சுவாமி விவேகானந்தரின் வீரமொழிகள்-2
-
வாழ்க்கை என்பது ஒரு போர்க்களம் ஒரு போராட்டம். இதை மக்கள் எதிர்கொள்வதற்கும், அதில் வெற்றி பெறுவதற்கும் உரிய தகுதியைத் தருவதாகக் கல்வி இருக்க வேண்டும்.
-
நீ ஐந்தே ஐந்து உயர்ந்த கருத்துகளைக் கிரகித்துக்கொண்டு, அவற்றை நீ உன்னுடைய வாழ்க்கையிலும் நடத்தையிலும் ஊடுருவி நிற்கச் செய்தால் ஒரு பெரிய புத்தகசாலை முழுவதையும் மனப்பாடம் செய்திருப்பவனைவிட நீயே அதிகம் கல்வி கற்றவன் ஆவாய்.
-
என்னைப் பொறுத்த வரையில் கல்வியின் சாரம் மனஒருமைப்பாடே தவிர, தகவல்களைச் சேகரிப்பதல்ல. நான் மீண்டும் படிக்க நேர்ந்தால், ஒருபோதும் தகவல்களைச் கேரிக்கமாட்டேன். முதலில் மன ஒருமைப்பாட்டையும் பற்றின்மையையும் வளர்த்துக்கொண்டு, பின்னர் அந்தப் பரிபூரணமான கருவியால் நான் விரும்பும்போது தகவல்களைச் சேகரித்துக்கொள்வேன். குழந்தையை வளர்க்கும்போது இந்த இரு ஆற்றல்களையும் அவர்களிடம் வளர்க்க வேண்டும்.
-
ஆன்மிக ஞானத்தைப் போதித்தால், அதன்பின்னர் உலகஅறிவும் நீங்கள் விரும்புகின்ற மற்ற எல்லா அறிவும் உங்களைத் தொடர்ந்து வரும். ஆனால் மதத்தை விலக்கிவிட்டு வேறு எந்த அறிவைப் பெற நீங்கள் முயன்றாலும் இந்தியாவில் உங்கள் முயற்சி வீண் என்பதைத் தெளிவாகச் சொல்லிக்கொள்கிறேன்.
-
தமக்குத்தாமே உதவிக்கொள்ளுமாறு மக்களுக்குப் பயிற்சி தராவிட்டால், உலகின் செல்வம் அனைத்தையும் சேர்த்தாலும் ஒரு சிறிய இந்தியக் கிராமத்திற்குக்கூட உதவி செய்ய முடியாது.
-
கல்வியும், அறவாழ்க்கையில் ஈடுபாடும் கொண்ட பெண்கள் உள்ள குடும்பங்களில்தான் மாமனிதர்கள் பிறப்பார்கள்.
கல்வியாக இருக்கட்டும் அல்லது, வேறு எதுவாக இருக்கட்டும், ஆன்மிகத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை என்றால் அதில் சில குறைபாடுகள் நேர்வது இயல்புதான். இப்போது ஆன்மிகத்தை மையமாகக்கொண்டே பெண் கல்வியைப் பரப்ப வேண்டும்.
-
தற்போது இந்தியாவில் மகத்தான மத மறுமலர்ச்சி தோன்றியுள்ளது. இதில் பெருமை இருப்பதைப் போலவே ஆபத்தும் உள்ளது.ஏனெனில் சில வேளைகளில் இந்த மறுமலர்ச்சி கொள்கைவெறியை வளர்க்கிறது, சில நேரங்களில் அந்த வெறி எல்லை கடந்து போய்விடுகிறது. மறுமலர்ச்சிக்குக் காரணமானவர்கள் கூட அதைக் கட்டுப்படுத்த முடியாத நிலை வருகிறது. எனவே எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
-
நாம் மீண்டும் எழுச்சி பெற வேண்டுமானால், சாதாரண மக்களிடையே ஆன்மீகத்தைப் பரப்ப வேண்டும்.
-
நாம் ஒவ்வொருவரும் மகத்தானவர்களாக இருப்போம். அப்பொழுது நம் உதடுகளிலிருந்து வெளிவருகின்ற ஒவ்வொரு வார்த்தையும் இணையற்ற பாதுகாப்பை அள்ளி வழங்குவதாக இருக்கும்.
-
நமது புனிதமான தாய் திருநாடு ஆன்மீகமும் தத்துவமும் தழைத்த நாடு, ஆன்மீகச் செம்மல்களைப் பெற்ற நாடு, துறவின் உன்னத நாடு. இங்கு, இங்கு மட்டுமே மிகப் பழங்காலத்திலிருந்து மிக நவீன காலம் வரை, வாழ்வின் மிகவுயர்ந்த லட்சியம் மனிதனுக்குக் காட்டப்பட்டுள்ளது.
----
உலகம் முழுவதன் கண்களும் ஆன்மீக உணவிற்காக இப்போது இந்தியாவை நோக்கித் திரும்பியுள்ளன; எல்லா இனங்களுக்கும் இந்தியா அதைத் தந்தாக வேண்டும். மனித குலத்திற்கான மிகச் சிறந்த லட்சியம் இங்கு மட்டுமே உள்ளது.
----
நம் இறைவன் எல்லா மதங்களின் இறைவன். இந்தக் கருத்து இந்தியாவுக்கு மட்டுமே சொந்தமானது, உலகின் வேறு சாஸ்திரங்கள் எதிலாவது இத்தைகைய கருத்தைக் காட்ட முடியுமா என்று உங்களுக்குச் சவால் விடுகிறேன்.
---
மனித வாழ்வின் அடிப்படைப் பிரச்சினைகளில் உலக மக்களுக்கு ஒளி காட்டுகின்ற தார்மீகப் பொறுப்பு பாரதத் தாயின் பிள்ளைகளிடம் உள்ளது. அதற்குத் தகுதி படைத்தவர்களாகத் தங்களை ஆக்கிக் கொள்ள வேண்டிய கடமை அவர்களுக்கு உள்ளது.
-
நம் நன்மையை மட்டுமே நினைக்கின்ற சுயநலம், பாவங்கள். அனைத்திலும் முதற்பாவமாகும். நானே முதலில் உண்பேன் . மற்றவர்களைவிட எனக்கு அதிகமான பணம் வேண்டும் , எல்லாம் எனக்கே வேண்டும் மற்றவர்களுக்கு முன்னால் நான் சொர்க்கத்தை அடைய வேண்டும் என்றெல்லாம் நினைப்பவன் சுயநலவாதி.
-
சுயநலம் கொண்டவன் எல்லா கோயில்களையும் வழிபட்டிருந்தாலும், புண்ணியத் தலங்கள் அனைத்தையும் பார்த்திருந்ததாலும் சிறத்தைதயப்போல் தன் உடம்பு முழுவதிலும் மதச் சின்னங்களைத் தீட்டிக் கொண்டிருந்தாலுமும் அவன் சிவ பெருமானிடமிருந்து விலகியே இருக்கிறான்
-
லௌகீக அடிப்படையில் ஆகட்டும், அறிவு அல்லது ஆன்மீக அடிப்படையில் ஆகட்டும், இறைவன் பாரபட்சமின்றி, ஒன்றில்லாவிட்டால் மற்றொன்றை ஒவ்வொருவருக்கும் அளித்து எல்லோரையும் சமமாகவே வைத்திருக்கிறார். எனவே நாம் தான் உலகத்தைக் காப்பவர்கள் என்று நினைக்கத் தேவையில்லை.
------------
விவேகானந்தர் விஜயம்
No comments:
Post a Comment