Friday, 15 June 2018

தனது கடைசிநாளை தானே முடிவு செய்தார் சுவாமி விவேகானந்தர்


தனது கடைசிநாளை தானே முடிவு செய்தார் சுவாமி விவேகானந்தர்.“சகோதரர்களே என் வேலை முடிந்துவிட்டது,இனி இவைகளை நீங்களே கவனித்துக்கொள்ளுங்கள்.எனக்கு விடைகொடுங்கள்”
-
1902-ம் ஆண்டு. சுவாமிஜி தனது துறவிசீடர்கள் அனைவரையும் ஒருமுறை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். எதற்காக ஆசைப்படுகிறார் என்பதை யாரும் அறியவில்லை.இந்தியாவில் பல்வேறு இடங்களில் மற்றும் வெளிநாடுகளில் வசித்து வந்த அனைவருக்கும் கடிதம் எழுதப்பட்டது.
சிலர் வந்தனர்,பலர் வேலை காரணமாக வரவில்லை. இது தங்களுக்கான கடைசிவாய்ப்பு என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.
-
நாட்கள் ஆக ஆக மெல்ல மெல்ல மடத்தின் வேலைகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டார். சீடர்களுக்கு பயிற்சியளிப்பது போன்ற பணிகள் கூட குறைந்துபோனது. மெல்ல மெல்ல அவர் தியானத்தில் மூழ்க ஆரம்பித்தார். அவருடன் இருந்த சகோதர துறவிகள் இதை கவனிக்க தவறவில்லை.
-
”என் வேலை முடிந்துவிட்டது,இனி இவைகளை நீங்களே கவனித்துக்கொள்ளுங்கள் என்று சகோதரதுறவிகளிடம் கூறினார்”
-
”மரணம் என் முன்னால் நிற்கிறது, நான் வேண்டிய அளவு வேலை செய்துவிட்டேன். நான் கொடுத்துள்ளதை முதலில் உலகம் புரிந்துகொள்ளட்டும், அதை புரிந்துகொள்வதற்கே மிக நீண்ட காலம் ஆகும்.முடிவே இல்லாமல் விளையாடிக்கொண்டிருப்பதா? போதும் இந்த விளையாட்டு” என்று சுவாமிஜி கூறினார்.
-
தியானம் மட்டுமே அவரது முழுவேலையாகிவிட்டது. அவரது உதடுகள் எப்போதும் இறை நாமத்தை உச்சரித்தவாறு இருந்தது.
-
நான் யார் என்பதை நரேன் உணர்ந்துவிட்டால்,பிறகு நிர்விகல்ப சமாதியில் ஆழ்ந்துவிடுவான் என்று ஸ்ரீராமகிருஷ்ணர் முன்பு கூறியிருந்தார்.
-
சுவாமிஜி, நீங்கள் யார் என்று உணர்ந்துவிட்டீர்களா? என்று ஒருவர் கேட்டார். அதற்கு சுவாமிஜி, ஆம் என்று பதிலளித்தார். அப்போது அங்கே ஓர் ஆழ்ந்த மௌனம்
நிலவியது.
-
சுவாமிஜி நம்மையெல்லாம் விட்டுவிட்டு செல்ல போகிறார் என்பதை சிலர் உணர ஆரம்பித்தார்கள்.
அவர்களால் இதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது.
-
1902 ஜுன் இறுதியில் ஒருநாள் சுவாமிஜி சுத்தானந்தரை அழைத்து ஒரு பஞ்சாங்கம் கொண்டுவரச்சொன்னார். ஏதோ ஒரு நாளை குறிப்பதற்காக பஞ்சாங்கத்தை கேட்கிறார் என்று சுத்தானந்தர் நினைத்தார்.ஆனால் தனது கடைசி நாளை குறிக்கவே அதை கேட்டார் என்பது அப்போது அவருக்கு தெரியவில்லை.
--
1902 ஜுலை 1. சுவாமிஜி பிரேமானந்தருடன் மாலை வேளையில் கங்கைக்கரையில் நடந்துகொண்டிருந்தார். திடீரென பிரேமானந்தரை அழைத்து கங்கைக்கரையில் ஓரிடத்தைச் சுட்டிக்காட்டினார். பிறகு அமைதியாக கூறினார்.“நான் உடம்பை விட்டபிறகு உடலை அந்த இடத்தில் எரியுங்கள்”! என்றார். சுவாமி பிரேமானந்தர் விவேகானந்தர்மீது ஆழ்ந்த அன்பு கொண்டவர்.அவர் இன்னும் பல ஆண்டுகள் வாழ்வார் என்றே நம்பிக்கொண்டிருந்தார்.சுவாமி விவேகானந்தரின் ஆழ்மனத்தை அறிய தவறிவிட்டார்
-
ஜுலை 2.ஏகாதசி அன்று சுவாமிஜி விரதம் இருந்தார். ஆனால் அன்று காலையில் அங்கே சென்ற நிவேதிதைக்கு எல்லா உணவு வகைகளையும் பரிமாறி அவரைச் சாப்பிடச் செய்தார். நிவேதிதை சாப்பிட்டபோது அருகில் அமர்ந்து வேடிக்கையாக பேசினார். சாப்பிட்டு முடித்ததும் நிவேதிதாவின் கை கழுவ சுவாமிஜி நீர் வார்த்தார். கைகளை துண்டால் துடைத்தும் விட்டார்.
