அன்னை சாரதாதேவியின் உபதேசங்கள்-பாகம்-5
-
உங்கள் உடம்பு என்பது வேறென்ன மகளே, அதுவும் என் உடம்பே அல்லவா! உங்கள் உடம்பு நல்ல நிலையில் இல்லாவிட்டால் நானும் கஷ்டப்படத்தானே வேண்டும்
-
சாதனை வாழ்வில் பெரும்பாலான தடைகள் அகத்திலிருந்தே வருகின்றன.புறத்தடைகள் குறைவே.ஆனால் தடைகள் எவையானாலும் ஜபம் செய்யச்செய்ய.தியானமும் தாரணையும் பழகப்பழக அவை ஒவ்வொன்றாக விலகிவிடும்
-
கடமைகளை செய்துகொண்டே போ. மனத்தின் அழுக்குகள் அப்படியே இருக்கின்றனவா,போய்விட்டனவா என்றெல்லாம் கவலைப்பட்டுக்கொண்டிருக்காதே.தென்னை மட்டை பழுத்தால் தானாக வீழ்ந்துவிடும்
-
உங்கள் அனைவரின் வாய்மூலமாகவும் நான் சாப்பிடத்தானே செய்கிறேன்.நீங்கள் சாப்பிட்டாலே நான் சாப்பிட்டதுபோல்தான்.
-
அவதாரபுருஷரை எல்லோராலும் அறிந்துகொள்ள முடியுமா என்ன? ஏதோ ஓரிருவரால் மட்டுமே முடியும்.மனித குலத்தின் நன்மைக்காக அவர்கள் எவ்வளவு பாடுபடுகின்றனர்.எவ்வளவு கஷ்டங்களை அனுபவிக்கின்றனர்
-
குருதேவரின் தொண்டையிலிருந்து ரத்தம் கொட்டியது.அப்போதும் அவர் பேசுவதை நிறுத்தவில்லை.அவர்களுக்கு எப்படி நன்மை உண்டாகும் என்பதுபற்றியே சிந்தித்தார்
-
உலகில் வாழ வேண்டுமானால் கொஞ்சம் இந்தப்பக்கம் அந்தப்பக்கம் பார்த்து வாழவேண்டும்.கவனமின்மையை விடவேண்டும்.எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.அப்போதுதானே மற்றவர்களுடன் வாழமுடியும்.
-
நான் ஒரு வாய் வழியாககத்தான் சாப்பிடுகிறேனா? அப்படியா நீ நினைத்துக்கொண்டிருக்கிறாய்? நானேதான் அனைவருமாக ஆகியிருக்கிறேன்.
-
மீண்டும் மீண்டும் வர வேண்டியிருக்கிறது.இதிலிருந்து விடுதலையே கிடையாதா? எங்கே சிவன்,அங்கே சக்தி-சிவசக்தி ஒன்றாக வருகிறார்கள்.மீண்டும் அதேசிவன் அதேசக்தி.தப்பவே முடியாது.ஆனால் உலகம் இதை புரிந்துகொள்வதில்லை
-
குருதேவர் உலகிற்காக எவ்வளவு துயரங்களை அனுபவித்தார்.எவ்வளவு தவங்கள்.அவருக்கு தவங்கள் தேவை இருந்ததா என்ன? இருந்தாலும் தவம் செய்தார்.அவர் தவம் செய்தது உலக மக்களுக்காக மட்டுமே.சாதாரண மனிதர்களால் தவங்கள் செய்ய முடியுமா என்ன?அவர்களிடம் வேகம் எங்கே.ஆற்றல் எங்கே?அதனால்தானே குருதேவர் எல்லாம் செய்ய வேண்டியிருந்தது.
-
ஒரே சந்திரன் தினம்தோறும் உதிப்பதில்லையா? இறைவனால் தப்ப முடியாது.அவர் பிடிபட்டுவிட்டார்.உயிரினங்கள் அனைத்தும் அவருடையவை அவர் கவனிக்காவிட்டால் யார் கவனிப்பது?
