Friday, 24 August 2018

வேதம் பயில்வோம்-பாகம்-5-யஜுர்வேதம்



வேதம் பயில்வோம்-பாகம்-5-யஜுர்வேதம்
-
ஈசாவாஸ்ய உபநிஷதம் (ஒளிக்கு அப்பால்)
-
மந்திரம்-8
-
ஸ பர்யகாச்சுக்ரமகாயமவ்ரணம்
அஸ்னாவிரக்ம் சுத்தமபாபவித்தம்
கவிர்மனீஷீ பரீபூ: ஸ்வயம்பூர் யாதாதத்யதோ
ர்த்தான் வ்யததாச் சாச்வதீப்ய: ஸமாப்ய: (8)
-
பொருள்
-
8. (ஆன்ம அனுபூதி பெற்றவன்) அனைத்தின் உட்பொருளையும் காண்கிறான். அவன் மனத்தை வசப்படுத்தியவன்; அனைத்து அறிவையும் உள்ளடக்கியவன்; யாரையும் சாராதவன். அனைத்துப் பொருட்களின் உண்மை இயல்பை அவன் என்றென்றைக்குமாக அறிந்திருக்கிறான். அவன் ஒளிமயமான, உடம்பற்ற, முழுமையான, தசைகள் இல்லாத, தூய, பாவமற்ற இறைவனை அடைகிறான்.
-
கவி: என்றால் க்ராந்த தர்சி; அப்பால் காண்பவன் என்று பொருள். காணும் தோற்றத்துடன் மற்றவர்கள் நின்றுவிடுகிறார்கள். ஆனால் ஆன்ம அனுபூதி பெற்றவன், ஒவ்வொரு தோற்றத்திற்கும் பின்னால் ததும்புகின்ற இறையுணர்வைக் காண்கிறான்.
-
மனீஷி என்றால் மனத்தை வசப்படுத்துவதற்கான புத்தியைப் பெற்றவன். (1. மனஸ ஈசித்ரீ புத்திர்மனீஷா தத்வான் மனீஷீ -ஸ்ரீவேதாந்த தேசிகர்)மனத்தை மனத்தால் வசப்படுத்த முடியாது, அதைவிட ஆற்றல்மிக்க ஒன்று வேண்டும். அதுவே புத்தி. உள்ளுணர்வு என்றும் இது அழைக்கப்படுகிறது. இது எல்லோரிலும் செயல்படத் தொடங்கவில்லை. பிரார்த்தனை, காயத்ரீ மந்திர ஜபம் போன்றவற்றால் இது விழித்தெழுந்து செயல்படத் தொடங்குகிறது.
-
பரிபூ: என்றால் அனைத்து அறிவையும் உள்ளடக்கியவன். உலகில் எத்தனையோ வகை அறிவுகள் உள்ளன. கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு என்பார்கள். நாம் எவ்வளவு அறிந்தாலும் இன்னும் அறிய வேண்டியது எவ்வளவோ இருக்கும்; அவற்றை அறிவதற்கான ஆவலும் இருந்துகொண்டே இருக்கும். ஆனால் ஆன்மாவை அறிந்தவன் தன்னில் திருப்தியுற்று நின்று விடுகிறான். அதனால் ஆன்ம அனுபூதி மற்ற அறிவுகளின் நிறைவாக, அனைத்தையும் உள்ளடக்கியதாக, மற்ற அறிவுகளைவிட உயர்ந்ததாகக் (1. வித்யாந்தரவத: ஸர்வானதிக்ரம்ய வர்த்ததே- ஸ்ரீவேதாந்த தேசிகர்)கூறப்படுகிறது.
-
ஆன்ம அனுபூதி பெற்றவன் தன்னிலும் உலகிலும் இறையுணர்வை உணர்ந்துவிட்டதால் அவன் அதைச் சார்ந்திருக்கிறானே தவிர பொருட்களையும் மனிதர்களையும் சார்ந்து வாழ்வதில்லை. அதனால் அவன் எதையும் சாராதவன் (2. ஸ்வயம்பூ: வன்ய நிரபேக்ஷஸத்தாக: - ஸ்ரீவேதாந்த தேசிகர்) எனப்படுகிறான்.
-
அனைத்திற்கும் மேலாக, அவன் பொருட்களின் உண்மை இயல்பை அறிந்திருக்கிறான். எவை இறை நெறிக்குத் துணை செய்யும், எவை இறைநெறியில் தடையாக இருப்பவை என்பதை அவன் உணர்ந்திருக்கிறான். (3. பரம புருஷார்த்ததயுபாய தத்விரோதி ப்ரப்ருதீன் ஸர்வான் பதார்த்தான் யதாவத் விவிச்ய ஹ்ருதயேன த்ருதவான்- ஸ்ரீவேதாந்த தேசிகர்) இறைநெறியில் செல்பவனுக்கு இந்த மனத்தெளிவு மிகவும் அவசியமானது. வேண்டாதவற்றை விலக்கி அவனால் விரைந்து முன்னேற முடிகிறது.
-
ஆன்ம அனுபூதி பெற்ற இத்தகையவன் இறைவனை அடைகிறான். அந்த இறைவனைப்பற்றி இந்த மந்திரம் மூன்று விஷயங்களைக் கூறுகிறது:
-
1. இறைவன் ஒளிமயமானவர். அவரது ஒளியாலேயே அனைத்தும் ஒளிபெறுகின்றன.
-
2. இவர் என்று இறைவனை அடையாளம் காட்ட முடியாது. உடம்பற்றவர், முழுமையானவர், தசைகள் இல்லாதவர் என்றெல்லாம் கூறுவது இதைத் தெரிவிக்கிறது.
-
3. இறைவன் தூயவர். எந்தப் பாவமும் அவரை அணுக முடியாது.
-
உலகனைத்தையும் ஒளியால் விளங்கச் செய்வதன்மூலம் உலகின் கண்ணாக இருப்பவன் சூரியன். ஆனால் யாருடைய பார்வைக் கோளாறோ, பொருட்களின் குறைகளோ அவனைப் பாதிப்பதில்லை. அதுபோல் எல்லோரிலும் விளங்குகின்ற ஆன்மா சுகதுக்கங்களால் பாதிக்கப்படுவதில்லை ( என்கிறது கட உபநிஷதம், 2.2.11)
-
ஆன்ம அனுபூதி பெற்றவன் இவ்வாறு ஒளிமயமான இறைவனை அடைகிறான்
-----
---
வேதபாடம் தொடரும்...
---
இந்துமதம் வாட்ஸ்அப் குழுவில் இணைய 9789 374 109 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு உங்கள் வாட்ஸ்அப் மூலம் ரிக்கொஸ்ட் அனுப்பவும்

No comments:

Post a Comment