Wednesday, 4 July 2018

காசியில் இறப்பவர்களுக்கு சிவபெருமானும்-பார்வதிதேவியும் எப்படி முக்தி அளிக்கிறார்கள் என்பதை ஸ்ரீராமகிருஷ்ணர் தெய்வீக காட்சியில் கண்டார்



காசியில் இறப்பவர்களுக்கு சிவபெருமானும்-பார்வதிதேவியும் எப்படி முக்தி அளிக்கிறார்கள் என்பதை ஸ்ரீராமகிருஷ்ணர் தெய்வீக காட்சியில் கண்டார்.அந்த அனுபவத்தை விளக்குகிறார்.
-
குருதேவர் காசிக்கு சென்றபோது அங்குள்ள மணிகர்ணிக்கை(பிணங்களை எரிக்கும் இடம்) முதலான ஐந்து புனித இடங்களைப் படகில் சென்று தரிசிப்பது வழக்கம்.அவருடன் மதுர்பாபுவும் செல்வது வழக்கம்.மணிகர்ணிகையின் அருகில்தான் காசியின் முக்கிய சுடுகாடு உள்ளது.குருதேவர் சென்ற படகு மணிகர்ணிகைக்கு அருகே சென்ற போது அந்த சுடுகாடு,சிதையிலிருந்து எழுந்த புகையால் மூடப்பட்டதுபோலிருந்தது.
-
உணர்வு மயமாக இருந்த குருதேவர் அந்த பக்கம் பார்த்ததுமே ஆனந்த பரவசநிலையை அடைந்தார்.அவருக்கு மயிர்க் கூச்செறிந்தது.திடீரென எழுந்து படகின் ஓரத்திற்கு ஓடினார்.ஓடியவர்.ஓடியவர் அங்கேயே அசைவற்று நின்று சமாதியில் மூழ்கிவிட்டார்.எங்கே அவர் கங்கையில் விழுந்துவிடுவாரோ என்று அஞ்சிய படகோட்டியும் மதுரின் சேவகனும் அவரைப்பிடித்து கொள்வதற்காக ஓடினர்.ஆனால் யாரும் குருதேவரை பிடித்துக்கொள்ள வேண்டிய தேவை ஏற்படவில்லை.குருதேவர் அப்படியே சிறிதுநேரம் அசைவற்று நின்றுகொண்டிருந்தார்.அவரது திருமுகத்தில் அரும்பிய தெய்வீகப் புன்னகையும்,அற்புதப்பேரொளியும் அந்த இடம் முழுவதையுமே ஒளிவெள்ளத்தில் ஆழ்த்தியது
-
அதன்பிறகு சாதாரண நிலைக்கு வந்தார்.குருதேவர் தாம் கண்ட அற்புதக் காட்சியைப்பற்றி மதுரிடமும்,பிறரிடமும் அப்போது பின்வருமாறு கூறினார்.“உயரமான ஒரு வெண்ணிற மனிதர் மஞ்சள்நிற சடைமுடியுடன் கம்பீரமாக நடந்து,அங்கே எரிந்துகொண்டிருந்த சிதைகள் ஒவ்வொன்றின் அருகிலும் சென்றார்.அந்த உயிரை எழுப்பினார்.அதன் செவியில் தாரக பிரம்ம மந்திரத்தை ஓதினார்! சர்வ வல்லமை பொருந்திய மகாசக்தி,மகாகாளியின் உருவத்தில் சிதையின் மறுபக்கத்தில் அமர்ந்து,அந்த உயிர்களைப் பிணைத்திருக்கும் தூல,சூட்சும,காரண சம்ஸ்காரவடிவ பந்தங்களை எல்லாம் நீக்கினாள்.தன் கைகளினாலேயே முக்தியின் வாசலைத் திறந்து, அந்த உயிர்களை அகண்ட சச்சிதானந்தப் பொருளில் ஒன்றச் செய்தாள்.காலங்காலமாக யோகமும் தவமும் செய்து அடையக்கூடிய அத்வைத அனுபவத்தின் பேரானந்தத்தை ஸ்ரீவிசுவநாதர் இவ்வாறு அந்த உயிர்களுக்கு அங்கேயே அப்போதே வழங்கியதை நான் கண்டேன்.” என்றார்
-
மதுர்பாபுவுடன் இருந்த பண்டிதர்கள் குருதேவரின் தெய்வீகக் காட்சியைப் பற்றிக் கேள்விப்பட்டு இப்படி கூறினார்கள்.“இங்கே இறப்பவர்களுக்கு ஸ்ரீவிசுவநாதர் முக்தி அளிப்பதாக காசி கண்டத்தில் பொதுவாக சொல்லப்பட்டிருக்கிறது.ஆனால் அவர் எவ்வாறு இதனைச் செய்கிறார் என்பதை விளக்கமாகக் கூறவில்லை.உங்கள் காட்சியிலிருந்து அதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது.உங்கள் காட்சி சாஸ்திரங்கள் கூறியவற்றை மிஞ்சிவிட்டது” என்றனர்.
-
குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணரின் வாழ்க்கை வரலாறு நூலிலிருந்து...பக்கம்2-361
-
சுவாமி வித்யானந்தர்

No comments:

Post a Comment