வேதம் பயில்வோம்-பாகம்-8-யஜுர்வேதம்

வேதம் பயில்வோம்-பாகம்-8-யஜுர்வேதம்
-
ஈசாவாஸ்ய உபநிஷதம் (ஒளிக்கு அப்பால்)
-
ஒளிக்கு அப்பால் உள்ளது என்ன?
-
மந்திரம்-15
-
ஹிரண்மயேன பாத்ரேண ஸத்யஸ்யாபிஹிதம் முகம்
தத் த்வம் பூஷன்னபாவ்ருணு ஸத்யதர்மாய த்ருஷ்ட்டயே (15)
-
பொருள்
-
15. உண்மையின் முகம் பொன்மயமான திரையால்
மறைக்கப்பட்டுள்ளது. சூரியதேவா! சத்திய நிஷ்டை
உடைய நான் அந்த உண்மையைக் காண்பதற்காக
மறைப்பை விலக்குவாய்!
-
இருளிலிருந்து என்னை ஒளிக்கு அழைத்துச் செல்வாயாக (1. தமஸோ மா ஜ்யோதிர் கமய
அப்யாரோஹ மந்திரம், பிருஹதாரண்யக உபநிஷதம், 1.3.28.)என்பதுபோன்ற பிரார்த்தனைகளை நாம் அறிவோம். இது இறைவனை நாடிச் செல்பவனின் ஆரம்ப பிரார்த்தனை. அவன் அறியாமை இருளில் இருக்கிறான். எனவே அந்த இருளிலிருந்து ஒளிக்கு அழைத்துச் செல்லுமாறு அவன் இறைவனைப் பிரார்த்திக்கிறான். பிரார்த்தனை, ஜபம், தியானம் போன்ற பல்வேறு சாதனைகளின்மூலம் அந்த ஒளியைக் காண்கிறான். அந்த ஒளியின் மென்மையையும் வசீகரத்தையும் உணர்த்தவே பொன்மயமான திரை என்று இந்த மந்திரம் குறிப்பிடுகிறது. அந்த மென்மையிலும் வசீகரத்திலும் அவன் தன்னை இழந்து அங்கேயே நிற்கிறான்.
-
ஆனால் உண்மை என்பது இருள் - ஒளி, துன்பம்- இன்பம் போன்ற அனைத்து இருமைகளையும் கடந்தது. எனவே உண்மையை, உண்மைப்பொருளை, உள்ளது உள்ளபடி அறிய வேண்டுமானால் அவன் ஒளியையும் கடந்து சென்றாக வேண்டும். அந்த ஒளி எவ்வளவுதான் இன்பம் தருவதாக இருந்தாலும் அவன் அதைக் கடந்து சென்றேயாக வேண்டும். அதற்காக இறைவனைப் பிரார்த்திக்கின்ற மந்திரம் இது.
-
அறியாமை இருளில் உழல்கின்ற ஒருவன் ஜபம், தவம், வழிபாடு போன்ற சாதனைகளின்மூலம் ஒளிமயமான, தங்கமயமான இறைக் காட்சியைப் பெற முடியும். ஆனால் அதைக் கடந்து செல்வதற்கு நமது முயற்சிகள் எதனாலும் இயலாது. அங்கே இறையருள் ஒன்றே செயல்பட முடியும். எனவேதான் அவரை நோக்கி பிரார்த்திக்கிறான்.
-
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சாதனைக்கால நிகழ்ச்சி ஒன்று இதனை மிகத் தெளிவாக விளக்குகிறது. தோதாபுரி என்பவரின் துணையுடன் வேதாந்த சாதனைகளைச் செய்தார் ஸ்ரீராமகிருஷ்ணர். அவருக்குப் பல்வேறு உபதேசங்களை அளித்த தோதாபுரி, இறுதியாக, இருமைகள் அனைத்தையும் கடந்த நிலையில் உண்மைப்பொருள் அனுபவத்தைப் பெறுமாறு கூறினார். ஸ்ரீராமகிருஷ்ணர் எவ்வளவு முயன்றும் அது முடியவில்லை. ஏனெனில் மனம் அகமுகமானதும் தேவியின் ஒளிமயமான காட்சி அவர்முன் எழுந்தது. அந்தப் பேரொளியைக் கடந்து அவரால் செல்ல முடியவில்லை. கடைசியில் நம்பிக்கையையே இழந்த நிலையில் அவர் தமது இயலாமையைத் தோதாபுரியிடம் தெரிவித்தார். அவ்வளவு வசீகரமான காட்சி அது. இறுதியில் தோதாபுரியின் அருளால் அவர் அந்த ஒளியைக் கடந்து சென்று, உண்மைப் பொருளுடன் ஐக்கியமாகின்ற நிலையை அடைந்தார்.
