Friday, 13 July 2018

ஸ்ரீராமகிருஷ்ணர்- அன்னை சாரதாதேவி உறவில்-மூன்று பரிமாணங்கள்


ஸ்ரீராமகிருஷ்ணர்- அன்னை சாரதாதேவி உறவில்-மூன்று பரிமாணங்கள்-துவைதம்-விசிஷ்டாத்வைதம்-அத்வைதம்
-
ஸ்ரீராமகிருஷ்ணர் துவைதம்,அத்வைதம்,விசிஷ்டாத்வைதம் என்ற மூன்று நிலைகளில் வாழ்ந்தார்.மகான்களின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து தத்துவங்களை உருவாக்குகிறார்களா அல்லது தத்துவங்களின் அடிப்படையில் மகான்களின் வாழ்க்கை அமைகிறதா என்று தெரியவில்லை.
-
1.முதலில் அத்வைத கண்ணோட்டம்--
-
ஸ்ரீராமகிருஷ்ணர் தன்னை துறவி என்று பல நேரங்களில் குறிப்பிட்டுள்ளார்.அவரது வாழ்க்கையில் பல சம்பங்கள் இதை தெளிவுபடுத்துகின்றன.அவரது தாயாரின் இறுதி சடங்கு சமயத்தில் மகன் செய்ய வேண்டிய கடைசி சடங்குகளை செய்யவில்லை.தான் துறவி என்றும் தனக்கு எந்த கடமைகளும் இல்லை என்றும் கூறி அதை செய்யவில்லை.
-
அடுத்ததாக அவரது பரம்பரை சொத்தை பிரிக்கும்போது அவரது பங்கை பெறுவதற்காக கையெழுத்திடும்படி கேட்டுக்கொண்டார்கள்.தனக்கு எந்த சொத்தும் தேவையில்லை.எனக்கு உலகத்திலிருந்து எதுவும் தேவையில்லை.என்னால் கையெழுத்திடமுடியாது.நீங்களே அதை வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார்.
-
அன்னை சாரதாதேவிஆரம்ப காலத்தில் கணவருடன் வாழவேண்டும் என்பதற்காக ஜெயராம்படியிலிருந்து பல மைல் தூரம் நடந்து தட்சிணேஷ்வரம் வந்தார்.அப்போது ஹிருதயன் ஸ்ரீராமகிருஷ்ணருக்கு பணிவிடைகள் செய்து வந்தார்.சாரதாதேவி தட்சிணேஷ்வரம் வந்தபோது. நீ இங்கே எதற்காக வந்தாய்? குருதேவரை பார்த்துக்கொள்ள நான் போதாதா? உன்னை யாரும் இங்கு தேடவில்லை,அழைக்கவில்லை.இங்கிருந்து சென்றுவிடு என்று கடும்கோபத்தில் திட்டிவிட்டான்.(ஹிருதயனின் கோபத்திற்கு வேறு பல காரணங்கள் உண்டு).இந்த சம்பவம் ஸ்ரீராமகிருஷ்ணரின் முன்னிலையிலேயே நடந்தது.ஸ்ரீராமகிருஷ்ணர் அப்போது பரவச நிலையில் இருந்தார்.ஹிருதயனை அவர் கண்டிக்கவில்லை.குருதேவர்மீதும்,ஹிருதய்மீதும் அன்னை கடும் கோபமுற்றார்.மனைவி என்ற முறையில் நான் இவருடன் இல்லாமல் எங்கே போய் இருப்பது என்ற ரீதியில் அவரது கோபம் கடுமையாக இருந்தது.