Wednesday, 4 July 2018

தற்போதைய இந்துமதத்தை உருவாக்கியது சுவாமி விவேகானந்தரா? ஆச்சர்யமான தகவல்கள்


தற்போதைய இந்துமதத்தை உருவாக்கியது சுவாமி விவேகானந்தரா? ஆச்சர்யமான தகவல்கள்
-
இந்து மதம் என்பது தவறு. இந்து மதங்கள் என்பதுதான் சரி.சைவம்,வைணவம்,சாக்தம்,புத்தம்,சீக்கியம் உட்பட இந்தியாவில் பிறந்த அனைத்து மதங்களும் சேர்ந்தது இந்து மதங்கள் என்பது சிலரின் கருத்து இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் இந்தியாவில் பிறந்த அனைத்து மதங்களையும் சேர்த்து ஒரே பெயரில் இந்துமதம் என்று கூறுகிறது.
-
முஸ்லீம்கள் இந்தியாவிற்குள் படையெடுத்து வந்தகாலத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து மதங்களையும் சேர்த்து ஒரே பெயரில் அதாவது இந்துமதம் என்றுதான் அழைத்தார்கள்.முஸ்லீம்களுக்கு தனி சட்டம்.இந்துக்களுக்கு தனிச்சட்டம் என்பது அவர்களின் காலத்தில் உருவானது.அதற்கு முன்பு சைவர்களுக்கு தனி சட்டம்,வைணவர்களுக்கு தனி,புத்த மதத்தினருக்கு தனி, இப்படிதான் இருந்தது.அரசர்கள் எந்த மதத்தை பின்பற்றுகிறார்களோ அதற்கு ஏற்ப சட்டங்கள் இருந்தன
-
ஆகவே முஸ்லீம்கள் இந்திய மதங்களை ஒரே பெயரில் ஒன்று சேர்த்து இந்துமதம் என்று அழைத்தார்கள்.இதற்குள் இருக்கும் விபரங்களை அறிய அவர்கள் விரும்பவில்லை.அவர்களுக்கு தெரிந்தது ஒன்றே ஒன்றுதான் இவர்கள் முஸ்லீம்கள் இல்லை.காபிர்கள் அல்லது அல்லாவின் எதிரிகள்.
-
இதன்பிறகு வெள்ளைக்காரர்கள் ஆட்சி செய்யும்போதும் இதே நிலைதான் நீடித்தது.அந்த காலத்தில் புத்தமதத்தினரும்,சமணர்களும்.சீக்கியர்களும் நாங்கள் இந்துக்கள் அல்ல என்று கூறிக்கொண்டார்கள்.எதன் அடிப்படையில் அப்படி கூறினார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது.
-
அமெரிக்காவில் சிகாகோ சர்வமத மகாசபைக்காக அனைத்து மதத்தினரையும் அழைக்க வேண்டும் என்று முடிவு செய்தார்கள்.அப்போது புத்தமதத்தினரை அழைத்தார்கள்,சமண மதத்தை அழைத்தார்கள்,பிரம்ம சமாஜத்தினரை அழைத்தார்கள்.அந்த காலத்தில் பிரம்மசமாஜத்தினர் தங்களை இந்துக்கள் அல்ல என்று கூறிக்கொண்டார்கள்.அடுத்து இந்துமதத்தின் சார்பாக ஒருவரை அனுப்புங்கள்என்றுதான் பத்திரிக்கையில் விளம்பரம் கொடுத்தார்கள்.சைவ மத்திலிருந்து ஒருவரை அனுப்புங்கள்,வைணவ மதத்திலிருந்து ஒருவரை அனுப்புங்கள்.சாக்த மதத்திலிருந்து ஒருவரை அனுப்புங்கள் என்று கேட்கவில்லை.சாக்தமதம் என்பது கிழக்கு இந்தியாவில் பிரபலான மதம்
-
அப்போது இந்துமதம் என்று ஒரு மதம் இருந்ததா என்றால் இல்லை. சைவர்களுக்கு புனித நூல்கள் உண்டு,வைணவர்களுக்கு உண்டு.சாக்தர்களுக்கு உண்டு.ஆனால் இந்துமதம் என்ற ஒரு மதத்திற்கு ?
பகவத்கீதையை சைவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.பெரிய புராணத்தை வைணவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.அப்படியானால் இந்துமதத்திற்கு என்று ஏதாவது புனித நூல் உள்ளதா?
