Thursday, 26 July 2018

பீபீ நாச்சியார்

பீபீ நாச்சியார்
-
ராமானுஜர் திருநாராயணபுரத்தில் பகவான் மஹாவிஷ்ணுவின் பூஜைகளை முடித்துவிட்டு ஒருநாள் அயர்ந்து உறங்கினார். அப்போது மஹாவிஷ்ணு, அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த ராமானுஜரின் கனவில் தோன்றினார். ராமானுஜா! உன் தொண்டில் நான் மகிழ்ந்தேன். ஆனால், எளிய பக்தர்களும் என்னைக் காண, டில்லி பாதுஷாவிடம் உள்ள என் உற்சவ விக்கிரகமான செல்வப்பிள்ளையைக் கொண்டு வா என்று கூறினார். ராமானுஜர் இரண்டு மாதங்கள் பயணம் செய்து டில்லி அரண்மனையை அடைந்தார். அவரது திருமேனி ஒளியையும் அறிவையும் கண்டு மகிழ்ந்த பாதுஷா, அவர் வந்த காரணத்தை வினவினார். அரசே! நான் செல்வப்பிள்ளையை எடுத்துச் செல்ல வந்துள்ளேன் என்று ராமானுஜர் கூற,
-
மன்னர், அப்படியே ஆகட்டும்! என்றார். எவ்வளவு தேடியும் செல்வப்பிள்ளையின் விக்கிரகம் கிடைக்கவில்லை. ராமானுஜர் கண்களில் நீர் மல்கக் கைகளைக் கூப்பியபடி வணங்கினார். ராமப்ரியரே! என் செல்வப்பிள்ளையே! எங்கிருக்கிறீர்? வாருங்கள்! என்று மனமுருகி வேண்டினார். அரசகுமாரியின் பெயர் பீபீ லகிமார். அவள் செல்வப் பிள்ளையை தனது மஞ்சத்தில் வைத்து அன்புடன் பூஜித்து வந்தாள். ராமானுஜர் அழைத்தபோது அவள் தனது அறையில் இல்லை. அந்த நேரத்தில் ராமானுஜரின் அழைப்பிற்கு இணங்க செல்வப்பிள்ளை மஞ்சத்திலிருந்து கீழிறங்கி அவருடன் சென்றது. சிலையை மீண்டும் பெற்றுத்தர வேண்டும் என்று அரசகுமாரி பாதுஷாவிடம் கேட்பாள் என்பதை உணர்ந்த ராமானுஜர். உடன் வந்த சீடர்களுடன், வாருங்கள்! அரசனின் ஆட்கள் நம்மைத் தேட வரும் முன், நாம் இந்த நாட்டை விட்டுச் சென்றுவிடவேண்டும் என்று கூறினார் ராமானுஜர்.
-
அவர்கள் சென்ற வழியில் புலையர்கள் இருந்தனர். சிலையுடன் வரும் ராமானுஜரிடம் அவர்கள் கைகூப்பி வணங்கி நின்றனர். ஐயா! இது என்ன கோயில் சிலையா? நாங்க இதை இந்த நாட்டின் எல்லை வரை தூக்கி வருகிறோம். கொடுங்கள் என்று கேட்டனர் ராமானுஜரிடம். ராமானுஜரோ, ஆஹா! என்னே கருணை! எல்லாம் பகவான் நாராயணரின் விளையாட்டு! சரி, பத்திரமாக எடுத்து வாருங்கள்! என்று கூறினார். நாட்டின் எல்லையைக் கடந்தும் தீண்டத்தகாதவர்கள் என்று கருதப்பட்ட அந்த புலையர்களிடமிருந்து சிலையை பெற்ற ராமானுஜர் அவர்களுக்கு நன்றி கூறினார். தென்னாட்டில் மேல்கோட்டையில் அவர்கள் ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட மூன்று நாட்களுக்கு செல்வப்பிள்ளையைக் கோயிலினுள் சென்று தரிசிக்கலாம் என்றும் ராமானுஜர் ஆசி கூறினார். அது இன்றும் தொடர்கிறது. நாராயணரின் சிலை காணாமல் போனதை அறிந்த பீபீ லகிமார் தன் தந்தையிடம் கூறலானார். தந்தையே! அந்தச் சிலை எனக்கு வேண்டும்! அது இல்லாமல் என்னால் உயிர் வாழ முடியாது! என்று அழுதுக்கொண்டே புலம்பினார். உடனே மன்னர், யாரங்கே! உடனே சென்று அந்தச் சிலையை மீட்டு வாருங்கள்! என்று கட்டளையிட்டார் சேவகர்களுக்கு.
-
அப்படியே செய்கிறோம், ஹுஸூர்! என்று தலைகுனிந்து வணங்கி சென்றனர். சிலையைத் தேடி அரசகுமாரியும் காட்டிற்கு சென்றாள். வீரர்களும் பணிப்பெண்களும் அவளுடன் புறப்பட்டனர்... மற்றொரு நாட்டின் இளவரசனான குபேர் பீபீ லகிமாரை விரும்பினான். ஆனால் அவள் விக்கிரகத்தைத் தேடிச் செல்வதை அறிந்த குபேர், அவளைப் பின்தொடர்ந்தான். பீபீ லகிமார் உடன் சென்ற பணிப்பெண்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டனர். இவளுக்கு என்ன ஆயிற்று? ஒரு பொம்மைக்காக இப்படி அழுகிறாளே! என்று. டோலியில் உள்ள பீபீ லகிமா, நாராயணா! நீ எங்கு இருக்கிறாய்! எனக்கு உனது காட்சியைக் கொடு! என்று மனதுக்குள் வேண்டிக்கொண்டாள். ஒருநாள் சிப்பாய்களுக்குத் தெரியாமல் பீபீ லகிமார் நாராயணரைத் தேடி ஒரு காட்டுப் பகுதிக்களுள் சென்றாள். இளவரசன் குபேர் அவளைப் பின் தொடர்ந்தான்.  நாராயணா! உங்களைக் காணாது தவிக்கிறேனே! எங்கு போய்விட்டீர்கள், ஹுஸூர்? என்று புலம்பிக்கொண்டே சென்றாள்.
-
அரசகுமாரியின் மனநிலையை அறிந்த குபேருக்கு மனம் மாறியது. அவன் பீபீ லகிமாருக்குப் பணிவிடைகள் செய்தான். குபேர் தரும் கனிகளை அவள் உண்டாள். பகல் முழுவதும் விக்கிரகத்தைத் தேடி நடந்தாள். இரவில் ஓய்வெடுத்தாள். அம்மணி! பழங்களைச் சாப்பிடுங்கள்! என்று குபேர் கொடுக்க. பீபீ லகிமாவும் எல்லாம் நாராயணரின் பிரசாதம்! என்று வாங்கி சாப்பிட்டாள். இப்படியே, நாட்கள் நகர்ந்தன. இறுதியில் அவர்கள் இருவரும் மேல்கோட்டையை அடைந்தனர். ஹுஸூர்! என்னைத் தனியாக விட்டுச் செல்ல உங்களுக்கு எப்படி மனம் வந்தது? உங்களை மறுபடியும் கண்டு கொண்டேன். இனி உங்களைப் பிரிய மாட்டேன்! என்று கண்களில் கண்ணீர் மல்க வேண்டிக்கொண்டாள். ராமானுஜர் முஸ்லீம் அரசகுமாரியின் பக்தியைக் கண்டு, அம்மா! உனது பக்தியைக் கண்டு மகிழ்ந்தேன். உள்ளே சென்று தரிசனம் செய் உண்மையான பக்திக்கு சாதி, மதம் எதுவும் இல்லை என்று கூறினார். பீபீ லகிமார் இறைவனான செல்வப்பிள்ளைக்குப் பணிவிடைகள் செய்து வந்தாள். இறுதியில் அவள் செல்வப்பிள்ளையுடன் கலந்தாள். அதை அறிந்த குபேர் சோகத்தில் ஆழ்ந்தான். அரசகுமாரியின் தூய பக்தியின் மகிமையைக் கண்ட குபேரும் திருமாலிடம் பக்தி கொண்டு ஸ்ரீரங்கம் சென்றான். அங்கு கோயிலுக்குள் அவனை யாரும் அனுமதிக்கவில்லை. கோபுரத்திற்கு வெளியே அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்தான்.
-
நாராயணா! எனக்கும் உன்மீது பக்தியைக் கொடு! நானும் உன்னை அடைய வேண்டும்! என்று வேண்டிக்கொண்டான். குபேர் தியானத்தில் ஆழ்ந்தான். அரங்கன் அவன் மனதில் காட்சியளித்தார். அரசகுமாரனே! எல்லோருக்கும் முக்தியளிக்க நான் ஜகன்னாதனாக புரியில் இருக்கிறேன்! அங்கு செல்வாய்! ஐயனே! என்னை ஆட்கொண்டு விட்டீர்கள்! என்ன பேறு பெற்றேன்! தங்கள் சித்தம் என் பாக்கியம்! என்று கைகூப்பி வணங்கி நின்றான். ஜகன்னாத க்ஷேத்திரமான புரியை குபேர் அடைந்தான். அங்கு கோயில் கொண்டுள்ள ஜகன்னாதரை தரிசித்தான். ஜகன்னாதா, நாராயணா! எனது பிறவியின் பயனை அடைந்தேன்! என்று மனதழுதழுக்க அழுதுக்கொண்டே வணங்கினான். புரி ஜகன்னாதரின் அருளைப் பெற்றபின் குபேர் எல்லா உயிரினங்களிலும் நாராயணரைக் காணும் பேறு பெற்றான். ஒருநாள் அவன் ரொட்டி சுட்ட போது ஒரு நாய் ரொட்டியை இழுத்துச் சென்றது. அதை விரட்டி சென்ற குபேர். ஜகன்னாதா, நாராயணா! நெய் தடவித் தருகிறேன். வெறும் ரொட்டி தொண்டையில் குத்திவிடும் என்று விரட்டிக்கொண்டே ஓடினார். கல்வியும் அடக்கமும் நிறைந்தவர்களிடமும், பசுவிடமும், யானையிடமும், நாயிடமும், நாயை உண்ணும் புலையனிடமும் ஆத்மஞானிகள் சமதரிசனம் உடையவர்கள் என்னும் பகவத் கீதையின் வாக்கியத்திற்கு இலக்கணமாகக் குபேர் நிகழ்ந்தான். பரம பக்தர்களான பீபீ லகிமாரையும் குபேரையும் ராமானுஜர் வெகுவாக மதித்தார். இன்றும் பீபீ நாச்சியார் என்னும் பெயரில் அந்த அரசகுமாரியின் விக்கிரகம் சில வைணவக் கோயில்களில் வழிபடப் பெறுகிறது
-
வாட்ஸ்அப்-பில் இணைய விரும்பினால் உங்கள் வாட்ஸ்அப்-லிருந்து 9789 374 109 ரிக்கொஸ்ட் அனுப்பவும்
-
அட்மின்-சுவாமி வித்யானந்தர்