-
உயர்நிலை பிரார்த்தனையைச் செய்வதற்கான தகுதியையும் இந்த மந்திரத்தில் நாம் காண்கிறோம். சத்திய நிஷ்டை உடைய நான் என்று தனது தகுதியை இங்கே அந்த ரிஷி குறிப்பிடுகிறார். உண்மையில், உண்மைப்பொருளாகிய இறைவனில் நிலைநிற்கின்ற, இறைவனைச் சரணடைந்த வாழ்க்கை இங்கே குறிப்பிடப்படுகிறது. உலகப் பொருட்கள் எதையும் கருதாமல். கடவுள் ஒருவரையே நம்பி வாழ்கின்ற, அவரை ஒளிமயமாக ஏற்கனவே கண்ட ஒருவர் செய்கின்ற பிரார்த்தனை இது.
-
ஒளிக்கு அப்பால் இருப்பது நானே:
-
மந்திரம்-16
-
பூஷன்னேகர்ஷே யம ஸூர்ய ப்ராஜாபத்ய வ்யூஹரச்மீன் ஸமூஹ
தேஜோ யத் தே ரூபம் கல்யாணதமம் தத் தே பச்யாமி
யோஸஸாவஸெள புருஷ: ஸோஸஹமஸ்மி (16)
-
பொருள்
-
16. அனைத்து உயிர்களையும் பேணிக் காப்பவனே,
தனியாகப் பயணிப்பவனே, அனைத்தையும் ஆள்ப
வனே, சூரிய தேவா, பிரஜாபதியின் மகனே! உனது
கிரணங்களை விலக்கிக்கொள். உனது பேரொளியைச்
சுருக்கிக்கொள். மகிமை வாய்ந்த உனது வடிவத்தை
உனதருளால் நான் காண வேண்டும். அந்தச் சூரியனில்
இருப்பது நானே.
-
இறையருள் மட்டுமே வேண்டியது. அதற்காகவே ஒருவன் பிரார்த்திக்க வேண்டும். எல்லா உயிர்களும் முன்வினையின் படியே செயல்படுகின்றன, துன்புறுகின்றன. ஆனால் இறைவன் நினைத்தால், வினைப்பயனை அனுபவிக்க வேண்டிய காலத்தைக் குறைத்து ஒருவனுக்கு விரைவில் அனுபூதியை அளிக்க முடியும் என்பார் அன்னை ஸ்ரீசாரதாதேவி. ஒளிக்கு அப்பால் என்ன உள்ளது என்பதைக் காண்பதற்கு உபநிஷத முனிவரும் இறையருளை வேண்டிப் பிரார்த்திப்பதை இங்கே காண்கிறோம்.
-
ஒளிக்கு அப்பால் இருப்பது என்ன?
-
ஒளிக்கு அப்பால் தம்மையே கண்டதாக உபநிஷத முனிவர் கூறுகிறார். எவ்வளவோ முயற்சிகளுக்குப் பிறகு, ஆன்மீக சாதனைகளுக்குப் பிறகு, இறைக் காட்சிக்குப் பிறகு அறுதி நிலை அனுபூதியாக இந்த முனிவர் தம்மையே காண்கிறார். இதன் பொருள் என்ன?
