலருக்கு மாறுபட்ட கருத்து இல்லை.
-
நாம் இந்த விஷயத்தை வேறு விதத்தில் சிந்தித்துப்பார்ப்போம். அதாவது இந்தியாவில் உள்ள முஸ்லீம்கள் அனைவரும் பாகிஸ்தானிற்கு சென்றுவிட்டார்கள்,இந்தியாவில் இந்துக்கள் மட்டுமே இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம் ,அப்போது அதன் பிறகு இந்தியாவில் என்ன என்ன மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும் என்பதை பார்ப்போம்
-
1. சீக்கியர்கள் தங்களை இந்துக்கள் அல்ல என்று அறிவித்து தங்களுக்கு தனிநாடு கேட்டு போரடி, அதில் வெற்றி பெற்றிருப்பார்கள். இந்தியாவில் பஞ்சாப்,அரியானா பகுதிகள் இருந்திருக்காது.
-
2. காஷ்மீரில் உள்ள முஸ்லீம்கள் தனிநாடு கேட்டு போராடி,தனிநாடு பெற்றிருப்பார்கள். காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்திருக்காது.
-
3.இந்தியாவில் உள்ளவர்கள் மொழிரீதியாக ஒன்றிணைந்து, ஒவ்வொரு மொழிக்கும் தனிநாடு கேட்டு போராடியிருப்பார்கள்,முக்கியமாக தமிழர்கள்,ஹிந்திக்கு எதிராக போராடி தனிநாடு கேட்டு அதில் வெற்றி பெற்றிருப்பார்கள்.இந்தியாவில் தமிழகம் ஒரு பகுதியாக இருந்திருக்காது.
-
4. வட கிழக்கு மாநிலங்களில் இந்துக்களின் எண்ணிக்கை குறைவு.ஆகவே அவர்களும் தனிநாடாக பிரிந்துபோயிருப்பார்கள்.
-
5. மொத்தத்தில் மொழி ரீதியான பிரச்சினைகள் தலையெடுத்து,ஒவ்வொரு மொழியினரும் தங்களுக்கு முக்கியத்துவம் தரவில்லை என்று கூறி தனிநாடுகேட்டு போரடிக்கொண்டிருப்பார்கள். இந்தியா பல நாடுகளாக பிரிந்துபோயிருக்கும்
-
ஒரு சிறிய உதாரணம்கொண்டு விளக்குகிறேன். இந்தியாவில் உள்ள பல்வேறு மொழி பேசும் மக்களை ஓரிடத்தில் அமரவைத்தால் அவர்கள் தங்கள் தாய்மொழி பேசுபவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதை அறிந்து அவர்களுக்குள் சேர்ந்துகொள்வார்கள். இந்தியாவில் உள்ள பல்வேறு மதத்தில் உள்ளவர்களை ஒரே இடத்தில் உட்காரவைத்தால் முதலில் முஸ்லீம்கள் அனைவரும் ஒரே குழுவாக சேர்ந்துகொள்வார்கள்,இந்துக்கள் ஒரே குழுவாக சேர்ந்துகொள்வார்கள்.முடிந்தால் இருவரும் ஒருவரை எதிர்த்து ஒருவர் சண்டையிடுவார்கள். அப்போது மொழி பின்னுக்கு தள்ளப்பட்டுவிடும். இந்தியாவில் தற்போது இதுதான் நடந்துகொண்டிருக்கிறது. இந்தியாவில் உள்ளவர்கள் தற்போது மதரீதியாக ஒன்று சேர்ந்திருக்கிறார்கள்,மொழி ரீதியாக ஒன்று சேர்பவர்கள் பின்னுக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள இந்துவுக்கு ஒரு பிரச்சினை என்று வந்தால் இந்தியாவில் உள்ள இந்துக்கள் அனைவரும் அதற்காக ஒன்றுபடுவார்கள்.அதேபோல் வடஇந்தியாவில் உள்ள முஸ்லீம்களுக்கு பிரச்சினை என்றால் தமிழ்நாட்டில் உள்ள முஸ்லீம்கள் ஒன்றுசேர்வார்கள்.
