Thursday, 22 May 2025

ஆன்மீகமும்-விஞ்ஞானமும்-பாகம்-6

 

ஆன்மீகமும்-விஞ்ஞானமும்-பாகம்-6

..

உயிரை உடலிலிருந்து பிரித்து பல்வேறு உலகங்களுக்கு செல்வது எப்படி?

..

அஷ்டாங்கயோகம் பற்றி சிலர் படித்திருப்பீர்கள்.அதில் சொல்லப்பட்டுள்ள பயி்ற்சியின் நிறைவு சமாதிநிலையை அடைவது. சமாதி என்பது என்ன? சம+ஆதி. ஆதியில் இருந்த சமநிலையை அடைவது. ஆதியில் பிரம்மம் மட்டுமே இருந்தது. இந்த பிரபஞ்சம் இல்லை. அந்த ஆதியை அடைய வேண்டுமானால் ”சம நிலையை அடைய வேண்டும்.

தமஸ்,ரஜஸ் என்ற இரண்டு பண்புகள் உள்ளன. தமஸ் என்பது கவரும் சக்தி. ரஜஸ் என்பது விலக்கும் சக்தி. இந்த இரண்டு சக்திகளும் தொடர்ந்து எல்லா இடங்களிலும் இயங்கிக்கொண்டே இருக்கிறது. ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்போல இரண்டும் சேர்ந்தே உள்ளது. ஆனால் இரண்டும் எதிர் செயல்பாடுகளைக் கொண்டது.

..

விருப்பு-வெறுப்பு,இன்பம்-துன்பம்,லாபம்-நஷ்டம்,ஏற்றம்-இறக்கம், என்று பல்வேறு இரண்டைகளினால் ஆனது இந்த உலகம் இதில் ஒன்று தமஸிலிருந்து வருகிறது,இன்னொன்று ரஜஸிலிருந்து வருகிறது. இந்த இரட்டைகளை முழுவதுமாக ”சம நிலைக்கு கொண்டு வரவேண்டும். அவ்வாறு சமநிலைக்கு கொண்டு வரவேண்டுமானால் தமஸ் மற்றும் ரஜஸ் என்ற இண்டு சக்திகளிலும் செயல்படும் சக்தியை இயங்காமல் நிறுத்த வேண்டும்.

..

இந்த சக்திகளையும் சத்வம் என்ற குணத்தின் மூலம் சமப்படுத்த வேண்டும். ச+த்வம் ச என்பது இணைப்பது த்வம் என்றால்  ”நீ உன்னில். உன்னில் அடக்கு ,உன்னுள் இணைப்பது என்று பொருள்.

..

ஆர்ட்டிக் பகுதியில் வாழும் அணில்கள் கடும் குளிர்காலத்தில் தங்களை காப்பாற்றிக்கொள்ள சில யுக்திகளை கையாள்கிறது.

பூமிக்கு அடியில் உள்ள வளைகளில் அவை வாழ்கின்றன.ஓரளவு சூரிய வெளிச்சம் உள்ள முதல் ஆறுமாதம் அவைகள் நன்றாக வெளியில் சுற்றி,தேவையான அளவு உணவை உண்டு,உடலை நன்றாக பெருக்கிக்கொள்கின்றன. பிறகு அடுத்து சில நாட்கள் உணவு எதுவும் எடுத்துக்கொள்ளாமல் இரத்தத்தை சுத்திகரிப்பு செய்கின்றன. இரத்தத்தில் உள்ள கொழுப்பை நீக்குகின்றன. பிறகு பூமிக்கு அடியில் உள்ள வளையில் சென்று தூங்குகின்றன. படிப்படியாக சூரிய வெளிச்சமே இல்லாத கடும் குளிர்காலம் வருகிறது. அப்போது அதன் வளையும் பனியால் நிரம்பிவிடும். உடலும் பனிக்கட்டிகளால் மூழ்கியிருக்கும். ஆனாலும் அந்த அணில்கள் சாவதில்லை. ஏன்?

அந்த அணில்களின் இரத்தஓட்டம் நின்றுவிடுகிறது.இதயம் நின்றுவிடுகிறது. மூச்சும் நின்றுவிடுகிறது. உடலின் உள்ளே ஓரளவு வெப்பம் மட்டும் இருக்கிறது. இதயம் நின்றபிறகும் அந்த அணில் சாவதில்லை. குளிர் காலம் முடியும்வரை அது இறந்துபோன அணில்போல,மரக்கட்டைபோல அப்படியே கிடக்கிறது. உடலில் ஒரு அசைவுகூட இருக்காது. முழுவதும் பனியால் மூடப்பட்டு கிடக்கிறது.

அது ஏற்கனவே சேர்த்து வைத்திருந்த கொழுப்பிலிருந்து சிறிது சக்தி வெளிப்பட்டு அந்த உடலை வெப்பமாக வைத்திருக்கிறது.அதைத்தவிர வேறு எந்த செயலும் உடலில் இல்லை.

குளிர் காலம் முடிந்த பிறகு படிப்படியாக உடலை சுற்றியுள்ள பனி கரைகிறது. இதுவும் விழித்துக்கொள்கிறது.

..

இதே விஷயத்தைத்தான் சமாதிநிலையை அடையும் யோகிகளும் கடைபிடிக்கிறார்கள்.

