Thursday, 5 July 2018

சந்நியாச மார்க்கத்தில் செல்பவர்கள் சிலர் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.அவர்களுக்கு மறுபிறப்பு உண்டா இல்லையா?


சந்நியாச மார்க்கத்தில் செல்பவர்கள் சிலர் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.அவர்களுக்கு மறுபிறப்பு உண்டா இல்லையா?
-
இந்த கட்டுரை எல்லோருக்குமானது அல்ல. குறிப்பிட்ட ஒருசிலருக்காக மட்டும்
-
சிலருக்கு சிறுவயதிலேயே பல்வேறு ஏமாற்றங்களும்,துன்பங்களும் தொடர்ந்து வந்துவிடுகிறது.அதேநேரத்தில் இறைபக்தியும் அசைக்க முடியாமல் இருக்கும்.அவர்களிடம் எளிய மனப்பான்மை இருப்பதால் பலர் ஏமாற்றிவிடுவார்கள்.முக்கியமாக அன்பு செலுத்தி அது கிடைக்காமல்போய்விடும்.விரக்தியின் விளிம்பில் இருக்கும் நேரத்தில் திடீரென ஒருநாள் ஆன்மாவின் கணநேர காட்சி கிடைத்துவிடுகிறது.
-
இது பல சாதனைகளை செய்து கிடைத்தது அல்ல.முற்பிறவின் பலன்தான் இதற்கு காரணம்.இந்த திடீர் ஞானம் கிடைத்தபிறகுதான் அவர்கள் இதைப்பற்றி தெரிந்துகொள்ள தொடங்குவார்கள்.படிப்படியாக இந்த உலகம் என்பது மாயை ஒரு மனமயக்கம் உண்மை இல்லாதது என்பது தெளிவாக தெரிந்துவிடும்.எனவே இந்த உலகத்தில் வாழ்ந்து மற்றவர்களுக்கு உழைத்து துன்பப்படுவது எல்லாம் வீண் என்பது தெரிந்துவிடும்.சொந்தம்,பந்தம்,ஊர்,உலகம் எதிலும் பற்று இல்லாதநிலை ஏற்பட்டுவிடும்.உடல்மீதுகூட பற்று இருக்காது.
-
மனம் எப்போதும் ஆன்மாவைப்பற்றி சிந்தித்துக்கொண்டிருப்பதால் உலகியல் மனிதர்களை பார்ப்பதோ அவர்களிடம் பேசுவதோ அறவே பிடிக்காது.மற்றவர்கள் இவர்களிடம் வர தயங்குவார்கள்.இவர்கள் மற்றவர்களின் கண்களுக்கு அகங்காரம் பிடித்தவர்,திமிர்பிடித்தவர் என்று தோன்றும். நெஞ்சத்தில் துளிகூட அன்பு இல்லாதவர் என்று மற்றவர்கள் நினைப்பார்கள்.நிமிர்ந்த பார்வையும்.நேர்கொண்ட நடையும்,தேவையான பேச்சும் மட்டும் அவர்களிடம் இருக்கும்.
-
இந்த நிலையை அடைந்த பின்னவர் இந்த உலகத்தில் வாழவே பிடிக்காது. மனத்தில் உலகியல் சிந்தனைகள் எழாது.எதிர்காலத்தைப்பற்றி மனம் சிந்திக்காது.இந்த உலகம் இருந்தால் என்ன அழிந்தால் என்ன என்று தோன்றும்.வைராக்கியம் தீவிரமாக இருக்கும்.மரணத்தை வரவேற்க தயாராக இருப்பார்கள்.தன் உடலை யாராவது கொன்றால்கூட அது நல்லதுதான் என்று தோன்றும். ஒரு புலிவந்து உடலை கொன்றால் நல்லது என்று தோன்றும்.ஒவ்வொரு நொடியும் ஒரு யுகம்போல கழியும்.இந்த நிலையில் மனம் வேலை செய்யாது.ஒருவித ஆனந்த போதைநிலை அவ்வப்போது கிடைக்கும்.
-
அதன் பிறகு அந்த நிலையிலிருந்து வீழ்ச்சி ஏற்படும்.மனத்தின் உள்ளிருந்து தீய எண்ணங்கள் எட்டிப்பார்க்கும்.இனி தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழி இல்லை என்ற நிலைவரும்.அவ்வாறு தற்கொலை செய்துகொள்வதை பற்றிய பயம் இருக்காது.பெற்றோர்கள் அழுவார்களே என்ற ஒரே ஒரு கவலை மட்டுமே அவர்களை தற்கொலை செய்யவிடாமல் தடுத்துக்கொண்டிருக்கும்.
-
இந்த நிலையில் ஒருவர் தற்கொலை செய்துகொண்டால் முக்தி பெறுவாரா? இல்லை. கண்டிப்பாக முக்தி கிடைக்காது.மறுபிறப்பு ஏற்படும்.அதை விளக்குகிறேன்.