-
இவ்வாறு இந்தியா பல தனிநாடுகளாக பிரிந்துபோகாமல் காப்பாற்றியது இறைவனின் சித்தம் என்பதை நீங்கள் அறியவில்லையா?
-
எதிர்காலத்தில் இந்தியாவிற்கும்.பாகிஸ்தானுக்கும் மதரீதியாக ஒரு போர் நிகழும்.சீனா பாகிஸ்தானுக்கு மறைமுகமாக அனைத்து உதவிகளும் செய்யும்.அந்த போரில் நாம் வெற்றிபெறுவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுவிட்டன.பிரிந்துசென்ற பாகிஸ்தானை இந்தியா கைப்பற்றும் .இனியாரும் இந்தியா போரில் வெற்றிபெறுவதை தடுக்க முடியாது.
-
அதைப்பற்றி இப்போது விவாதிக்க முடியாது.
-
கட்டுரை..சுவாமி வித்யானந்தர் (27-1-2018)

இந்த உலகத்தில் மற்றுமொரு மதப்பிரிவை உண்டாக்குவதற்காக நான் பிறக்கவில்லை


சுவாமி விவேகானந்தர்--மதத்தை பரப்புவது என்றால் ஒவ்வொருவர் மீதும், வொவ்வொன்றின்மீதும் குறைசொல்வதே என்று நினைத்துக்கொள்ளாதே.உடல்,மனம்,ஆன்மீகம் ஆகிய ஒவ்வொரு நிலையிலும் மனிதர்களுக்கு உடன்பாட்டுக் கருத்துக்களை தரவேண்டும்.யாரையும் வெறுக்கக்கூடாது. நீங்கள் ஒருவரை ஒருவர் வெறுத்ததால்தான் இவ்வளவு இழிநிலையை அடைநதிருக்கிறீர்கள்.இப்போது உடன்பாட்டுக் கருத்துக்களை மட்டுமே பரப்பி மனிதர்களை உயர்த்த வேண்டும்.முதலில் இந்த வகையில் இந்துக்களை எழுச்சி பெறச்செய்ய வேண்டும். பிறகு உலகம் முழுவதையுமே விழிப்புற செய்ய வேண்டும். அதற்காகத்தான் ஸ்ரீராமகிருஷ்ணர் அவதாரம் செய்தார். யாருடைய கருத்தையும் அவர் அழித்ததில்லை.மிகமிகக் கீழ்நிலையில் உள்ள மக்களுக்கு கூட அவர் நம்பிக்கையும் உற்சாகமும் தந்து உயர்த்தி இருக்கிறார். நாம் அவரது வழியை பின்பற்றி அவர்களை மேலே தூக்கி உற்சாகப்படுத்தவேண்டும்.புரிகிறதா?
----
சுவாமி விவேகானந்தர்--- உங்கள் வரலாறு,இலக்கியம்,புராணங்கள் என்று எல்லா சாஸ்திரங்களுமே மக்களைப் பயமுறுத்த மட்டுமே செய்கின்றன. ”நரகத்திற்குத்தான் போவாய்.உனக்கு கதியே இல்லை” என்றே அவை மனிதர்களிடம் சொல்கின்றன.அதனால் தான் இந்தியாவில் இந்தவிதமான மந்தநிலை நாடி நரம்புகளில் புகுந்துவிட்டது. எனவே வேதவேதாந்தத்தின் உயர்ந்த கருத்துக்களை எளிய மொழியில் எல்லோருக்கும் எடுத்துச்சொல்லவேண்டும். ஒழுக்கம்,நன்னடத்தை,கல்வி முதலியவற்றை அளித்து அனைவரையும் பிராமணர்களின் நிலைக்கு உயர்த்தவேண்டும். இதை உன்னால் செய்ய முடியுமா?
----
சுவாமி விவேகானந்தர்.--.உங்களை நான் நேசிக்கிறேன்.ஆனால் பிறரது நன்மைக்காக வேலைசெய்துசெய்து நீங்கள் இறந்துபோவதையே விரும்புகிறேன்.
--
சீடன்.. நாங்கள் செத்துபோனால் எங்களை நம்பி வாழ்பவர்களின் கதி என்ன ஆவது?
