Tuesday, 10 July 2018

சுவாமி விவேகானந்தரின் வீரமொழிகள்-1


சுவாமி விவேகானந்தரின் வீரமொழிகள்-1
-
ஒரு கருத்தை எடுத்துக் கொண்டு அதை ஒட்டியே வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள். அதைப் பற்றிய சிந்தனையில் மூழ்கி கனவு காணுங்கள். உடலின் ஒவ்வொரு அணுவிலும் அந்த கருத்தே நிறைந்திருக்கட்டும். வெற்றிக்கு இது தான் வழி.
-
ஏழைகளிடம், சிவனைக் காண்பவனே உண்மையில் சிவனை வழிபடுகிறான். மற்றவர்கள் வழிபாட்டின் ஆரம்ப நிலையிலேயே இருக்கிறார்கள்.கடவுள் ஒவ்வொரு உயிரிலும் குடி கொண்டிருக்கிறார் என்ற உண்மையை அனைவரும் உணர வேண்டும்.ஒரு லட்சியத்தை எடுத்துக் கொண்டு அதைப் பற்றியே கனவு காணுங்கள். அதைச் சுற்றியே உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அடியையும் எடுத்து வையுங்கள்.
-
நீ பற்றற்றிரு; உடல் வேலை செய்யட்டும்; மூளையின் பகுதிகள் வேலை செய்யட்டும்; ஆனால் ஓர் அலைகூட மனத்தை வெல்ல இடம் கொடுக்காதே.ஓர் அன்னியன் போலவும் வழிப்போக்கன் போலவும் வேலை செய், ஆனால் உன்னைத் தளைகளுக்கு உள்ளாக்காதே. அது அஞ்சத்தக்கது.
-
மேலை நாட்டு அறிவியல் நுட்பத்தோடு வேதாந்த கருத்துக்களையும் இணைத்துக் கொள்ளுங்கள். அப்போது தான் முழுமை பெற முடியும்.
-
உன்னை நீயே பலவீனன் என்று நினைப்பது உனக்கு பொருந்தாது. "நான் ஒரு வெற்றி வீரன்' என்று எப்போதும் உனக்குள்ளேயே சொல்லிக்கொள். மின்னல் வேகத்தில் உனக்குள் புதிய மாற்றம் ஏற்படுவதைக் காண்பாய்.
-
லட்சியமில்லாதவன் இருட்டான பாதையில் தடுமாறி சென்று கொண்டிருப்பான். எனவே, குறிக்கோளை ஏற்று வாழுங்கள்.வலிமை, வளமை, அறிவுக்கூர்மை கொண்ட இளமைக்காலத்திலேயே இறைவனை அறிய முயலுங்கள்.
-
வாழ்வில் எந்த அளவுக்கு உயர நினைக்கிறாயோ, அந்த அளவுக்கு கடுமையான சோதனைகளையும் நீ கடந்தாக வேண்டும்.மரணம் வருவது உறுதியாக இருக்கும்போது ஒரு நல்ல காரியத்திற்காக உயிரை விடுவது மேல்.
-
உலகவாழ்வில் இருந்து தப்பி ஓட முயற்சி செய்ய வேண்டாம். வெற்றியோ தோல்வியோ போராடுங்கள்.பிறருக்காகச் செய்கின்ற சேவையால், நம்மைத் தூய்மைப்படுத்திக் கொள்ள முடியும்.
-
பாமரன் பண்புள்ளவனாகவும், பண்புள்ளவன் தெய்வமாகவும் உயரவேண்டும். இதுவே ஆன்மிகத்தின் பயன்.தெய்வீகத்தன்மை இல்லாமல் பெறும் மிதமிஞ்சிய அறிவும், ஆற்றலும் மனிதர்களை மிருகங்களாக்கி கீழ்நிலைக்குத் தள்ளிவிடும்.
-
சுயநலத்தால் சுகம் கிடைக்கும் என்று மனிதன் முட்டாள்தனமாக நினைக்கிறான். உண்மையில், தன்னலத்தை ஒழிப்பதில் தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது.
-
நம்மை நாமே பெரிதாக எண்ணிக் கொண்டு அகந்தை கொள்வது கூடாது. சாதாரணமானவர்களாக நம்மை கருதும் போது தான், நம்மிடம் கருணையும், பணிவும், நல்ல சிந்தனையும் வெளிப்படத் தொடங்கும்.
-
எல்லா ஆற்றல்களும் மனிதனுக்கு இயல்பிலேயே இருக்கின்றன. ஆன்மிகத்தின் உதவியால் தடைகளைப் போக்கி நாம் நிறை நிலையை அடைய வேண்டும். ஆன்மிகத்தின் உதவியால் தீயவர்கள் கூட மகானாக முடியும்.
-
இந்த உலகம் இறைவனுக்குச் சொந்தமானது. உலகப்பொருட்களில் எல்லாம் அவரே இருக்கிறார். இந்த கோணத்தில் பார்க்கத் தொடங்கிவிட்டால் நம் மனம் உயர்வு பெறும்.
-
பணம் மட்டுமே வாழ்க்கையல்ல. பணத்தை தவிர, நாம் பிறருக்குச் செய்யும் நன்மையும், தெய்வபக்தியும் நம் மனதில் ஆற்றலை பெருகச் செய்பவை தான்.மற்றவர்களின் உதவியை எதிர்பார்த்து நடப்பவன் சத்தியத்தைப் பின்பற்ற முடியாது.அரிய செயல்கள் பெரிய உழைப்பின்றி ஒருபோதும் முடிந்ததில்லை.
--------
விவேகானந்தர் விஜயம்

No comments:

Post a Comment

பித்ருக்களுக்கு தினமும் உணவிட வேண்டும்

  பித்ருக்களுக்கு தினமும் உணவிட வேண்டும் .. துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை. -திருக்குறள் ...