நீண்ட ஆயுள் கிடைத்தாலும் அதனால் நிரந்தரமான மகிழ்ச்சியை அடைய முடியாது
-
ஒரு மன்னன் நீண்ட ஆயுளுடன் வாழவேண்டுமென்று முடிவுசெய்து அதை பெறுவதற்காக கடுமையான தவம் இருந்தான்.பல ஆண்டுகள் தவத்திற்கு பிறகு இறைவன் காட்சி கொடுத்து நீ எத்தனை ஆண்டுகள்உயிரோடு வாழவேண்டுமென்று விரும்புகிறாயோ அத்தனை ஆண்டுகள் வாழ்ந்துகொள் என்று வரம் கொடுத்தார்.
-
கேட்ட வரம் கிடைத்ததால் மன்னன் மகிழ்ச்சியடைந்தான்.இனிமேல் மரணத்தை பற்றி சிந்திக்க வேண்டாம்.இந்த உலகம் உள்ளவரை மகிழ்ச்சியாக வாழலாம் என்று நினைத்துக்கொண்டான்.மன்னனுக்கு மரணம் இல்லை என்று கேள்விப்பட்டு அவரது மனைவி,சொந்தங்கள், மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியடைந்தார்கள்.மன்னனைப் பார்க்க மக்கள் தினமும் வருவதுண்டு. மன்னரும் அன்பாக நலம் விசாரித்து தேவையான உதவிகளை கொடுத்து அனுப்புவார்.
-
நாட்கள் ஆக ஆக அவரது உறவினர்கள் வயோதிகம் காரணமாக மரணமடைந்தார்கள்,நண்பர்கள் என்று கருதியவர்கள் மரணமடைந்தார்கள்.அவரை பார்க்க வரும் மக்களில் நெருக்கமானவர்களும் மரணமடைந்தார்கள்.தனக்கு ஆறுதலாக இருந்த ஒவ்வொருவரும் மரணமடைவதைக்கண்ட மன்னரின் மனம் வேதனை அடைந்தது.இவர்கள் எங்கேசென்றார்கள்? இனிமேல் இவர்களை பார்க்கவே முடியாதே.இவர்கள் இல்லாமல் நான் மட்டும் எப்படி இன்பத்தை அனுபவிப்பேன் என்ற எண்ணம் வரத்தொடங்கியது
-
வருடங்கள் செல்லச்செல்ல தன்னை சுற்றியுள்ளவர்களின் மரணத்தை கண்டு,வாழ்க்கையின்மீதே வெறுப்பு ஏற்பட்டது.நீண்ட ஆயுள் என்பது நீண்ட இன்பத்தை மட்டும் தராது நீண்ட துன்பத்தையும் தரும் என்பதை மன்னன் புரிந்துகொண்டான்.தான் யார்மீது அதிக பாசம் செலுத்துகிறேனோ அவர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு இல்லாமல் போய்விடுகிறார்கள்.நான் மட்டும் நீண்ட ஆயுள் பெற்று வாழ்ந்து என்ன லாபம் என்று தோன்றியது.
-
அவனது மனத்தில் வாழ்க்கையின்மீது வெறுப்பு ஏற்பட்டது.இறைவா நீண்ட ஆயுள் தேவையில்லை.எங்கே சென்றால் இன்பமும் துன்பமும் இல்லாதநிலை சமநிலை ஏற்படுமோ அந்த நிலையை கொடு என்று வேண்டிக்கொண்டான்..அவனது உயிர் உடலைவிட்டு நீங்கியது.அவனுக்கு முக்தி கிடைத்தது...
-
கதை--சுவாமி வித்யானந்தர்
-
No comments:
Post a Comment