Wednesday, 29 August 2018

வேதம் பயில்வோம்-பாகம்-10-ரிக்வேதம்

வேதம் பயில்வோம்-பாகம்-10-ரிக்வேதம்
-
ஐதரேய உபநிஷதம்
-
உலகிலேயே மிகப்பழைய நூல் இந்த சிந்தனைக் கருவூலம்தான். இது எப்போது தோன்றியது என்பது ஒருவருக்கும் தெரியாது. இக்கால ஆராய்ச்சியாளர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். இது எட்டாயிரம் அல்லது ஒன்பதாயிரம் வருடங்களுக்கு முன்பு தோன்றியதாக இருக்கலாம்... ஆனால் அன்று போலவே இன்றும் அவை புதுமை மாறாமல் இருக்கின்றன; ஏன், முன்னைவிட புதுப் பொலிவுடன் திகழ்வதாகவே கூறலாம்.
-
வேதங்கள் யாராலும் எழுதப்பட்டவை அல்ல. என்றென்றும் நின்று நிலவுகின்ற உண்மைகளின் தொகுப்பே வேதங்கள். புவியீர்ப்பு விதி, அது கண்டறியப்படும் முன்னரே இருந்தது, மனித இனம் முழுவதும் அதை மறந்து விட்டாலும் இருக்கும். அவ்வாறுதான் ஆன்மீக உலகின் விதிகளும்... அவை கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னரும் இருந்தன, நாம் அவற்றை மறந்தாலும் இருக்கும் என்று எழுதுகிறார் சுவாமி விவேகானந்தர். ரிஷிகள் அந்த விதிகளை வெளிப்படுத்தினார்கள், அவ்வளவுதான்.
-
அவ்வாறு ரிஷிகள் வெளிப்படுத்திய அந்த உண்மைகள் பின்னாளில் வியாச முனிவரால் நான்காகத் தொகுக்கப்பட்டன. அவை ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள். ஒவ்வொரு வேதமும் மூன்று முக்கியப் பிரிவாக பிரிக்கப்படுகின்றன. அவை சம்ஹிதை (பல்வேறு தேவர்களிடம் பிரார்த்தனைகள்), பிராம்மணம் (யாக விவரங்கள்), ஆரண்யகம் (உபநிஷதங்கள்; அறுதி உண்மையைப்பற்றிய ஆராய்ச்சி).
-
உபநிஷதங்கள்:
-
உபநிஷதங்கள், பிரம்ம சூத்திரம், ஸ்ரீமத் பகவத்கீதை மூன்றும் ப்ரஸ்தான த்ரயம் என்று வழங்கப்படுகின்றன. அறுதிப் பிரமாணமாக அமைந்த மூன்று நூல்கள் என்பது இதன் பொருள்.
-
வேதகாலச் சிந்தனையின் மணிமகுடமாகத் திகழ்பவை உபநிஷதங்கள். அறுதி உண்மையைப் பற்றிய ஆராய்ச்சியில் மனித மனத்தால் தொடக்கூடிய எல்லையை உபநிஷதங்கள் தொட்டுவிட்டன என்றே உலகின் சிந்தனையாளர்கள் கருதுகின்றனர்.
-
உபநிஷதங்கள் பல. அவற்றில் 108 பொதுவாகக் கணக்கில் கொள்ளப்படுகின்றன. அவற்றுள் பதினான்கு உபநிஷதங்கள் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. அவை ஈச, கேன, கட, ப்ரச்ன, முண்டக, மாண்டூக்ய, ஐதரேய, தைத்திரீய, சாந்தோக்ய, பிருஹதாரண்யக, சுவேதாஸ்வதர, கௌசீதகி, மஹாநாராயண, மைத்ராயணி உபநிஷதங்கள் ஆகும். இவற்றுள் முதல் பத்து உபநிஷதங்களுக்கு ஸ்ரீசங்கரர் விளக்கவுரை எழுதியுள்ளார்.
-
14 உபநிஷதங்களும் கீழ்க்கண்ட பட்டியலின்படி நான்கு வேதங்களில் அமைந்துள்ளன.
-
உபநிஷதம் வேதம்
-
ஐதரேய, கௌசீதகி ரிக்
-
ஈச, கட, தைத்திரீய,
பிருஹதாரண்யக, சுவேதாஸ்வதர, யஜுர்
மைத்ராயணீ, மஹாநாராயண
-
கேன, சாந்தோக்கிய சாம
-
ப்ரச்ன, முண்டக, மாண்டூக்ய அதர்வண
-
ஐதரேய உபநிஷதம்: ரிக் வேதத்தைச் சேர்ந்த ஐதரேய ஆரண்யகத்தின் 2-ஆம் பகுதியில் 4-6 அத்தியாயங்களாக அமைந்துள்ளது ஐதரேய உபநிஷதம். இதனை அருளியவர் மஹீதாச ஐதரேயர் என்ற முனிவர் ஆவார். இவர் பூதேவியை வழிபட்டு ஞானம் பெற்றார் என்று கூறப்படுகிறது.
