வேதம் பயில்வோம்-பாகம்-6-யஜுர்வேதம்
-
ஈசாவாஸ்ய உபநிஷதம் (ஒளிக்கு அப்பால்)
-
மந்திரம்-9
-
அந்தம் தம: ப்ரவிசந்தி யேஸவித்யாமுபாஸதே
ததோ பூய இவ தே தமோ ய உ வித்யாயாக்ம் ரதா: (9)
-
பொருள்
-
9. யார் உயர்நோக்கமின்றிச் செயல்களில் ஈடுபடு
கிறார்களோ அவர்கள் காரிருளில் மூழ்குகின்றனர்.
யார் தகுதி பெறுமுன்னர் தியானத்தில் ஈடுபடு
கிறார்களோ அவர்கள் அதைவிடக் கொடிய இருளில்
உழல்வதைப்போல் துன்புறுகின்றனர்.
-
மந்திரம்-10
-
அன்யதேவாஹுர் வித்யயா அனயதாஹுரவித்யயா
இதி சுச்ரும தீராணாம் யே நஸ்தத் விசசக்ஷிரே (10)
-
பொருள்
-
10. தியானத்தால் கிடைப்பது ஒரு பலன், செயல்
களால் கிடைப்பது வேறு பலன் என்கிறார்கள்-
எங்களுக்கு அதனை விளக்கிய மகான்கள் இவ்வாறு
கூறினார்கள்.
-
மந்திரம்-11
-
வித்யாம் சாவித்யாம் ச யஸ்தத் வேதோபயக்ம் ஸஹ
அவித்யயா ம்ருத்யும் தீர்த்வா வித்யயாஸம்ருதமச்ஷதே (11)
-
பொருள்
-
11. தியானம், செயல்கள் இரண்டையும் சேர்த்து
யார் அறிகிறானோ அவன் செயல்களால் மரணத்தைக்
கடந்து தியானத்தால் இறவாநிலையை அடைகிறான்.
-
இந்த மந்திரங்கள் என்ன சொல்கின்றன?
-
செயல்களும் தியானமும்: 9-11
-
செயல்களின்றி வாழ்க்கை இல்லை. அன்றாடக் கடமைகள், ஜபதவங்கள், சேவை போன்ற எவ்வளவோ செயல்களுடன் நமது வாழ்க்கை பிணைந்துள்ளது. உயர் நோக்கங்களுடன் இணைக்காமல் அவற்றை வெறுமனே செய்துகொண்டே போவதால் இறைநெறியில் முன்னேற முடியாது; இறையுணர்வைப் பெற முடியாது. அதே வேளையில், இறையுணர்வைப் பெற வேண்டும் என்பதற்காக, தகுதி வருமுன்னரே செயல்களை விட்டுவிட்டு தியானத்தில் ஈடுபடுவது ஒரு தவறான, போலித்தனமான முயற்சியாக இருக்கும். எனவே இரண்டும் வாழ்க்கையில் இணைந்து செல்ல வேண்டும். அந்த இணைப்புபற்றி இந்த மந்திரங்கள் கூறுகின்றன.
-
இறைவனை நாடுகின்ற ஒரு செயல் மட்டுமே வித்யை என்று நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன. மற்ற அனைத்தும், அது விஞ்ஞானம், கலை என்று எதுவானாலும், ஏன், வேதங்களைப் படித்தல் போன்றவைகூட அவித்யை என்றே கொள்ளப்படுகிறது. ஜபம், தவம் போன்ற சாதனைகள்கூட இறைவனை நாடி செய்யாவிட்டால் அவித்யையே ஆகும். இந்தச் சாதனைகள் வெறும் கிரியை என்ற அளவில் நின்றுவிடாமல் உயர் நோக்கத்துடன், அதாவது, வித்யையுடன் இணைத்து செய்யப்பட வேண்டும் என்பதை இந்த மந்திரங்கள் வலியுறுத்துகின்றன.
-
தவம், தானம் போன்றவற்றை மூன்றுவிதமாகச் செய்யலாம் என்று கீதை கூறுவதை இங்கே கருத்தில் கொள்ள வேண்டும். தானத்தை எடுத்துக்கொள்வோம். அதனை இறை வழிபாடாகச் செய்யும்போது அக நாட்டத்தையும் மனத் தூய்மையையும் விளைவாகக் கொண்டு வருகிறது. அதே தானத்தைப் பெயர்- புகழுக்காகவும் செய்யலாம். எதிர்பார்த்த பெயர்-புகழ் கிடைக்காத போது அது துன்பம் தருகிறது. பெயர்-புகழ் கிடைக்குமானால் அதனைத் தங்க வைத்துக் கொள்வதற்காக மேலும் முயற்சிகளில் ஈடுபட நேர்கிறது. அதன் விளைவாக வருவது துன்பம். பிறருக்குத் துன்பம் விளைவிப்பதற்காகவே போட்டி மனப்பான்மையுடனோ தானம் செய்யும்போது அதன் விளைவும் பெருந்துன்பமாக உள்ளது.
-
இவ்வாறு தவம், போன்றவற்றை உயர் நோக்கமின்றிச் செய்யும்போது அவை அவித்யை ஆகின்றன. அவற்றை அவித்யை வசப்பட்டுச் செய்பவன் காரிருளில் மூழ்குகிறான். அதாவது அறியாமை வசப்பட்டு மேலும் மேலும் பிறவிகளுக்கு உள்ளாகிறான்.
-
தவம், தானம், ஜபம், சேவை போன்ற சாதனைகள் எதுவும் செய்யாமல் வெறுமனே தியானம் செய்ய முயற்சிப்பவன் வெற்றி பெறுவதில்லை. ஏனெனில் தவம், ஜபம், சேவை போன்ற கிரியைகள் மனத்தைத் தூய்மைப்படுத்துகின்றன; ஆற்றலைத் தருகின்றன. தூய்மையின்மூலம் ஆற்றல் பெற்ற மனத்தினால்தான் தியானம் செய்ய முடியும். தவமும் வித்யையுமே ஒரு சாதகனுக்கு முக்கிய சாதனைகள். தவத்தால் மனத்தின் மாசுகள் அகல்கின்றன; வித்யையால் மோட்சம் பெறுகிறான் (1. தபோ வித்யா ச விப்ரஸ்ய நி:ச்ரேயஸகரம் பரம்தபஸா கில்பிஷம் ஹந்தி வித்யயா அம்ருதம் அச்னுதே -மனு, 12.104) என்கிறார் மனு.
-
மரணத்தைக் கடப்பது என்றால் மரணத்திற்குக் காரணமாக வினைப்பயனிலிருந்து விடுபடுவது.( 2. அவித்யயா வித்யாங்கதயா சோதித கர்மணா ம்ருத்யும் ஜ்ஞானஸங்கோச ரூப ம்ருத்யு ஹேதும் ப்ராக்தன கர்ம- ஸ்ரீவேதாந்த தேசிகர்) எனவே ஜப தவம் போன்ற கிரியைகளை இறைவனை நாடிச் செய்வதால் மனத் தூய்மை பெற்று, தியானத்தால் இறைநிலையை அடைகிறான் என்பது இந்த மந்திரங்களின் கருத்து ஆகும்.
-
வேதபாடம் தொடரும்...
-
இந்துமதம் வாட்ஸ்அப் குழுவில் இணைய 9789 374 109 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு உங்கள் வாட்ஸ்அப் மூலம் ரிக்கொஸ்ட் அனுப்பவும்
No comments:
Post a Comment