சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் வசிக்கும்போது அழகான பெண்களையும் கண்டு மயங்காமல் எப்படி கட்டுப்பாடுடன் வாழ முடிந்தது?
-
பொதுவாக இரவு வேளைகளில் சாதாரண மக்கள் ஆழ்ந்து தூங்கிவிடுவார்கள்.தூங்குவதற்கு முன்பு பல்வேறு எண்ணங்கள் மனத்தில் வந்துமோதும்,முடிவில் அவர்களையும் அறியாமல் தூங்கிவிடுவார்கள்.காமம் இருக்கும்வரை தூக்கம் இருக்கும்.யாரிடம் காமம் இல்லையோ அவர்கள் தூக்கத்தை கடந்துவிடுவார்கள்.அவர்கள் படுத்திருந்தாலும் தூங்குவதில்லை.மனம் தானாகவே வேலைசெய்துகொண்டே இருந்தாலும் விழிப்பாக எண்ணங்களை பார்த்துக்கொண்டே இருப்பார்கள்.
-
சுவாமி விவேகானந்தர் இதுபற்றி என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்
-
“இரவில் நான் என் அறைக்குச் சென்று படுத்துக்கொள்வேன்.சிறிதுநேரம் கழிந்த பின் என்னுள்ளே பேரானந்த அலைகள் பொங்கும்.அதன்பிறகு என்னால் படுத்துக்கிடக்க முடியாது.பேரானந்த வடிவான தேவியை நான் காண்பேன். மனிதன்,விலங்குகள்,வானம்,பூமி என்று அனைத்துமே ஆனந்தத்தால் நிரம்பி வழிவதை உணர்வேன்.அதன்பிறகு என்னால் படுக்க இயலாது.எழுந்து அறையின் நடுவே சென்று நடனமாடத்தொடங்கிவிடுவேன்.அந்த ஆனந்தத்தை என்னால் கட்டுப்படுத்த முடியாததால் இப்படி செய்வேன்.உலகம் முழுவதும் ஆனந்தத்தால் நிறைந்ததுபோல இருக்கும்.”
-
ஒருநாள் தனது ஆனந்த அனுபவத்தை பற்றி மற்றவர்களுக்கு சொல்லும்போது அவர் அந்த ஆனந்தத்தின் எல்லைக்கே சென்றுவிட்டார்.எப்போதும் ஆனந்தமாக இருங்கள்.ஒருபோதும் கவலையுடன் இருக்காதீர்கள் என்று அவர் கூறுவார்.
------
விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு புத்தகம்1-பக்கம் 720
-
இங்கே சற்று விளக்கம்தேவை
-
இதைத்தான் பராபக்தி என்று கூறுகிறோம். ஞானமும் பக்தியும் உச்சத்தில் இருக்கும்போது இந்த நிலை ஏற்படுகிறது.ஒருபக்கம் இறைவனிடம் ஆழ்ந்த அன்பு இருக்கும்.இன்னொரு பக்கம் இறைவனைப்பற்றிய ஞானம் முதிர்ந்து இருக்கும். வெறும் ஞானம் மட்டும் இருப்பவர்கள் வறண்டு இருப்பார்கள்.வெறும் பக்தி மட்டும் இருப்பவர்கள் உணர்ச்சிவசப்பட்டு அழுதுகொண்டிருப்பார்கள்.இரண்டும் சேர்ந்தால் பராபக்தி கிடைக்கிறது.குணடலினிசக்தி 6 வது தளத்திற்கு அதாவது புருவ மத்தியில் செல்லும்போது இந்த நிலை ஏற்படுகிறது.அப்போது கண்கள் மூடியிருக்கும்.உலக நினைவு இருக்காது.
-
இந்த தேவி யார்? தன் குடும்பம் வறுமையில் வாடுகிறது.அதை சரிசெய்ய வேண்டும் என்று ஸ்ரீராமகிருஷ்ணரிடம் சென்று வேண்டுவார் செய்வார் விவேகானந்தர்.அதற்கு ஸ்ரீராமகிருஷ்ணர் அன்னை காளியை நீ ஏற்றுக்கொள்ளவில்லை அதனால்தான் உனக்கு இந்த துன்பம் வந்தது.நீ காளி கோவிலுக்கு சென்று அவளை வணங்கு என்று கூறுவார்.அப்போது காளிதேவி விவேகானந்தருக்கு காட்சி கொடுப்பார்.அவளை கண்டவுடன் தான் எதற்காக வந்தோம் என்பதை அவர் மறந்துவிடுவார்.இந்த சம்பவத்திற்கு முன்புவரை அவர் காளியை கேலி செய்து கொண்டிருப்பார்.காளியின் காட்சி கிடைத்தபிறகு அவரது ஆன்மீக வாழ்வில் பல மாற்றங்கள் நிகழும்.பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருப்பது காளிதான் என்பதை அவர் உணர்வார்.
-
அந்த காளியின் காட்சியைதான் அமெரிக்காவில் இருக்கும்போது இரவு வேளைகளில் அவர் பெறுவார்.பேரழகு மிக்க தேவியின் காட்சிக்கு முன்னால் உலகத்தில் உள்ள பெண்களின் அழகு மிகசாதாரணமானது.அதனால்தான் எத்தனை அழகான பெண்கள் அவரை திருமணம் செய்ய விரும்பிய போதும்,அவரையே சுற்றிசுற்றி வந்தபோதும் அதை அவர் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளமால்,அனைவரையும் அம்மா என்றும் சகோதரி என்றும் அழைத்தார்.அந்த பெண்கள் அனைவரும் தேவிதான் என்பது அவருக்கு தெரிந்திருந்ததால் அவர்களுடன் புனிதமான தாய்மை உறவையே வைத்திருந்தார்.
-
சுவாமி விவேகானந்தரை சுற்றி எப்போதும் பெண்கள் இருந்ததால்,பாதிரிகளும்,மதவெறியர்களும் அவரைப்பற்றி தவறாக பேசினார்கள்.பத்திரிக்கைகளில் எழுதினார்கள்.சுவாமி விவேகானந்தரைப்போன்ற ஒருவரை அவர்கள் இதுவரை வாழ்க்கையில் பார்த்ததே இல்லை.
-
சுவாமி விவேகானந்தர் அனைவரையும் கவரும் ஒரு காந்தமாக இருந்தார்.ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி அனைவரும் அவரைநோக்கி கவர்ந்து இழுக்கப்பட்டார்கள்.நல்லவர்கள் அவரை நெருங்கிச்சென்றார்கள். தீயவர்களால் நெருங்க முடியவில்லை எனவே பொறாமையினால் கண்டபடி பேசினார்கள்
-
அவரது கடைசி நாட்களில் தேவியின் காட்சி அவருக்கு கிடைக்கவில்லை.எனவே தன்மூலம் தேவி செய்ய வேண்டி பணிகளை செய்து முடித்துவிட்டாள் என்பதை உணர்ந்துகொண்டார்.அதன்பிறகு சில வருடங்கள் இந்தியாவில் அமைதியாக தியானத்தில் மீதி நாட்களை கழித்தார்..
-
சுவாமி வித்யானந்தர்
-
No comments:
Post a Comment