இந்த சம்பத்தில் அன்னையை சமாதானப்படுத்தவும்,ஹிருதயனை தண்டிக்கவும்  இயலாத பரவச நிலையில் குருதேர் இருந்தார்.இனி நானாக இந்த இடத்திற்கு வரமாட்டேன் என்று கோபத்துடன் கூறிவிட்டு ஜெயராம்பாடிக்கு சென்றுவிட்டார் அன்னை. இந்த உலகத்தில் உள்ள யாரும்  தனக்கு சொந்தம் இல்லை.இந்த உலகமே என்னுடையதல்ல.இந்த உலகத்தின் நிகழ்வுகள் என்னை பாதிக்காது என்ற உயர்ந்த அத்வைத நிலையில் அப்போது குருதேவர் இருந்தார்.(அதன்பிறகு நடந்த சம்பவங்களை தனியாக படித்துக்கொள்ளுங்கள்)
-
குருதேவர் பெரும்பாலான நேரத்தில் அத்வைத மனநிலையில் இருப்பார்.அதனால்தான் அவரை துறவிக்கு உதாரணமாக கூறுகிறார்கள்.பற்று என்பது அவரது மனத்திலிருந்து நீங்கிவிட்டது.பற்று நீங்கியவர்களால்தான் சமாதிநிலையை அடைய முடியும்.குருதேவர் அவ்வப்போது சமாதி நிலையை அடைந்துவிடுவார்.இது அவரது மனத்தில் எந்த உலகியல் பற்றும் இல்லை என்பதை தெளிவாக காட்டுகிறது
-
2.இனி விசிஷ்டாத்வைத மனநிலையை பார்ப்போம்
-
குருதேவர் மகாவிஷ்ணுவின் அவதாரமாகும். குருதேவரின் தந்தைக்கு கதாதரர்(அதாவது கதையை கையில் தாங்கிய விஷ்ணு) காட்சி காடுத்து நான் உனக்கு மகனாக பிறப்பேன் என்று கூறுவார்.(இந்த சம்பங்களை தனியாக படிக்கவும்)
குருதேவர் விஷ்ணுவின் அவதாரம் என்றால் மகாலெட்சுமி யார்.அவர் பூமியில் பிறக்காமல் போய்விடுவாரா என்ன? இல்லை அவரும் பிறந்தார்.பரவச நிலையில் குருதேவருக்கு இதுபற்றி தெரிந்திருந்தது.ஸ்ரீராமகிருஷ்ணருக்கு திருமணம் முடிப்பதற்காக பெண் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.அப்போது அவர்,ஏன் கண்ட இடங்களில் பெண்தேடி அலைகிறீர்கள்? எனக்காக பிறந்தவன் ஜெயராம்பாடியில் வளர்ந்து வருகிறாள் என்று கூறி சரியான முகவரியையும் அவளது அம்மா,அப்பா பெயர்களையும் கூறினார்.முதலில் குருதேவரின் உறவினர்கள் நம்பவில்லை.சந்தேகத்துடன்தான் சென்று பார்த்தார்கள்.ஆனால் குருதேர் கூறியவைகள் அனைத்தும் சரியாக இருந்தன.இந்த சம்பவத்தை சாரதையில் பெற்றோரிடம் கூறியதும்,அவர்களும் இந்த திருமணத்திற்கு சம்மதித்தார்கள்.
-
இது ஒரு தெய்வீக உறவாகும்.இந்த உலகத்தை காப்பதற்காக அவதரித்தவர்கள் இருவரும்.தனக்கு சம அளவில் சாரதைக்கு சக்தி உண்டு என்பது குருதேவருக்கு தெரியும்.
