Saturday, 24 May 2025

ஆன்மீகமும்-விஞ்ஞானமும்-பாகம்-10

ஆன்மீகமும்-விஞ்ஞானமும்-பாகம்-10

..

இந்த உலகத்தில் ஏன் துன்பம் இருக்கிறது?

..

இந்த உலகமே துன்பத்தால்தான் சூழப்பட்டுள்ளது என்றே நமது முன்னோர்களும் கூறியுள்ளார்கள். நமக்கு கிடைக்கும் உணவே பிற உயிர்களைக் கொன்றோ அல்லது அவைகளை அழித்தோதான் கிடைக்கிறது. ஒரு உயிர் வாழவேண்டுமானால் இன்னோர் உயிர் அழிய வேண்டியிருக்கிறது. இது ஏன்? கடவுள் ஏன் இப்படிப்பட்ட துன்பம் நிறைந்த உலகைப் படைக்க வேண்டும்?

..

நாம் சிறுமதி கொண்டவர்கள். நமக்கு முன்னால் உள்ள சிறிய உலகை மட்டுமே நம்மால் அறிய முடியும். பரந்து விரிந்த பிரபஞ்சத்தைப்பற்றி நம்மால் அறிய முடிவதில்லை. ஒரு சிறிய புழுவுக்கு மிகச்சிறிய இடத்தைப்பற்றிய புரிதல் மட்டுமே உள்ளது. அதேபோல பரந்து விரிந்த இந்த பிரபஞ்சத்தில் நாம் அறிந்தது மிகக்குறைவே.

..

இந்த பரந்த பிரபஞ்சத்தில் எங்கும் எதிலும் சமநிலையே நிலவுகிறது. அதை நாம் பார்க்கும் சமகண்ணோட்டத்தில் பார்த்தால்தான் புரிந்துகொள்ள முடியும். ஒரு இடத்தில் மேடு இருந்தால் அதன் பக்கத்தில் பள்ளம் இருக்கும். வெளிச்சம் எங்கே முடிகிறதோ அங்கே இருள் இருக்கும். இன்பம் எங்கே முடிகிறதோ அங்கே துன்பம் இருக்கும்.

நாம் ஒன்றை மட்டுமே விரும்புகிறோம். இன்பத்தை விரும்புகிறோம் துன்பத்தை வெறுக்கிறோம்.

துன்பம் முடியும் இடத்தில் இன்பம் வந்தே தீரும்.

..

இன்பமும் துன்பமும், இருளும் ஒளியும் ஒன்றாக இருக்கும் நிலை ஒன்று உள்ளது.அதை சமநிலை என்கிறோம்.

அந்த சமநிலையையில் இருப்பவர் கடவுள். அவரால் துன்பத்தையும் உணரமுடியாது இன்பத்தையும் உணர முடியாது.

அவருக்கு முன் இருளும் ஒளியும் சமமாகிவிடுகிறது. இருளும் ஒளியும் சமமாக உள்ள இடத்தில் உயிர்கள் எப்படி இருக்க முடியும்? பல்வேறு சூரியன்கள்,கிரகங்கள் எப்படி இருக்க முடியும்? எதுவுமே இல்லை.

அங்கே அவர் மட்டுமே இருக்கிறார். அவரைச்சுற்றியுள்ள பிரபஞ்சம் சமநிலையில், எந்த அதிர்வுகளும் இல்லாமல் இருக்கிறது.அதை இப்படியும் சொல்லலாம் மிகஉச்ச அதிர்வு நிலையை அடைந்ததால் அதிர்வற்று உள்ளது.

..

அதிர்வற்றநிலையில் உள்ள ஒரு பொருளை இந்த உலகத்தில் பார்க்க முடியுமா? முடியாது. மிக உச்ச அதிர்வுநிலையில் உள்ள ஒரு பொருளை இங்கே பார்க்க முடியுமா? முடியாது. மிக உச்ச அதிர்வுநிலையை ஒரு பொருள் அடையும்போது அது அதிர்வற்றநிலையை அடைந்துவிடுகிறது.

