Saturday, 25 August 2018

வேதம் பயில்வோம்-பாகம்-7-யஜுர்வேதம்

வேதம் பயில்வோம்-பாகம்-7-யஜுர்வேதம்
-
ஈசாவாஸ்ய உபநிஷதம் (ஒளிக்கு அப்பால்)
--
உருவ வழிபாடும் அருவ வழிபாடும்:
-
இறைவனை உருவம் உடையவராக வழிபடலாம், உருவ மற்றவராகவும் வழிபடலாம். இரண்டையும் இணைத்துச் செய்தால்தான் மிகவுயர்ந்த பலன் கிடைக்கிறது என்ற உண்மையை எடுத்துக்காட்டுகின்றன இந்த மந்திரங்கள்.
-
மந்திரம்-12
-
அந்தம் தம: ப்ரவிசந்தி யேஸஸம்பூதிமுபாஸதே
ததோ பூய இவ தே தமோ ய உ ஸம்பூத்யாக்ம் ரதா: (12)
-
பொருள்
--
12. யார் அருவக்கடவுளை வழிபடுகிறார்களோ
அவர்கள் காரிருளில் மூழ்குகின்றனர். யார் உருவக்
கடவுளில் ஈடுபடுகிறார்களோ அவர்கள் அதைவிடக்
கொடிய இருளில் உழல்வதைப்போல் துன்புறு
கின்றனர்.
-
அந்திரம்-13
-
அன்ய தேவாஹு: ஸம்பவாதன்யதாஹுரஸம்பவாத்
இதி சுச்ரும தீராணாம் யே நஸ்தத் விசசக்ஷிரே (13)
-
13. உருவ வழிபாட்டால் கிடைப்பது ஒரு பலன்,
அருவ வழிபாட்டால் கிடைப்பது வேறு பலன்
என்கிறார்கள்- எங்களுக்கு அதனை விளக்கிய
மகான்கள் இவ்வாறு கூறினார்கள்.
-
மந்திரம்-14
-
ஸம்பூதிம் ச வினாசம் ச யஸ்தத் வே தோபயக்ம் ஸஹ
வினாசேன ம்ருத்யும் தீர்த்வா ஸம்பூத்யாஸம்ருதமச்னுதே (14)
-
பொருள்
-
14. அருவ வழிபாடு, உருவ வழிபாடு இரண்டையும்
சேர்த்து யார் அறிகிறானோ அவன் உருவ வழிபாட்டால்
மரணத்தைக் கடந்து அருவ வழிபாட்டால் இறவா
நிலையை அடைகிறான்.
-
9-11 மந்திரங்கள் செயல்கள் மற்றும் தியானத்தின் இணைப்பை வலியுறுத்தியதுபோல் இந்த மந்திரங்கள் (12-14) இரண்டுவித வழிபாடுகளின் இணைப்பைக் கூறுகின்றன.
-
ஸம்பூதி என்றால் தோற்றத்திற்கு வந்த நிலை; இறைவன் பல்வேறு வடிவங்களில் தோன்றுகின்ற உருவ நிலை. அஸம்பூதி என்றால் தோற்றத்திற்கு வராத நிலை; எந்த உருவமோ குணமோ அற்ற அறுதி நிலை. இந்த
-
1. மந்திரத்தில் ஸம்பூதி என்று காணப்பட்டாலும் அந்த இடத்தில் அஸம்பூதி என்று வந்தால்தான் சரியாக இருக்கும். எனவே அதில் அ சேர்த்துக்கொள்ள வேண்டும் என்கிறார் ஸ்ரீசங்கரர்: ஸம்பூதிம் ச வினாசம் ச இத்யத்ர அவர்ணலோபேன நிர்தேசோ த்ரஷ்ட்டவ்ய:
-
இரண்டு நிலைகளிலும் இறைவனை நாம் வழிபடலாம். ஒன்று, உருவ வழிபாடும், உருவம், குணம், போன்ற பல்வேறு தன்மைகள் உடைய ஒரு நபராக அவரைக் காண்பது இது. நமது மனத்தால் அறியத்தக்கவராக, வெளிப்பட்ட நிலையில் இறைவனை நாம் இங்கே வழிபடுகிறோம். சிவன், விஷ்ணு, தேவி என்று உருவ நிலையில் இறைவனை வழிபடுவது உருவ வழிபாடு.
