Friday, 8 June 2018

நீங்கள் கடவுளை நம்புகிறீர்களா? அப்படியானால் உண்மையான கடவுளை நம்புங்கள்.


நீங்கள் கடவுளை நம்புகிறீர்களா? அப்படியானால் உண்மையான கடவுளை நம்புங்கள்.
-
சுவாமி விவேகானந்தரின் கீதை சொற்பொழிவிலிருந்து சில பகுதிகள்
-
ஓர் இந்துவுக்கு துன்பம் வந்தால்,அதை தீர்ப்பதற்காக அழுக்கு குளத்தில்(கோவில் குளம்) குளிப்பதையும், கோவிலுக்கு சென்று புழுதியில் புரள்வதையும்(அங்க பிரதட்சினம்) காண்பீர்கள்.தெய்வங்களிடம் பிரார்த்திக்கிறான். யாராவது உதவுங்கள்! யாரவது உதவுங்கள் என்று பிரர்த்திக்கிறான்.ஆனால் யாரிடமிருந்தும் உதவி வருவதில்லை.அதுதான் உண்மை. 
-
இந்தியாவில் மனிதர்களைவிட தெய்வங்களின் எண்ணிக்கை அதிகம்.ஆனாலும் உதவி மட்டும் கிடைப்பதில்லை.நாம் நாய்களைப்போல சாகிறோம்(பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் பட்டினியால் பலர் கவனிப்பரின்றி இறந்துபோவார்கள்).எந்த உதவியும் இல்லை.எங்கு பார்த்தாலும் மிருகத்தனம்,பஞ்சம்,நோய்,துன்பம்,தீமை! எல்லோரும் உதவிக்காக ஓலமிடுகின்றனர்.ஆனால் உதவி வருவதில்லை.என்றாலும் நிராசைகொள்ளாமல் உதவிக்காக கதறுகிறோம். என்ன சீரழிவு! என்ன பயங்கரம்!
-
உங்கள் உள்ளத்தை உற்றுப்பாருங்கள்! பாதி துன்பத்திற்கு நாம் காரணம் அல்ல.நமது பெற்றோர்களே காரணம். இந்த பலவீனத்துடன்(அதாவது தெய்வங்களிடம் உதவி கேட்டு அழுவது) நாம் பிறந்துள்ளோம்.இது நமது தலையில் புகுத்தப்பட்டுள்ளது.மெல்ல மெல்லத்தான் இதைக் கடக்க வேண்டும்
-
உதவி இல்லையே என்று ஏங்குவது மிகப்பெரிய தவறு.யாரிடமும் உதவியை நாடாதீர்கள்.நாமே நமக்கு உதவி.நமக்கு நாமே உதவ முடியாவிட்டால்.வேறு யாரும் உதவ முடியாது.உனக்கு ஒரே நண்பன் நீயே,ஒரே பகைவனும் நீயே (பகவத்கீதை 6.5)நீயே உனக்கு உதவிசெய்துகொள். இதுதான் முடிவொன சிறந்த பாடம்.அந்தோ! இதைக் கற்றுக்கொள்ளத்தான் எவ்வளவு காலம் ஆகிறது!
-
துன்பங்கள் வரும்போது நாம் பலமிழந்து மறுபடியும் மூடநம்பிக்கைக்கும் உதவிக்கும் கை நீட்டுகிறோம்.எல்லாம் உதவியைத்தேடிய தவறான எண்ணத்தின் விளைவு
-
புரோகிதர் வழக்கமான தம் மந்திரங்களை ஓதிவிட்டு தட்சிணையை எதிர்பார்க்கிறார்.மக்கள் வானத்தை நோக்கி(தேவர்களை நோக்கி) பிரார்த்தனை செய்துவிட்டு புரோகிதர்களுக்கு தட்சிணை தருகிறார்கள்.மாதங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.இன்னும் உதவி வரும் என்று வானத்தை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.வருவதில்லை.சற்று எண்ணிப்பாருங்கள்!இது.பைத்தியக்காரத்தனம் அல்லாமல் வேறு என்ன இது? இதற்கு யார் காரணம்?
-
எழுந்து தைரியமாகப் போராடுங்கள்.பைத்தியத்திற்குமேல் பைத்தியமாக சேர்த்துகொண்டே போகாதீர்கள்.உலகிற்கு நான் சொல்ல வேண்டுவது அதுதான்.வீரர்களாக இருங்கள்.பலவீனமான எல்லாவற்றிலிருந்தும் விலகிவிடுங்கள்.வீரர்களுக்கு மட்டுமே முக்தி உண்டு.
-
நீங்கள் கடவுளை நம்புகிறீர்களா? அப்படியானால் உண்மையான கடவுளை நம்புங்கள்.நீயே ஆண்.நீயே பெண்.நீயே இளைஞன்.நீயே கிழவன்.(காணும் அனைத்தும் இறைவன்)ஆண்களாகவும்,பெண்களாகவும் இருக்கும் இந்த உலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் மனித கடவுளை நம்புங்கள்.
-
சுவாமி விவேகானந்தரின் கீதை சொற்பொழிவுகள் புத்தகம்-7 பக்கம்116

No comments:

Post a Comment