-
பொதுவாக நமக்கு சமமான மரியாதைக்குரியவர்கள் நீங்கள் என்று அழைப்போம்.நம்மைவிட அறிவிலும்,மற்ற விஷணங்களிலும் தாழ்ந்தவர்களை நீ என்று அழைப்போம். குருதேவரை பல பெரியமனிதர்கள் பார்க்க வருவதுண்டு அவர்களை கருதேவர் நீ என்றே அழைப்பார்.மிகவும் மரியாதைக்குரியவரையே நீங்கள் என்று அழைப்பார். அன்னையை குருதேவர் என்போதுமே நீங்கள் என்றுதான் அழைப்பார்.இது அவள் தனக்கு எந்த விதத்திலும் குறைந்தவள் அல்ல,சமமானவன் என்பதையே காட்டுகிறது. ஒருமுறை வேலைக்காரி என்று நினைத்து தெரியாமல் நீ என்று கூறிவிடுவார்.அதற்காக மிகவும் மனம் வருந்தி சாரதையிடம் அவர் மன்னிப்பு கேட்பார்.விஷ்ணுவும்-லெட்சுமியும் சமபாதி என்கிறது வைணவ சாஸ்திரம்.இவர்கள் வாழ்க்கையும் அப்படித்தான் இருந்தது.
-
தன்னை யாராவது தரக்குறைவாக பேசினால் குருதேவர் பொறுத்துக்கொள்வார்.ஆனால் சாரதையை யாராவது அப்படி பேசினால் உடனேயே அவரை கண்டிப்பார்.அவளை அப்படி பேசாதே! அவன் கோபப்பட்டால் உலகமே தாங்காது என்று கூறி எச்சரிப்பார்.இது குருதேவர் அன்னையை எந்த நோக்கில் பார்த்தார் என்பதை தெளிவாக புரியவைக்கிறது.சில முக்கியமான முடிவுகளை எடுக்கும்போது அன்னையிடம் அவர் கலந்தாலோசிப்பதுண்டு.பின்பு அவள் என்ன கூறுகிறாளோ அதன்படியே செய்வார். தனக்கு எல்லாம் தெரியும்.அவளுக்கு எதுவும் தெரியாது என்ற மனநிலை அவரிடம் இல்லை.தனக்கு தெரியாத பல விஷயங்கள் சாரதைக்கு தெரியும் என்று குருதேவர் தெரிந்து வைத்திருந்தார்.இதனால்தான் முக்கிய முடிவுகளில் அவளிடம் கலந்தாலோசித்தார்
-
இவர்களது வாழ்க்கை உலக மக்களுக்கு பெரிய படிப்பினையாகும். இன்று கணவன் எந்த மனைவியை நீங்கள் என்று அழைப்பதில்லை.பல ஆயிரம் ஆண்டு காலபோக்க இது. மனைவி தன்னைவிட கீழ் என்ற ரீதியிலேயே அவர்கள் பார்கிறார்கள்.தனக்கு தெரிந்ததைவிட அவளுக்கு குறைவாகவே தெரியும் என்ற மனநிலையும்,ஆதிக்க எண்ணமும்தான் இதற்கு காரணம். தத்துவத்தின்படி பார்த்தால் கணவன்-மனைவி இருவரும் சம அளவில் அதிகாரமும்,சக்தியும்,ஆளுமையும் உடையவர்கள்.இதில் கணவன் தன்னை உயர்வானவன் என்று கருதிக்கொள்வது தவறாகவும். அப்படி எந்த கணவனாவது மனைவியை நீங்கள் என்று அழைக்கவோ,சமமான மனநிலையுடன் பழகவோ தயங்குவானானால் அவன் ஆன்மீகத்தில் மட்டுமல்ல உலக விஷயங்களிலும் வெற்றி பெற முடியாது. அவனது வாழ்க்கை தோல்வியிலேயே முடியும்.நமது நாட்டில் பெண் என்றாலே மயக்குபவள்,மயை என்ற போக்கு உள்ளது.இது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய தவறாக கருத்தாகும்.வேத காலத்தில் அப்படி இல்லை.மனைவி இல்லாமல் எந்த சடக்கும் செய்ய முடியாது.பிற்காலத்தில்  சந்நியாசம் மட்டுமே முக்தி அடைய ஒரே வழி என்று போதித்தார்கள்.எனவே சிற்றின்பத்தை அப்படியாவது அனுபவித்துவிட்டு,கடைசியல் அதை அதாவது பெண்ணை விட்டுவிட்டு சென்றுவிட வேண்டும் என்று நினைத்தார்கள்.அதனால் சிற்றின்பத்தை அனுபவிப்பதற்காவே திருமணம்,அதற்காகவே பெண் படைக்கப்பட்டுள்ளாள் என்று நினைத்தார்கள்.இந்த தவறை இந்தியா திருத்திக்கொள்ளவே ஸ்ரீராமகிருஷ்ண அவதாரம் நிகழ்ந்துள்ளது.பெண்ணை வெறுப்பதால் அல்ல,அவளின் உதவியாலேயே இருவரும் சேர்ந்து முக்தி பெற முடியும் என்பது காட்ப்பட்டுள்ளது.இல்லறத்தைவிட்டு செல்லாமல் அதை துறவறமாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்பது வாழ்ந்து காட்டப்பட்டுள்ளது
-
3. இனி துவைத நிலையில் அவரது செயல்பாடுகளை பார்ப்போம்.