-
நிவேதிதா..”சுவாமிஜி, இதைல்லாம் நான்(சீடர்) அல்லவா உங்களுக்குச் செய்ய வேண்டும்‘ நீங்கள்(குரு) எனக்குச் செய்வதா?
-
சுவாமிஜி..ஏன் ஏசுநாதர் தம் சீடர்களுக்கு கால்களையே கழுவினாரே!
-
ஆனால்..அது..அவரது கடைசி நாளாயிற்றே! என்று சொல்ல வேண்டும் என நிவேதிதா நினைத்தார்..ஆனால் சொல்லவில்லை.
-
ஜுலை4, வெள்ளி. சுவாமிஜி குறித்துவைத்திருந்த தனது கடைசி நாளும் வந்தது...
-
காலையில் வழக்கம்போல 3 மணிக்கு எழுந்தார். பின்னர் தேனீர் வேளையில் சகோதர துறவிகளுடன் தங்கள் பழைய நாட்களைப்பற்றி பேசி ஆனந்தம் அடைந்தார்.
-
சுவாமிஜி காலை 8.30 மணிக்கு ராமகிருஷ்ணரின் கோவிலில் பூஜையறைக்கு சென்றார்.அங்கே தியானத்தில் ஆழ்ந்தார்.9.30 மணிக்கு பிரேமானந்தர் அங்கு வந்தார், அவரிடம் பூஜையறையின் அனைத்து ஜன்னல்கள் கதவுகளை மூடச்சொன்னார்.. அப்போது அங்கு என்ன நடந்தது என்று யாருக்கு தெரியும்? நீங்கள் எனக்கு கொடுத்த வேலைகளை முடித்துவிட்டேன் ,இனி எனக்குவிடைகொடுங்கள் என்று குருதேவரிடம் சொல்லியிருக்கலாம்.காலை 11 மணிவரை தியானத்தில் இருந்தார்.
-
கதவுகளைத்திறந்து வெளியே வந்த சுவாமிஜி மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்.காளியின் மீது ஓர் அழகிய பாடலை பாடியவாறே படிக்கட்டு வழியாக கீழே இறங்கி வந்தார்.
-
அப்போது அவருக்கு முற்றிலும் இந்த உலக நினைவே இல்லை. கீழே நின்றுகொண்டிருந்த யாரையும் அவர் கவனிக்கவில்லை.
-
அதன்பிறகு சுவாமிஜி, சுத்தானந்தரிடம் நூல்நிலையத்திலிருந்து சுக்ல யஜுர்வேத சம்ஹிதையைக் கொண்டு வந்ததும் அதிலிருந்து, ஸுஷும்ண,ஸுர்ய ரச்மி..என்று தொடங்குகின்ற பகுதியை படிக்கச்சொன்னார்.
-
மதிய உணவை அனைவருடனும் நேர்ந்து உண்டார். சாப்பிடும்போது வேடிக்கை வினோதங்கள் பேசி அனைவரையும் மகிழச்செய்தார்.
அதன் பிறகு சிறிது நேரம் ஓய்வெடுத்துக்கொண்டார்,மடத்தில் உள்ள பிரம்மச்சாரிகளை அழைத்து தொடர்ந்து மூன்று மணி நேரம் சம்ஸ்கிருத இலக்கண பாடம் நடத்தினார். அதையும் வேடிக்கை வினோதங்கள்,கதைகள் மூலம் நடத்தினார்.
-
மாலை 4 மணி,இளம் சூடான பாலும்,தண்ணீரும் சாப்பிட்டார்.பிறகு பிரேமானந்தருடன் சுமார் 1 மைல் தூரம் உள்ள பேலூர் கடைத்தெரு இருந்த திசையை நோக்கி நடந்து சென்றார்கள்
வேதக்கல்லூரி ஒன்றை நிறுவவேண்டும் என்று சுவாமிஜி கூறினார்.
வேதங்களை படிப்பதால் என்ன நன்மை என்று பிரேமானந்தர் கேட்டார்.
மூடநம்பிக்கை ஒளியும் என்று சுவாமிஜி பதிலளித்தார்
-
மாலை 5.30 மணிக்கு இருவரும் மடத்திற்கு திரும்பினார்கள்.மாலையில் கோவிலில் ஆரத்திக்காக மணியடிக்கப்பட்டது. பிரேமானந்தர் பூஜை செய்வதற்காக பூஜையறைக்குச் சென்றார்.
--
கிழக்கு வங்காளத்திலிருந்து வந்திருந்த விரஜேந்திரர் என்ற இளைஞர் அப்போது சுவாமிஜிக்கு பணிவிடைகள் செய்து வந்தார்.