யோகத்தில் நாம் எதை பயிற்சி செய்கிறோம். உடலில் ஓடும் இரத்தத்தை எப்படி சுத்திகரிப்பு செய்வது, இதயத்தை எப்படி நிறுத்துவது. மூச்சை படிப்படியாக எப்படி உள்ளே நிறுத்துவது என்பதைத்தான்.

இதை பல ஆண்டுகள் பயிற்சியின் மூலம் செய்ய வேண்டும். அவசரப்பட்டால் விளைவு விபரீதமாக இருக்கும்.

தியானத்தின்போது ஒரு மரக்கட்டைபோல உடலில் ஒரு அசைவுகூட இல்லாத நிலையை அடைய வேண்டும்.

அந்த அணில் எப்படி செய்ததோ அதேபோல.

ஆனால் அணில் தூக்கநிலைக்கு சென்றுவிட்டது. நாம் தூக்கநிலைக்கு செல்லக்கூடாது. மாறாக துரீய நிலைக்கு செல்ல வேண்டும்.உடலை விட்டு உயிரை பிரித்து புருவமத்திக்கு கொண்டுவர வேண்டும்.

அப்போது பல்வேறு உலகங்களில் நடக்கும் காட்சிகளைக் காணலாம்.

துரீய நிலைக்கு செல்வதற்கு உடலை எப்படி மரக்கட்டைபோல ஆக்குவதற்கு பயிற்சி செய்தோமோ,அதேபோல மனத்தை எண்ணங்கள் அற்ற நிலைக்கு கொண்டுவருவதற்கான பயிற்சிகளை செய்ய வேண்டும். அதற்கு தத்துவம் படிக்க வேண்டும். பிறகு அதைப்பற்றி சிந்திக்க வேண்டும். சந்தேகங்கள் அனைத்தையும் அகற்ற வேண்டும். மனத்திலிருந்து முழுசந்தேகங்களும் அகன்றால் மனம் சமநிலையை அடைகிறது.

..

உடல் சமநிலையை அடைந்தபிறகு, மனம் சமநிலையை அடைந்த பிறகு,

புருவமத்தியிலிருந்து உயிரை சகஸ்ராரம்(உச்சந்தலையில் உள்ள துவாரம்) வழியாக வெளியேற்றிவிடலாம். அப்படி வெளியேறினால் அது பல்வேறு உலகங்களுக்கு செல்ல முடியும். இதற்கு முந்தைய கட்டுரையில் கூறியதுபோல அது தெய்வநிலையை அடைந்துவிடுகிறது.  ஆனால் 21 நாட்களுக்குள் மீண்டும் உடலை அடைந்துவிட வேண்டும். என்று ஸ்ரீராமகிருஷ்ணர் கூறுவார். தியானத்தில் மரக்கட்டைபோல,இரத்தஓட்டம் இல்லாமல்  இருக்கும் உடல் 21 நாட்கள்தான் தாங்கும் அதன்பிறகு அது வீழ்ந்துவிடும் என்று அவர் கூறுவார்.

..

ஒருவேளை மீண்டும் இந்த உடலுக்குள் வராவிட்டால் இந்த உடல் வீழ்ந்துவிடும். பரவாயில்லை. அவர்களால் புதிய உடலை உருவாக்க முடியும். அல்லது ஏற்கனவே வாழும் மனிதர்களின் உடலுக்குள் வரமுடியும்.

இதற்கு பரவசம் என்று பெயர்.(பர+வசம்) மேலான ஒன்றின் வசமாவது. மேலான தெய்வத்திடம் தன்னை ஒப்புக்கொடுத்தல்.

முழுமையடைந்த ஒரு ஆன்மா, தன்னிடம் பக்தியுள்ள ஒருவரின் உடலில் இறங்கி , சீடனின் உடல் மூலம் தான் செய்ய வேண்டி காரியங்களை செய்கிறது.

..

ஸ்ரீராமகிருஷ்ணர் காளி மீது பக்தி கொண்டவர். காளியே ஸ்ரீராமகிருஷ்ணரின் உடலின் மூலம் பல்வேறு உபதேங்களை மக்களுக்கு செய்துள்ளாள்.

பின்பு ஸ்ரீராமகிருஷ்ணர் தன்னை படிப்படியாக குருநிலைக்கு உயர்த்திக்கொண்டார்.

அதன் பிறகு சுவாமி விவேகானந்தர் மூலம் அவர் தனது உபதேசங்களை மக்களுக்கு வழங்கினார்.

சுவாமி விவேகானந்தர் படிப்படியாக தன்னை உயர்த்திக்கொண்டு குருநிலையை அடைந்தார்.

 பிறகு அவரும் தனது சீடர்கள் மூலம் தன்னுடைய பணிகளை செய்துவருகிறார்.

இவ்வாறு மேலான ஆன்மாவிடம் தன்னை ஒப்புக்கொடுப்பது ”பரவசம் எனப்படும்.

..

இதில் உள்ள சில கருத்துக்கள் தத்துவம் படிக்காதவர்களக்கு புரியாமல் இருக்கலாம்.

உங்கள் கேள்விகளை +919360209541 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பவும்

சுவாமி வித்யானந்தர்-கன்னியாகுமரி(18-5-2025)

 

 

No comments:

Post a Comment

பித்ருக்களுக்கு தினமும் உணவிட வேண்டும்

  பித்ருக்களுக்கு தினமும் உணவிட வேண்டும் .. துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை. -திருக்குறள் ...