Monday, 21 July 2025

இந்த பதில் கண்டிப்பாக உங்களின் பல சந்தேகங்களைத் தீர்க்கும்.

 

இந்த பதில் கண்டிப்பாக உங்களின் பல சந்தேகங்களைத் தீர்க்கும்.

..

ஒருநாள் தட்சிணேசுவரத்தில் சுவாமி நிரஞ்ஜனானந்தருடன் நானும்(சுவாமி சாரதானந்தர்)மனிதனுக்குச்

 சுயேச்சை சிறிதளவாவது உள்ளதா இல்லையா அனைத்தும் ஏற்கனவே திட்டமிட்டபடிதான் நடக்கிறதா என்பது குறித்து நீண்ட விவாதத்தில் ஈடுபட்டிருந்தோம். வெகுநேரத்திற்குப் பிறகும் பிரச்சினைக்கு ஒரு சரியான

தீர்வு கிட்டாததால் நேராக குருதேவரிடம் (ஸ்ரீராமகிருஷ்ணர்) சென்றோம். குருதேவர் எங்கள்

விவாதத்தைக் குறும்புடன் கேட்டார். பின்னர் கம்பீரமாக, ‘யாருக்காவது சுயேச்சை

என்றெல்லாம் ஒன்று இருக்கிறதா என்ன? கடவுளின் விருப்பத்தால் மட்டுமே

உலகில் அனைத்தும் நடக்கின்றன, இனிமேலும் நடக்கும். நாளாக நாளாகத்தான்

மனிதன் இதைப் புரிந்து கொள்கிறான்.

 

பசு ஒன்று நீளமான கயிற்றால் ஒரு

கம்பத்தில் கட்டப்பட்டுள்ளது என்று வைத்துக் கொள்வோம். அந்தப் பசுவால்

கயிறு எவ்வளவு நீளமோ அவ்வளவு தூரம் போகவும் இயலும்.

ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் பசு தன் விருப்பம்போலப் படுத்துக் கொள்ளட்டும்,

நிற்கட்டும் அல்லது நடக்கட்டும் என்ற எண்ணத்தோடு மனிதன் நீளமான கயிற்றில் அதைக் கம்பத்தில்

கட்டுகிறான்.

கயிற்றின் நீளம் எவ்வளவோ அந்த அளவு நீளத்திற்கு அதனால் சுதந்திரமாக செயல்பட முடியும்.ஆனால் கயிற்றின் நீளத்தை தாண்டி இருக்கும் இடங்களுக்குப்போக முடியாது. அங்கே உள்ள புல்லை  தின்ன முடியாது.

..

கடவுளும் மனிதனுக்கு ஓரளவு சக்தியை அளித்து அந்த எல்லைக்குள்

அவன் விருப்பப்படிச் செயல்படட்டும் என்று விட்டுவிடுகிறார். அதனால்தான் மனிதன்

தன்னால் சுயேச்சையுடன் செயல்பட முடியும் என்று எண்ணுகிறான். ஆனால் கயிறு

கம்பத்தில் கட்டப்பட்டுள்ளதை மறந்துவிடக் கூடாது. ஒரு எல்லைக்குள் மட்டுமே அவனால் சுதந்திரமாக செயல்பட முடியும்.முழு சுதந்திரம் அவனுக்கு இல்லை. ஒருவன் கடவுளிடம் மனமுருகி,

ஏங்கி பிரார்த்தனை செய்தால் அவரால் கட்டைத் தளர்த்த முடியும்; கயிற்றின்

நீளத்தை அதிகப்படுத்த முடியும்; விரும்பினால் கயிற்றை ஒரேயடியாக அவிழ்த்து

விடவும் முடியும்என்று குருதேவர் சொன்னார்.

..

இதைக் கேட்ட நாங்கள், ‘அப்படியானால் ஆன்மீக சாதனைகள் பழகுவதில் கூட

சுய முயற்சிக்கு இடம் இல்லையா? எல்லாம் இறைவன் திருவுளப்படி என்றால்

இறைவன் விருப்பப்படித்தான் நான் எல்லாம் செய்கிறேன்என்று ஒவ்வொருவரும்

சொல்லக் கூடுமே?’ என்று வினவினோம்.

 

அதற்கு குருதேவர் கூறினார்: ‘சாதனை புரிவது சுய முயற்சியால் மட்டுமே

நிகழ்வதானால் எல்லோரும் அதைச் செய்திருக்கலாமே? ஆனால் எல்லோராலும்

முடிவதில்லை, ஏன்? அதன் பொருள் என்ன தெரியுமா? இறைவன் உனக்குக்

கொடுத்துள்ள சக்தின் காரணமாக உன்னால் அதை செய்ய முடிகிறது. சிலருக்கு அந்த சக்தி கொடுக்கப்படவில்லை அதனால் அவர்களால் சாதனை செய்ய முடியவில்லை. மேலும் உனக்கு தந்துள்ள சக்தியைச் சரிவரப் பயன்படுத்தாவிடில் மேலும் சக்தியை அவர்

தரமாட்டார். இதனால்தான் முயற்சியும் தளராமையும் இன்றியமையாதவை.

