Friday, 1 June 2018

சுவாமி விவேகானந்தர் கன்னியாகுமரி பாறையில் பெற்ற அனுபவம் என்ன?


சுவாமி விவேகானந்தர் கன்னியாகுமரி பாறையில் பெற்ற அனுபவம் என்ன?
---
இந்தியா முழுவதும் சுற்றி அலைந்தபின் கடைசியாக சுவாமி விவேகானந்தர் 1892 டிசம்பர் இறுதியில் திருவனந்தபுரத்திலிருந்து கன்னியாகுமரி வந்தடைந்தார்.அங்குள்ள கடற்கரைக்கு சென்றார்.அவரது மனம் தவிப்புடன் காணப்பட்டது.இந்தியாவின் பரிதாப நிலைதான் அவரது தவிப்பிற்கு காரணம்.நாட்டிற்கு நன்மை செய்யவேண்டும் என்ற எண்ணம் அவரை வாட்டியது.
-
அப்போது அவர் பிச்சை ஏற்று வாழும் துறவியாக இருந்தார்.உண்ண உணவுக்காக அடுத்தவர்களிடம் கையேந்தும் நிலை.உடுக் சரியான உடைகூட இல்லை.பிச்சை ஏற்று வாழும் தம்மால் இந்தியாவிற்கு எவ்வாறு உதவ முடியும்? என்று எண்ணினார்,அவரது கண்களில் 2 கி.மீ தொலைவில் உள்ள பாறை தென்பட்டது.அங்கு சென்று தவம்புரிய எண்ணினார்,படகில் செல்வதற்காக அங்கிருந்த மீனவர்களிடம் உதவிகேட்டார்,ஆனால் அவர்கள் மறுத்துவிட்டனர்,வேறு வழியின்றி நீந்தியே அங்கு சென்றார்.அவர் கடலில் நீந்தி செல்வதை சிலர் கண்டார்கள்,அவர்களில் சதாசிவம் பிள்ளை என்பவரும் ஒருவர்.
--
சுவாமிஜி அங்குள்ள பாறையில் அமர்ந்தார்,சுற்றிலும் பரந்த கடல்,அரபிக்கடல்,வங்காளவிரிகுடா,இந்துமகா சமுத்திரம் மூன்றும் இங்கே சங்கமிக்கின்றன.அவருக்கு முன்னார் இந்தியா தெரிந்தது.
சுவாமிஜி ஆழ்ந்த தியானத்தில் மூழ்கினார்.மூன்று நாட்கள் தொடர்ந்து தியானத்தில் இருந்தார்.எந்த தெய்வத்தை அவர் தியானித்தார்?அவர் தியானித்தது இந்தியாவை,இந்தியாவின் எதிர்காலத்தை.இந்தியாவில் பண்டைய சிறப்புகளும்,தற்போதைய நிலையும் அவர்மனக்கண் முன் வந்தது.
-
பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்துவரும் நாடு இதோ என்முன்னால் உள்ளது.ஆனால் தற்போது அது பண்டைய பெருமைகளை இழந்து அந்நியரின்கீழ் அடிமைப்பட்டுகிடக்கிறது.இந்திய கலாச்சாரம் மறைந்து படிப்படியாக ஐரோப்பிய கலாச்சாரம் பரவிக்கொண்டிருக்கிறது.இந்துக்கள் படிப்படியாக இந்துமதத்தைவிட்டு பிற மதங்களுக்கு சென்றுகொண்டிருக்கிறார்கள்.மக்கள் வறுமையில் உழன்று.தினம்தினம் செத்துக்கொண்டிருக்கிறார்கள். கணவனை இழந்த பெண்களின் அழுகையும்,குழந்தைகளுக்கு உணவில்லாமல் தாய்மார்கள் படும் வேதனையும் அவரது நெஞ்சை உலுக்கியது.
-
நூற்றுக்கணக்கான அன்னிய படையெடுப்புகளை தாங்கிக்கொண்ட இந்தியாவிற்கு இனி என்னவாகும்?அது மீண்டும் விழித்தெழுமா அல்லது படிப்படியாக அழிந்துவிடுமா என்ற எண்ணங்கள் மேலிட்டுக்கொண்டே இருந்தன.இதற்கு என்ன தீர்வு?
-