-
நாம் நமது மத வரலாற்றை சற்று பார்ப்போம். எப்போதெல்லாம் ஒரு மதம் வேகமாக வளர்ச்சியடைகிறதோ அப்போது அது பல சிறிய மதங்களை தங்களுக்குள் சேர்த்துக்கொள்கின்றன.உதாரணமாக குமாரம்(முருகவழிபாடு) காணபத்யம்(கணபதி வழிபாடு) போன்றவை முன்பு தனி மதங்களாக இருந்தன.சைவமதம் வளர்ச்சியடைந்த காலத்தில் இவைகள் அதற்குள் ஒன்று சேர்ந்துவிட்டன. சில நூற்றாண்டுகள் சைவமத்தின் பொற்காலமாக திகழ்ந்தது.அதன்பின் சைவம் பல துண்டுகளாக பிரிந்துபோனது தமிழ்.சைவம், வீரசைவம்,லிங்காயத்து,அத்வைத சைவம் போன்று பல பிரிவுகளாக பிரிந்து போனது
-
அதேபோல வைணவ மதமும் ஒரு காலத்தில் மிக வேகமாக வளர்ந்து வடஇந்தியாவிலும் தன் ஆதிக்கத்தை செலுத்த தொடங்கியது.அந்த காலத்தில் இருந்த இந்திர வழிபாடு.ராம வழிபாடு, இன்னும் பல அவதாரங்களை எல்லாம் ஒன்று சேர்த்து வலிமைபெற்று விளங்கியது.அதன்பிறகு வட இந்தியாவில் வைணவம் பல பிரிவுகளாக பிரிந்தது.வடகலை,தென்கலை,வீர வைணவம் என்று தென்னிந்தியாவிலும் பிரிந்துபோனது.
-
புத்தமதம் உட்பட மற்ற மதங்களும் சில காலம் பிற மதங்களை ஒன்று சேர்த்து வலிமைபெற்று எழுகின்றன.பின்பு பல பிரிவுகளாக பிரிந்து தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டு வலிமை குறைந்துபோகின்றன.
-
முஸ்லீம்கள் ஆட்சி காலத்திலும்.வெள்ளையர்கள் ஆட்சி காலத்திலும் அவர்கள் தெரிந்தோ தெரியாமலோ இந்துமதம் என்ற பொதுபெயரிலேயே அனைத்து மதங்களையும் அழைத்தார்கள்.அந்த பெயரிலேயே சட்டங்களை இயற்றினார்கள்..அதனால்தான் சிகாகோ சர்வ மத மகாசபையில் இந்துமதத்திற்கு பிரநிதிகளை கேட்டார்கள்.ஆனால் அந்த காலத்தில் சைவமதத்தை பற்றி தெரிந்த அறிஞர்கள் இருந்தார்கள்.வைணவமதத்தை பற்றி நன்கு தெரிந்தவர்கள் இருந்தார்கள்.ஆனால் இந்துமதத்தைப்பற்றி தெரிந்தவர்கள் யார் இருந்தார்கள்?யாரும் இல்லை. சுவாமி விவேகானந்தர் ஒருவர்தான் எனக்கு தெரிந்து அனைத்துமதங்களையும் ஒருங்கிணைக்கும் வல்லமை உள்ளவராக அந்த காலத்தில் இருந்தார்.அதனால்தான் அவரது பெயரை முன்னிறுத்தினார்கள்.
-
இறைவனின் திட்டத்தை சற்று சிந்தித்துக்காருங்கள்.ராமநாதபுரம் மன்னர் சைவமதத்தில் தீவிரமானவர்.அவர் ஒரு நபரை தேர்ந்தெடுத்திருந்தால் கண்டிப்பாக சைவமதத்தை உயர்த்தி பேசும் ஒருவரைத்தான் அனுப்பியிருப்பார்.சென்னை சேர்ந்த பிரபலமான சிலர் வைணவமத்தில் ஈடுபாடுகொண்டவர்களாக இருந்தார்கள்.அவர்கள் ஒருவரை அனுப்பியிருந்தால் வைணத்தில் தீவிரமான ஒருவரை அனுப்பியிருப்பார்கள்.அவர்கள் அங்கே சென்று மற்ற மதத்தை மட்டம்தட்டி பேசியிருப்பார்கள்.இந்த வாய்ப்பு சுவாமி விவேகானந்தருக்கு வந்தது இறைவனது திட்டத்தால்தான்
-
இந்துமதங்கள் அனைத்தும் இந்துமதம் என்ற ஒரே பெயரில் ஒன்றிணைந்தால் அதுதான் எதிர்காலத்தில் மிகப்பெரிய வலிமைவாய்ந்த மதமாக இருக்கும் என்பது சுவாமி விவேகானந்தருக்கு தீர்க்க தரிசனமாக தெரிந்தது.அதனால் அவர் சைவம்,வைணவம்,சாக்தம் உட்பட பல்வேறு மதங்களின் கருத்துக்களை ஒன்றுபடுத்தி ஒரு பொதுக்கருத்தை கொண்டு வந்தார்.