இதே நிகழ்வு ஒரு மனிதனிலும் நடக்கிறது. மனிதனின் எண்ணம் மிகஉயர்ந்த அதிர்வுநிலைக்கு செல்லும்போது அதிர்வற்றநிலையை அடைகிறான். அதிர்வு எதிலிருந்து உருவாகிறது? வாக்கிலிருந்து. நாம் பேசும்போது நம்மிடமிருந்து வெளிப்படும் அதிர்வுதான் வார்த்தை. இதே அதிர்வு மனதிற்குள் மந்திரத்தை உச்சரிக்கும்போது ஏற்படுகிறது.

மந்திரத்தை தொடர்நு எந்த இடைவெளியும் இல்லாமல் உச்சரிக்கும்போது மிகஅதிக அதிர்வு உண்டாகிறது, இது மிகதீவிரமாகி ஒருநிலையில் அதிர்வற்ற நிலைக்கு சென்றுவிடுகிறது. அப்போது கடவுளும் நாமும் ஒன்றாகிவிடுகிறோம்.

..

அதிர்வுகளற்ற நிலையில் இன்பம் துன்பம் எல்லாம் சமமாகிவிடுகிறது. இந்த பிரபஞ்சமே அதிர்வுகளற்றநிலையில் இருக்கிறது.

..

இப்போது ஆரம்பத்தில் கேட்கப்பட்ட அதே கேள்விக்கு வருவோம் எதற்காக துன்பம் படைக்கப்பட்டது?

இந்த கேள்வியை இப்படியும் கேட்கலாம். எதற்காக இந்த உலகில் இன்பம் படைக்கப்பட்டது?

இன்பமே இல்லாத ஒரு உலகை ஏன் கடவுள் படைக்கவில்லை? இந்த கேள்வியை நாம் கேட்பதில்லை.

இன்பம் வேண்டுமானால் துன்பத்தையும் ஏற்கவேண்டும். துன்பம் வேண்டுமானால் இன்பத்தையும் ஏற்கவேண்டும்.

ஏதாவது ஒன்று வேண்டாம் என்றால் இரண்டையும் விடவேண்டும். இனிமேல் நான் இன்பத்தையே அனுபவிக்கப்போவதில்லை என்று முடிவுசெய்துகொண்டால் துன்பமே நமக்கு வராது.

ஆனால் இன்பத்தை நிராகரிக்கும் பலமோ நம்மிடம் இல்லை. இயற்கை நம்மை அதன் அடிமையாக வைத்திருக்கிறது.

..

இயற்கையின் கட்டுகளிலிருந்து நம்மைநாம் விடுவித்துக்கொள்ளும்வரை இன்பம் துன்பம் இரண்டும் வந்துகொண்டேதான் இருக்கும். தொடர்ந்து துன்பத்தை அனுபவித்துக்கொண்டேதான் இருப்போம்.

எதற்காக இயற்கை நம்மை இப்படி அடிமைப்படுத்தவேண்டும்? கடவுள் ஏன் இப்படி ஒரு இயற்கைளை படைக்க வேண்டும்?

இதுவும் அதே பழைய கேள்விதான். கடவுள் சமநிலையில் இருப்பவர். அவருக்கு முன்னால் இயற்கையே சமநிலையில் இருக்கிறது. இந்த பிரபஞ்சமே அதிர்வற்றநிலையில் உள்ளது. அங்கே மனிதர் இல்லை,மிருகங்கள் இல்லை, தேவர்தேவிகள் இல்லை, மும்மூர்த்திகள் இல்லை, சொர்க்கம் இல்லை,நரகம் இல்லை. உருவம் உள்ள எதுவுமே இல்லை.

அங்கே காலம் இல்லை. ஒளியும் இருளும் சமநிலையில் உள்ளது. அங்கே தூலப்பிரபஞ்சம்,சூட்சுமப்பிரபஞ்சம், காரணப்பிரபஞ்சம் மூன்றும் ஒன்றாகி அந்த ஒன்றும் அதிர்வுகளற்ற நிலையில் இருக்கிறது.

..

அப்படி அதிர்வுகளற்ற நிலையில் இருக்கும் கடவுள் ஏன் அதிர்வுகள் உள்ள பிரபஞ்சத்தைப் படைக்க வேண்டும்?

அவர் எதையும் படைப்பதில்லை. படைப்பிற்கு அப்பால் உள்ளவர் எதையும் படைப்பதில்லை.

அப்படியென்றால் இவைகள் எல்லாவற்றையும் படைத்தது யார்?

..