Wednesday, 25 July 2018

அவதாரபுருஷர்கள் இரண்டு நிலைகளில் இந்த உலகத்தை பார்க்கிறார்கள்



இந்துமத தத்துவங்கள்
-
அவதாரம்
-
அவதாரபுருஷர்கள் இரண்டு நிலைகளில் இந்த உலகத்தை பார்க்கிறார்கள்
துவைதநிலையில் அதாவது இந்த உலகம் உண்மை என்ற நிலையில் இருந்து பார்க்கும் போது அவன் சம்சாரத்தளையில் கட்டுப்பட்டவன்.அத்வைத நிலையில் தவாது நான் ஆன்மா என்ற நிலையில் பார்க்கும் போது இந்த உலகம் ஒரு தோற்றம்.
குழந்தைப்பருவத்திலிருந்தே அவதாரபுருர்கள் உயர்ந்த உணர்வு தளங்களில் திளைப்பது பற்றியும்,பல்வேறு உயர்ந்த காட்ச்சிகளை பார்ப்பது பற்றியும் அவர்களது வாழ்க்கையை படிக்கும்போது காண்கிறோம்.
அவதாரபுருஷர்கள் பரம்பொருளை உணர்ந்து அத்வைத நிலையில் சிறிதுகாலம் இருந்துவிட்டு.அதில் திருப்தியடைந்து பின்னர் கீழ்நிலைக்கு இறங்கிரும்போது சாதாரணமக்களின் பார்வைக்கு சாதாரணமனிதனாக தென்படுகிறார்கள்.ஆனால் அவர்கள் உலகப்பொருட்களின்,ஆரம்பம்,நடு,முடிவு அனைத்தையும் அறிகிறவர்களாக இருக்கிறார்கள்.
-
பிரம்மத்தை அல்லது கடவுளை எல்லா உயிரிலும் காண்பதே ஆன்மீக சாதனையின் முடிவு.சாதனையில் இறுதிக்கட்டத்தில் தான் இது மனிதனுக்கு வாய்க்கிறது.இந்துக்களின் அடிப்படை நுலான வேதங்கள் இதையே வலியுறுத்துகின்றன.இவ்வுலகில் நாம் காணும்,கல்,மண்,கொடி,செடி,மக்கள்.விலங்குகள்,தேவதைகள் போன்ற அனைத்தும் ஒரே பிரம்ம்ம் என்று சாஸ்த்திரங்கள் கூறுகின்றன.கண்ணால் காணும் அனைத்தும் இறைவனா என்ற சந்தேகம் எழுவது இயல்பானது.
அனைவராலும் புரிந்துகொள்ள முடியாத இந்த கருத்தை இப்போது விளக்குவோம்…..
-
கேள்வி…கண்ணால் காணும் கல்,மண் அனைத்தும் இறைவனா?இறைவனுக்கு உருவம் இல்லை என்று வேதங்கள் குறிப்பிடும் போது உருவம் உள்ள இவைகள் இறைவன் என சொல்வது வேதத்திற்கு முரணானது அல்லவா?ஒரே இறைவன் தான் கல்,மண் என அனைத்தும் ஆனார் என்றால் அவரை நாம் ஏன் உணரமுடிவதில்லை?
-
பதில்…நாம் மயக்கத்தில் இருக்கிறோம்.இந்த மயக்கம் தெளியாததுவரை இறைவனை காணமுடியாது.
-
கேள்வி…..இந்த மயக்கம் ஏற்படுவதற்கு காரணம் என்ன?எப்போதிலிருந்து நாம் இந்த மயக்கத்தில் இருக்கிறோம்?
-
பதில்…..நாம் அறியாமையில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.அறியாமையில் இருக்கும் போது நாம் கேட்க்கும் இந்த கேள்வியும் அறியாமையிலேயே கேட்க்கப்படுகிறது.இதற்கான பதிலும் அறியாமையே.அதாவது நாம் முதலில் இந்த அறியாமையிலிருந்து விடுபடவேண்டும்.அப்போது தான் இதற்கான பதில் கிடைக்கும்.கனவு காணும் போது கனவில் தோன்றிய உருவங்கள் நிகழ்ச்சிகள் அனைத்தும் உண்மைதான் ஆனால் கனவு கலைந்தபோது அவைகள் மறைந்துவிடுகின்றன.இந்த உலக வாழ்க்கை நாம் காணும் கனவு.இது மறையவேண்டும்.சிலருக்கு இந்த கனவு திடீரென்று மறைந்துவிடுகிறது.தங்கள் உண்மை இயல்பான பிரம்மத்தின் காட்சி கிடைக்கிறது.
-
கேள்வி….இரண்டற்ற பிரம்மத்தை எப்படி உணர்வது?
-
பதில்……இந்த அறியாமையை நீக்கவேண்டும்.இந்த அறியாமையிலிருந்து விடுபடுவது எவ்வாறு என்று ரிஷிகள் நமக்கு கூறியிருக்கிறார்கள்.
-
கேள்வி….பிரம்மத்தை கண்டதாக சொல்லும் அவர்கள் கூற்று ஏன் பொய்க இருக்க்க்கூடாது?அது ஏன் மனமயக்கமாக இருக்க்க்கூடாது?
-
பதில்….பெரும்பான்மையினர் பிரம்மத்தை பார்க்கவில்லை என்பதால் அவர்கள் சொல்வது உண்மையாகிவிடாது.பிரம்மத்தை உணர்ந்தவர்கள் நிரந்தர அமைதியில் திளைத்தவர்களாக இருக்கிறார்கள்.அவர்களிடம் திருப்தி,கருணை,பணிவு போன்ற பண்புகள் நிறைந்து காணப்பட்டன.அவர்கள் தங்கள் மனத்தை அடக்கும் சக்தி பெற்றிருந்தார்கள்.எண்ணத்தை அடக்கும் வல்லமை அவர்களுக்கு இருந்தது.உ்டல் உணர்வை கடந்து செல்லமுடிந்தது.
-
கேள்வி….நாம் அறியாமை மயக்கத்தில் இருந்தால்,அனைவரின் மயக்கமும் ஒரேபோல் தானே உள்ளது.அனைவரும் இந்த உலகத்தை ஒரே போல் தானே பார்க்கிறார்கள்.அனைவரின் அனுபவங்களும் ஒரே போல் தானே இருக்கிறது.
-
பதில்….என்மனம் உன் மனம் என அனைவரின் மனமும் தனித்தனி மனங்கள் அல்ல.அவைகள் ஒரே மனத்தின் பகுதிகள்.இந்த பிரபஞ்ச மொத்த மனத்தின் சிறுசிறு பகுதிகள் தான் தனிமனித மனங்கள்.இவைகள் அனைத்தும் ஒன்றாக இணைந்துள்ளன.இந்த பிரபஞ்ச மனத்தை கடந்துசெல்லவேண்டும்.தன்மனத்தை கடப்பவன் இந்த பிரபஞ்ச மனத்தை கடப்பவனாகிறான்..
-

Monday, 23 July 2018

சுவாமி விவேகானந்தரின் வீரமொழிகள்-பாகம்-6

சுவாமி விவேகானந்தரின் வீரமொழிகள்-பாகம்-6
-
துரதிர்ஷ்டவசமாக, சன்னியாசிகளுக்குகான நியதிகளால் எல்லோரையும் கட்டுப்படுத்தும் பழக்கம் பிற்காலத்தில் ஏற்பட்டது. இது மிக பெரிய தவறாகும். இந்தத் தவறைத் தவிர்த்திருந்தால் இப்போது நீங்கள் இந்தியாவில் காண்கின்ற இவ்வளவு வறுமையும் துன்பமும் இருந்திருக்காது.
 சாதாரண ஏழையின் வாழ்க்கைக்கு கூட அவனுக்கு சிறிதும் பயனில்லாத ஆன்மீக மற்றும் ஒழுக்க விதிகளால் கட்டி நெருக்கப்பட்டுள்ளது.
 உங்கள் கைகளை விலக்கிக் கொள்ளுங்கள் ! அவன் வாழ்க்கையை கொஞ்சம் அனுபவிக்கட்டும்று. அதன்பிறகு அவன் தன்னை உயர்த்திக் கொள்வான். தானாகவே அவனிடம் துறவு தோன்றும்.
-
இதுவரை இல்லாத அளவிற்குப் பெரும் சிறப்புடன் இந்தியா உருவாகிக் கொண்டிருக்கறது என்பதில் சந்தேகமில்லை. பழங்கால ரிஷிகள்அனைவரைவிடவும் மகத்தான ரிஷிகள் தோன்றப் போகின்றனர்.
மற்ற உலகங்களில் வாழ்கின்ற உங்கள் முன்னோர்கள் தங்கள் வழித்தோன்றல்களாகிய உங்களின் புகழையும் கீர்த்தியையும் கண்டு திருப்தி மட்டும் அடையவில்லை, பெருமையும் அடைவார்கள் என்பதை நான் காண்கிறேன்.
----
என்சகேதரர்களே, நாம் எல்லோரும் கடுமையாக உழைப்போம். தூங்குவதற்கு இது நேரமில்லை எதிர்கால இந்தியா நம்முடைய உழைப்பைப் பொறுத்தே அமையப் போகிறது.
----
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கைக்கும் நோக்கம் ஒன்று இருக்கிறது. இந்த நோக்கம், கணக்கில்லாத அவனது கடந்தகால கர்மங்களின் விளைவாகும். அது போல் உங்கள் பெருமைக்குரிய நாட்டின் முடிவில்லாத கடந்தகால வாழ்க்கையின் முழுமையான விளைவான மிகச் சிறந்த பாரம்பரியத்துடன் நீங்கள் ஒவ்வொருவரும் பிறந்திருக்கிறீர்கள். லட்சக்கணக்கான உங்கள் முன்னோர் உங்கள் ஒவ்வொரு செயலையும் கவனித்துக் கொண்டிருக்கிறார்களள் என்று தோன்றுகிறது. எனவே விழிப்போடு இருங்கள்.
----
சகோதரா, நீ அழுவதேன்? மரணமோ, நோயோ உனக்கில்லை நீ அழுவ தேன் சகோதரா? துன்பமோ துரதிருஷ்டமோ உனக்குக் கிடையாது. சகோதரா நீ ஏன் அழ வேண்டும் மாற்றமோ மரணமோ உனக்கு விதிக்கப்படவில்லை. நீ ஆனந்தமயமானவன். நீ உனது ஆன்மாவில் நிலைத்திரு.
---
மக்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டுமே . நீ உனது சொந்த உறுதியான முடிவில் பிடிப்புடன் இரு. பிறகு நிச்சயமாக மற்றவை நடந்தேறி உலகம் உனது காலடியில் பணிந்து கிடக்கும்.
----
இவனை நம்பு அல்லது அவனை நம்பு என்று மற்றவர் சொல்கிறார்கள். ஆனால் நான் சொல்கிறேன் முதலில் உன்னிடத்திலேயே நீ நம்பிக்கை வை. அதுதான் வழி. உன்னிடத்தில் நீ நம்பிக்கை வை. எல்லா ஆற்றல்களும் உனக்குள்ளேயே இருக்கின்றன. அதை உணர்ந்து நீ அந்த ஆற்றலை வெளிப்படுத்து. நான் எதையும் சாதிக்க வல்லவன் என்று சொல்.
---
.ஒரு சமயம் நான் காசியில் இருந்த போது ஒரு பாதை வழியாகச் சென்று கொண்டிருந்தேன். அந்தப் பாதையின் ஒரு புறம் நீர் நிறைந்த ஒரு பெரிய குளமும், மறு புறம் உயர்ந்த சுவரும் எழுப்பப்பட்டிருந்தன. அந்த இடத்தில் பல குரங்குகள் இருந்தன.
காசியைச் சேர்ந்த குரங்குகள் மிகவும் பொல்லாதவை. சில சமயங்களில் முரட்டுத்தனமாக நடந்து கொள்ளக் கூடியவை. அவை தங்கள் பாதையில் என்னைச் செல்ல விடக்கூடாது என்று நினைத்தன போலும்! எனவே நான் செல்லச் செல்ல அவை கிறீச்சிட்டுப் பெரும் சப்தமிட்ட படி என் கால்களைப் பற்றின. அவை நெருங்க நெருங்க நான் ஓட ஆரம்பித்தேன். ஆனால் நான் ஓட ஓட அவையும் பின் தொடர்ந்து ஓடிவந்து என்னைக் கடித்தன. அந்தக் குரங்குகளிடமிருந்து தப்பவே வழியில்லை என்று எனக்குப்பட்டது. ஆனால் அப்போது முன்பின் அறிமுகமில்லாத ஒருவரை வழியில் சந்தித்தேன். அவர் என்னைநோக்கி , குரங்குகளை எதிர்த்து நில் என்று கூறினார். நான் திரும்பிக் குரங்குகளை எதிர்த்து நின்றேன். அவை பின்வாங்கி முடிவில் ஓடியேமறைந்தன. இதுவே வாழ்க்கை முழுவதற்கும் படிப்பினையாகும். பயங்கரத்தை எதிர்த்து நில் அஞ்சாமல் அதை எதிர்த்து நில்.
----
இரக்கம் உள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை, வேலை செய்யக்கூடிய கைகள் ஆகிய இந்த மூன்றும் நமக்குத் தேவை
----
. வலிமை நிறைந்த ஒரு களஞ்சியமாக உன்னை உருவாக்கிக் கொள். முதலில் உலக மக்களின் துன்பங்களைக் குறித்து நீ வருந்து..... வெறுப்பு உணர்ச்சியாலோ, பொறாமையாலோ, உன்னுடைய மனம் அலைக்கழிக்கப்படாமல் இருக்கிறதா என்று உன்னையே நீ கேட்டுக்கொள்.
----
உலகின் மீது வெறுப்புணர்ச்சி, கோபம் ஆகியவை அடுக்கடுக்காகச் சுமத்தப்பட்டு வருகின்றன. அது காரணமாக நல்ல காரியங்கள் தொடர்ந்து பலகாலமாக நிறைவேற்றப்படாமற் போயிருக்கின்றன. மாறாகத் தீமையே விளைவிக்கப்பட்டிருக்கிறது. நீ தூய்மை உள்ளவனாக இருந்தால் வலிமை உள்ளவனாக இருந்தால் நீ ஒருவனே உலகிலுள்ள அத்தனை பேருக்கும் சமமானவனாவாய்.
---
பணம் படைத்தவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் இருக்கிறார்களே, அவர்களிடம் நம்பிக்கை வைக்க வேண்டாம். வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைவிட, செத்துப்போனவர்களாகவே அவர்கள் இருக்கிறார்கள்.
---
பணிவும் தாழ்மையும் கொண்டு, அதே சமயத்தில் நம்பிக்கைக்கு உரியவர்களுமாகிய உங்களிடம்தான் நான் நம்பிக்கை வைத்திருக்கிறேன்.
---
கடவுளிடம் நம்பிக்கை வையுங்கள் திட்டம் எதுவும் தேவையில்லை. அதனால் ஆகப்போவதும் ஒன்றுமில்லை. துன்பத்தால் வாடுகிறவர்களுக்காக இரக்கம் கொள்ளுங்கள். பிறகு உதவிக்காகக் கடவுளை நோக்குங்கள். உங்களுக்குத் தேவைப்படும் உதவி நிச்சயமாக வந்தே தீரும்.
---
விவேகானந்தர் விஜயம்---சுவாமி வித்யானந்தர்
-

