Friday, 3 August 2018

ஸ்ரீமத் பகவத்கீதை-அத்தியாயம்-7


ஸ்ரீமத் பகவத்கீதை-அத்தியாயம்-7

-
ஸ்ரீகிருஷ்ணர் சொன்னது
-
7.1 பார்த்தா, என்னிடம் மனதைவைத்து என்னை அடைக்கலம் புகுந்தவனாக, யோகம் பயின்று என்னை முற்றிலும் அறிவது எப்படி என்பதை சொல்கிறேன் கேள்
-
7.2 நான் உனக்கு விஞ்ஞானத்துடன் கூடிய இந்த ஞானத்தை முழுவதும் சொல்கிறேன். இதை அறிந்த பிறகு, இங்கு மேலும் அறியவேண்டியது வேறு ஒன்றும் இருக்காது
-
7.3 ஆயிரக்கணக்கான மனிதர்களுள் யாரோ ஒருவர் முக்தியடைவதற்காக முயற்சிக்கிறான். முயற்சிக்கின்ற நல்லவர்களில் யாரோ ஒருவன் என்னை உள்ளபடி அறிகிறான்
-
7.4 நிலம், நீர், அக்னி,காற்று,வானம்(இவை பஞ்சபூதங்கள்),மனம்,புத்தி, அகங்காரம் என்று என்னுடைய பிரகிருதி எட்டுவிதமாக பின்னப்பட்டிருக்கிறது (மூலப்பொருள் கூட்டுப்பொருள் என்று இரண்டு உள்ளன. வானம்,அக்னி மூலப்பொருள். நீர்,நிலம்,காற்று இந்த மூன்றும் மற்றவைகளுடன் கலந்து கூட்டுப்பொருளாக உள்ளன)
-
7.5 ஆனால் இது (மேலே சொன்ன எட்டும் ) கீழானது. இதிலிருந்து வேறானதும் உயிர்களின் ஜீவனான என்னுடைய மேலான பிரகிருதியை(சாங்கிய தத்துவத்தை படிக்கவும்) அறிவாயாக. தோள்வலிமையுடையோய், இந்த பிரபஞ்சம் இதனால் தாங்கப்படுகிறது.
-
7.6 எல்லா உயிர்களும் இந்த இரண்டு யோனிகளை பிறப்பிடமாக கொண்டுள்ளது என்று அறிந்துகொள்(மேலே சொன்ன எட்டுக்கும் ஒரு யோனி பிறப்பிடம். பிரகிருதிக்கு இன்னொரு யோனி பிறப்பிடம்). நான் பிரபஞ்சம் முழுவதற்கும் வெளிப்படுவதற்கும்,அதுபோல பிரபஞ்சம் முழுவதும் ஒடுங்குவதற்கும் காரணம்
-
7.7 தனஞ்சயா, என்னைவிட மேலானது வேறு ஒன்றும் இல்லை. நூலிலே மணிகளை கோர்த்துவைத்ததுபோல, இவையாவும் என்னிடம் கோர்க்கப்பட்டிருக்கின்றன
-
7.8 பார்த்தா, நான் நீர்களில் ரசமாகவும்(சுவை), சந்திர சூரியர்களில் ஜோதியாகவும்(ஒளி), எல்லா வேதங்களில் பிரணவ மந்திரமாகவும்(ஓம்) வானத்தில் ஒலியாகவும், மனிதர்களில் ஆண்மையாகவும் இருக்கிறேன்
-
7.9 மண்ணில் நறுமணமாகவும், தீயில் சுடராகவும்(சுடர் வீட்டை பிரகாசிக்க செய்கிறது) இருக்கிறேன். எல்லா உயிர்களிலும் ஜீவனாகவும், தபஸ்விகளின் தவமாகவும் இருக்கிறேன்
-
7.10 பார்த்தா என்னை எல்லா உயிர்களினுடைய ஆதிவித்து என்று அறி. புத்திமான்களின் புத்தியாக இருக்கிறேன்
தேஜஸ்விகளின் தேஜஸ்(பிரம்ச்சர்யத்திலிருந்து வரும் ஆற்றல்) ஆக இருக்கிறேன்
-
7.11 பரதத் தலைவா, பலவான்களுடைய ஆசையும்,ராகமும் (கண்ணில் பட்டதை  தனதாக்கிகொள்ளுதல்) தீங்கப்பெற்ற பலமாக இருக்கிறேன். உயிர்களிடத்தில் தர்மத்திற்கு முரணாகாத காமமாக இருக்கிறேன்
-
7.12 இன்னும்  சத்துவகுணத்தில், ரஜோ குணத்தில்,தமோ குணத்தில் உருவான பொருட்கள் அனைத்தும் என்னிடமிருந்தே தோன்றியவைகள் என்று அறிக. ஆனால் நான் அவைகளை சார்ந்து இல்லை. அவைகள் என்னை சார்ந்துள்ளன.
-
7.13 இந்த முக்குணங்களால் உருவான (சத்வம்,ரஜஸ்,தமஸ்) பொருட்களால் மயங்கி, இதற்கு மேலாக இருக்கும் அழிவற்றவனான என்னை அறிவதில்லை.
-
7.14 உண்மையில் குணங்களால் ஆன என்னுடைய இந்த தேவமாயை தாண்டமுடியாதது. யார் என்னையே சரணடைகிறார்களோ அவர்களே இந்த மாயையை தாண்டுகிறார்கள்.