-
இந்த உபநிஷத்தில் மூன்று அத்தியாயங்கள் உள்ளன; மொத்தம் 33 மந்திரங்கள் உள்ளன. முதல் அத்தியாயம் கடவுள் உலகையும் மனிதனையும் உணவையும் படைத்தது பற்றி கூறுகிறது. 2- ஆம் அத்தியாயம், கடவுள் மனிதனுள் புகுந்து உயிர் உருவாதல் என்ற அதிசயச் செயலை நிகழ்த்துவதுபற்றி விவரிக்கிறது. 3-ஆம் அத்தியாயம் மனிதனில் ஆன்மாவாக விளங்குகின்ற பேருணர்வுப்பொருளே இறைவனாகப் பிரபஞ்சத்தில் நிலவுகிறார் என்ற கருத்தைக் கூறுகிறது.
-
மீண்டும்மீண்டும் படித்து, மந்திரங்களின் பொருளை ஆழமாகச் சிந்தித்து, சாதனைகளிலும் ஈடுபட்டால்தான் உபநிஷதங்களை உண்மையாகப் புரிந்து கொள்ள முடியும்; அவற்றின் அற்புதத்தில் ஆழ்ந்து மனம் மகிழ முடியும்.
-
பல மந்திரங்களின் பொருள் சுலபத்தில் அறிந்து கொள்ளத் தக்கதாக இல்லை. பொருள் புரியவில்லை என்பதற்காகச் சேர்ந்துவிடாமல், புரிந்த மந்திரங்களின் பொருளை ஆழ்ந்து சிந்தித்து சாதனைகளில் உயர்வடைய முயற்சிக்க வேண்டும்.
-
சாந்தி மந்திரம்!
-
எந்த ஒன்றையும் செய்யும்போதும் அதற்குரிய மனநிலை இருக்கப்பெறுவது இன்றியமையாதது. எந்தக் காரியத்தைச் செய்கிறோமோ அதற்குரிய மனநிலையை வரவழைத்துக்கொண்டு, அதன்பிறகு அந்தச் செயலில் ஈடுபடுவது சிறப்பான பலனை அளிக்கும். உபநிஷதங்களின் உண்மைப் பொருளை வெறும் புலமையால் உணர முடியாது. பணிவுடனும் வழிபாட்டு உணர்வுடனும் அணுகும்போது மட்டுமே அதனைப் புரிந்துகொள்ள முடியும். அத்தகைய மனப்பான்மையை மனத்தில் கொள்வதற்காக இந்த மந்திரங்கள் முதலில் ஓதப்படுகின்றன.
-
ஐதரேய உபநிஷத்திற்கான சாந்தி மந்திரம் இது:
-
ஓம் வாங்மே மனஸி ப்ரதிஷ்ட்டிதா மனோ மே
வாசி ப்ரதிஷ்ட்டிதம் ஆவிராவீர்ம ஏதி வேதஸ்ய ம ஆணீஸ்த: ச்ருதம்
மே மா ப்ரஹாஸீ: அனேனாதீதேனாஹோ ராத்ரான் ஸந்ததாமி ரிதம்
வதிஷ்யாமி ஸத்யம் வதிஷ்யாமி தன்மாமவது தத்வக்தாரமவது
அவது மாமவது வக்தாரமவது வக்தாரம்
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:
-
பொருள்
-
எனது பேச்சு மனத்தில் நிலைபெறட்டும்; மனம் பேச்சில் நிலைபெறட்டும். சுடரொளிப் பரம்பொருளே, என்னுள் ஒளிர்வாயாக. மனம், பேச்சு ஆகிய இருவரும் வேதங்களின் உண்மையை எனக்குக் கொண்டு வருவீர்களாக. என்னால் கேட்கப்பட்டவை என்னை விட்டு விலகாதிருக்கட்டும். கற்றவற்றை பகலும் இரவும் நான் சிந்திப்பேனாக. நான் வியாவகாரிக உண்மையைச் சொல்வேனாக, பாரமார்த்திக உண்மையைச் சொல்வேனாக. அந்த இறைவன் என்னைக் காக்கட்டும், குருவைக் காக்கட்டும், குருவைக் காக்கட்டும்!
-
உயர் வாழ்க்கையை நாடுபவர்களுக்கு சிந்தனையும் பேச்சு ஒன்றாக இருப்பது மிகவும் அவசியம். சாதாரண வாழ்க்கையிம் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் என்று பிரார்த்திக்கிறார் வள்ளலார். உள்ளும் புறமும் ஒன்றாக இருக்கின்ற நிலையைப் பிரார்த்திக்கின்ற மந்திரம் இது.
-
1:1 படைப்பு பற்றி...