Sunday, 22 July 2018

சுவாமி விவேகானந்தரின் வீரமொழிகள்-பாகம்-5

சுவாமி விவேகானந்தரின் வீரமொழிகள்-பாகம்-5
-
எழுந்திருங்கள் விழித்துக் கொள்ளுங்கள் பிறரையும் விழிக்க வையுங்கள் இறப்பதற்கு முன் மனித வாழ்வின் நிறைவைப் பெறுங்கள். எழுந்திருங்கள், விழித்திருங்கள், லட்சியத்தை அடையும்வரை நில்லாதீர்கள்
-
சொல்பவற்றிற்கெல்லாம் முட்டாள்போல் தலையை ஆட்டாதே. நான் சொன்னாலும் நம்பாதே. முதலில் புரிந்துகொண்டு பின்னர் ஏற்றுக்கொள்.
-
இந்தியாவின் புனித மண்ணில்தான் சீதை சாவித்திரியின் நாட்டில்தான், இந்த நாட்டுப் பெண்களில் தான் அத்தகைய ஒழுக்கம் சேவை மனப்பான்மை அன்பு கருணை அகமலர்ச்சி, பக்தி இவற்றைக் காண முடியும். உலகில் வேறு எங்குமே இப்படி நான் பார்க்கவில்லை
---
சமுதாயத்திலுள்ள ஆண் பெண் அனைவருக்கும் உண்மைக் கல்வியை அளிப்பதே நமது கடமை அந்தக் கல்வி மூலமாக நல்லது எது கெட்டது எது என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள், தாங்களாகவே கெட்டதை விலக்கிவிடுவார்கள். அதன் பிறகு சமுதாயத்தில் வலிந்து எதையும் நிறுவவோ அழிக்கவோ வேண்டியதில்லை.
-
🌿 மனிதனுக்கு வெறும் நம்பிக்கை போதாது, அறிவு பூர்வமான நம்பிக்கை வேண்டும். இந்தப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், வழிவழியாகத் தாங்கள் பின்பற்றிவரும் மதக் கருத்துக்களைத் தவிர, மற்றவை எதுவும் சரியானவை அல்ல என்ற எண்ணம் இருப்பது, மனிதனின் மனத்தில் இன்னும் பலவீனம் எஞ்சியுள்ளதையே காட்டுகிறது. அத்தகைய கருத்துக்களை விட்டுவிட வேண்டும்.
-
🌿 இந்துக்கள் மன ஆராயச்சியின் மூலமும் தத்துவ ஆராய்ச்சியின் மூலமும் நியாயபூர்வமான ஆராய்ச்சிமூலமும் முன்னேறினார்கள். ஐரோப்பியர்கள் புற இயற்கையிலிருந்து தொடங்கினார்கள். இப்போது அவர்களும் அதே முடிவுகளுக்குத்தான் வந்து கொண்டிருக்கிறார்கள்.
-
🌿 கடவுள், பிரபஞ்சத்திற்கு வெளியே சொர்க்கத்தில் எங்கேயோ இருக்கிறார் என்று துவைதம் சொல்கிறது.
நம்முடைய ஆன்மாதான் கடவுள் என்றும், அவர் நமக்கு வெளியே இருக்கிறார் என்று சொல்வது தெய்வநிந்தை என்றும் அத்வைதம் கூறுகிறது.
-
மனித வரலாற்றிலேயே இப்பொழுதுதான் அறிவு வளர்ச்சி, நூறு வருடங்களுக்கு முன் கனவுகூடக் கண்டிருக்க முடியாத அளவுக்கு இருக்கிறது. ஐம்பது வருடங்களுக்குமுன் கனவுகூடக் கண்டிருக்க முடியாத அளவுக்கு விஞ்ஞான அறிவு இன்று வளர்ந்திருக்கிறது. இந்த வேளையில் உலகின் பரந்த இதயங்களைக் குறுகிய எல்லைக்குள் அடைத்து வைத்திருப்பது முடியாத காரியம்.
-----
மனிதர்களைக் குறுகிய எல்லைக்குள் அடைக்க முயல்வதால் அவர்களை மிருகங்களாக்கி, சிந்திக்கும் திறனற்றவர்களாக்கி இழிவுபடுத்துகிறீர்கள். அவர்களின் அற வாழ்வை அழிக்கிறீர்கள்.
எல்லையற்ற அன்புகொண்ட மிகவுயர்ந்த இதயமும் எல்லையற்ற அறிவுப்பிரகாசமும் இணைந்த சேர்க்கையே இன்று தேவையாக இருக்கிறது.
-----
அழியாதபேரின்பத்தின் வாரிசுகளே ஆம் உங்களைப் பாவிகள் என்று அழைக்க இந்து மறுக்கிறான். நாம் ஆண்டவனின் குழந்தைகள், அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள் புனிதமானவர்கள் பூரணர்கள். வையத்துள் வாழும் தெய்வங்களே! நீங்கள் பாவிகளா? மனிதர்களை அப்படிச் சொல்வது பாவம். மனித இயல்புக்கே அது அழியாத களங்கம்.
---
🌿 இந்து வார்த்தைகளிலும் கொள்கைகளிலும் வாழ விரும்பவில்லை. புலன்வசப்பட்ட சாதராணவாழ்விற்கு அப்பாற்பட்ட வாழ்வு உண்டு என்றால் ,அவன் அவற்றை நேருக்குநேர் காண விரும்புகிறான். ஜடப் பொருள் அல்லாத ஆன்மா என்ற ஒன்று அவனுள் இருக்குமானால் அதனிடம் நேரே செல்ல விரும்புகிறான்.
----
🌿 கருணையே வடிவான எங்கும் நிறைந்த இறைவன் ஒருவர் இருப்பாரானால் அவரை நேரே காண விழைகிறான் அவன் அவரைக் காண வேண்டும் அதுதான் அவனது எல்லா சந்தேகங்களையும் அகற்றும்.
---
🌿 ஆன்மா இருக்கிறது கடவுள் இருக்கிறார் என்பதற்கு ஓர் இந்து ஞானி கொடுக்கக் கூடிய சிறந்த சான்று நான் ஆன்மாவைக் கண்டுவிட்டேன். நான் கடவுளைக் கண்டுவிட்டேன் என்று அவர் கூறுவதுதான். நிறைநிலைக்கு அதுதான் ஒரே நியதி.
---
🌿 இந்து சமயம் என்பது ஏதோ ஒரு கோட்பாட்டையோ கொள்கையையோ நம்புவதற்கான போராட்டங்களிலும் முயற்சிகளிலும் அடங்கிவிடாது. வெறும் நம்பிக்கை அல்ல உணர்தலே, உணர்ந்து அதுவாக ஆதலே இந்து சமயம்.
---
🌿 இந்துக்களின் சமயம்.நிறைநிலை பெறும் ஒருவன் என்ன ஆகிறான்? அவன் எல்லையற்ற முழுமையான பேரானந்தப் பெருக்கில் திளைத்து வாழ்கிறான் .பேரின்பம் பெற எதனை அடைய வேண்டுமோ, அந்த ஆண்டவனை அவனுடன் பேரானந்தத் தில் திளைக்கிறான்.
---
தீமை செய்கின்ற ஆயிரம் பேரைக் கொல்வதன் மூலம் தீமையை உலகத்திலிருந்து நீக்க முயல்வதால் உலகத்தில் தீமைதான் அதிகமாகும். ஆனால் அறிவுரைகளின் மூலம் மக்கள் தீமை செய்யாமல் தடுக்கப்பட்டால் உலகத்தில் தீமையே இருக்காது.
---
நீ உன் மனைவியோடு வாழலாம்; அவளைக் கைவிட வேண்டும் என்பதல்ல. ஆனால் அவளிடம் கடவுளைக் காண வேண்டும். உங்கள் குழந்தைகளில் இறைவனைக் காணுங்கள். எல்லாவற்றிலும் இப்படியே. வாழ்விலும் சாவிலும் இன்பத்திலும் துன்பத்திலும் எல்லாவற்றிலுமே இறைவன் சமமாக நிறைந்திருக்கிறார். உலகம் முழுவதும் இறைவன்தான் நிறைந்திருக்கிறார். கண்களைத் திறவுங்கள், அவரைப் பாருங்கள். வேதாந்தம் இதைத்தான் போதிக்கிறது.
----
நாம் நமது கற்பனையால், நமது அனுமானத்தால் உருவாக்கிக் கொண்டிருக்கும் உலகத்தைத் துறந்துவிட வேண்டும்.
இருந்தது கடவுள் மட்டுமே. குழந்தையில், மனைவியில், கணவனில் எல்லாவற்றிலும் இருப்பவர் அவரே. நல்லவரில் இருப்பதும் அவரே, தீயவரில் இருப்பதும் அவரே, பாவத்தில் இருப்பதும் அவரே, பாவியாக இருப்பதும் அவரே. வாழ்விலும் அவரே இருக்கிறார். சாவிலும் அவரே இருக்கிறார்.
வேதாந்தம் இந்தக் கருத்தைத்தான் பிரச்சாரம் செய்ய, செயலில் காட்ட விரும்புகிறது, போதிக்க விரும்புகிறது.
----
எண்ணமே நம்மிலுள்ள தூண்டும் சக்தி. மனத்தை உயர்ந்த எண்ணங்களினால் நிரப்புங்கள். நாட்கணக்காக அதைக் கேளுங்கள். மாதக்கணக்காகச் சிந்தியுங்கள். தோல்விகளைப் பொருட்படுத்தாதீர்கள்.
தோல்விகள் இயற்கையானவை. வாழ்க்கைக்கு அழகு சேர்ப்பவை அவை. தோல்விகள் இல்லாத வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா?
---
போராட்டம் இல்லாத வாழ்க்கை வாழ்க்கையே அல்ல. அப்படிப்பட்ட வாழ்க்கையில் என்ன இனிமை இருக்கிறது! போராட்டங்களையும் தவறுகளையும் பொருட்படுத்தாதீர்கள்.
ஒரு பசு பொய் சொல்வதை நான் கேட்டதில்லை, ஆனால் அது வெறும் பசுதான்; மனிதன் அல்ல! ஆகவே தோல்விகளை, சறுக்கல்களைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்.
----
ஆயிரம் தடவை லட்சியத்திலிருந்து வழுவ நேர்ந்தாலும் திரும்பத் திரும்ப அந்த லட்சியத்தைப் பிடித்துக் கொள்ளுங்கள். ஆயிரம் தடவை தவறினாலும் இன்னொரு முறை முயலுங்கள்.
----
#கடவுளைப்பற்றியகருத்து நமது தாய்த்திருநாட்டில் வளர்ந்துள்ளது போல் வேறெங்கும் இவ்வாறு முழுமையாக வளரவில்லை .ஏனென்றால் கடவுளைப் பற்றிய இந்தக் கருத்து உலகில் வேறெங்கும் இருக்கவேயில்லை .நான் இவ்வாறு உறுதியாகச் சொல்வதைக் கேட்டுநீங்கள் திகைக்கலாம். ஆனால் பிற மத சாஸ்திரங்கள் எவற்றிலேனும் கடவுளைப் பற்றிய நமது கருத்துக்களுக்குச் சமமான கருத்துக்கள் இருந்தால் காட்டுங்கள்.
-
விவேகானந்தர் விஜயம்---சுவாமி வித்யானந்தர்

