அத்வைதம்தான் எதிர்கால மதமாக இருக்கப்போகிறது-சுவாமி விவேகானந்தர்
-
ஐரோப்பாவில் இன்று உலோகாயதம்தான் வழக்கத்தில் இருக்கிறது. (கிறிஸ்தவமதம் வழக்கத்தில் இல்லை). ஐரோப்பாவின் ஆன்மீக விழிப்பிற்கு அறிவுப்பூர்வமான ஒரு மதம்தான் தேவை.இரண்டற்ற ஒன்றேயான நிர்குண பிரம்மக் கருத்தைப் போதிக்கும் அத்வைதம் ஒன்றுதான்,அறிவுப்பூர்வமாகச் சிந்திக்கும் மக்களுக்குத் திருப்தி அளிக்கக்கூடியதாக இருக்கிறது. தர்மம் மறைந்ததுபோலாகி,அதர்மம் தலை தூக்கும்போதெல்லாம் அத்வைதம் வருகிறது.அதனால்தான் அது அமெரிக்காவிலும்,ஐரோப்பாவிலும் வேர்பிடித்திருக்கிறது.
-
அன்பும்,கருணையும் எல்லையற்ற அறிவும் இணைந்த இணைப்பு தேவை.இந்த இணைப்பு நமக்கு மிக உயர்ந்த தத்துவத்தைக் கொடுக்கும்.விஞ்ஞானமும் மதமும் அப்போது நட்புறவு கொள்ளும்.எதிர்காலமதம் இப்படித்தான் இருக்க வேண்டும். அது எக்காலத்திலும், எல்லா மக்களும் ஒப்புக்கொள்ளும்படியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.இந்த ஒரு வழியில்தான் விஞ்ஞானமும் மதத்தை ஒப்புக்கொள்ளும்.ஏனென்றால் விஞ்ஞானமும் ஏறக்குறைய அந்த நிலைக்கு இப்போது வந்துவிட்டது.
-
எல்லாப்பொருட்களும் ஒரே சக்தியின் வெளிப்பாடுகளே என்று விஞ்ஞானிகள் கூறும்போது,அது உங்களுக்கு உபநிடதங்கள்கூறும் கடவுளை நினைவுபடுதத்வில்லையா?(கட உபநிடதம்2.2.9)
-
அத்வைதத்தில் அழிவுப்பூர்வமான எதுவும் இல்லை.தாழ்ந்த வழிபாட்டு முறையைக்கூட இழிவுபடுத்துவதில்லை.யாரையும் தொந்தரவு செய்யாதீர்கள் என்றே அது கூறுகிறது.
-
இந்த தத்துவம் முழுமையான,ஒட்டுமொத்தமான ஒரு கடவுளைப் போதிக்கிறது.அத்வைதத்தை தவிர மற்ற மதப்பிரிவுகள் அனைத்தும் ஒரு அம்சம் மட்டுமே.அவை முழுமையானவை அல்ல.முழுமையடைய அவை போராடிக்கொண்டிருக்கின்றன
-
கடவுள் பிரபஞ்சத்திற்கு வெளியே எங்கேயோ சொர்க்கத்தில் இருக்கிறார் என்று துவைதம் சொல்கிறது.நம்முடைய ஆன்மாதான் கடவுள் என்றும்,அவர் நமக்கு வெளியே இருக்கிறார் என்று சொல்வது தெய்வநிந்தை என்றும் அத்வைதம் கூறுகிறது.
-
துவைதிகள் அனைவரும் அத்வைதியின் வாதத்தை கேட்டு அதிர்ச்சி அடைகிறார்கள்..அது பெரும் அபச்சாரம் என்று நினைக்கிறான்.உலகிலுள்ள துவைதிகள் அனைவருமே மனிதத்தன்மை கொண்ட ஒரு சகுண கடவுளையே விரும்புகிறார்கள்.அந்த கடவுள் சிலரை வெறுக்கிறார்.சிலரை நேசிக்கிறார்.ஆகவே கடவுள் யாரை வெறுக்கிறாரோ அவர்களை நாம் வெறுக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள்.(முஸ்லீம்கள் யூதர்களை வெறுக்கவும்,உருவ வழிபாடு செய்பவர்களை வெறுக்கவும் அதுதான் காரணம்.அல்லா அவர்களை வெறுக்கிறார்)
-
கடவுளின் தயவுக்கு பாத்திரமான நாங்கள் மட்டுமே காப்பாற்றப்படுவோம்.மற்றவர்கள் எவ்வளவு முயன்றாலும் காப்பாற்றப்பட மாட்டார்கள் என்று நினைக்கிறார்கள் இந்த துவைதிகள்.எனவே இவர்கள் ஒருவரோடு ஒருவர் சண்டைபோட்டுக்கொள்வார்கள்.(முஸ்லீம்களிடமும்,கிறிஸ்தவர்களிடமும் இந்த கருத்துதான் உள்ளது)
-
சிந்தனைத்திறனற்ற மக்கள் துவைதிகளாக இருக்கிறார்கள்.உலகில் பிறந்த மகோன்னதமான மனிதர்கள் அனைவரும் அத்வைதிகளாகவே இருந்திருக்கிறார்கள்.துவைதக் கடவுளை சிறிதும் பொருட்படுத்தாதவர் புத்தர்.அவரை நாத்திகவாதி என்றார்கள்.ஆனால் ஒரு ஆட்டுக்குட்டியை காப்பாற்ற தன் உயிரையும் கொடுக்க தயாராக இருந்தார்.
-
விஞ்ஞானம் வளர்ந்திருக்கும் இந்த காலத்தில் மக்களை சிந்தனை திறன் அற்றவர்களாக்கி,மிருகங்களாக்கி அவர்கள் வாழ்வை அழிக்காதீர்கள்..
-
சுவாமி விவேகானந்தர்
-
பரம்பொருளும் பிரபஞ்சமும் என்ற சொற்பொழிவிலிருந்து சில பகுதிகள்.புத்தகம் 3 பக்கம் 395
-
தொகுத்தது...சுவாமி வித்யானந்தர்(10-6-2018)
No comments:
Post a Comment