---
சுவாமி விவேகானந்தர்--..நீ உன் வாழ்க்கையைப் பிறருக்காகத் தியாகம் செய்யத்தயாரானால், உன்னை சார்ந்தவர்களுக்குக் கடவுள் நிச்சயமாக வழிசெய்வார். உன் வாசற்படியில் இறைவனே பிச்சைக்காரன் வடிவில் வந்து நிற்கிறான் அவனுக்கு முதலில் சேவை செய்.வாழ்க்கை தான் எத்தனை நாள்! நீ இந்த உலகிற்கு வந்துள்ளாய்.ஓர் அடையாளத்தை விட்டுச்செல்.இல்லையென்றால் உனக்கும் இந்த மரங்களுக்கும்,கற்களுக்கும் என்ன வித்தியாசம்?அவையும் தோன்றுகின்றன,வாழ்கின்றன,சாகின்றன.அதுபோல பிறந்து சாகவா விரும்புகிறாய்?
-
சுவாமி விவேகானந்தர்--ஸ்ரீராமகிருஷ்ணரை நான் மடத்தில் பிரதிஷ்டை செய்த அன்று,அவரது கருத்துக்கள் இந்த இடத்திலிருந்து எழுந்து அண்டசராசரங்கள் முழுவதும் பரவி நிற்பதைபோல் என் மனத்தில் தோன்றக்கண்டேன். நான் என்னால் முடிந்த அளவு செய்கிறேன்,செய்வேன், நீங்களும் அவரது பரந்த கருத்துக்களை மக்களுக்கு விளக்கிசொல்ல வேண்டும். அத்வைத வேதாந்தத்தின் உண்மையை நடைமுறை வாழ்க்கையில் நிரூபித்து காட்டவேண்டும். சங்கரர் இந்த அத்வைதத்தைக் காடுகளிலும் மலைகளிலும் விட்டுப்போனார்.அவற்றை அங்கிருந்து கொண்டுவந்து,உலக வாழ்க்கையில்,மக்கள் தொழில்புரிந்து வாழும் சமுதாயத்தில் பரப்பவே நான் வந்துள்ளேன்.அத்வைதத்தின் கர்ஜனை வீடுகள்தோறும் கேட்க வேண்டும். நான் இதை சாதிக்க நீங்கள் உதவுங்கள். வேலை செய்யுங்கள்.....
-
சீடர்..சுவாமிஜி,உங்கள் கருத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.(ஸ்ரீராமகிருஷ்ணருக்காக விழாவை நீங்கள் கொண்டாடுகிறீர்கள்)ஸ்ரீராமகிருஷ்ணரை மையமாக வைத்து அவர் பெயரால் ஒரு மதப்பிரிவை உண்டாக்குகிறீர்களோ என்று எனக்கு சிலவேளைகளில் தோன்றுகிறது.ஸ்ரீராமகிருஷ்ணர் எந்த பிரிவையும் சேர்ந்தவர் அல்ல,அவர் சைவம்,வைணவம்,சாக்தம்,முகமதியமதம்,கிறிஸ்தவம் ஆகிய அனைத்திற்கும் மரியாதை அளிப்பது அவரது வழக்கம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்
--.
சுவாமி விவேகானந்தர்--- எங்களுக்கும் எல்லா மதங்களிடமும் அப்படிப்பட்ட மரியாதை இல்லையென்பதா உன் எண்ணம். நீ என் சொற்பொழிகளை நிச்சயமாக படித்திருக்க வேண்டும்.அதில் எங்காவது நான் ஸ்ரீராமகிருஷ்ணரை மையாமாகவைத்து எதையாவது உருவாக்கியிருக்கிறேனா? கலப்பற்ற உபநிடத மதத்தையே நான் உலகம் முழுவதும் பிரச்சாரம் செய்திருக்கிறேன.
கணக்கில் அங்காத மதப்பிரிவுகள் அனைத்துமே ஒவ்வொரு பாதை தான். ஏற்கனவே பிரிவுகளால் நிறைந்திருக்கும் இந்த உலகத்தில் மற்றுமொரு மதப்பிரிவை உண்டாக்குவதற்காக நான் பிறக்கவில்லை.