-
எப்போது என்னை அழைப்பாயோ அப்போது நான் உன் அருகில் வருவேன்.இதை மனத்தில் வைத்துக்கொள்.ஒருபோதும் மறக்காதே.அழைத்தால் அவர் வருவார்.கல்பத்தரு அல்லவா அவர்
-
மீண்டும் மீண்டும் பிறக்கிறேன் மலைமலையாய் துன்பங்களை தாங்குகிறேன்.எத்தனை நாள் இந்த வேதனையைத் தாங்குவேன்.இந்த வேதனைகள் உயிர்களுக்கு மட்டும்தானா?இறைவனுக்கும்தான்.குருதேவர் எவ்வளவு கஷ்டப்பட்டார்.யார் இதை புரிந்துகொள்வார்கள்?
-
கடவுளிடம் உயிர்கள் பட்டுள்ள கடன் தீரவே தீராதா என்று சிலவேளைகளில் தோன்றுகிறது.தீராது எத்தனை தவங்கள் செய்தாலும் அவரிடம் பட்டுள்ள கடனைத் தீர்க்க முடியாது. ஏனென்றால் உயிர்களும் அவருடையவை அல்லவா
-
எவ்வளவு சோகம்! எவ்வளவு தாபம்! எவ்வளவு வேதனைக்கனல்கள்! இவற்றிலெல்லாம் வறுபட்டு இங்கே வருகிறார்கள்.குருதேவர் அல்லாமல் வேறு யார் அவர்களின் வேதனைத் தீயை அணைப்பார்கள்?அவரைவிட அதிகம் வேதனையை அனுபவித்தவர் யார்?அதனால்தான் மக்களின் வேதனைகளை புரிந்துகொள்கிறார்
-
ஒருமுறை நான் என்ன கண்டேன் தெரியுமா? குருதேவரே எல்லாமாக ஆகியிருப்பதைக் கண்டேன்.எந்தப் பக்கம் பார்த்தாலும் அவரே.குருடனும் அவரே,முடவனும் அவரே.அவரைத்தவிர வேறு எதுவும் இல்லை.படைப்பு அவருடையது.அவரே எல்லாமாக ஆகியிருக்கிறார் .
-
உண்மையில் துன்பங்களை அனுபவிப்பது உயிர்கள் அல்ல,உயிர்களாக ஆகியிருக்கும் (குருதேவரே)இறைவனே அதை அனுபவிக்கிறார்.அதனால்தான் யார்வந்து அழுதாலும் அவர்களைத் தூக்கிவிட வேண்டியுள்ளது.அவரது பொருளால் அவருக்கே சேவை செய்கிறேன்.
-
என்னைத் தூங்கச் சொல்கிறார்கள்.என்னால் தூங்க முடியுமா? தூங்குவதைவிட்டுவிட்டு அந்த நேரத்திலும் ஜபம் செய்தால் உயிர்களுக்கு நன்மை உண்டாகுமே என்று தோன்றுகிறது.
-
சாரைசாரையாக எறும்புகள் போய்க்கொண்டிருந்தது.ராது அவற்றைக் கொல்லப்போனாள்.எனக்கு என்ன தெரிந்தது தெரியுமா? அங்கே எறும்புகளையே நான் காணவில்லை.அவையெல்லாம் குருதேவர்.குருதேவரின் அதே கைகள்,கால்,முகம்,கண்,எல்லாம் அவருடையவை.ராதுவை தடுத்தேன்.எல்லா உயிர்களுமாக அவரே இருக்கிறார்.என்னால் பெரிதாக என்ன செய்துவிட முடியும்.எத்தனைபேரைக் காப்பாற்றுவேன்?எல்லோருடைய பொறுப்பையும் அவர் என்னிடம் தந்துள்ளார்.எல்லோரையும் காப்பாற்ற முடியுமானால் எவ்வளவோ நன்றாக இருக்கும்.
-
நான் புறப்படத் தயாரானேன்.அப்போது அன்னை சிரித்தபடியே “அன்னையும் பிள்ளையும்” என்று கூறி ஆசீர்வதித்தார்.“அன்னையும் பிள்ளையும்,அன்னையும் பிள்ளையும்” என்ற வார்த்தை மட்டும் மீண்டும் மீண்டும் என்னுள் ஒலித்துக்கொண்டே இருந்தது...
-
தொகுப்பு...சுவாமி வித்யானந்தர்.வாட்ஸ் அப்- 9789374109
No comments:
Post a Comment