இறைவனின் அருளைப் பெறுகின்ற தகுதி அடைய யாராக இருந்தாலும் ஓரளவாவது

முயற்சி செய்தே தீர வேண்டும். முயற்சிகளில் ஈடுபட்டால், அவர் அருளால்,

பத்துப் பிறவிகளில் அனுபவிக்க வேண்டியவை அனைத்தும் ஒரே பிறவியில்

அனுபவிக்கப்பட்டு வினைப்பயன்கள் தீர்ந்து விடுகின்றன.

எல்லாம் இறைவன் விருப்பபடி நடக்கின்றன என்று நினைத்துக்கொண்டு எந்தவித சுயமுயற்சியும் செய்யாதவர்கள் இருந்த இடத்திலேயே இருப்பார்கள். முன்னேற மாட்டார்கள். இறைவன் அவர்களை கட்டுகளிலிருந்து விடுவிக்க மாட்டார் என்று கூறினார்

..

 

 சுயமுயற்சிதான் எல்லாவற்றிற்கும் காரணம் என்றால் இறைவனிடம் நம்பிக்கை வைப்பதால் என்ன பயன்? என்று கேட்டோம்.

ஒரு கதையைக் கேளுங்கள் என்றுகூறி இதை எங்களுக்கு விளக்கினார்.

.

வைகுண்டத்தில் மகாவிஷ்ணு வீற்றிருந்தார். அங்கே நாரதர் வந்தார்.நாரதர் செய்த சிறு பிழைக்காக நரகத்திற்குச்

செல்லுமாறு சாபமிட்டுவிட்டார் விஷ்ணு. அதனால் மிகவும் கவலை கொண்ட நாரதர்,

விஷ்ணுவைப் பலவாறு புகழ்ந்து தோத்திரங்கள் பாடி மகிழ்வித்து அவரிடம்,

எம்பெருமானே, நரகம் எங்கே இருக்கிறது? அது எப்படி இருக்கும்? எத்தனை

வகையான நரகங்கள் உள்ளன? தயைகூர்ந்து எனக்குக் கூறுங்கள்என்று கேட்டார்.

மகாவிஷ்ணு ஒரு  தரையின் மீது சுவர்க்கம், நரகம்,

பூமி ஆகியவற்றை வரைந்து நாரதரிடம் காட்டி, ‘நாரதா, இதோ, இது சொர்க்கம்,

 இது நரகம்என்றெல்லாம் விளக்கினார். உடனே நாரதர், ‘அப்படியா? இதோ நான்

 நரகத்திற்குச் செல்கிறேன்என்று சொல்லிக் கொண்டே, தரையில் வரையப்பட்டிருந்த

 நரகப்பகுதியின் மேல் விழுந்து, புரண்டு எழுந்து நின்று மகாவிஷ்ணுவை

வணங்கினார். இதைப் பார்த்த மகாவிஷ்ணு புன்னகை புரிந்தவாறே, ‘என்ன இது?

இது எப்படி நரகத்திற்குச் செல்வது ஆக முடியும்?’ என்று கேட்டார். அதற்கு நாரதர்,

ஏன் சுவாமி? சுவர்க்கமும் நரகமும் தங்கள் படைப்பு அல்லவா? நீங்கள் இங்கு

தரையில் வரைந்து அதற்கு நரகம் என்று பெயரிட்டால் அது உண்மையிலேயே நரகமாகி

விடுகிறது. அதன் மேல் நான் விழுந்து புரண்டதில் நான் நரகவேதனையை

அனுபவித்தவனும் ஆகிவிட்டேன்என்றார்.

.

நாரதர் விஷ்ணுவை ஏமாற்றவில்லை. உண்மையிலேயே அதை நரகம் என்று நம்பி அதில் விழுந்து புரண்டார்.திட நம்பிக்கையுடன் இவ்வாறு செய்தார். நாரதரின் திடநம்பிக்கையை கண்டு மகிழ்ந்த விஷ்ணுவும்

அப்படியே ஆகட்டும்நீ நரக துன்பத்தை அனுபவித்து முடித்துவிட்டாய் என்று கூறிவிட்டார். ஆனால்

தரையில் வரையப்பட்டிருந்த நரகம் என்ற படத்தின் மீது நாரதர் உண்மையான

 நம்பிக்கையோடு விழுந்து புரள வேண்டியிருந்தது. நாரதர் நம்பிக்கையுடன் செய்த

சிறு முயற்சியால் அவர் அனுபவிக்க வேண்டிய நரகவேதனை அத்துடன் தீர்ந்தது.

.

கடவுளின் கருணையில் கூட தனிப்பட்ட மனிதனின் முயற்சிக்கும் தளராமைக்கும்

இடம் உண்டு என்ற கருத்தை குருதேவர் இந்தக் கதையின் மூலம் எங்களுக்கு

விளக்கினார்.

.

குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணர் வாழ்க்கை வரலாறு புத்தகத்திலிருந்து...

 

No comments:

Post a Comment

தூக்கமும் மரணமும்

  தூக்கமும் மரணமும் .. இன்று இரவு நாம் தூங்க செல்கிறோம்.இதோடு நம் வாழ்க்கை முடிந்தது.இனி நாளை காலை நாம் கண்விழிக்க மாட்டோம். தூக்கத்திலே...