-
இந்த நாட்களில் சுவாமிஜியின் உடல் ஆரளவு ஆரோக்கியமாகவே இருந்தது.வெளியில் நீண்ட தூரம் நடந்து செல்லவும், பிரம்மச்சாரிகளுக்கு பாடம் எடுக்கவும் கூடிய அளவு நல்லநிலையில் இருந்தது. எனவே சுவாமிஜி விரைவில் உடல்நலம் பெற்று, முன்புபோலவே பிரச்சார பணிகளில் ஈடுபடுவார் என்றே அனைவரும் நம்பிக்கொண்டிருந்தார்கள்
-
விரஜேந்திரரிடம் சுவாமிஜி கூறினார்,” இன்று என் உடம்பு லேசாகவும் நன்றாகவும் இருக்கிறது. நான் நன்றாக இருக்கிறேன் ”என்றார்.தமது அறையில் வடமேற்கு நோக்கி ஜெபமாலையுடன் ஜெபம் செய்ய தொடங்கினார்.அறையின் வெளியே விரஜேந்திரரை அமர்ந்திருக்குமாறு கூறினார்.
-
சுமார் 6.30 மணியளவில் சீடரை கூப்பிட்டு,உஷ்ணமாக இருக்கிறது,அதை ஜன்னல் கதவுகளை திறந்து வை என்றார். பிறகு தமது தலையில் விசிறிமூலம் சிறிது வீசுமாறு கூறினார், சிறிது நேரம் சென்ற பிறகு போதும் இனி என் கால்களை பிடித்துவிடு என்றார். அப்போது அவர் கையில் ஜெபமாலையுடன் ஜெபம் செய்துகொண்டிருந்தார்.
-
சுவாமிஜி இடது பக்கமாக லேசாக படுத்திருந்தார், சேிறிது நேரத்திற்கு பிறகு ஒரே ஒருமுறை லேசாக வலது பக்கமாக திரும்பி படுத்தார்.
-
திடீரென அவரது கைள் நடுங்கின. கனவு கண்ட குழந்தை அழுவதுபோல சுவாமிஜியிடமிருந்து ஒரு சத்தம் எழுந்தது. சிறிது நேரத்தில் ஆழ்ந்த மூச்சை உள்ளிழுத்தார். அவரது தலை தலையணையில் சாய்ந்தது. மீண்டும் ஒருமுறை அதேபோல் ஆழ்ந்த மூச்சை இழுத்தார். பிறகு எல்லாம் நிசப்பதம். 
-
அப்போது மணி 9.00
சுவாமிஜி சமாதியில் ஆழ்ந்திருப்பதாக விரஜேந்திரர் நினைத்தார். இருப்பினும் சற்று கவலையுடன் கீழே ஓடிச்சென்று அத்வைதானந்தரை அழைத்தார். அப்போது இரவு உணவுக்காக மணி அடித்தது அனைவரும் அங்கே திரண்டனர்.
-
அத்வைதானந்தர் சுவாமிஜியின் நாடியை சோதித்தார்.அவருக்கு எதுவும் புரியவில்லை.பிரேமானந்தர் நாடித்துடிப்பை பார்த்தார். நாடித்துடிப்பு நின்றிருந்தது.
-
அவர் சமாதியில் இருப்பதாக நினைத்து எல்லோரும் ஜெய் ஸ்ரீராமகிருஷ்ணா என்று அவரது நாமத்தை உரத்த குரலில் உச்சரித்தார்கள். எந்தப்பயனும் இல்லை. உடனே ஓடிச் சென்று மருத்துவரை அழைத்துவரும் படி கூறினார்கள்.
-
பிரேமானந்தருக்கு உண்மை புரிந்துவிட்டது. அவர் ”ஓ ”என்று அழ ஆரம்பித்தார்
-
மருத்துவர் 10.30 மணிக்கு வந்தார். அவர் செயற்கை முறையில் மூச்சை மீண்டும் செயல்படுத்துவதற்கு முயற்சித்தார்.எந்த பலனும் இல்லை.
-
அப்போது நள்ளிரவு 12 மணி. சுவாமிஜி மாரடைப்பால் மரணமடைந்ததாக டாக்டர் மகேந்திர நாத் தெரிவித்தார்.
ஆனால் மருத்துவர்கள் என்ன காரணத்தை கூறினாலும்,அவர் சமாதியில் உடலைவிட்டு வெளியே வந்துவிட்டார் என்பதே உண்மை.
-
அப்போது சுவாமிஜிக்கு வயது 39வருடம் , 5மாதம் 24 நாள் ஆகியிருந்தது. அவர்40வது வயதை பார்க்கவில்லை.
-
சுவாமிஜியின் உடல் அதன் பிறகு,மலர்ச்சியாக இருந்தது. நோய் காரணமாக இறந்தவர் உடல்போல தோன்றவில்லை.அப்போது அவர் ஒரு கௌபீனம் மட்டுமே உடுத்தியிருந்தார். அவரது கண்கள் மேல் நோக்கியவாறு இருந்தது.
-
சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு நூலிலிருந்து எடுக்கப்பட்டது.....
-
சுவாமி வித்யானந்தர்

No comments:

Post a Comment