Thursday, 19 July 2018

அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்

மகனே, இந்த உலகின் இன்பம் எத்தகையது என்பதை பார்க்கவில்லையா? இல்லற வாழ்வின் துன்பங்களால் என் நாடிநரம்புகளே தகிக்கின்றன.இறைவன் மட்டுமே உண்மை மற்ற எதுவும் உண்மையல்ல.வாழ்க்கையின் நோக்கம் இறைவனை அடைவதே.எப்போதும் அவரது நினைவில் ஆழ்ந்திருப்பதே
-
அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்

Friday, 13 July 2018

ஸ்ரீராமகிருஷ்ணர்- அன்னை சாரதாதேவி உறவில்-மூன்று பரிமாணங்கள்


ஸ்ரீராமகிருஷ்ணர்- அன்னை சாரதாதேவி உறவில்-மூன்று பரிமாணங்கள்-துவைதம்-விசிஷ்டாத்வைதம்-அத்வைதம்
-
ஸ்ரீராமகிருஷ்ணர் துவைதம்,அத்வைதம்,விசிஷ்டாத்வைதம் என்ற மூன்று நிலைகளில் வாழ்ந்தார்.மகான்களின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து தத்துவங்களை உருவாக்குகிறார்களா அல்லது தத்துவங்களின் அடிப்படையில் மகான்களின் வாழ்க்கை அமைகிறதா என்று தெரியவில்லை.
-
1.முதலில் அத்வைத கண்ணோட்டம்--
-
ஸ்ரீராமகிருஷ்ணர் தன்னை துறவி என்று பல நேரங்களில் குறிப்பிட்டுள்ளார்.அவரது வாழ்க்கையில் பல சம்பங்கள் இதை தெளிவுபடுத்துகின்றன.அவரது தாயாரின் இறுதி சடங்கு சமயத்தில் மகன் செய்ய வேண்டிய கடைசி சடங்குகளை செய்யவில்லை.தான் துறவி என்றும் தனக்கு எந்த கடமைகளும் இல்லை என்றும் கூறி அதை செய்யவில்லை.
-
அடுத்ததாக அவரது பரம்பரை சொத்தை பிரிக்கும்போது அவரது பங்கை பெறுவதற்காக கையெழுத்திடும்படி கேட்டுக்கொண்டார்கள்.தனக்கு எந்த சொத்தும் தேவையில்லை.எனக்கு உலகத்திலிருந்து எதுவும் தேவையில்லை.என்னால் கையெழுத்திடமுடியாது.நீங்களே அதை வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார்.
-
அன்னை சாரதாதேவிஆரம்ப காலத்தில் கணவருடன் வாழவேண்டும் என்பதற்காக ஜெயராம்படியிலிருந்து பல மைல் தூரம் நடந்து தட்சிணேஷ்வரம் வந்தார்.அப்போது ஹிருதயன் ஸ்ரீராமகிருஷ்ணருக்கு பணிவிடைகள் செய்து வந்தார்.சாரதாதேவி தட்சிணேஷ்வரம் வந்தபோது. நீ இங்கே எதற்காக வந்தாய்? குருதேவரை பார்த்துக்கொள்ள நான் போதாதா? உன்னை யாரும் இங்கு தேடவில்லை,அழைக்கவில்லை.இங்கிருந்து சென்றுவிடு என்று கடும்கோபத்தில் திட்டிவிட்டான்.(ஹிருதயனின் கோபத்திற்கு வேறு பல காரணங்கள் உண்டு).இந்த சம்பவம் ஸ்ரீராமகிருஷ்ணரின் முன்னிலையிலேயே நடந்தது.ஸ்ரீராமகிருஷ்ணர் அப்போது பரவச நிலையில் இருந்தார்.ஹிருதயனை அவர் கண்டிக்கவில்லை.குருதேவர்மீதும்,ஹிருதய்மீதும் அன்னை கடும் கோபமுற்றார்.மனைவி என்ற முறையில் நான் இவருடன் இல்லாமல் எங்கே போய் இருப்பது என்ற ரீதியில் அவரது கோபம் கடுமையாக இருந்தது.இந்த சம்பத்தில் அன்னையை சமாதானப்படுத்தவும்,ஹிருதயனை தண்டிக்கவும்  இயலாத பரவச நிலையில் குருதேர் இருந்தார்.இனி நானாக இந்த இடத்திற்கு வரமாட்டேன் என்று கோபத்துடன் கூறிவிட்டு ஜெயராம்பாடிக்கு சென்றுவிட்டார் அன்னை. இந்த உலகத்தில் உள்ள யாரும்  தனக்கு சொந்தம் இல்லை.இந்த உலகமே என்னுடையதல்ல.இந்த உலகத்தின் நிகழ்வுகள் என்னை பாதிக்காது என்ற உயர்ந்த அத்வைத நிலையில் அப்போது குருதேவர் இருந்தார்.(அதன்பிறகு நடந்த சம்பவங்களை தனியாக படித்துக்கொள்ளுங்கள்)
-
குருதேவர் பெரும்பாலான நேரத்தில் அத்வைத மனநிலையில் இருப்பார்.அதனால்தான் அவரை துறவிக்கு உதாரணமாக கூறுகிறார்கள்.பற்று என்பது அவரது மனத்திலிருந்து நீங்கிவிட்டது.பற்று நீங்கியவர்களால்தான் சமாதிநிலையை அடைய முடியும்.குருதேவர் அவ்வப்போது சமாதி நிலையை அடைந்துவிடுவார்.இது அவரது மனத்தில் எந்த உலகியல் பற்றும் இல்லை என்பதை தெளிவாக காட்டுகிறது
-
2.இனி விசிஷ்டாத்வைத மனநிலையை பார்ப்போம்
-
குருதேவர் மகாவிஷ்ணுவின் அவதாரமாகும். குருதேவரின் தந்தைக்கு கதாதரர்(அதாவது கதையை கையில் தாங்கிய விஷ்ணு) காட்சி காடுத்து நான் உனக்கு மகனாக பிறப்பேன் என்று கூறுவார்.(இந்த சம்பங்களை தனியாக படிக்கவும்)
குருதேவர் விஷ்ணுவின் அவதாரம் என்றால் மகாலெட்சுமி யார்.அவர் பூமியில் பிறக்காமல் போய்விடுவாரா என்ன? இல்லை அவரும் பிறந்தார்.பரவச நிலையில் குருதேவருக்கு இதுபற்றி தெரிந்திருந்தது.ஸ்ரீராமகிருஷ்ணருக்கு திருமணம் முடிப்பதற்காக பெண் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.அப்போது அவர்,ஏன் கண்ட இடங்களில் பெண்தேடி அலைகிறீர்கள்? எனக்காக பிறந்தவன் ஜெயராம்பாடியில் வளர்ந்து வருகிறாள் என்று கூறி சரியான முகவரியையும் அவளது அம்மா,அப்பா பெயர்களையும் கூறினார்.முதலில் குருதேவரின் உறவினர்கள் நம்பவில்லை.சந்தேகத்துடன்தான் சென்று பார்த்தார்கள்.ஆனால் குருதேர் கூறியவைகள் அனைத்தும் சரியாக இருந்தன.இந்த சம்பவத்தை சாரதையில் பெற்றோரிடம் கூறியதும்,அவர்களும் இந்த திருமணத்திற்கு சம்மதித்தார்கள்.
-
இது ஒரு தெய்வீக உறவாகும்.இந்த உலகத்தை காப்பதற்காக அவதரித்தவர்கள் இருவரும்.தனக்கு சம அளவில் சாரதைக்கு சக்தி உண்டு என்பது குருதேவருக்கு தெரியும்.
-
பொதுவாக நமக்கு சமமான மரியாதைக்குரியவர்கள் நீங்கள் என்று அழைப்போம்.நம்மைவிட அறிவிலும்,மற்ற விஷணங்களிலும் தாழ்ந்தவர்களை நீ என்று அழைப்போம். குருதேவரை பல பெரியமனிதர்கள் பார்க்க வருவதுண்டு அவர்களை கருதேவர் நீ என்றே அழைப்பார்.மிகவும் மரியாதைக்குரியவரையே நீங்கள் என்று அழைப்பார். அன்னையை குருதேவர் என்போதுமே நீங்கள் என்றுதான் அழைப்பார்.இது அவள் தனக்கு எந்த விதத்திலும் குறைந்தவள் அல்ல,சமமானவன் என்பதையே காட்டுகிறது. ஒருமுறை வேலைக்காரி என்று நினைத்து தெரியாமல் நீ என்று கூறிவிடுவார்.அதற்காக மிகவும் மனம் வருந்தி சாரதையிடம் அவர் மன்னிப்பு கேட்பார்.விஷ்ணுவும்-லெட்சுமியும் சமபாதி என்கிறது வைணவ சாஸ்திரம்.இவர்கள் வாழ்க்கையும் அப்படித்தான் இருந்தது.
-
தன்னை யாராவது தரக்குறைவாக பேசினால் குருதேவர் பொறுத்துக்கொள்வார்.ஆனால் சாரதையை யாராவது அப்படி பேசினால் உடனேயே அவரை கண்டிப்பார்.அவளை அப்படி பேசாதே! அவன் கோபப்பட்டால் உலகமே தாங்காது என்று கூறி எச்சரிப்பார்.இது குருதேவர் அன்னையை எந்த நோக்கில் பார்த்தார் என்பதை தெளிவாக புரியவைக்கிறது.சில முக்கியமான முடிவுகளை எடுக்கும்போது அன்னையிடம் அவர் கலந்தாலோசிப்பதுண்டு.பின்பு அவள் என்ன கூறுகிறாளோ அதன்படியே செய்வார். தனக்கு எல்லாம் தெரியும்.அவளுக்கு எதுவும் தெரியாது என்ற மனநிலை அவரிடம் இல்லை.தனக்கு தெரியாத பல விஷயங்கள் சாரதைக்கு தெரியும் என்று குருதேவர் தெரிந்து வைத்திருந்தார்.இதனால்தான் முக்கிய முடிவுகளில் அவளிடம் கலந்தாலோசித்தார்