-
சாரதாதேவி மற்ற உலகியல் பெண்களைப்போல வாழவில்லை.இன்னும் சொன்னால் எந்த விதமான உலகியல் சுகத்தையும் அனுபவிக்கவில்லை.ஒரு சிறிய அறையில் கஷ்டப்பட்டு வாழ்ந்து வந்தார்.இதை கண்டு வேதனையுற்ற சாரதையின் அன்னை பலமுறை அழுததுண்டு. ஒரு துறவிக்கு எனது பெண்ணை திருமணம் செய்துவைத்துவிட்டேனே. எனது மகள் எந்த சுகத்தையும் அனுபவிக்கவில்லையே என்று வேதனைப்படுவார்.அப்போது அன்னை, தெய்வத்தையே எனது கணவராக அடைந்துள்ளேன்.இந்த வாய்ப்பு சாதாரண பெண்களுக்கு கிடைக்குமா? என்று கூறு ஆறுதல்படுத்துவார்.உண்மையில் அன்னை பேரானந்தத்தில் வாழ்ந்துவந்தாள்.மற்றவர்களால் அதை எப்படி புரிந்துகொள்ள முடியும்? பேரானந்தம் வரும்போது கணவன் மனைவி இருவரும் அதை சமமாக அனுபவிப்பார்கள் என்கிறது யோகசாஸ்திரம்.குருதேவர் எப்போதும் பேரானந்தத்தில் இருந்தார் என்பதை மற்றவர்கள் தெரிந்துகொண்டார்கள்.ஆனால் அன்னையின் பேரானந்தத்தை அவர்கள் கவனிக்கவில்லை.இந்த ஆனந்தத்தின் முன் உலகியல் சுகங்கள் எம்மாத்திரம்? குருதேரின் மறைவுக்கு பிறகு அன்னைக்கு அந்த ஆனந்தம் முழுமையாக கிடைக்கவில்லை.அதை அன்னையே பிற்காலத்தில் கூறியுள்ளார்.அவருடன் வாழ்ந்த காலத்தில் நான் பேரானந்த்தில் மிதந்துகொண்டிருந்தேன் என்று சிஷ்யைகளிடம் கூறுவார்.
-
பொதுவாக மனைவியை கணவன் பல இடங்களுக்கு அழைத்து செல்வதுண்டு,கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு செல்வதுண்டு.ஆனால் குருதேவர் அன்னையுடன் வெளியே செல்லவில்லை.இரண்டுபேரும் சேர்ந்து செல்வதை கண்டால் மக்கள் கேலி செய்வார்கள் என அவர் நினைத்தார்.குருதேவருடன் வெளியே செல்ல வேண்டும் என்ற ஆசை அன்னைக்கு இருந்தது.சாரதையை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் குருதேவர் கவனமாக இருந்தார்,அதனால் அவ்வப்போது வேடிக்கைகள் காட்டி அவளை சிரிக்கவைப்பார்.