-
இந்தியாவில் புத்த மற்றும் சமண மதங்கள் நீங்கலாக மற்றவர்கள் அனைவரும் வேதத்தை தங்கள் பிரமாண சாஸ்திரமாக ஏற்றுக்கொள்கிறார்கள்.வேதத்தின் சாரமான உபநிடதத்தையும் அனைவரும் ஏற்றுக்கொள்கிறார்கள்.ஆகவே உபநிடதத்தை அடிப்படையாக கொண்ட கருத்தில் இந்திய மதங்களை விவேகானந்தர் ஒன்றிணைத்தார்.அந்த உபநிடதங்களை இந்துமதத்தின் பிரதான சாஸ்திரமாக்கினார்.உபநிடதங்கள் முக்கியமாக 108 உள்ளன.இவைகள் காலத்தால் மிகவும் பழையவை.உண்மையை உணர்ந்த ரிஷிகளின் வார்த்தைகள்தான் உபநிடதங்கள்.எல்லா காலத்திலும் உண்மையை உணர்ந்தவர்கள் இருக்கிறார்கள்.சமீப காலங்களில்கூட அவர்கள் வாழ்கிறார்கள்.அவைகளை ஒருபுறம் வைத்துவிட்டு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அதாவது சைவம்,வைணவம் போன்ற மதங்கள் தோன்றுவதற்கு முன்பு இருந்த காலத்திற்கு அவர் சென்றார்.அந்த காலத்தில் உள்ள 108 உபநிடதங்களை எடுத்துக்கொண்டார்.
-
அந்த உபநிடதங்களின் தத்துவத்தை எடுத்து அவற்றை மக்களுக்கு போதிக்கத்தொடங்கினார்.அவைகள் துவைதம்,விசிஷ்டாத்வைதம்,அத்வைதம் என்ற மூன்று தத்துவங்களை உள்ளடக்கியவை.சாதாரணமனிதர்களுக்கு துவைதம் ஏற்றதாக அமையும்,அவர்கள் சற்று பக்குவம் அடைந்தபின் விசிஷ்டாத்வைதத்தை புரிந்துகொள்ள முடியும்.அவர்கள் மேலும் பக்குவமடையும்போது அத்வைதத்தை புரிந்துகொள்ள முடியும் என்று கூறினார்
-
அமரிக்காவில் சிகாகோ சர்வமத மகாசபையில் முதன்முதலாக இந்துமதம் என்ற தலைப்பில் விவேகானந்தர் சொற்பொழிவாற்றினார்.அந்த சொற்பொழிவை முடிக்கும்போது இந்துமதம் உருவாகியிருந்தது என்கிறார் சகோதரி நிவேதிதா .
-
ஆகவே விவேகானந்தர் காலத்திற்கு முன்பு இந்துமதம் என்னும் ஒரு மதத்திற்கு சாஸ்திரம் எது?தத்துவம் எது என்று யாருக்கும் தெரியாது.
-
ஸ்ரீராமகிருஷ்ணர் அனைத்து மதங்களையும் பின்பற்றி அதன் அறுதி எல்லையை அடைந்தார்.அவரை சைவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.வைணவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.சாக்தர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.இன்னும் பல பிரிவினரும் அவரை தங்களின் பிரதிநிதியாகவே பார்த்தார்கள்.அவர் எந்த மதத்திற்கும் எதிராக இருக்கவில்லை.அனைத்து மதங்களின் திரண்ட வடிவம் அவர்.அவரின் கீழ் பாடங்களை கற்றவர் விவேகானந்தர்.இந்துமதத்தின் முன்மாதிரி மனிதராக அவர் ஸ்ரீராமகிருஷ்ணரையே முன்னிறுத்தினார்
-
நாம் சைவர்களாக இருக்கலாம்.வைணவர்களாக இருக்கலாம்.சாக்தர்களாக இருக்கலாம்.யாரும் அந்த வழியிலிருந்து வெளியேறத்தேவையில்லை.அதேநேரத்தில் நாம் இந்துவாகவும் இருக்கலாம்.ஏனென்றால் இந்துமதம் எதையும் விலக்குவதில்லை.அனைத்தையும் ஏற்றுக்கொள்கிறது.
-
இந்துமதத்தை சுவாமி விவேகானந்தர் உருவாக்கவில்லை. அதற்கு ஒரு புதிய பரிணாமத்தை அவர் கொடுத்திருக்கிறார்
-
இதுவரை சுவாமி விவேகானந்தரால் முன்னிறுத்தப்பட்ட இந்துமதத்தை அறிஞர்கள் மட்டுமே படித்திருக்கிறார்கள்.. அதை அனைவரின் வீட்டுவாசலுக்கு கொண்டு செல்லும் பணியை மேற்கொள்ள நாம் அனைவரும் பாடுபடுவோம்
-
கட்டுரை...சுவாமி வித்யானந்தர்(4-7-2018).

No comments:

Post a Comment