-
இவர்களது வாழ்க்கை உலக மக்களுக்கு பெரிய படிப்பினையாகும். இன்று கணவன் எந்த மனைவியை நீங்கள் என்று அழைப்பதில்லை.பல ஆயிரம் ஆண்டு காலபோக்க இது. மனைவி தன்னைவிட கீழ் என்ற ரீதியிலேயே அவர்கள் பார்கிறார்கள்.தனக்கு தெரிந்ததைவிட அவளுக்கு குறைவாகவே தெரியும் என்ற மனநிலையும்,ஆதிக்க எண்ணமும்தான் இதற்கு காரணம். தத்துவத்தின்படி பார்த்தால் கணவன்-மனைவி இருவரும் சம அளவில் அதிகாரமும்,சக்தியும்,ஆளுமையும் உடையவர்கள்.இதில் கணவன் தன்னை உயர்வானவன் என்று கருதிக்கொள்வது தவறாகவும். அப்படி எந்த கணவனாவது மனைவியை நீங்கள் என்று அழைக்கவோ,சமமான மனநிலையுடன் பழகவோ தயங்குவானானால் அவன் ஆன்மீகத்தில் மட்டுமல்ல உலக விஷயங்களிலும் வெற்றி பெற முடியாது. அவனது வாழ்க்கை தோல்வியிலேயே முடியும்.நமது நாட்டில் பெண் என்றாலே மயக்குபவள்,மயை என்ற போக்கு உள்ளது.இது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய தவறாக கருத்தாகும்.வேத காலத்தில் அப்படி இல்லை.மனைவி இல்லாமல் எந்த சடக்கும் செய்ய முடியாது.பிற்காலத்தில்  சந்நியாசம் மட்டுமே முக்தி அடைய ஒரே வழி என்று போதித்தார்கள்.எனவே சிற்றின்பத்தை அப்படியாவது அனுபவித்துவிட்டு,கடைசியல் அதை அதாவது பெண்ணை விட்டுவிட்டு சென்றுவிட வேண்டும் என்று நினைத்தார்கள்.அதனால் சிற்றின்பத்தை அனுபவிப்பதற்காவே திருமணம்,அதற்காகவே பெண் படைக்கப்பட்டுள்ளாள் என்று நினைத்தார்கள்.இந்த தவறை இந்தியா திருத்திக்கொள்ளவே ஸ்ரீராமகிருஷ்ண அவதாரம் நிகழ்ந்துள்ளது.பெண்ணை வெறுப்பதால் அல்ல,அவளின் உதவியாலேயே இருவரும் சேர்ந்து முக்தி பெற முடியும் என்பது காட்ப்பட்டுள்ளது.இல்லறத்தைவிட்டு செல்லாமல் அதை துறவறமாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்பது வாழ்ந்து காட்டப்பட்டுள்ளது
-
3. இனி துவைத நிலையில் அவரது செயல்பாடுகளை பார்ப்போம்.
-
சாரதாதேவி மற்ற உலகியல் பெண்களைப்போல வாழவில்லை.இன்னும் சொன்னால் எந்த விதமான உலகியல் சுகத்தையும் அனுபவிக்கவில்லை.ஒரு சிறிய அறையில் கஷ்டப்பட்டு வாழ்ந்து வந்தார்.இதை கண்டு வேதனையுற்ற சாரதையின் அன்னை பலமுறை அழுததுண்டு. ஒரு துறவிக்கு எனது பெண்ணை திருமணம் செய்துவைத்துவிட்டேனே. எனது மகள் எந்த சுகத்தையும் அனுபவிக்கவில்லையே என்று வேதனைப்படுவார்.அப்போது அன்னை, தெய்வத்தையே எனது கணவராக அடைந்துள்ளேன்.இந்த வாய்ப்பு சாதாரண பெண்களுக்கு கிடைக்குமா? என்று கூறு ஆறுதல்படுத்துவார்.உண்மையில் அன்னை பேரானந்தத்தில் வாழ்ந்துவந்தாள்.மற்றவர்களால் அதை எப்படி புரிந்துகொள்ள முடியும்? பேரானந்தம் வரும்போது கணவன் மனைவி இருவரும் அதை சமமாக அனுபவிப்பார்கள் என்கிறது யோகசாஸ்திரம்.குருதேவர் எப்போதும் பேரானந்தத்தில் இருந்தார் என்பதை மற்றவர்கள் தெரிந்துகொண்டார்கள்.ஆனால் அன்னையின் பேரானந்தத்தை அவர்கள் கவனிக்கவில்லை.இந்த ஆனந்தத்தின் முன் உலகியல் சுகங்கள் எம்மாத்திரம்? குருதேரின் மறைவுக்கு பிறகு அன்னைக்கு அந்த ஆனந்தம் முழுமையாக கிடைக்கவில்லை.அதை அன்னையே பிற்காலத்தில் கூறியுள்ளார்.அவருடன் வாழ்ந்த காலத்தில் நான் பேரானந்த்தில் மிதந்துகொண்டிருந்தேன் என்று சிஷ்யைகளிடம் கூறுவார்.
-
பொதுவாக மனைவியை கணவன் பல இடங்களுக்கு அழைத்து செல்வதுண்டு,கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு செல்வதுண்டு.ஆனால் குருதேவர் அன்னையுடன் வெளியே செல்லவில்லை.இரண்டுபேரும் சேர்ந்து செல்வதை கண்டால் மக்கள் கேலி செய்வார்கள் என அவர் நினைத்தார்.குருதேவருடன் வெளியே செல்ல வேண்டும் என்ற ஆசை அன்னைக்கு இருந்தது.சாரதையை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் குருதேவர் கவனமாக இருந்தார்,அதனால் அவ்வப்போது வேடிக்கைகள் காட்டி அவளை சிரிக்கவைப்பார்.
-
மனைவி என்ற கடமையிலிருந்து அவர் ஒரு சிறிதும் பின்வாங்கவில்லை.குருதேவருக்கு மாதம் 15 ரூபாய் கோவிலிருந்து சம்பளமாக கிடைத்துவந்தது.அதை அவர் அப்படியே சேர்த்துவைத்தார். குருதேவர் தனக்காக பணத்தை சேர்த்து வைப்பதில்லை என்பது தெரியும்.ஆனால் அன்னைக்காக சேர்த்துவைத்தார்.அந்த பணத்திலிருந்து அன்னைக்கு தேவையான துணிகள்,நகைகள் போன்றவை வாங்கிக்கொடுத்தார்.யாரிடமிருந்தும் நீ ஒரு பைசாக்கூட வாங்கக்கூடாது.அப்படி வாங்கினால் உன் தலையை அவர்களுக்கு கொடுத்தது போலாகும்.உனது சுயமரியாதை குறைந்துவிடும்.அவர்கள் சொல்வதுபோல கேட்க வேண்டியிருக்கும் என்று கூறி அன்னையை எச்சரித்தார்.எதிர்காலத்தில் அன்னை உணவுக்காக கஷ்டப்படக்கூடாது என்று தனக்கு கிடைத்த சம்பளப் பணத்தை சேர்த்துவைத்து.அதை பலராம் போஸ் என்ற பக்தரிடம் கொடுத்தார். தனது மறைவுக்கு பிறகு இதிலிருந்து கிடைக்கும் வட்டியை அவளுக்கு கொடுங்கள் என்று கூறினார். அதன் படியே குருதேவரின் மறைவுக்கு பிறகு,அந்த வட்டிப்பணம் 5 ரூபாயை வைத்துக்கொண்டு அன்னை சாப்பாட்டிற்கு உப்புகூட வாங்க வழியில்லாத நிலையிலும் பிறரின் உதவியை மறுத்து வாழ்ந்தார்.
-
உலகத்தில் மற்றவர்களுடன் பழகும்போது எப்படி பழக வேண்டும் என்பது முதல் கொண்டு.சாதாரண உலகியல் விஷயங்களிலிருந்து மிக உயர்ந்த ஆன்மீக விஷயங்கள்வரை அனைத்தையும் குருதேவர் கற்றுக்கொடுத்தார்.
குருதேவரின் முதல் சீடர் யார் என்று கேட்டால் அது சாரதாதேவிதான்.குரு சீடன் என்ற உறவு துவைத நிலை.அதாவது அன்னையை பொறுத்தவரை ஸ்ரீராமகிருஷ்ணர் கணவன் மட்டுமல்ல குருவும் ஆகும். அவரது பாதத்தில் பணித்து அனைத்தையும் கற்றுக்கொண்டாள் தனக்கு எதுவும் தெரியாது குருதேருக்கு எல்லாம் தெரியும் என்ற மனநிலை அவளிடம் இருந்தது. குருதேரின் விருப்பத்திற்கு மாறாக ஒரு வார்த்தை பேசவோ ஒரு செயல் செய்யவோ இல்லை.அனைத்தையும் அப்படியே ஏற்றுக்கொண்ட ஒரு சரணாகதி.
-
அன்னை சாரதாதேவியின் இந்த மனப்பான்மை பெண்களுக்கு நல்ல பாடமாக அமையும்.ஏழ்மைநிலையிலும் அதை ஏற்றுக்கொண்டு வாழ்தல்,எப்போதும் மகிழ்ச்சியாக இருந்தல்,கணவனை குருவாகவும்,தெய்வமாகவும் மதித்தல்.கணவன் சொல்படி நடத்தல் என்று எத்தனையோ விஷயங்களை பெண்கள் கற்றுக்கொள்ள முடியும்.
-
குருதேவர் விரும்பினால் இன்னும் அவரைப்பற்றி ஏராளம் சொல்வேன்...
-
சுவாமி வித்யானந்தர்
-


Wednesday, 11 July 2018

அவதாரப்புருஷர் வரும்போது எப்படி அடையாளம் கண்டுகொள்வது?