-
சூரியனில் இருப்பது நானே என்று உபநிஷதம் கூறுவதில் நான் என்பதை நாம் சாதாரணமாகப் புரிந்து கொள்கின்ற நான் என்ற பொருளில் புரிந்துகொள்ளக் கூடாது. பொதுவாக உடல்- மனச் சேர்க்கையையே நான் என்று கூறுகிறோம். இந்த நான் ஒளிக்கு அப்பால் இருக்க முடியாது. எனவே முனிவர் கூறுகின்ற நான் உயர்நிலை நான் ஆகும். சாந்தோக்ய உபநிஷதக் கதை ஒன்றின்மூலம் இதனை சுவாமி விவேகானந்தர் விளக்குகிறார்:
-
ஒரு தேவனும் ஓர் அசுரனும் ஆன்மாவைப்பற்றி அறிவதற்காக முனிவர் ஒருவரிடம் சென்றனர். பல வருடங்கள் கல்வி கற்றனர். இறுதியில் ஒரு நாள் அந்த முனிவர் அவர்களிடம், நீங்கள் தேடும் பொருள் நீங்களே என்று கூறினார். இருவரும் தங்கள் உடம்பே ஆன்மா என்று நினைத்துக்கொண்டனர். மிகுந்த திருப்தியுடன் திரும்பிச் சென்று தங்கள் சுற்றத்தாரிடம், கற்க வேண்டி அனைத்தையும் நாங்கள் கற்றுவிட்டோம். இனி உண்போம், குடித்துக் களிப்போம். நாம்தான் ஆன்மா. நமக்குமேல் எதுவும் கிடையாது என்றனர். அசுரனின் இயல்பே அறிவீனமும் மூடத்தனமும்தானே. அவன் மேற்கொண்டு சிந்திக்கவில்லை. தானே கடவுள், ஆன்மா என்பது உடலே என்ற கருத்தில் பூரண திருப்தி அடைந்துவிட்டான்.
-
தேவன் சற்று தூய இயல்பு படைத்தவனாக இருந்தான். அவனும் முதலில், நானே, அதாவது இந்த உடம்பே பிரம்மம் என்று தவறாக நினைத்தான். ஆனால் சில நாட்களிலேயே, முனிவர் கூறியதன் பொருள் அதுவாக இருக்காது, அதற்குமேல் ஏதோ இருக்கிறது என்பதை புரிந்துகொண்டான். எனவே அவன் முனிவரிடம் மீண்டும் சென்று, சுவாமி, இந்த உடம்பைத்தான் ஆன்மா என்று கூறினீர்களா? ஆனால் எல்லா உடம்புகளும் அழிந்து போவதை நான் காண்கிறேனே! ஆன்மா மரணமற்றது அல்லவா? என்று கேட்டான். அதற்கு அந்த முனிவர் கண்டுபிடி. நீயே அது என்று கூறினார்.
-
அந்தத் தேவனும் உடம்பை இயக்குகின்ற பிராண சக்திகளே ஆன்மா என்பதுதான் முனிவர் கூறியதன் பொருளாக இருக்கும் என்று எண்ணினான். ஆனால் சாப்பிட்டால் பிராண சக்திகள் வலிமையுடன் இருப்பதையும், சாப்பிட்டாவிட்டால் அவை பலவீனம் அடைவதையும் சில நாட்களுள் அறிந்துகொண்டான். எனவே முனிவரிடம் சென்று, சுவாமி, பிராண சக்திகளையா ஆன்மாவென்று கூறினீர்கள்? என்று கேட்டான். அவர் மறுபடியும், நீயே கண்டுபிடி, நீயே அது என்றார்.
-
வீடு திரும்பிய தேவன் யோசிக்கலானான். ஆன்மா என்பது ஒரு வேளை மனமாக இருக்கலாம் என்று நினைத்தான். ஆனால் எண்ணங்கள் இப்போது நல்லதாக, மறுகணமே கெட்டதாக எத்தனையோ விதமாக இருப்பதை வெகுவாக அறிந்துகொண்டான். மாறுகின்ற மனம் ஆன்மாவாக முடியாது என்று கருதிய அவன் முனிவரிடம் சென்று, சுவாமி, மனம் ஆன்மாவாக இருக்க முடியாது என்று நினைக்கிறேன். நீங்கள் அதையா சொன்னீர்கள்? என்று கேட்டான். அவரோ மறுபடியும், நீயே கண்டுபிடி என்று கூறிவிட்டார்.
