சுவாமி விவேகானந்தர் சிகாகோ செல்ல, கடைசியில் உதவ மறுத்த ராமநாதபுரம் மன்னர்
-
சுவாமி விவேகானந்தர் சிகாகோ சென்று இந்துமதத்தை பிரச்சாரம் செய்ய ராமநாதபுரம் மன்னர் பெரிதும் உதவினார் என்று பலர் கூறுகிறார்கள்.ஆனால் உண்மையில் நடந்தது என்ன என்பதைப் பார்ப்போம்.
-
சுவாமி விவேகானந்தர் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்யும்போது ஏழைகளின் குடிசையிலும் தங்குவார்,மன்னரின் மாளிகையிலும் தங்குவார்.மரத்தடியிலும் தங்கியிருப்பர் சில வேளைகளில் குகைகளிலும் வசிப்பார்.இந்தியா முழுவதும் உள்ள மன்னர்களை சந்தித்துக்கொண்டே வந்த சுவாமிஜி தமிழ்நாட்டில் உள்ள ராமநாதபுரம் மன்னரையும் சந்தித்தார்.சுவாமிஜியின் அறிவாற்றலால் மன்னர் பெரிதும் கவரப்பட்டார்.
-
அப்போது வெளிநாட்டில் நடக்கும் சர்வமதமகாசபை சார்பாக கலந்துகொள்ள விரும்புவதாகவும்,யாராவது அனுப்பி வைத்தால் நன்றாக இருக்கும் என்றும் சுவாமிஜி தனது ஆசையை வெளிப்படுத்தினார்.மன்னரும் உடனே நீங்கள் புறப்படும்போது தகவல் தாருங்கள் 10,000ரூபாய் தருகிறேன் என்றார்.அந்த காலத்தில் 10,000 ரூபாய் என்றால் இற்றைய மதிப்புக்கு கிட்டத்தட்ட 1 கோடி ரூபாய் இருக்கும்.அமெரிக்கா சென்று மாநாட்டில் கலந்துகொள்ளவும்,அதன் பின்னர் அங்கே தங்கி சமய பிரச்சாரம் செய்யவும் இது போதும் என சுவாமிஜி நினைத்தார்.கடவுளின் கருணையை எண்ணி மகிழ்ந்தார்.
-
அதன்பின் சுவாமிஜி சென்னையில் தங்கியிருந்தார்.
-
சிகாகோ சர்வமத மகாசபையின் அமைப்பாளர்களில் ஒருவரான டாக்டர் பரோஸ் என்பவர் இந்தியாவிலிருந்து இந்துமதம் சார்பாக பேச ஒருவரை அனுப்பும்படி சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் பேராசிரியராக இருந்த டாக்டர்.வில்லியம் மில்லர் என்பவருக்கு தெரிவித்தார்.
-
அந்த காலத்தில் வெளிநாடு சென்று மதப்பிரச்சாரம் செய்தால் ஜாதியைவிட்டு விலக்கிவிடுவார்கள் என்பதால் பிராமணர்கள் யாரும் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை.முடிவில் சுவாமி விவேகானந்தரின் திறமையை பற்றி கேள்விப்பட்டு அவரை அனுப்பலாம் என முடிவெடுத்தார்கள்.சுவாமிஜி துறவி என்பதால் அவரை ஜாதியைவிட்டு விலக்க முடியாது என்பதும் ஒருகாரணம்.சுவாமிஜியும் முதலில் இதற்கு சம்மதித்தார்.ஏனென்றால் செலவுக்கான பணத்தை தர ராமநாதபுரம் மன்னர் ஒத்துக்கொண்டிருந்தார்.
-
சுவாமிஜி சென்னை அன்பர்கள் சிலரை பணம் வாங்கிவர ராமநாதபுரம் அனுப்பிவைத்தார்.ஆனால் மன்னர் பணம் தர மறுத்துவிட்டார்.அது மட்டுமல்ல சுவாமிஜி ஒரு வங்காளி எனவும்,அவர் அரசியலில்(இந்திய விடுதலை போரட்டத்தில்) உள்ளவர் எனவும்,அவரை நான் வெளிநாடு அனுப்பினால் வெள்ளைக்காரர்கள் தனது ஆட்சியை கவிழ்த்துவிடுவார்கள் எனவும் கூறினார்.