-
7.15 பாபச் செயல்களை செய்யும் மூடர்கள், மனிதர்களில் மட்டமானவர்கள், மாயையினால் ஞானம் அபகரிக்கப்பட்ட அசுர இயல்னை அடைந்தவர்கள் என்னை போற்றுவதில்லை
-
7.16 அர்ஜுனா, துன்புற்றவன், ஞானத்தை தேடுபவன், பொருட்களை தேடுபவன், ஞானத்தை அடைந்தவன் என நான்குவிதமாக நல்லவர்கள் என்னை போற்றுகிறார்கள்
-
7.17 அவர்களுள் நித்தியயுக்தனான. மாறாத பக்தியுள்ள,ஞானி மேலானவன். ஏனெனில் நான் ஞானிக்கு மிகப்பிரியமானவன் அவனும் எனக்கு பிரியமானவன்.
-
7.18 இவர்கள் எல்லோரும் நல்லவர்களே ஆயினும் ஞானி என் சொரூபமோனவன் என்பது என் கருத்து. ஏனென்றால் யோகத்தில் நிலைபெற்றிருக்கும்  அவன், மிகஉயர்ந்த நிலையில் இருக்கும் என்னில்
நிலைபெற்றிருக்கிறான்.
-
7.19 பல பிறவிகளின் இறுதியில் ஞானி எல்லாம் வாசுதேவனே(இறைவனே) என்று என்னை வந்தடைகிறான். அந்த மகாத்மா கிடைப்பதற்கு அரியவன்.
-
7.20 அந்த அந்த ஆசைகளால், அறிவற்றவர்கள், அந்த அந்த நியமத்தை கடைபிடித்து தங்களது இயல்பினால் தூண்டப்பட்டு பிற தேவதைகளை போற்றுகிறார்கள்
-
7.21 எந்த எந்த பக்தன் எந்த எந்த வடிவத்தை நம்பிக்கையோடு வழிபட விரும்புகிறானோ, அவர்களுடைய அந்த அந்த நம்பிக்கையை நான் அசையாததாகச் செய்கிறேன்.
-
7.22 அந்த பக்தன் சிரத்தையோடு கூடியவனாய் அந்த தேவதையை ஆராதிக்கிறான். ஆனாலும் (அந்த தேவதை மூலம்) அவன் விரும்பும் ஆசைகளை வழங்குபவன் நானே
-
7.23 ஆனால் அற்ப புத்தியுள்ள அவர்கள் அடையும் பலன் குறைவானது. தேவர்களை (சூடசும உடலில் வாழும் முன்னோர்களை) வணங்குபவர்கள் தேவர்களை அடைகிறார்கள். என் பக்தன் என்னை அடைகிறான்.
-
7.24 என்னுடைய அழிவற்ற ஒப்பற்ற மேலான நிலையை அறியாத அறிவற்றவர்கள், கண்ணுக்கு தென்படாத என்னை, கண்களுக்கு தென்படும் இயல்பை அடைந்தவனாக எண்ணுகின்றனர்.(இறைவன் கண்களுக்கு தென்படாதவர்)
-
7.25 யோகமாயையினால் நன்கு மூடப்பட்டுள்ள நான் எல்லோருக்கும் தெரிவதில்லை. இந்த மூட உலகம்(மக்கள்) பிறவாத அழியாத என்னை அறிவதில்லை
-
7.26 அர்ஜுனா, சென்றனவும், இருப்பனவும், வருவனவாவும் ஆகிய உயிர்களை நான் அறிவேன். ஆனால் என்னை யாரும் அறியார்
-
7.27 அர்ஜுனா, விருப்பு வெறுப்பிலிருந்து உண்டாகும் இருமை (நன்மை-தீமை,லாபம்-நஷ்டம்,விருப்பு-வெறுப்பு போன்ற) மோகத்தால் எல்லா உயிர்களும் பிறக்கும்போதே மோகமடைகின்றன
-
7.28 ஆனால் புண்ணிய கர்மங்களுடைய எந்த ஜனங்களுக்கு பாபம் முடிவடைகிறதோ, இருமை மோகத்திலிருந்து விடுதலையடைந்த அவர்கள், உறுதியான விரதமுடையவர்களாய் என்னை வழிபடுகிறார்கள்.
-
7.29 முதுமையிலிருந்தும், மரணத்திலிருந்தும் விடுபடுவதற்கு என்னை வழிபட்டு, யார் முயற்சி செய்கிறாரோ அவர்கள்  பிரம்மத்தையும், தன்னையும், உலகிலுள்ள கர்மங்களையும் அறிகிறார்கள்
-
7.30 யார் என்னை அதிபூதம், அதிதெய்வம், அதியக்ஞம் ஆகியவற்றுடன் கூடியவனாகவும் அறிகிறார்களோ, யோகத்தில் நிலைநின்ற மனதையுடைய அவர்கள் சாகும் தருவாயில் என்னை அறிகின்றனர்.
-
அத்தியாயம் ஏழு நிறைவுற்றது.
-


No comments:

Post a Comment