-
மனைவி என்ற கடமையிலிருந்து அவர் ஒரு சிறிதும் பின்வாங்கவில்லை.குருதேவருக்கு மாதம் 15 ரூபாய் கோவிலிருந்து சம்பளமாக கிடைத்துவந்தது.அதை அவர் அப்படியே சேர்த்துவைத்தார். குருதேவர் தனக்காக பணத்தை சேர்த்து வைப்பதில்லை என்பது தெரியும்.ஆனால் அன்னைக்காக சேர்த்துவைத்தார்.அந்த பணத்திலிருந்து அன்னைக்கு தேவையான துணிகள்,நகைகள் போன்றவை வாங்கிக்கொடுத்தார்.யாரிடமிருந்தும் நீ ஒரு பைசாக்கூட வாங்கக்கூடாது.அப்படி வாங்கினால் உன் தலையை அவர்களுக்கு கொடுத்தது போலாகும்.உனது சுயமரியாதை குறைந்துவிடும்.அவர்கள் சொல்வதுபோல கேட்க வேண்டியிருக்கும் என்று கூறி அன்னையை எச்சரித்தார்.எதிர்காலத்தில் அன்னை உணவுக்காக கஷ்டப்படக்கூடாது என்று தனக்கு கிடைத்த சம்பளப் பணத்தை சேர்த்துவைத்து.அதை பலராம் போஸ் என்ற பக்தரிடம் கொடுத்தார். தனது மறைவுக்கு பிறகு இதிலிருந்து கிடைக்கும் வட்டியை அவளுக்கு கொடுங்கள் என்று கூறினார். அதன் படியே குருதேவரின் மறைவுக்கு பிறகு,அந்த வட்டிப்பணம் 5 ரூபாயை வைத்துக்கொண்டு அன்னை சாப்பாட்டிற்கு உப்புகூட வாங்க வழியில்லாத நிலையிலும் பிறரின் உதவியை மறுத்து வாழ்ந்தார்.
-
உலகத்தில் மற்றவர்களுடன் பழகும்போது எப்படி பழக வேண்டும் என்பது முதல் கொண்டு.சாதாரண உலகியல் விஷயங்களிலிருந்து மிக உயர்ந்த ஆன்மீக விஷயங்கள்வரை அனைத்தையும் குருதேவர் கற்றுக்கொடுத்தார்.
குருதேவரின் முதல் சீடர் யார் என்று கேட்டால் அது சாரதாதேவிதான்.குரு சீடன் என்ற உறவு துவைத நிலை.அதாவது அன்னையை பொறுத்தவரை ஸ்ரீராமகிருஷ்ணர் கணவன் மட்டுமல்ல குருவும் ஆகும். அவரது பாதத்தில் பணித்து அனைத்தையும் கற்றுக்கொண்டாள் தனக்கு எதுவும் தெரியாது குருதேருக்கு எல்லாம் தெரியும் என்ற மனநிலை அவளிடம் இருந்தது. குருதேரின் விருப்பத்திற்கு மாறாக ஒரு வார்த்தை பேசவோ ஒரு செயல் செய்யவோ இல்லை.அனைத்தையும் அப்படியே ஏற்றுக்கொண்ட ஒரு சரணாகதி.
-
அன்னை சாரதாதேவியின் இந்த மனப்பான்மை பெண்களுக்கு நல்ல பாடமாக அமையும்.ஏழ்மைநிலையிலும் அதை ஏற்றுக்கொண்டு வாழ்தல்,எப்போதும் மகிழ்ச்சியாக இருந்தல்,கணவனை குருவாகவும்,தெய்வமாகவும் மதித்தல்.கணவன் சொல்படி நடத்தல் என்று எத்தனையோ விஷயங்களை பெண்கள் கற்றுக்கொள்ள முடியும்.
-
குருதேவர் விரும்பினால் இன்னும் அவரைப்பற்றி ஏராளம் சொல்வேன்...
-
சுவாமி வித்யானந்தர்
-


No comments:

Post a Comment