-
இதைக் கேள்விப்பட்ட சுவாமிஜியின் மனம் மிகவும் வேதனைப்பட்டது.இதைக்குறித்து அளசிங்கருக்கு கடிதம் எழுதினார்.எனது திட்டங்கள் யாவும் தவிடுபொடியாகிவிட்டன.தென்னாட்டு மன்னர்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றுபவர்கள் எல்ல என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.(புத்தகம் 9-பக்கம்176)
-
ஆனால் அளசிங்கர் பெரிய செயல்வீரர்.சுவாமிஜி அமெரிக்க செல்லவேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.எனவே அளசிங்கர் தலைமையில் இளைஞர்கள் சிலர் ஒரு குழுவாக ஒன்று சேர்ந்தார்கள்.வீடுவீடாக சென்று சாதாரண மகக்ளிடம் சுவாமி விவேகானந்தர் சிகாகோ செல்லவேண்டிய அவசியத்தை எடுத்துகூறினார்கள்.சிலர் பணம் கொடுக்க முன்வந்தார்கள் பலர் மறுத்துவிட்டார்கள்.இரவு பகலாக வீடுவீடக சென்று பிச்சையேற்று பணத்தை சேகரித்தார்கள்.அந்த காலத்தில் மக்கள் பட்டினியால் இறந்துகொண்டிருந்தார்கள்.பணம் பெறுவது எவ்வளவு கடினம் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும்.
-
கடைசியில் 3500 ரூபாய்வரை சேர்த்துவிட்டார்கள்.சுவாமிஜி செல்வது உறுதி என்பதை ராமநாதபுரம் மன்னர் கேள்விப்பட்டார்.தனக்கு அவப்பெயர் வந்துவிடக்கூடாது என்பதற்காக 500 ரூபாய் கொடுத்து அனுப்பினார்.
-
சுவாமி விவேகானந்தரை வெளிநாட்டிற்கு அனுப்பியது சென்னை இளைஞர்கள் .அத்துடன் சாதாரண மக்களும்தான்.
-
ராமநாதபுரம் மன்னர் சுவாமிஜியை அனுப்ப முடியாமல் போனதற்கு சில காரணங்கள் இருப்பதாக நான் நினைக்கிறேன்
-
1.சுவாமிஜி அத்வைத வேதாந்தத்தை பிரச்சாரம் செய்தார்.ராமநாதபுரம் மன்னர் சைவமரபை சேர்ந்தவர்.மன்னரின் அமைச்சர்கள் சிலர்.சுவாமிஜி சைமதத்தை சேர்ந்தவர் அல்ல,அவரால் சைவமதத்திற்கு எந்த நன்மையும் இல்லை என்று கூறியிருக்கலாம்
-
2. ஒருவேளை சுவாமிஜியை,அவர் அனுப்பி வைத்திருந்தால்,சுவாமிஜியின் புகழ் அனைத்திற்கும் நானேதான் காரணம்.நான் இல்லாவிட்டால் சுவாமிஜியால் என்ன செய்ய முடிந்திருக்கும்? என்ற எண்ணம் மன்னருக்கு வந்திருக்கலாம்.அதுமட்டுமல்ல எதிர்காலத்தில் மன்னர் கூறியபடியே சுவாமிஜி நடக்கவேண்டியிருக்கலாம். மன்னர்தான் இந்துமதத்தை காக்கபிறந்தவர் என்றும்,சுவாமிஜி அவரது கருவி என்றும் பிற்காலத்தில் செய்தி பரப்பியிருப்பார்கள்.இதை தடுக்கவே கடைசி நேரத்தில் மன்னரின் மனத்தை இறைவன் மாற்றியிருக்கலாம்
-
அதன்பின் சுவாமிஜி அமெரிக்காவில் புகழ்பெற்றபிறகு மன்னர் தனது தவறை குறித்து வருந்தினார்.அதனால்தான் சுவாமிஜி மீண்டும் இந்தியா வந்தபோது அவரது பாதத்தை தனது தலையில் தாங்கிக்கொண்டார். குதிரைகளை அவிழ்த்துவிட்டு தானே சுவாமிஜியை தேரில் அமர்த்தி இழுத்துச்சென்றார்
-
சுவாமி விவேகானந்தர் மகாராஜா,அதாவது மன்னருக்கெல்லாம் மன்னர்.மன்னாதி மன்னர்.அவர் எந்த அரசரின் கீழும் இருக்கமாட்டார்.அரசர்கள்தான் அவருக்கு கீழ் இருக்கவேண்டும்.என்பது இந்த சம்பவத்தின் மூலம் தெளிவாக புரிகிறது
-
கட்டுரை..சுவாமி வித்யானந்தர்(8-6-2018)
-
விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு புத்தகம்1-பக்கம்450-481
No comments:
Post a Comment