-
இரண்டாவதாக, அருவ வழிபாடு. உருவம், குணம் போன்ற அனைத்துப் பண்புகளையும் கடந்த அறுதி நிலையில் இறைவனை அணுகுவது இது. உருவமோ குணமோ இல்லாத ஒன்றை மனித மனத்தால் நினைப்பது சாத்தியமல்ல. எனவே இந்த வழிபாடு மிகவும் உயர்ந்த நிலையில் இருப்பவர்களுக்கு உரியது என்பது சொல்லாமலே விளங்கும். தகுதியின்றி அந்த வழிபாட்டில் ஈடுபடுபவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள். அதனால் தான் அவர்கள் காரிருளில் மூழ்குவதாக சொல்லப்பட்டுள்ளது.
-
உருவ வழிபாட்டில் ஈடுபடுபவர்கள் சிவன், விஷ்ணு என்று பல்வேறு வடிவங்களும் ஒரே உண்மைப் பொருளின் பல்வேறு தோற்றங்களே என்ற உண்மையை உணர்ந்திருக்க வேண்டும். மாறாக, என் தெய்வம் உயர்ந்தவர், உன் தெய்வம் தாழ்ந்தவர் என்று கொள்கை வெறிபிடித்து சண்டையிடக் கூடாது. அறியாமை காரணமாக செய்கின்ற இத்தகைய வழிபாட்டினால் எந்தப் பலனும் கிடைப்பதில்லை. வழிபட்டும் பலனின்றிப் போவதால்தான் இத்தகையோர் இன்னும் கொடிய இருளில் உழல்கிறார்கள். என்று கூறப்பட்டது.
-
எனவே மன இயல்பிற்கு ஏற்ற ஒரு தெய்வத்தை வழிபடுவதில் ஆரம்பிக்க வேண்டும். எத்தனை மதங்களில் எத்தனை தெய்வங்களைக் கும்பிட்டாலும் அவர்கள் அத்தனை பேரும் ஒரே தெய்வத்தின் பல்வேறு தோற்றங்களே என்ற உணர்வு எப்போதும் இருக்க வேண்டும்.
-
அதுமட்டுமின்றி, உருவ நிலையில் மட்டுமல்ல, கடவுளை அருவ நிலையிலும் வழிபடலாம் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இத்தகைய மனநிலையில் தெய்வத்தை வழிபடும்போது நாம் ஆன்மீகத்தில் முன்னேறுகிறோம்; இறையனுபூதி பெறுகிறோம்; மரணத்திற்குக் காரணமான வினைப் பயன்களிலிருந்து விடுபடுகிறோம்.
-
இந்த இறையனுபூதியின் விளைவு என்ன? அழகாக விளக்குகிறார் துளசிதாசர்: இறைவனை நேருக்கு நேராகக் காண்பதன் ஈடிணையற்ற ஒரே பலன் என்ன தெரியுமா? மனிதன் தனது சொந்த ஆனந்தமயமான ஆன்மநிலையில் நிலைபெறுகிறான்.(1. மமதர்சன ஃபல பரம அனூபா ஜீவ பாவ நிஜ ஸஹஜ ஸரூபா-துளசி ராமாயணம், ஆரண்ய காண்டம், 35.5.)  இதன்பிறகே இறைவனை உருவமற்ற நிலையில் வழிபடுவதற்கான தகுதியை அவரது அருளால் பெறுகிறோம். இந்தத் தகுதியுடன் அந்த உயர்நிலை வழிபாட்டில் ஈடுபட்டு இறவாநிலையை அடைகிறோம்.
---
வேதபாடம் தொடரும்...
---
இந்துமதம் வாட்ஸ்அப் குழுவில் இணைய 9789 374 109 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு உங்கள் வாட்ஸ்அப் மூலம் ரிக்கொஸ்ட் அனுப்பவும்

No comments:

Post a Comment