Saturday, 30 June 2018

யாரும் முற்றிலும் நல்லவனும் அல்ல முற்றிலும் கெட்டவனும் அல்ல.தொடர்ந்த பயணத்தின் ஒரு பகுதியில் நாம் நிற்கிறோம்.


யாரும் முற்றிலும் நல்லவனும் அல்ல முற்றிலும் கெட்டவனும் அல்ல.தொடர்ந்த பயணத்தின் ஒரு பகுதியில் நாம் நிற்கிறோம்.
-
சிலர் தங்களை நல்லவர்கள் என்று நினைத்துக்கொள்கிறார்கள்.சிலர் கெட்டவர்கள் என்று நினைத்துக்கொள்கிறார்கள்.ஆனால் உண்மையில் யாரும் நல்லவர்களும் அல்ல கெட்டவர்களும் அல்ல என்கிறது தத்துவம்.
-
மஹத் அதாவது பிரபஞ்ச மனத்துடன் நமது எல்லோருடைய மனங்களும் இணைக்கப்பட்டுள்ளது.இந்த பிரபஞ்சமனத்தில் கோடிக்கணக்கான ஆண்டுகளுடைய நினைவுகள்,கோடிக்கணக்கான உயிர்களுடைய வாழ்க்கை முறைகள் பதியப்பட்டிருக்கின்றன சர்வர்.ஹார்ட் டிஸ்க் போன்றது.இதில் ஒரு பகுதி நமது மூளையோடு இணைக்கப்பட்டுள்ளது.நாம் முன்னேற முன்னேற மஹத்தை பற்றிய புரிதல் விரிவாகிக்கொண்டே செல்கிறது.
-
சர்வரில் எல்லாமே இருக்கும்.எதை தேடுகிறோமே அதை தெரிந்துகொள்ளலாம்.அதைப்போல மஹத்தில் எல்லாமே உள்ளது.எதைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமோ அதை தெரிந்துகொள்ளலாம்.இப்போது முக்கிய விஷயத்திற்கு வருவோம்
-
இந்த மஹத்-தான் நம்முடைய உண்மையான மூளை.தற்போது நம்மிடம் உள்ள மூளை அந்த மஹத்தின் ஒரு பகுதிதான்.சர்வரில் இணைக்கப்பட்டுள்ள எல்லா கம்பியூட்டருக்கும் ஒரு ஹார்ட் டிஸ்க் இருக்கும்.அது சர்வரில் உள்ள தகவலைப்பெற்றுவர உதவுகிறது.அதேபோலதான் நமது சிறிய மூளையும் சிறிய ஹார்ட் டிஸ்க்.ஆனால் மஹத்தான் நமது உண்மையான மூளை.அதில் உலகத்தில் உள்ள அனைத்து கெட்ட விஷயங்களும் பதிவாகியிருக்கின்றன.அதேபோல உலகத்தில் உள்ள எல்லா நல்ல விஷயங்களும் பதிவாகியுள்ளன.
-
நான் முற்றிலும் நல்லவன் என்று ஒருவன் சொல்வது உண்மையல்ல.அவன் உண்மையை அறியாதவன்.அவனது ஆள்மனத்தில் அனைத்து தீய எண்ணங்களும் வெளிப்படாமல் ஒளிந்துகொண்டுள்ளது.அவைகளை பற்றி இவனுக்கு தெரியாததால் அவன் தன்னை நல்லவன் என நினைக்கிறான்.உரிய சந்தர்பமும்,சூழ்நிலையும் அமையும்போது அவைகள் உள்ளிருந்து வெளியே கிளம்பும்.தீயவன் ஒருவனின் தொடர்பு ஏற்பட்டால் எப்படிப்பட்ட நல்லவனாக இருந்தாலும் அவனுக்குள்ளே உறங்கிக்கொண்டிருந்த தீயஇயல்புகள் அவனை அறியாமலேயே வெளிவரும்.அதனால்தான் நற்புண்புகளை நிலைபெறச்செய்ய நல்ல சூழ்நிலைகளில் வாழவேண்டும் என்று சொல்கிறார்கள்
-
மஹத்தை பற்றிய புரிதலை தெரிந்துகொள்ள வேண்டும். மஹத்தில் உள்ள நினைவுகளை முழுவதும் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை.ஆனால் அதைப்பற்றிய பொதுவான புரிதல் இருக்க வேண்டும்.
-
இந்த மஹத் மூன்று பகுதிகளாக பிரிந்து செயல்படுகிறது.
-
1.தனாக நிகழும் நிகழ்வுகள் அல்லது இயற்கை என்று சொல்கிறோமே அது.உதாரணமாக உடலின் உள்ளே நடக்கும் நிகழ்வுகளை நாம் அறிவதில்லை.ஆனால் அவைகள் மூளையின் கட்டளைப்படிதான் செயல்படுகிறன்றன.அந்த மூளைக்கு நாம் கட்டளையிடவில்லை.மூளை நமது கட்டுப்பாட்டில்தான் உள்ளது.ஆனால் நம்மிடம் உத்தரவு வாங்காமல் தானாகவே அது உள்உறுப்புகளுக்கு கட்டளைகளை பிறப்பிக்கிறது .இந்த உலகத்தில் பெரும்பாலும் தானாக நிகழ்வதாகவே இருக்கிறது.ஆனால் இவைகள் அனைத்திற்கும் பின்னால் மூளையின் செயல்பாடுகள் உள்ளன.அவைகள் மஹத்தில் இணைக்கப்பட்டுள்ளன.
-
2.பகுத்தறிவு.-அல்லது தெரிந்து செய்யும் செயல்கள்.கை,கால்கள்,கண்கள்,காதுகள் போன்ற உறுப்புகள் நமது கட்டுப்பாட்டில் உள்ளன.எதை செய்ய வேண்டும்.எதை கேட்கவேண்டும் எல்லாம் நமது முடிவைப்பொறுத்து உள்ளது.நாம் மூளைக்கு கட்டளையிடுகிறோம்.அதன்படி மூளை உடல் உறுப்புகளை இயக்குகிறது.இந்த பகுத்தறிவு இயற்கையைவிட பெரியது.அந்த இயற்கையை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது
-
3. உணர்வு கடந்த நிலை-சிலர் தங்கள் உடலைவிட்டு உயிரை வெளியே கொண்டு வருகிறார்கள்.அப்போதும் அவர்கள் செயல்புரிகிறார்கள்.அதற்கும் ஒரு மூளைவேண்டும்.ஆனால் உடல் சவம்போல கிடக்கிறது.அப்படியானால் அந்த மூளை எங்கே உள்ளது? உடலைவிட்டு வெளியே வரும் உயிருக்கும் ஒரு உடல் உள்ளது.அது சூட்சும உடல்.அந்த உடலில் சூட்சுமமாக மூளை உள்ளது.அது பிரபஞ்சத்தில் உள்ள ரகசியங்களை அறியக்கூடியது.வானுலக ரகசிங்களை அந்த மூளை தெரிந்துகொள்கிறது.
-
இவ்வாறு மஹத் என்ற பிரபஞ்ச மனத்துடன் நாம் எல்லோரும் தொடர்பில் இருப்பதால்,நாம் தற்போது என்ன நிலையில் இருக்கிறோமோ அது முடிவான நிலை அல்ல.மேலும் மேலும் முன்னேறி செல்லாம்
-
சுவாமி வித்யானந்தர்(1-7-2018)
-

No comments:

Post a Comment