அவதாரப்புருஷர் வரும்போது எப்படி அடையாளம் கண்டுகொள்வது?
-
வேதாந்தத்தை பொறுத்தவரை என்றென்றும் நிலையான ஒரே இறைவனைத்தான் அது ஏற்றுக்கொள்கிறது.அவரே தன்னை உயிர்களாகவும் உலகமாகவும் வெளிப்படுத்துகிறார்.அவரை ஈஸ்வரன் என்கிறது.
-
உலக நன்மைக்காக,தேவைகளை நிறைவேற்றுவதற்காக,அந்த காலத்திற்கு ஏற்ற விசேஷ ஆற்றலுடன் ஈஸ்வரன் தோன்றுகிறார்.அவர் தான் செய்ய வேண்டி வேலையை செய்து முடிப்பதற்கான முழுஅதிகாரமும்,ஆற்றலும் பெற்றவராக இருப்பார்.
-
ஈஸ்வரன் மனிதனாக பிறந்தால் அவர் அவதாரபுருஷர்.மனிதனாக பிறந்த ஒருவன் ஈஸ்வரனுடன் ஒன்று கலந்தால் அவர் ஈஸ்வரகோடி.உலகின் தேவைகளைப்பொறுத்து இவர்களது அவதாரம் நிகழும்.சில பணிகளை ஈஸ்வரகோடிகளால் செய்து முடிக்க முடியும்.சிலரின் பணி ஒரு நாட்டுடன் முடிந்துவிடும்,சிலரின் பணி உலகம் முழுவதும் நன்மை செய்வதாக அமையும்.
-
உயிர்கள் அறியாமை மோகத்தில் ஆழ்ந்திருப்பதைக்கண்டு.சொந்த முயற்சியால் தன்னை விடுவித்துக்கொள்ள முடியாததைக்கண்டு இறைவன் அவர்களை உயிவிப்பதற்காக கருணையுடன் வருகிறார்.அவதாரபுருஷரே மனித குலத்தின் உண்மையான குரு.அவர் ஏற்கனவே பிரம்மஞானம் பெற்றவராக இருபப்தால் மற்றவர்களை மாயையிலிருந்து விடுவிக்க முடியும்.
-
அவதாரபுருஷர்களின் சிறுவயதிலிருந்தே ஆன்மீக சாதனைகளில் ஈடுபட்டிருப்பார்கள்.சாதனைகளின் மூன்று நிலைகளான 1.பசுநிலை(தனிமையில் தவம்புரிதல்),2.வீரநிலை(ஆண்-பெண் சேர்ந்து தவம்புரிதல்),3.திவ்யநிலை (பிரம்மஞானத்திற்கு பிறகு வரும்நிலை)இவைகளை வேகமாக கடந்து எங்கும் தன்னைக்காணக்கூடிய திவ்யநிலையை உரிய காலத்தில் அடைந்துவிடுவார்கள்.மற்றவர்கள் வீரநிலையை தாண்டுவற்குள் பிறவி முடிந்துவிடும்.
-
பிரேமபக்தி என்று சொல்லப்படும் பேரானந்தத்தை அவதாரபுருஷர்களால்தான் சுவைக்க முடியும்.மற்றவர்கள் அந்த நிலையை அடையும்போது அதன் ஆனந்தத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் உடலைவிட்டுவிடுவார்கள்.
-
அவதாரபுருஷர்களின் உடலில் எல்லையற்ற சக்தியை தாங்கும் தன்மை இருக்கும்.அவர்களது மனம் பிரபஞ்ச மனத்துடன் இணைந்திருக்கும்.எனவே அவரிடம் வருபவர்களைப்பற்றிய முழுவிபரமும் உடனே தெரிந்துவிடும்.உலகத்தை தன் விருப்பப்படி மாற்றி அமைக்க அவதாரபுருஷர்களால்தான் முடியும்.
-
தனக்கு முன்பு வந்த மகான்கள் என்ன செய்துள்ளார்கள் என்பதைப்பற்றியெல்லாம் அவதாரபருஷருக்கு தெரியும்.பிரபஞ்சத்தில் ஏற்கனவே உயர்உலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் தேவர்கள் முதல் அனைவரும் அவதாரபுருஷருக்கு உதவி செய்வார்கள்.ஆணவத்தால் உதவிசெய்ய மறுப்பவர்கள் கீழ்நிலைக்கு இறக்கப்படுவார்கள்
-
அவதாரபுருஷர் வரும்போது இவரால் தங்களுக்கு ஆபத்து என்பதை எதிரிகள் உள்ளுணர்வால் அறிந்துகொள்வார்கள்.அவர்கள் தங்களைஅறியாமலே ஒன்றுகூடுவார்கள். அவரை அழிப்பதற்காக தன்னால் ஆன எல்லா முயற்சிகளையும் செய்து முடிவில் அழிந்துபோவார்கள்
-
சாதாரண பாமரன் முதல் பெரிய மகான்வரை உள்ள அனைவரும் அவரால் ஈர்க்கப்படுவார்கள்.ஒவ்வொருவரும் இவர் தனக்குரியவர் என்று நினைப்பார்.
-
தீயவர்களும் அவரால் ஈர்க்கப்படுவார்கள்.ஆனால் சூரியனைக்கண்ட புழு மறைவிலிருந்து தானாக வெளிவந்து சூரியனின் சூடுதாங்காமல் இறந்துபோவது போல,தீயவர்களின் குணம் காரணமாக அவர்களாகவே வீணாக எதிர்த்து அழிந்துபோவார்கள்.
-
சிறிதளவு ஆன்மீக சக்தி வந்தாலோ,பெரும் புகழ் வந்தாலோ சாதார மனிதர்களால் தாங்கிக்கொள்ள முடியாது.ஆனால் உலகமே புகழ்ந்தாலும் அவதாரபுருர்கள் திலைதடுமாறுவதில்லை.ஆணவம் ஏற்படுவதில்லை.
-
சமாதிநிலையில் பேரானந்தத்தை எப்படியாவது ஒருமுறை சுவைத்துவிட்டால்,சாதாரண மனிதன் இவ்வுலகிற்கு மீண்டும் வரமாட்டான்.ஆனால் அவதாரபுருஷர்கள் இந்த ஆனந்தத்தை எப்போதும் சுவைத்துக்கொண்டிருப்பார்கள் இந்த ஆனந்தத்தை சுவைக்கும்போதே,அதை மற்றவர்களுக்கும் எப்படி கொடுப்பது என்று சிந்திப்பார்கள்
-
முக்தியை அடைய விரும்புபவர்கள்,உண்மையான நேர்மையானவர்கள், தன்னை அறியாமலேயே இவரை சந்திப்பார்கள்.ஏதோ ஒரு சக்தி அவர்களை இவர்களிடம் இழுத்துக்கொண்டுவரும்.அதன் காரணமாக மிகவேகமாக ஆன்மீகத்தில் முன்னேறுவார்கள்.
-
சாதாரண மனிதனைப் பொறுத்தவரை பிரம்மஞானம் பெற்ற பிறகு அவனது கடமைகள் அனைத்தும் முடிந்துவிடும்.அதன்பிறகு உடல்நிலைக்காது.அவதாரபுருஷர்களை பொறுத்தவரை பிரம்மஞானம் பெற்ற பிறகுதான் அவர்களது பணி துவங்கும்.அதன்பிறகுதான் தான் எதற்காக இந்த பூமிக்கு வந்தோம் என்பது அவர்களுக்கு புரியும்
-
சாதாரண சாதகர்கள் இந்த உலகத்தைவிட்டு எப்போது செல்லலாம் என நினைப்பார்கள்.உடலை தடையாக நினைப்பார்கள்.ஆனால் அவதாரபுருஷர்களிடம் உடல் பற்று காணப்படும்.இந்த உடலை எப்படி மக்கள் பணியில் ஈடுபடுத்தலாம் என்று அவர்கள் யோசிப்பார்கள்.தேவையான உணவு கொடுத்து அதை பேணிபாதுகாப்பார்கள்.
-
அவதாரபுருஷர் உலக அன்னையான மகாமாயையில் துணையாலேயே அனைத்து பணிகளையும் செய்வார்
-
உலகத்தை சமநிலைப்படுத்தும் தங்களின் பணி நிறைவுற்றபிறகு உடே சமாதியில் புகுந்து ஈஸ்வரநிலைக்கு சென்றுவிடுவார்கள்.
-
கட்டுரை...சுவாமி வித்யானந்தர்(11-7-2018)
-

Tuesday, 10 July 2018

சுவாமி விவேகானந்தரின் வீரமொழிகள்-3


சுவாமி விவேகானந்தரின் வீரமொழிகள்-3
-
ஏழையிடமும் பலவீனரிடமும் நோயுற்றோரிடமும் சிவ பெருமானைக் காண்பவனே உண்மையில் சிவபெருமானை வழிபடுகிறான். விக்கரகத்தில் மட்டுமே சிவபெருமானைக் காண்பவனின் வழிபாடு ஆரம்ப நிலையில் உள்ளது.தூய்மையற்ற உள்ளத்துடன் கோயிலுக்குச் செல்லகின்ற ஒருவன் ஏற்கனவே இருக்கின்ற தன் பாவங்களுடன் மேலும் ஒன்றைக் கூட்டுகிறான்,
-
ஒரு மனிதனை நிமிர்ந்தெழுந்து செயல்புரிய வைப்பது எது? பலம். பலமே நன்மை, பலவீனம்தான் பாவம்.
----
அச்சமின்மை என்பதே இப்போது போதிக்கப்பட வேண்டிய ஒரே மதம். உலக வாழ்விலும் சரி மத வாழ்விலும் சரி அச்சம்தான் எல்லா அழிவுகளுக்கும் பாவங்களுக்கும் மறுக்க முடியாத காரணமாக இருக்கிறது. அச்சம்தான் துன்பத்தைக் கொண்டு வருகிறது. அச்சம் தான் சாவைக் கொண்டு வருகிறது. அச்சம்தான் தீமைகளைப் பெருக்குகிறது.
----
அச்சம் எதனால் உண்டாகிறது? நம் சொந்த இயல்பை அறியாததால்தான். நாம் ஒவ்வொருவரும் அரசர்களுக்கெல்லாம் பேரரசரின் வாரிசுகள். நாம் கடவுளின் அம்சமே, அல்ல அல்ல வேதாந்தத்தின் படி நாம் கடவுளே. சிறிய மனிதர்களாக நம்மை நினைத்து, அதனால் சொந்த இயல்பை மறந்திருந்தாலும் நாம் கடவுளே.
---
ஆன்மாவின் இயல்பை அறியும்போது சிறிதும் வலிமையற்றவர்களுக்கும் மிகவும் இழிவானவர்களுக்கும் , மிகவும் துன்பப்படும் பாவிகளுக்கும் கூட நம்பிக்கை வருகிறது. நம்பிக்கை இழக்காதீர்கள் என்றே நம் சாஸ்திரங்களும் முழங்குகின்றன.
-
ஐரோப்பா தன் நிலையை மாற்றி, ஆன்மீகத்தைத் தன் அடிப்படையாகக் கொள்ளாமல் போகுமானால் நொறுங்கிச் சுக்கலாகச் சிதறிவிடும்ஐரோப்பாவை எது காக்க முடியும் தெரியுமா ? உபநிடதங்கள் கூறுகின்ற ஆன்மீகம் மட்டுமே.
----
பல்வேறு மதப் பிரிவுகளும் தத்துவங்களும் சாஸ்திரங்களும் இருந்தாலும் இவை அனைத்திற்கும் அடிப்படையாக ஒரு கருத்து, ஒரு கொள்கை உள்ளது. அது மனிதனின் ஆன்மாவில் நம்பிக்கை . இந்தக் கருத்தினால் உலகின் போக்கையே மாற்ற முடியும்.
----
உங்கள் விதி உங்கள் கைகளில் இருக்கிறது.உங்களுடைய சொந்த வினை தான் உங்களுக்காக இந்த உடம்பை உற்பத்தி செய்திருக்கிறது. உங்களுக்காக இதை வேறு யாரும் செய்யவில்லை
---
எவ்வளவு தான் அரசியல் மற்றும் சமுதாய மாற்றங்களைக் கொண்டு வந்தாலும் தீமைகளைத் தீர்க்க முடியாது . அக வாழ்வில் ஓர் உறுதியான மாற்றம் மட்டுமே வாழ்க்கையின் தீமைகளை நீக்கும்.
----
வேதாந்தம் மட்டுமே உலகம் தழுவிய மதமாக முடியும்; வேறெந்த மதமும் அத்தகைய ஒன்றாக இருக்க முடியாது
நமது மதத்தைத் தவிர, ஏறக்குறைய உலகின் மற்ற பெரிய மதங்கள் எல்லாமே அதைத் தோற்றுவித்த ஒருவர் அல்லது பலரது வாழ்க்கையோடு இணைக்கப்பட்டடுள்ளன.
---
நமது கடவுள் சகுணமாகவும் அதே வேளையில் நிர்க்குணமாகவும் இருப்பதைப்போல் நமது மதமும் அழுத்தமான வகையில் தத்துவங்களின் மீது கட்டப்பட்ட ஒன்றாகவும், அதே நேரத்தில் மனிதர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப எண்ணற்ற விதங்களில் பின்பற்றுவதற்கு ஏற்ற விதமாகவும் அமைந்துள்ளது.
----
நமது மதத்தை விட அதிகமான அவதார புருஷர்களை, மகான்களை, தீர்க்கதரிசிகளை வேறு எந்த மதம் தந்துள்ளது இன்னும் எண்ணற்றறோரைத் தருவதற்கும் தயாரக இருக்கிறது?
----
உலக சாஸ்திரங்கள் அனைத்திலும் வேதாந்த போதனைகள் மட்டுமே, இக்கால விஞ்ஞானத்தின் புறவுலக ஆராய்ச்சி முடிவுகளோடு முழுக்கமுழுக்க இயைபு உடையதாக உள்ளது.
----
அன்பு மட்டுமே நிலைக்கக்கூடிய ஒன்று வெறுப்பு அல்ல; மென்மைதான் நெடுங்காலம் வாழ்வதற்குரிய வலிமையையும் பலனையும் தரவல்லது அன்றி வெறும் காட்டுமிராண்டித்தனமோ உடம்பின் வலிமையோ அல்ல
-
பிரபஞ்சம் முழுவதிலும் ஒரே ஓர் ஆன்மாதான் உள்ளது. இருப்பவை எல்லாம் ஒன்றே.
உண்மையில் நீங்ககளும் நானும் ஒன்றே. இதுதான் இந்தியத் தத்துவத்தின் ஆணித் தரமான கருத்து இந்த ஒருமைதான் எல்லா நீதி நெறிக்கும் ஆன்மீகத்திற்கும் அடிப்படை இது நமது பாமர மக்களுக்கு எவ்வளவு அவசரமாகத் தேவையோ, அவ்வுளவு அவசரமாக ஐரோப்பியர்களுக்க தேவைப்படுகிறது.
-
நமக்கு இது அழுவதற்கான நேரமல்ல ஆனந்தக் கண்ணீர்கூட இப்போது கூடாது. போதுமான அளவு நாம் அழுதாயிற்று.
---
நமது நாட்டிற்கு வேண்டுவது இரும்பாலான தசையும், எஃகாலான நரம்புகளும், அவற்றுடன் மரணத்தையும் நேருக்கு நேராகச் சந்திக்கும் சங்கல்பமும் கொண்ட மனிதர்கள்தான் நமக்கு இப்போது தேவை.
---
நம்பிக்கை, நம்பிக்கை, நம்மிடம் நம்பிக்கை, நம்பிக்கை ,இறைவனிடம் நம்பிக்கை இதுவே மனோன்னதத்தின் ரகசியம்.
--
உங்களுடைய புராண தெய்வங்கள் முப்பத்து முக்கோடிபேரிடமும், வெளிநாட்டினர் அவ்வப்போது உங்களிடமே திணிக்கின்ற அனைத்து தெய்வங்களிடமும் நம்பிக்கை வைத்து, அதே வேளையில் உங்களிடம் உள்ள எல்லையற்ற சக்தியின் மேல் உங்களுக்கு நம்பிக்கை இல்லாவிட்டால்உங்களுக்குக் கதிமோட்சமில்லை.
-
விவேகானந்தர் விஜயம்