--
HINDU MATHAM WHATSAPP GROUP 9789 374 109

யாரெல்லாம் ஹிந்துக்கள்?இந்துமதம் என்ற பெயரை ஏன் மாற்றக்கூடாது?



யாரெல்லாம் ஹிந்துக்கள்?இந்துமதம் என்ற பெயரை ஏன் மாற்றக்கூடாது?
-
ஸ்ரீகிருஷ்ணர் வாழ்ந்த அன்றைய பாரதத்தில் மக்கள் சிறுசிறு குழுக்களாக வாழ்ந்துவந்தார்கள்.பல அரசர்கள் ஆட்சிபுரிந்து வந்தாலும்,அனைவரிடமும் ஒரே விதமான கலாச்சாரம்தான் நிலவி வந்தது.பாண்டிய மன்னனும் யுதிஷ்டிரரும் ஒரே அணியில் இருந்தார்கள். சிவன் பெரியவனா?விஷ்ணு பெரியவனா? போன்ற கருத்துக்கள் அப்போது எழவில்லை.சைவமதமும் வைணவமதமும் அப்போது தோன்றவில்லை. ஸ்ரீ கிருஷ்ணரின் காலத்தில் இரண்டு பிரிவுகள்தான் இருந்தன ஒன்று வேதத்தின் கர்மகாண்டத்தை பின்பற்றுபவர்கள் இன்னொன்று வேதத்தின் ஞான காண்டத்தை பின்பற்றியவர்கள். சாங்கியம் மற்றும் யோகம் என்று அதை அழைத்தார்கள். சாங்கியர்கள் துறவு வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். யோகியர் இல்லற வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள்.ஸ்ரீ கிருஷ்ணர் இவை இரண்டையும் சமரசப்படுத்தி இல்லறவாழ்க்கையை முறையாக மேற்கொள்ளமல் துறவு வாழ்க்கைக்கு சென்றால் தோல்வி அடைய நேரலாம் என்றும். இல்லறத்தில் இருப்பவன் அடையும் அதே பலனையே துறவறத்தில் இருப்பவனும் அடைகிறான் என்று போதித்தார்.
-
அவரது காலத்திற்கு பிறகு வேதத்தின் கர்ம காண்டத்தை பின்பற்றியவர்கள் பல்வேறு யாகங்கள்,பலிகள், போன்ற பல செயல்களில் ஈடுபட்டதால் மக்கள் துன்பத்தை அனுபவித்தார்கள்.அதை சாங்கியர்கள் எதிர்த்தார்கள்.சாங்கியமதத்திலிருந்து புத்தமதம்,சமணமதம் என்ற இருமதங்கள் உருவாகின.வேதத்தின் கர்மகாண்ட மதத்தை எதிர்ப்பதே இதன் முக்கிய பணியாக இருந்தது.வேதத்தின் ஞான காண்டத்தில் சில இடங்களில் யாகங்கள் பற்றி கூறுவதால், வேதத்தை மொத்தமாக புறக்கணித்தார்கள்.
-
வட இந்தியாவில் புத்தமதம் மற்றும் சமணமதம் வேகமாக வளர்ச்சியடைந்த காலத்தில்,தென் இந்தியாவில் வைணவம் மற்றும் சைவம் வளர்ச்சியடைய ஆரம்பித்தது.இவர்கள் வேதத்தின் ஞானகாண்ட பகுதிக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள்.அதனுடன் பக்தி கருத்துக்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்தார்கள்.
-
இந்த காலகட்டத்தில் பாரதத்தில் இந்துமதம் என்ற பெயரில் எதுவும் இல்லை. அந்த காலத்தில் பெரிய மதங்களாக கருதப்பட்டவை புத்தம்,சமணம்,சைவம்,வைணவம் மற்றும் கிழக்கு இந்தியாவில் சாக்தம்.இவை தவிர இன்னும் சிறுசிறு மதங்கள் அதிகம் இருந்தன.பல மதங்கள் சில காலம் இருந்து பிறகு அழிந்துபோனது.சில பெரிய மதங்கள் சிறிய மதங்களை தங்களுக்குள் சேர்த்துக்கொண்டது. கௌமாரம்(முருகர்),காணபத்யம்(கணபதி) போன்ற மதங்கள் சைவமதத்தில்(சிவனின் குழந்தைகள் என) இணைந்துகொண்டன.