மந்திரம்-1
-
ஓம் ஆத்மா வா இதமேக ஏவாக்ர ஆஸீன்னான்யத் கிஞ்சன மிஷத் ஸ ஈக்ஷத லோகான்னு ஸ்ருஜா இதி (1)
-
பொருள்
-
1. ஆரம்பத்தில் கடவுள் ஒருவர் மட்டுமே இருந்தார்.
இமைக்கின்ற வேறு எதுவும் அப்போது இல்லை.
நான் உலகங்களைப் படைப்பேன் என்று அவர்
நினைத்தார்.
-
படைப்புபற்றி பொதுவாக எல்லா உபநிஷதங்களும் ஆராய்கின்றன. வெளி, காற்று, நெருப்பு, நீர், பூமி என்ற ஐந்தும் (பஞ்ச பூதங்கள்) படைப்பிற்கு அடிப்படை என்ற அளவில் அனைத்து உபநிஷதங்களும் ஒத்திருக்கின்றன. ஆனால் படைப்பு என்ற நிகழ்ச்சியைப் பற்றி ஒவ்வோர் உபநிஷதமும் ஒவ்வொரு கோணத்தில் கூடுகிறது. ஐதரேய உபநிஷத்தின் கருத்தை இங்கே காண்கிறோம்.
-
படைப்பின் ஆரம்பம்பற்றி இங்கே கூறப்படுகிறது. உயிரினங்கள் எதுவும் அப்போது இல்லை. உயிரினங்கள் தான் இமைப்பவை என்று இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன. வேறு எதுவும் இல்லாத அந்த ஆரம்பத்தில், உலகங்களைப் படைக்க வேண்டும் என்று கடவுள் நினைத்தார்.
-
மந்திரம்-2
-
ஸ இமான் லோகானஸ்ருஜத அம்போ மரீசீர்மரமாபோ- ஸதோஸம்ப: பரேண திவம் த்யௌ: ப்ரதிஷ்ட்டாஸந்தரிக்ஷம் மரீசய: ப்ருதிவீ மரோ யா அதஸ்தாத்தா ஆப: (2)
-
பொருள்
-
2. அம்பலோகம், மரீசீலோகம், மரலோகம்,
ஆபலோகம் ஆகிய உலகங்களைக் கடவுள் படைத்தார்.
அம்பலோகம் சொர்க்கலோகத்திற்கு மேலே உள்ளது.
அம்பலோகத்திற்குச் சொர்க்கம் ஆதாரமாக உள்ளது.
மரீசீலோகம் ஒளியுலகங்கள் நிறைந்த இடை
வெளியாம். மரலோகம் என்பது பூமி. பூமிக்குக்
கீழே உள்ளது ஆபலோகம்.
-
புராணங்களில் 14 உலகங்கள் பற்றி கருத்து வருகிறது. அதற்கு மூலமாக உள்ளது இந்த உபநிஷதக் கருத்து. 5 உலகங்கள் இங்கே கூறப்படுகின்றன.
-
1. அம்பலோகம்: அம்பஸ் என்றால் தண்ணீர். அம்பலோகம் என்றால் தண்ணீர் உலகம். இது சொர்க்கத்திற்கு மேலே உள்ள உலகம். தொலைதூரத்திலிருந்து வானம் நீலக் கடலைப்போல் தெரிவதாலோ, அல்லது மழை வானிலிருந்து வருகிறது என்ற சாதாரண நம்பிக்கையின் காரணமாகவோ, மிகவுயர்ந்ததான அம்பலோகம் தண்ணீர் நிறைந்ததாகக் கூறப்படுகிறது.
-
2. சொர்க்கலோகம்: புராணங்கள் இதனை ஸுவர்லோகம் என்கின்றன. தேவர்கள் வாழும் உலகம் இது.
-
3. மரீசீலோகம்: மரீசீ என்றால் ஒளி. பூமிக்கு மேலுள்ள இடைவெளி சூரிய கிரணங்களால் ஒளிமயமாக இருப்பதால் இந்தப் பெயரில் அழைக்கப்பட்டிருக்கலாம்.
-
4. மரலோகம்: மரம் என்றால் மரிப்பவர்கள், அதாவது இறப்பவர்கள், மனிதர்கள். மனிதர்கள் வாழ்கின்ற பூமி.
-
5. ஆபலோகம்: ஆப என்றால் தண்ணீர், பூமிக்குக் கீழே இருப்பதாகக் கருதப்படுகின்ற பாதாளலோகம். கடல்நீர் கீழ் உலகங்கள் வரை பரந்துள்ளது என்ற கருத்தில் தண்ணீர் உலகம் என்று கூறப்பட்டிருக்கலாம்.
-
வேதபாடம் தொடரும்...
---
இந்துமதம் வாட்ஸ்அப் குழுவில் இணைய 9789 374 109 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு உங்கள் வாட்ஸ்அப் மூலம் ரிக்கொஸ்ட் அனுப்பவும்
-

No comments:

Post a Comment