சுவாமி விவேகானந்தரின் வீரமொழிகள்-2



சுவாமி விவேகானந்தரின் வீரமொழிகள்-2
-
வாழ்க்கை என்பது ஒரு போர்க்களம் ஒரு போராட்டம். இதை மக்கள் எதிர்கொள்வதற்கும், அதில் வெற்றி பெறுவதற்கும் உரிய தகுதியைத் தருவதாகக் கல்வி இருக்க வேண்டும்.
-
நீ ஐந்தே ஐந்து உயர்ந்த கருத்துகளைக் கிரகித்துக்கொண்டு, அவற்றை நீ உன்னுடைய வாழ்க்கையிலும் நடத்தையிலும் ஊடுருவி நிற்கச் செய்தால் ஒரு பெரிய புத்தகசாலை முழுவதையும் மனப்பாடம் செய்திருப்பவனைவிட நீயே அதிகம் கல்வி கற்றவன் ஆவாய்.
-
என்னைப் பொறுத்த வரையில் கல்வியின் சாரம் மனஒருமைப்பாடே தவிர, தகவல்களைச் சேகரிப்பதல்ல. நான் மீண்டும் படிக்க நேர்ந்தால், ஒருபோதும் தகவல்களைச் கேரிக்கமாட்டேன். முதலில் மன ஒருமைப்பாட்டையும் பற்றின்மையையும் வளர்த்துக்கொண்டு, பின்னர் அந்தப் பரிபூரணமான கருவியால் நான் விரும்பும்போது தகவல்களைச் சேகரித்துக்கொள்வேன். குழந்தையை வளர்க்கும்போது இந்த இரு ஆற்றல்களையும் அவர்களிடம் வளர்க்க வேண்டும்.
-
ஆன்மிக ஞானத்தைப் போதித்தால், அதன்பின்னர் உலகஅறிவும் நீங்கள் விரும்புகின்ற மற்ற எல்லா அறிவும் உங்களைத் தொடர்ந்து வரும். ஆனால் மதத்தை விலக்கிவிட்டு வேறு எந்த அறிவைப் பெற நீங்கள் முயன்றாலும் இந்தியாவில் உங்கள் முயற்சி வீண் என்பதைத் தெளிவாகச் சொல்லிக்கொள்கிறேன்.
-
தமக்குத்தாமே உதவிக்கொள்ளுமாறு மக்களுக்குப் பயிற்சி தராவிட்டால், உலகின் செல்வம் அனைத்தையும் சேர்த்தாலும் ஒரு சிறிய இந்தியக் கிராமத்திற்குக்கூட உதவி செய்ய முடியாது.
-
கல்வியும், அறவாழ்க்கையில் ஈடுபாடும் கொண்ட பெண்கள் உள்ள குடும்பங்களில்தான் மாமனிதர்கள் பிறப்பார்கள்.
கல்வியாக இருக்கட்டும் அல்லது, வேறு எதுவாக இருக்கட்டும், ஆன்மிகத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை என்றால் அதில் சில குறைபாடுகள் நேர்வது இயல்புதான். இப்போது ஆன்மிகத்தை மையமாகக்கொண்டே பெண் கல்வியைப் பரப்ப வேண்டும்.
-
தற்போது இந்தியாவில் மகத்தான மத மறுமலர்ச்சி தோன்றியுள்ளது. இதில் பெருமை இருப்பதைப் போலவே ஆபத்தும் உள்ளது.ஏனெனில் சில வேளைகளில் இந்த மறுமலர்ச்சி கொள்கைவெறியை வளர்க்கிறது, சில நேரங்களில் அந்த வெறி எல்லை கடந்து போய்விடுகிறது. மறுமலர்ச்சிக்குக் காரணமானவர்கள் கூட அதைக் கட்டுப்படுத்த முடியாத நிலை வருகிறது. எனவே எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
-
நாம் மீண்டும் எழுச்சி பெற வேண்டுமானால், சாதாரண மக்களிடையே ஆன்மீகத்தைப்  பரப்ப வேண்டும்.
-
நாம் ஒவ்வொருவரும் மகத்தானவர்களாக இருப்போம். அப்பொழுது நம் உதடுகளிலிருந்து வெளிவருகின்ற ஒவ்வொரு வார்த்தையும் இணையற்ற பாதுகாப்பை அள்ளி வழங்குவதாக இருக்கும்.
-
நமது புனிதமான தாய் திருநாடு ஆன்மீகமும் தத்துவமும் தழைத்த நாடு, ஆன்மீகச் செம்மல்களைப் பெற்ற நாடு, துறவின் உன்னத நாடு. இங்கு, இங்கு மட்டுமே மிகப் பழங்காலத்திலிருந்து மிக நவீன காலம் வரை, வாழ்வின் மிகவுயர்ந்த லட்சியம் மனிதனுக்குக் காட்டப்பட்டுள்ளது.
----
உலகம் முழுவதன் கண்களும் ஆன்மீக உணவிற்காக இப்போது இந்தியாவை நோக்கித் திரும்பியுள்ளன; எல்லா இனங்களுக்கும் இந்தியா அதைத் தந்தாக வேண்டும். மனித குலத்திற்கான மிகச் சிறந்த லட்சியம் இங்கு மட்டுமே உள்ளது.
----
நம் இறைவன் எல்லா மதங்களின் இறைவன். இந்தக் கருத்து இந்தியாவுக்கு மட்டுமே சொந்தமானது, உலகின் வேறு சாஸ்திரங்கள் எதிலாவது இத்தைகைய கருத்தைக் காட்ட முடியுமா என்று உங்களுக்குச் சவால் விடுகிறேன்.
---
மனித வாழ்வின் அடிப்படைப் பிரச்சினைகளில் உலக மக்களுக்கு ஒளி காட்டுகின்ற தார்மீகப் பொறுப்பு பாரதத் தாயின் பிள்ளைகளிடம் உள்ளது. அதற்குத் தகுதி படைத்தவர்களாகத் தங்களை ஆக்கிக் கொள்ள வேண்டிய கடமை அவர்களுக்கு உள்ளது.
-
நம் நன்மையை மட்டுமே நினைக்கின்ற சுயநலம், பாவங்கள். அனைத்திலும் முதற்பாவமாகும். நானே முதலில் உண்பேன் . மற்றவர்களைவிட எனக்கு அதிகமான பணம் வேண்டும் , எல்லாம் எனக்கே வேண்டும் மற்றவர்களுக்கு முன்னால் நான் சொர்க்கத்தை அடைய வேண்டும் என்றெல்லாம் நினைப்பவன் சுயநலவாதி.
-
சுயநலம் கொண்டவன் எல்லா கோயில்களையும் வழிபட்டிருந்தாலும், புண்ணியத் தலங்கள் அனைத்தையும் பார்த்திருந்ததாலும் சிறத்தைதயப்போல் தன் உடம்பு முழுவதிலும் மதச் சின்னங்களைத் தீட்டிக் கொண்டிருந்தாலுமும் அவன் சிவ பெருமானிடமிருந்து விலகியே இருக்கிறான்
-
லௌகீக அடிப்படையில் ஆகட்டும், அறிவு அல்லது ஆன்மீக அடிப்படையில் ஆகட்டும், இறைவன் பாரபட்சமின்றி, ஒன்றில்லாவிட்டால் மற்றொன்றை ஒவ்வொருவருக்கும் அளித்து எல்லோரையும் சமமாகவே வைத்திருக்கிறார். எனவே நாம் தான் உலகத்தைக் காப்பவர்கள் என்று நினைக்கத் தேவையில்லை.
------------
விவேகானந்தர் விஜயம்