அசோகர்,குப்தர்,ராஜராஜசோழன்,வீரசிவாஜி போன்ற மாமன்னர்களை இந்தியாவால் ஏன் தோற்றுவிக்க முடியவில்லை.எதற்காக அன்னியரிடம் அடிமைப்பட்டுகிடக்கிறது?இந்தியா செய்த தவறு என்ன?இந்தியாவின் இழிநிலைக்கு மதம்தான் காரணம் என்று வெளிநாட்டினரும்,படித்தவர்களும்,பாதிரிகளும் கூறுகிறார்களே அதுதான் உண்மையா?
-
அவரது சிந்தனை சுழன்றது....
-
முடிவில் அனைத்து பிரச்சனைகளுக்கும் அவரது மனத்தில் ஒரு தீர்வு ஏற்பட்டது....
தியானம் முடிவுற்றது.
--
இந்தியாவின் செல்வம் ஆன்மீகம். அதை பரப்புவதற்காக பழைய காலத்தில் மன்னர்கள் பாடுபட்டார்கள்.இந்திய பண்பாட்டையும், மதத்தையும் வெளிநாடுகளில் பரப்பினார்கள்.பர்மா,வியட்னாம்,கம்போடியா,மலேசியா,இந்தோனேஷியா,சீனா,ஜப்பான்,ரஷியா,ஈரான்,ஈராக்,கிரீஸ்,எகிப்து என்று உலகின் அந்றைய நாகரீக நாடுகள் அனைத்திற்கும் இந்தியர்கள் ஒரு காலத்தில் பயணித்தார்கள்.மதம்,கலாச்சாரம்,வியாபாரம் அனைத்தும் பரவின். இந்தியமக்கள் பல நாடுகளுக்கு சென்றார்கள்.வெளிநாட்டினார் இந்தியாவிற்கு வந்தார்கள்.வாணிபம் பெருகியது.கலைகள் வளர்ந்தன.மக்கள் வளமாக வாழ்ந்தார்கள்.
-
எப்போது நாம் நமது ஆன்மீக அறிவை மறைத்துக்கொள்ள தொடங்கினோமோ,எப்போது வெளி நாட்டினருக்கு அதை கொடுக்க தவறினோமோ,எப்போது வெளி நாடுகளுக்கு செல்ல தவறினோமோ, எப்போது வெளிநாட்டில் நடக்கும்,அரசியல் சமுதாய மாறுதல்களை கவனிக்க தவறினோமோ, எப்போது வெளிநாடுகளுக்கு சென்றவனை ஜாதியிலிருந்து விலக்கி வைத்து, அவனுக்கு மரணதண்டனை கொடுக்க முன்வந்தோமோ அப்போது நமது அழிவு ஆரம்பமானது என்பதுதான் அவர் முடிவில் கண்ட தீர்வு
-
இதை எப்படி தீர்ப்பது. மீண்டும் இந்தியர்கள் வெளிநாடுகள் அனைத்திற்கும் பயணிக்க வேண்டும். இந்திய ஆன்மீகத்தை,பண்பாட்டை,கலாச்சாரத்தை, பரப்ப வேண்டும். இதன் மூலம் வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கு ஆன்மீக வாழ்க்கை கிடைக்கும்.இந்தியர்கள் மீது மரியாதை ஏற்படும்.இந்திய பண்பாட்டை கேலி செய்ய மாட்டார்கள்.அதை புரிந்துகொண்டு பின்பற்ற தொடங்குவார்கள்.இந்தியாவிலுள்ள படித்தவர்கள்,வியாபாரிகள்,ஆன்மீகவாதிகள் அனைவரும் வெளிநாடுகளுக்கு சென்று ஒருமுறையாவது பார்த்துவரவேண்டும் என்று சுவாமிஜி விரும்பினார்
-
முடிவில் பாறையைவிட்டு மீண்டும் நிலப்பரப்பிற்கு வந்தார்.
அவரை பற்றி கேள்விப்பட்டு மக்கள் பலர் கூடினார்கள்.சுவாமிஜி பாறையில் நீங்கள் என்ன கண்டீர்கள்,எதை குறித்து தியானம் செய்தீர்கள் என்று கேட்டார்கள்.
சுவாமிஜி கூறினார்,அகத்தளவிலும் புறத்தளவிலும் தான் எதைத்தேடி இத்தனை ஆண்டுகாலம் அலைந்தேனோ அது இந்த இடத்தில் எனக்கு கிடைத்தது என்றார்.
--
கட்’டுரை...சுவாமி வித்யானந்தர்(2-6-2018)

No comments:

Post a Comment