-
1.இந்த உடல் இயங்குவதற்கு ஒரு காரணம் இருக்கிறது.அதற்கு சில கர்மங்கள் பாக்கி இருக்கிறது.அந்த கர்மங்களை அனுபவித்தபின் மரத்திலிருந்து பழுத்த இலை தானாக விழுவதுபோல.உடல் தானாக விழுந்துவிடும். அதற்கு முன்பு நாமாக இதை கொன்றால்,பாக்கியுள்ள கர்மங்களை அனுபவிக்க இன்னும் ஒருமுறை பிறந்துவரும்
2.உயிர் உடலைவிட்டு வெளியேறும்முன் மூச்சு முற்றிலும் அடங்கி நிற்க வேண்டும்.உடல் அசைவற்று இருக்க வேண்டும்.இதயம் இயங்காமல் நிற்க வேண்டும்.அப்போதுதான் மறுபிறப்பு இல்லாமல்போகும்.ஆனால் தற்கொலை செய்யும்போது உடலில் இயக்கம் நடக்கிறது.அதனால் மூச்சு இயங்குகிறது.அந்த நிலையில் உடலைவிட்டால் மூச்சு அதாவது பிராணன் இன்னொரு உடலை உற்பத்தி செய்யும்.
3.வாழ்க்கையில் அனைத்து ஆசைகளும் நிறைவேறப் பெற்றவர்கள் மட்டுமே முக்தி அடைய முடியும்.ஆனால் இவர்களுக்குள் வெளிவராத சில ஆசைகள் புதைந்திருக்கும்.அது தீய ஆசைகளாகக்கூட இருக்கலாம்.அது அதற்கு உரிய காலத்தில்தான் வெளிப்படும்.அதுவரை வாழ்ந்துதான் அதைக் கடக்க வேண்டும்
4.நான் ஆன்மா என்ற ஞானம் இன்னும் பூர்தியாகவில்லை.பூர்தியாகியிருந்தால் எல்லையற்ற ஆனந்தம் கிடைத்திருக்கும்.அப்போது உடல் ஒரு தொந்தரவாக தெரியாது.உலகம் ஒரு தொந்தரவாக தெரியாது.முகம் பிரகாசமாக இருக்கும்.மனிதர்கள் நம்மை நோக்கி ஓடிவருவார்கள்.
5.அகங்காரம் இன்னும் உள்ளது. குழந்தையைபோன்ற நிலையை அடைந்தால்தான் அகங்காரம் நீங்கும்.அந்த நிலையை அடையும்போது வெளி உலகில் அனைத்தும் இறைவனாகவே தெரியும்
-
.ஸ்ரீராமகிருஷ்ணரின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை பார்ப்போர்.ஸ்ரீராமகிருஷ்ணர் தீவிர சாதனைகள் செய்துகொண்டிருந்தபோது அவரைப்போல இன்னொருவர் அடிக்கடி அவருடன் சேர்ந்து சாதனைகள் செய்வார்.ஒரு காலகட்டத்தில் அவருக்கு தீவிர வைராக்கியம் வந்தது.உலகத்தையும் உலக மக்களையும் பிடிக்கவில்லை எனவே இந்த உலகத்தைவிட்டு செல்கிறேன் என்று கூறிவிட்டு சென்றுவிடுவார்.அதன் பிறகு அவர் தற்கொலை செய்துகொண்டதாக ஸ்ரீராமகிருஷ்ணர் கேள்விப்பட்டு வருந்துவார்.தானும் அவ்வாறு இறந்துவிடுவோமோ என்று பயப்படுவார்.பல வருடங்கள் கழித்த பிறகு கோபால் என்று ஒருவன் ஸ்ரீராமகிருஷ்ணரை காண வருவான்.அவனைப்பார்த்தவுடன் அப்போது தற்கொலை செய்து கொண்டவன் இவன்தான் என்று கண்டுகொள்வார்.
-
இதுபோல பல சம்பங்கள் அவரது வாழ்க்கையில் நடந்துள்ளன.
-
முழுஞானம் வந்துவிட்டதா என்பதை அறிய ஒரு சோதனை இதோ. இரண்டு நாட்கள் எதுவும் சாப்பிடாமல் இருங்கள் அப்போது குண்டலி சக்தி புருவமத்திக்கு வருகிறதா என்று பாருங்கள்.அப்படி வந்தால் முழுஞானம் வந்துவிட்டது என்று அர்த்தம்.இல்லாவிட்டால் இன்னும் கடக்க வேண்டிய தூரம் பாதி உள்ளது.பொறுமையாக கடந்துசெல்லுங்கள்.
-
ஆகவே உங்கள் நண்பர்கள் யாராவது இந்த நிலையில் இருந்தால் இந்த கட்டுரையை அவர்களுக்கு படித்து காட்டுங்கள்.அவர்கள் அந்த நிலையை கடந்துசெல்ல உதவுங்கள்.
இவைகள் எனது சொந்த அனுபவத்தின் வெளிப்பாடுகள்....
-
சுவாமி வித்யானந்தர் (5-7-2018)
-

No comments:

Post a Comment