Saturday, 25 August 2018

வேதம் பயில்வோம்-பாகம்-9-யஜுர்வேதம்

வேதம் பயில்வோம்-பாகம்-9-யஜுர்வேதம்
-
ஈசாவாஸ்ய உபநிஷதம் (ஒளிக்கு அப்பால்)
-
மந்திரம்-17
-
வாயுரனிலமம்ருதமதேதம் பஸ்மாந்தக்ம் சரீரம்
ஓம் (3) க்ரதோ ஸ்மர க்ருதக்ம் ஸ்மர க்ரதோ ஸ்மர க்ருதம் ஸ்மர (17)
-
பொருள்
-
17. இந்த உடம்பு சாம்பலாகிவிடும். உடம்பிலிருந்து
வெளியேறுகின்ற பிராணன் எங்கும் நிறைந்த
அழிவற்ற பிராணனுடன் கலந்துவிடும். ஓம். மனமே!
செய்தவற்றை நினைத்துப் பார், மனமே செய்த
வற்றை நினைத்துப் பார்.
-
ஒரு லட்சியத்தை எடுத்துக்கொண்டு முன்னேறும் போது, சிலவேளைகளில் நாம் லட்சியத்தை

1. ஓர் எழுத்தை உச்சரிப்பதற்கான நேரம் ஒரு மாத்திரை. ஓம் என்பதை 3. மாத்திரை காலம் நீட்டி ஓத வேண்டும்.
-
மறந்துவிடுவதுண்டு; அதுபோலவே சிலவேளைகளில் லட்சிய நாட்டம் நீர்த்துப்போவதும் உண்டு. எனவே தினமும் அதனை நினைவூட்டிக் கொள்வது நல்லது. இது சுய தூண்டுதல் எனப்படுகிறது. இத்தகைய மந்திரங்கள் நமது வேதங்களிலும் உபநிஷதங்களிலும் ஏராளம் உள்ளன. அத்தகையதொரு மந்திரத்தை முனிவர் இங்கே நமக்குத் தருகிறார். உபநிஷதங்களைப் படிக்கும் போது மட்டுமல்லாமல் இவற்றைப் பொருளுணர்ந்து அவ்வப்போது ஓதுவது நாம் நமது லட்சியத்தில் உறுதியாக இருக்க உதவும்.
-
இறைவனை நாடிச் செல்பவர்கள் ஆனாலும் சரி, சாதாரண வாழ்க்கையை நடத்திச் செல்பவர்கள் ஆனாலும் சரி வாழ்வின் நிலையாமையை அவ்வப்போது மனத்திற்கு எடுத்துக் கூறுவது  நல்லது. வாழ்க்கையை எண்ணி பெரிதாக மனம் குமையவோ, அலட்டிக்கொள்ளவோ வேண்டியதில்லை என்ற உண்மை அதனால் நம் மனத்தில் உறுதிப்படுகிறது.
-
ஆண்டியும் சரி அரசனும் சரி அனைவரின் உடம்பும் இறுதியில் சாம்பலாகி மண்ணுடன் மண்ணாகக் கலக்கப் போகிறது. இதுவரை உடம்பையும் மனத்தையும் இயக்கி வந்த பிராணன் உடம்பிலிருந்து வெளியேறப் போகிறது. புலன்கள் ஒடுங்கப்போகின்றன. இதுவரை வாழ்ந்த வாழ்க்கை நம்மை விட்டு அகலப் போகிறது-இந்த உண்மையை ஒவ்வொரு நாளும் சிறிது நேரம் சிந்திப்பது வாழ்க்கைக்கு ஒரு புதிய கண்ணோட்டத்தைத் தரும்.
-
இதுவரை நல்லது செய்யாவிட்டாலும் இனி செய்ய வேண்டும், இதுவரை இறைவனை நாடாவிட்டாலும் இனி நாட வேண்டும், என்று உயர் வாழ்க்கைக்கு ஒரு தூண்டுதலை இத்தகைய சிந்தனை தரும். எனவேதான் இந்தப் பிரார்த்தனையை ஒரு சுய தூண்டுதலாக நாம் கொள்கிறோம்.
-
நெருப்பையைக் கண்டுபிடித்தது மனித வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. நெருப்பைக் கண்டு வியந்த மனிதன் மெல்ல மெல்ல அதை வழிபட ஆரம்பித்தான். கடைசியாக அதை எங்கும் நிறைந்த, எல்லாம் வல்ல இறைவனின் சின்னமாகவே வழிபடுவதை வேதங்களில் காண்கிறோம். அவ்வாறு அக்கினி தேவனை இறைவனாகக் கொண்டு பிரார்த்திக்கின்ற மந்திரம் இது.
-
ஒளிக்கு அப்பாலுள்ள உண்மையைக் கண்ட முனிவர் அந்த உண்மையை நாமும் அடைய வேண்டும் என்ற கருணைப் பெருநோக்கில், இவ்வாறு பிரார்த்தனை செய்யுமாறு நம்மிடம் கூறுகிறார்.
-
மந்திரம்-18
-
அக்னே நய ஸுபதா ராயே அஸ்மான்
விச்வானி தேவ வாயுனானி வித்வான்
யுயோத்யஸ்மஜ்ஜுஹுராணமேனோ
பூயிஷ்ட்டாம் தே நம உக்திம் விதேம (18)
-
பொருள்
-
18. அக்கினி தேவனே, ஒளிப்பொருளே! எங்கள்
எல்லா செயல்களையும் அறிபவன் நீ. வினைப்பயனை
அனுபவிப்பதற்காக எங்களை அனுபவப் பாதை
யில் அழைத்துச் செல். எங்களைக் கொடிய தவறு
களிலிருந்து விலக்கு. உனிக்கு மீண்டும்மீண்டும்
எங்கள் வணக்கங்கள்.
-
தம்மை அனுபவப் பாதையில் அழைத்துச் செல்லுமாறு பிரார்த்திக்கிறார் முனிவர். அனுபவப் பாதை என்பது என்ன?
-
செயல்கள் பலன்களைத் தருகின்றன. நற்செயல்கள் நல்ல பலனையும், தீய செயல்கள் தீய பலனையும் தருகின்றன. பலன்கள் வந்தால் அதை அனுபவித்தேயாக வேண்டும். இதுவரை செய்துள்ள செயல்களை அறிகின்ற இறைவனே! இனி புதிய செயல்கள் செய்து பலன்கள் வராமல், செய்தவற்றிற்கான பலனை அனுபவிப்பதாக மட்டும் எங்கள் வாழ்க்கை அமையட்டும் என்பது இந்தச் சொற்றொடரின் பொருள்.
-
இவ்வாறு இறையருளை நாடி ஒரு பிரார்த்தனை பூர்வமான வாழ்க்கையை நாம் நடத்த வேண்டும் என்ற குறிப்புடன் ஈசாவாஸ்ய உபநிஷதம் நிறைவு பெறுகிறது.
-
சாந்தி மந்திரம்
-
ஓம் பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ண முதச்யதே
பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவாவசிஷ்யதே
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:
----
ஈசாவாஸ்ய உபநிஷதம் நிறைவுற்றது.இனி இன்னொரு உபநிடதத்தை பார்ப்போம்..
-
வேதபாடம் தொடரும்...
---
இந்துமதம் வாட்ஸ்அப் குழுவில் இணைய 9789 374 109 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு உங்கள் வாட்ஸ்அப் மூலம் ரிக்கொஸ்ட் அனுப்பவும்

No comments:

Post a Comment