இந்த கேள்விக்கான விடையை தெரிந்துகொள்வோம்

.

இந்த பிரபஞ்சத்தில் எல்லாமே உள்ளது. கண்களால் காணக்கூடிய தூலப்பிரபஞ்சமாகிய சூரியர்கள்,சந்திரர்கள்,கிரகங்கள்,கல்,மண்,தாவரங்கள், விலங்குகள் மனிதர்கள் எல்லாம் உள்ளன. சூட்சும பிரபஞ்சத்தில் தேவர்கள்,தேவிகள் அவர்கள் வாழும் உலகங்கள்,உயிர்களை படைத்து காத்து அழிக்கும் மும்மூர்த்திகள்,அவர்களின் உலகங்கள், பித்ருக்களின் உலகங்கள், பேய்,பிசாசுகள் வாழும் உலகங்கள் எல்லாம் உள்ளன. காரணப் பிரபஞ்சத்தில் சிவசக்தி ஒன்றாகவும், ராதாகிருஷ்ணர் ஒன்றாகவும், புருஷபிரகிருதி ஒன்றாகவும், ஆண்பெண் ஒன்றாகவும். காதலும்காமமும் ஒன்றாகவும் பிரிக்க முடியாத படியும் உள்ளன.

இத்தோடு மகாகாரணம் என்று சொல்லும் அதிர்வுகளற்ற பிரபஞ்சமும் உள்ளது. அங்கேதான் கடவுள் உள்ளார்.

இவை ஒட்டு மொத்தமும் எப்போதும் இருக்கின்றன.

..

இந்த தூலப்பிரபஞ்சம் எப்போதும் இருக்கிறது,உயிர்கள் எப்போதும் உள்ளன.. இந்த சூட்சுமப் பிரபஞ்சமும் எப்போதும் இருக்கிறது, தேவதேவியர்,ரிஷிகள் எப்போதும் உள்ளனர்,காரணப்பிரபஞ்சமும் எப்போதும் உள்ளது. மகாகாரணநிலையில் கடவுள் எப்போதும் உள்ளார்.

..

நமக்கு எதுதேவையோ அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதோடு அதிலிருந்து வெளிப்படும் இன்பதுன்பத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தூல,சூட்சு,காரண இந்த மூன்று உலகங்களிலும் இன்பதுன்பம் உள்ளது. தூலத்திலிருந்து சூட்சுமம்,காரணம் என்று முன்னேறும்போது இன்பத்தின் அளவும் அதிகமாகிறது, முன்பத்தின் அளவும் அதிகமாகிறது.

காரண பிரபஞ்சத்தில் கிடைக்கும் இன்பத்தின் அளவு மிக உச்சம் என்றால் அதே அளவு துன்பமும் உச்சநிலையிலேயே இருக்கும்.அது இரண்டு உயிர்கள் சங்கமிக்கும் இடம், சிறிது தவறு நேர்ந்தாலும் ஒரு உயிரை இழக்க வேண்டியதுதான்.

..

இப்போது ஆரம்பத்தில் கேட்ட கேள்விக்கு விடை கிடைத்திருக்கும்.

நமக்கு இன்பம் வேண்டுமானால் துன்பத்தையும் ஏற்கவேண்டும்.

இன்பம் துன்பம் இரண்டும் வேண்டாம் என்றால் கடவுள்நிலையை அடைய வேண்டும்.

இந்த உலகத்தில் நாம் இருக்கும்வரை இன்பம் துன்பம் இருந்துகொண்டே இருக்கும்.

பிரபஞ்சம் பல நிலைகளாக உள்ளன. நாம் எந்த பிரபஞ்சத்தில் இருக்கிறோமோ அந்த நிலைக்கு ஏற்ப இன்ப துன்பங்கள் வருகின்றன.

..

தத்துவம் படிக்காதவர்களுக்கு சிலபகுதிகள் புரியாமல் இருக்கும்.

உங்கள் கேள்விகளை +919360209541 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பவும்

சுவாமி வித்யானந்தர்-கன்னியாகுமரி(25-5-2025)

 

No comments:

Post a Comment

பித்ருக்களுக்கு தினமும் உணவிட வேண்டும்

  பித்ருக்களுக்கு தினமும் உணவிட வேண்டும் .. துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை. -திருக்குறள் ...