-
இவ்வாறு பாரதத்தில் பல்வேறு மதங்கள் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி வந்த காலத்தில் சிந்து நதிக்கு மறுகரையில் வாழ்ந்த பாரசீகர்கள்,யூதர்கள்,அரேபியர்கள் போன்றவர்கள் நமது நாட்டு மக்கள் அனைவரையும் ஒரே பெயரில் ஹிந்து என்று அழைத்தார்கள்.
-
சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு புத்தமதம் வட இந்தியாவில் வீழ்ச்சியை சந்தித்தது. தென்இந்தியாவை சேர்ந்த சங்கரர் மற்றும் ராமானுஜரின் முயற்சியால் புத்தமதத்தினர், சைவம் மற்றும் வைணவ மதத்திற்கு மாறினார்கள்.சமண மதம் எப்போதுமே பெரிய வளர்ச்சியை அடையவில்லை. சில காலம் வளர்ந்தபிறகு படிப்படியாக அது சிறுபான்மை மதமாகிவிட்டது.
-
முஸ்லீம் மதத்தின் தோற்றத்திற்கு பிறகு. படிப்படியாக வெளிநாட்டு அரசர்கள் இந்தியாவிற்குள் படையெடுத்துவந்தார்கள்.அவர்கள் ஹிந்துக்கள் என்ற பெயரில் இங்குள்ள அனைவரையும் அழைத்தார்கள்.அனைவரும் காபிர்கள்,அதாவது அல்லாவின் எதிரிகளாக கருதப்படார்கள்.பல அரசர்கள் காபிர்களை கொன்று குவிப்பதை வழக்கமாக வைத்திருந்தார்கள்.அதைபற்றிய வரலாற்று சம்பவங்களை தனியாக படித்து தெரிந்துகொள்ளுங்கள். அவ்வாறு உயிரோடு விடப்பட்ட காபிர்கள்தான், பழைய கால வடஇந்தியாவை சேர்ந்த ஹிந்துக்கள்.
-
இலங்கையை சேர்ந்தவர்கள் பொதுவாக சைவமதத்தை பின்பற்றியதாலும்,முஸ்லீம்களின் ஆட்சிக்கு கீழ் வராததாலும் அவர்கள் தங்களை ஹிந்துக்கள் என்று அழைத்துக்கொள்வதில்லை அதற்கான தேவையும் ஏற்படவில்லை.அவர்கள் காபிர்களாக உருவாகவில்லை.இன்று இலங்கையில் உள்ள தமிழர்கள் நாங்கள் வேறுமதம்,நாங்கள் ஹிந்துக்கள் அல்ல என்று கூறலாம்.ஹிந்துக்கள் அடைந்த துயரங்களை அவர்கள் அடையாததால் இவ்வாறு பேசுகிறார்கள்.
-
தலித் என்ற பெயரை உருவாக்கி எப்படி ஒரு சமுதாயத்தை உயர்சாதியினர் கொடுமைப்படுத்தினார்களோ,அதேபோல் ஹிந்துக்கள் என்ற பெயரை உருவாக்கி ஒரு மதத்தினர் இங்குள்ளவர்களை கொடுமைப்படுத்தினார்கள்.ஒவ்வொரு செயலுக்கும் சமமான எதிர் செயல் உண்டு என்பது தான் விதி. காபிர்கள் என்ற முத்திரையோடு உயிரிழந்த கோடிக்கணக்கான பாரத மக்களின் சாபம் இன்னும் நீங்கவில்லை. அது நீங்கும்வரை நாம் ஹிந்துக்களாகவே இருப்போம்.அதன் பிறகு வேண்டுமானால் வேறு பெயரை நாம் வைத்துக்கொள்ளலாம்.அதற்கு முன்பு யாராவது ஹிந்துக்கள் என்ற பெயரை மாற்ற முயற்சிசெய்தால் அது தோல்வியையே சந்திக்கும்,இந்தியாவின் வளர்ச்சியை முற்றிலுமாக பாதிக்கும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.
-
கட்டுரை... சுவாமி வித்யானந்தர் (18-01-2018)