சுவாமி விவேகானந்தரின் வீரமொழிகள்-1


சுவாமி விவேகானந்தரின் வீரமொழிகள்-1
-
ஒரு கருத்தை எடுத்துக் கொண்டு அதை ஒட்டியே வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள். அதைப் பற்றிய சிந்தனையில் மூழ்கி கனவு காணுங்கள். உடலின் ஒவ்வொரு அணுவிலும் அந்த கருத்தே நிறைந்திருக்கட்டும். வெற்றிக்கு இது தான் வழி.
-
ஏழைகளிடம், சிவனைக் காண்பவனே உண்மையில் சிவனை வழிபடுகிறான். மற்றவர்கள் வழிபாட்டின் ஆரம்ப நிலையிலேயே இருக்கிறார்கள்.கடவுள் ஒவ்வொரு உயிரிலும் குடி கொண்டிருக்கிறார் என்ற உண்மையை அனைவரும் உணர வேண்டும்.ஒரு லட்சியத்தை எடுத்துக் கொண்டு அதைப் பற்றியே கனவு காணுங்கள். அதைச் சுற்றியே உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அடியையும் எடுத்து வையுங்கள்.
-
நீ பற்றற்றிரு; உடல் வேலை செய்யட்டும்; மூளையின் பகுதிகள் வேலை செய்யட்டும்; ஆனால் ஓர் அலைகூட மனத்தை வெல்ல இடம் கொடுக்காதே.ஓர் அன்னியன் போலவும் வழிப்போக்கன் போலவும் வேலை செய், ஆனால் உன்னைத் தளைகளுக்கு உள்ளாக்காதே. அது அஞ்சத்தக்கது.
-
மேலை நாட்டு அறிவியல் நுட்பத்தோடு வேதாந்த கருத்துக்களையும் இணைத்துக் கொள்ளுங்கள். அப்போது தான் முழுமை பெற முடியும்.
-
உன்னை நீயே பலவீனன் என்று நினைப்பது உனக்கு பொருந்தாது. "நான் ஒரு வெற்றி வீரன்' என்று எப்போதும் உனக்குள்ளேயே சொல்லிக்கொள். மின்னல் வேகத்தில் உனக்குள் புதிய மாற்றம் ஏற்படுவதைக் காண்பாய்.
-
லட்சியமில்லாதவன் இருட்டான பாதையில் தடுமாறி சென்று கொண்டிருப்பான். எனவே, குறிக்கோளை ஏற்று வாழுங்கள்.வலிமை, வளமை, அறிவுக்கூர்மை கொண்ட இளமைக்காலத்திலேயே இறைவனை அறிய முயலுங்கள்.
-
வாழ்வில் எந்த அளவுக்கு உயர நினைக்கிறாயோ, அந்த அளவுக்கு கடுமையான சோதனைகளையும் நீ கடந்தாக வேண்டும்.மரணம் வருவது உறுதியாக இருக்கும்போது ஒரு நல்ல காரியத்திற்காக உயிரை விடுவது மேல்.
-
உலகவாழ்வில் இருந்து தப்பி ஓட முயற்சி செய்ய வேண்டாம். வெற்றியோ தோல்வியோ போராடுங்கள்.பிறருக்காகச் செய்கின்ற சேவையால், நம்மைத் தூய்மைப்படுத்திக் கொள்ள முடியும்.
-
பாமரன் பண்புள்ளவனாகவும், பண்புள்ளவன் தெய்வமாகவும் உயரவேண்டும். இதுவே ஆன்மிகத்தின் பயன்.தெய்வீகத்தன்மை இல்லாமல் பெறும் மிதமிஞ்சிய அறிவும், ஆற்றலும் மனிதர்களை மிருகங்களாக்கி கீழ்நிலைக்குத் தள்ளிவிடும்.
-
சுயநலத்தால் சுகம் கிடைக்கும் என்று மனிதன் முட்டாள்தனமாக நினைக்கிறான். உண்மையில், தன்னலத்தை ஒழிப்பதில் தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது.
-
நம்மை நாமே பெரிதாக எண்ணிக் கொண்டு அகந்தை கொள்வது கூடாது. சாதாரணமானவர்களாக நம்மை கருதும் போது தான், நம்மிடம் கருணையும், பணிவும், நல்ல சிந்தனையும் வெளிப்படத் தொடங்கும்.
-
எல்லா ஆற்றல்களும் மனிதனுக்கு இயல்பிலேயே இருக்கின்றன. ஆன்மிகத்தின் உதவியால் தடைகளைப் போக்கி நாம் நிறை நிலையை அடைய வேண்டும். ஆன்மிகத்தின் உதவியால் தீயவர்கள் கூட மகானாக முடியும்.
-
இந்த உலகம் இறைவனுக்குச் சொந்தமானது. உலகப்பொருட்களில் எல்லாம் அவரே இருக்கிறார். இந்த கோணத்தில் பார்க்கத் தொடங்கிவிட்டால் நம் மனம் உயர்வு பெறும்.
-
பணம் மட்டுமே வாழ்க்கையல்ல. பணத்தை தவிர, நாம் பிறருக்குச் செய்யும் நன்மையும், தெய்வபக்தியும் நம் மனதில் ஆற்றலை பெருகச் செய்பவை தான்.மற்றவர்களின் உதவியை எதிர்பார்த்து நடப்பவன் சத்தியத்தைப் பின்பற்ற முடியாது.அரிய செயல்கள் பெரிய உழைப்பின்றி ஒருபோதும் முடிந்ததில்லை.
--------
விவேகானந்தர் விஜயம்

நீண்ட ஆயுள் கிடைத்தாலும் அதனால் நிரந்தரமான மகிழ்ச்சியை அடைய முடியாது



நீண்ட ஆயுள் கிடைத்தாலும் அதனால் நிரந்தரமான மகிழ்ச்சியை அடைய முடியாது
-
ஒரு மன்னன் நீண்ட ஆயுளுடன் வாழவேண்டுமென்று முடிவுசெய்து அதை பெறுவதற்காக கடுமையான தவம் இருந்தான்.பல ஆண்டுகள் தவத்திற்கு பிறகு இறைவன் காட்சி கொடுத்து நீ எத்தனை ஆண்டுகள்உயிரோடு வாழவேண்டுமென்று விரும்புகிறாயோ அத்தனை ஆண்டுகள் வாழ்ந்துகொள் என்று வரம் கொடுத்தார்.
-
கேட்ட வரம் கிடைத்ததால் மன்னன் மகிழ்ச்சியடைந்தான்.இனிமேல் மரணத்தை பற்றி சிந்திக்க வேண்டாம்.இந்த உலகம் உள்ளவரை மகிழ்ச்சியாக வாழலாம் என்று நினைத்துக்கொண்டான்.மன்னனுக்கு மரணம் இல்லை என்று கேள்விப்பட்டு அவரது மனைவி,சொந்தங்கள், மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியடைந்தார்கள்.மன்னனைப் பார்க்க மக்கள் தினமும் வருவதுண்டு. மன்னரும் அன்பாக நலம் விசாரித்து தேவையான உதவிகளை கொடுத்து அனுப்புவார்.
-
நாட்கள் ஆக ஆக அவரது உறவினர்கள் வயோதிகம் காரணமாக மரணமடைந்தார்கள்,நண்பர்கள் என்று கருதியவர்கள் மரணமடைந்தார்கள்.அவரை பார்க்க வரும் மக்களில் நெருக்கமானவர்களும் மரணமடைந்தார்கள்.தனக்கு ஆறுதலாக இருந்த ஒவ்வொருவரும் மரணமடைவதைக்கண்ட மன்னரின் மனம் வேதனை அடைந்தது.இவர்கள் எங்கேசென்றார்கள்? இனிமேல் இவர்களை பார்க்கவே முடியாதே.இவர்கள் இல்லாமல் நான் மட்டும் எப்படி இன்பத்தை அனுபவிப்பேன் என்ற எண்ணம் வரத்தொடங்கியது
-
வருடங்கள் செல்லச்செல்ல தன்னை சுற்றியுள்ளவர்களின் மரணத்தை கண்டு,வாழ்க்கையின்மீதே வெறுப்பு ஏற்பட்டது.நீண்ட ஆயுள் என்பது நீண்ட இன்பத்தை மட்டும் தராது நீண்ட துன்பத்தையும் தரும் என்பதை மன்னன் புரிந்துகொண்டான்.தான் யார்மீது அதிக பாசம் செலுத்துகிறேனோ அவர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு இல்லாமல் போய்விடுகிறார்கள்.நான் மட்டும் நீண்ட ஆயுள் பெற்று வாழ்ந்து என்ன லாபம் என்று தோன்றியது.
-
அவனது மனத்தில் வாழ்க்கையின்மீது வெறுப்பு ஏற்பட்டது.இறைவா நீண்ட ஆயுள் தேவையில்லை.எங்கே சென்றால் இன்பமும் துன்பமும் இல்லாதநிலை சமநிலை ஏற்படுமோ அந்த நிலையை கொடு என்று வேண்டிக்கொண்டான்..அவனது உயிர் உடலைவிட்டு நீங்கியது.அவனுக்கு முக்தி  கிடைத்தது...
-
கதை--சுவாமி வித்யானந்தர்
-

நூறு தமிழ் இளைஞர்களாவது உலகிலிருந்து விலகி நின்று,நாடுநாடாகச் சென்று சத்தியப்போரை நடத்துவதற்கு ஆயத்தமாகும்போதுதான்

சுவாமி விவேகானந்தர் லண்டனிலிருந்து 1895-ல் தமிழ் இளைஞர்களுக்கு எழுதிய கடிதம்
-
நான் விலகியதும் இந்த பணி(வெளிநாடுகளில் வேதாந்தத்தை பிரச்சாரம் செய்தல்) பேரளவிற்கு பாதிக்கப்படுவது நிச்சயம்.
---------------------
பின்னர் ஏதாவது நிகழும்.அதை மீண்டும் சரிப்படுத்த வலிமையான ஒரு மனிதன் தோன்றுவான்.
--------------------
எது நல்லது என்பது இறைவனுக்கே தெரியும்.வலிமையான உண்மையான சிலர் கிடைத்தால் அமெரிக்காவின் பாதியை பத்து ஆண்டுகளில் வென்றுவிட முடியும். ஆனால் அத்தகையோர் எங்கே? நீங்கள் எல்லோரும் மடையர்கள்(தமிழர்களை பார்த்து கூறுகிறார்) சுயநலம் பிடித்த கோழைகள்.உதட்டளவு தேச பக்தர்கள்.நாங்கள் மதவாதிகள் என்று கூறிக்கொள்கிறீர்கள்.தமிழர்களிடம் மற்றவர்களைவிட ஊக்கம் அதிகம் உள்ளது.ஆனால் அந்த முட்டாள்கள் ஒவ்வொருவனும் திருமணம் ஆனவன். திருமணம்! திருமணம்! ஏதோ அந்த ஒரு உறுப்புடன் பிறந்தவன்போல் அலைகிறான்...இல்லறத்தானாக இருக்க விரும்புவது நல்லதுதான்.ஆனால் இப்போது தமிழர்களிடையே நாம் விரும்புவது திருமணம் அல்ல.திருமணமின்மையே தேவை..
-
என் மகனே,நான் வேண்டுவது இரும்பைப் போன்ற தசையும் எக்கை ஒத்த நரம்புகளுமே.அவற்றுடன்,இடி எதனால் ஆக்கப்பட்டுள்ளதோ அதே பொருளால் செய்யப்பட்ட மனம் வேண்டும்.வலிமை,ஆண்மை,வீரம்,பிரம்மதேஜஸ் போன்றவை. நமது அழகான இளைஞர்களிடம் உள்ளது.ஆனால் திருமணம் என்று அழைக்கப்படுகின்ற.இந்த மிருகத்தனமான பலிபீடத்தில் லட்சக்கணக்கானோர் படுகொலை செய்யப்படாமல் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! இறைவா, எனது குரலுக்கு செவிசாய்ப்பாய்! இதய சுத்தமான,கல்வி பயின்ற நூறு தமிழ் இளைஞர்களாவது உலகிலிருந்து விலகி நின்று,நாடுநாடாகச் சென்று சத்தியப்போரை நடத்துவதற்கு ஆயத்தமாகும்போதுதான் தமிழகம்(அப்போது சென்னை மாகாணம்) விழித்தெழும்.இந்தியாவிற்கு வெளியே ஒரு அடி அடிப்பது இந்தியாவிற்குள் ஒரு லட்சம் அடிகள் அடிப்பதற்கு சமம்.எம்பெருமான் திருவுள்ளம் கொண்டால் எல்லாம் நிகழும்
-
அன்புடன்-விவேகானந்தா
-
விவேகானந்தரின் ஞானதீபம்-புத்தகம்10பக்கம்396