-
தேவன் வீடு சென்றான். இறுதியில் தானே ஆன்மா என்று தெரிந்து கொண்டான். ஆன்மா எண்ணங்கள் அனைத்திற்கும் அப்பால் உள்ளது, ஒன்றேயானது, பிறப்பு இறப்பு இல்லாதது. அதனை ஆயுதங்கள் வெட்ட முடியாது, தீ எரிக்க முடியாது, நீர் கரைக்க முடியாது, காற்று உலர்த்த முடியாது, அது ஆதி அந்தம் இல்லாதது, அசைக்க வல்லது. அது உடலும் அல்ல, மனமும் அல்ல, இவை அனைத்திற்கும் அப்பால் உள்ளது. இவ்வாறு அறிந்த தேவன் திருப்தி அடைந்தான். உடலை நேசித்தால், பாவம், அந்த அசுரன் உண்மையை அறியவில்லை.
-
ஒளிக்கு அப்பால் என்ன உள்ளது என்பதை அறிய முற்பட்ட முனிவர் அந்தப் பொருள் நானே என்ற அனுபூதி பெறுகிறார்.

6. சிந்தனை செய்க!

அனுபூதி பெற்று, வாழ்க்கையின் லட்சியத்தை அடைந்துவிட்ட முனிவர்களை வசந்தகாலத் தென்றலுக்கு ஒப்பிடுகிறார் ஸ்ரீசங்கரர்: அமைதியும் மகிமையும் அடைந்துவிட்ட மகான்கள் இருக்கிறார்கள். தவழ்ந்துவரும் வசந்தம்போல் அவர்கள் மனிதகுலத்திற்கு நன்மை செய்கிறார்கள். இந்த சம்சாரப் பொருங்கடலை அவர்கள் கடந்துவிட்டார்கள்; பிறகும் அவ்வாறே கடக்க வேண்டுமென்று துளிகூட தன்னலமின்றி பாடுபடுகிறார்கள். சூரியனின் சுடுகதிர்களால் பொசுக்கப்பட்ட பூமியை நிலவின் கிரணங்கள் இயல்பாகக் குளிர்விப்பதுபோல், பிறரது துயரைக் களைவதற்காகப் பாடுபடுவது அவர்களின் இயல்பாகிவிடுகிறது (1. சாந்தா மஹாந்தோ நிவஸந்தி ஸந்தோ
வஸந்தவத் லோகஹிதம் சரந்த:
தீர்ணா: ஸ்வயம் பீமபவார்ணம்
ஜனான் அஹேதுனான்யானபி தாரயந்த:
    - விவேகசூடாமணி, 37.)என்கிறார் அவர். அதுபோலவே, இந்த உபநிஷத முனிவரும் அறுதிநிலை அனுபூதியை


அடைந்தபிறகு கருணைக் கண்களுடன் இந்த உலகைப் பார்க்கிறார். உலகம் என்னும் மாய வலையில் சிக்குண்டு மனிதர்கள் படுகின்ற துன்பம் அவரது கண்களில் தெரிகிறது. எனவே அவர்களை எல்லாம் அழைத்து வாழ்க்கையை ஒருமுறை சிந்திக்குமாறு கூறுகிறார் அவர். (17.) அறியாமைச் சேற்றிலிருந்து விடுபட்டு, அறிவொளி பெற்று, அந்த ஒளிக்கும் அப்பாலுள்ள உண்மையை உணர்வதற்கு இறைவனைப் பிரார்த்திப்பதைத் தவிர வேறு வழியில்லை, எனவே பிரார்த்தனை செய்யுங்கள் (18) என்று அழைக்கிறார் அவர்.
----
வேதபாடம் தொடரும்...
---
இந்துமதம் வாட்ஸ்அப் குழுவில் இணைய 9789 374 109 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு உங்கள் வாட்ஸ்அப் மூலம் ரிக்கொஸ்ட் அனுப்பவும்

Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?