Monday, 21 July 2025

ஆன்மீகமும்-விஞ்ஞானமும்-பாகம்-17

 ஆன்மீகமும்-விஞ்ஞானமும்-பாகம்-17

..

மனத்தின் மூலம் சாப்பிடுவது

..

உடலை வளர்த்தேன் மனத்தை வளர்த்தேன். மனத்தை வளர்த்தேன் உடலை வளர்த்தேன் என்ற கருத்து ஒன்று உண்டு.

நல்ல சுவையான சத்தான உணவுகளை சாப்பிடும்போது மனம் சந்தோசமடைகிறது. உடல் வளர்கிறது.

இதை இப்படி மாற்றி யோசித்துப் பாருங்கள் மனத்தால் நன்றாக சுவையான உணவுகளை உண்டு பாருங்கள், அப்போது உடல் வளர்கிறதா? உடலால் எதையும் சாப்பிடவில்லை. மனத்தால் மட்டுமே சாப்பிடுகிறோம். இப்படி சாப்பிட முடியுமா? முடியும் சிலரால் முடியும். அப்படி மனத்தால் சுவைமிகுந்த உணவுகளை சாப்பிட முடிபவர்களால் உடல் வளரும். உடலுக்கு தனியாக உணவளிக்க வேண்டியதில்லை.

..

மனம் என்பது சூட்சுமஉடல். வெறும் எண்ணங்களை மட்டுமே நாம் மனம் என்று நினைக்கிறோம்.ஆனால் இந்துமத தத்துவங்களின்படி மனம் என்பது சூட்சும உடல். நமது உடலுக்கு எப்படி உருவம் உள்ளதோ அதுபோல மனத்திற்கும் ஒரு உருவம் உண்டு. அது வளர்கிறது,தேய்கிறது. கருக்கிறது, ஒளிர்கிறது, ஈர்க்கப்படுகிறது,விலக்கப்படுகிறது. காலத்தில் விரைவாக செல்கிறது,மெதுவாக செல்கிறது. பல்வேறு பரிமாணங்களில் அது வேலை செய்கிறது.

..

நாம் காணும் தூலஉடலிலிருந்து பெரும் உணவிலிருந்துதான் சூட்சும உடல் அதற்கான உணவைப்பெறுகிறது.

ஆனால் சிலர் பல ஆண்டுகள் உணவு சாப்பிடாமல் நல்ல ஆரோக்கியமாக வாழ்கிறார்கள். உடலுக்கு உணவு கொடுக்காவிட்டால் அது இறந்துவிடும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். அப்படி இருக்கும்போது உணவு உண்ணாமல் சிலர் எப்படி வாழ்கிறார்கள்? மற்றவர்கள் வேலை செய்வதுபோல அவர்கள் வேலை செய்கிறார்கள்.ஆகால் தண்ணீர் குடிப்பதில்லை,உணவு உண்பதில்லை. அவர்களுக்கான உணவு மனத்திலிருந்து கிடைக்கிறது. மனம் தேவையான உணவை உண்கிறது.அந்த உணவு உடலை வளர்க்கிறது.

..

இது ஒரு சுழற்சிபோல உள்ளது மகான்கள் சூட்சும உடலோடு வாழ்கிறார்கள். தேவைப்படும்போது அவர்கள் தூலஉடலை எடுத்துக்கொள்கிறார்கள். சாதாரண மனிதர்கள் தூலஉடலோடு வாழ்கிறார்கள். இறந்த பிறகு சூட்சு உடலை எடுத்துக்கொள்கிறார்கள்.

..

மனதால் நாம் செய்யும் செயல்கள் உடலை பாதிக்கிறது. உடலால் நாம் செய்யும் செயல்கள் மனத்தை பாதிக்கிறது. இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது.

மனோவிஞ்ஞானம் என்ற ஒன்று இருக்கிறது. மனத்தை பலப்படுத்தினால் உடலில் தோன்றியிருக்கும் நோய்களை குணப்படுத்திவிடலாம். உடலில் தோன்றும் நோய்கள் மனத்தை பாதிக்கிறது.

பழைய காலத்தில் மருத்துவ சிகிச்சை செய்யும்போது மந்திரங்களை பயன்படுத்துவார்கள். இதற்கான காரணம் நோயாளியின் மனத்தை முதலில் திடகார்த்தமாக்க வேண்டும். அவனுக்கு நம்பிக்கை ஊட்ட வேண்டும். கீழ்நிலையில் உழன்றுகொண்டிருக்கும் மனத்தை மேல்நிலைக்கு கொண்டுவர வேண்டும். அவனது குண்டலினி சக்தியை மேலே உயர்த்த வேண்டும். அப்படி அவனது மனம் மேல் நிலைக்கு உயரும்போது. அவனது உடல் நோய்கள் படிப்படியாக விலகிவிடும்.

..

இந்து மதத்தில் இடம்பெறும் பல்வேறு வகையான நோன்புகள்.விரதங்கள் போன்றவற்றின் நோக்கம் மனத்தை உயர்நிலைக்கு உயர்த்துவதே. உதாரணமாக கோவில்களில் நடக்கும் ”தீ” மிதிக்கும் நிகழ்வை பார்ப்போம்.

”தீ” மிதிக்கும்போது சில நொடிகளுக்கு அவனது குண்டலினி சக்தி மேல்நோக்கி எழுகிறது. இந்த சமயத்தில் தெய்வீக ஆவேசம் வந்தவன்போல அவன் செயல்படுகிறான். அவனது மனம் உயர்நிலையை அடைவதால் உடலும் உயர்நிலையை அடைகிறது. உடல் நோய்கள் ஓரளவுக்கு நீங்குகிறது. மனத்தை அதிகநேரம் உயர்நிலையில் நிறுத்தி வைக்க முடியுமானால் இன்னும் உடல்சார்ந்த பல பிரச்சினைகளை தீர்க்க முடியும்.

..

சபரி மலைக்கு விரதம் இருந்து நடந்தே செல்வதைப் பார்க்கிறோம். நடந்துசெல்லும் பாதை பயணம் மிகவும் கடினமானது. மனத்தை நன்றாக திடப்படுத்திக்கொண்டு இறைவன் நாமத்தை உச்சரித்துக்கொண்டே நடந்தால் மனம்மேல் நிலையை அடைகிறது. பக்தியோடு செல்பவர்கள் கரடுமுரடான பாதையின் கஷடங்களை உணரமாட்டார்கள்.உடல் உணர்ச்சியற்றநிலையை அடைகிறது. அப்போது அவர்கள் மனதால் எண்ணுவது நடக்கும்.அவர்களது ஆசைகள் நிறைவேறும்.

..

மனத்தை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும். இதற்கு பக்தியும் பயிற்சியும் சேர்த்து கொடுக்கப்படுகிறது.

வெறும் உடல்பயிற்சி மட்டும் இருந்தால் மனிதனுக்கு நம்பிக்கை வராது. மனிதமனம் எதையும் எளிதில் நம்பாது. எனவே கோவிலை சுற்றி அங்கபிரதட்சிணம் செய்,இறைநாமத்தை தொடர்ந்துசொல் நன்மை நடக்கும் என்று சொல்கிறார்கள். அப்படியே நடக்கிறது. சிலர் எவ்வளவுதான் முய்றிசசெய்தாலும் பயிற்சி செய்தாலும் துன்பங்கள் விலகவில்லை என்று சொல்வார்கள். இதற்கு காரணம் அவர்களது மனம் உயர்நிலையை அடையவில்லை, குண்டலினி சக்தி மேல்நிலையை அடையவில்லை. எது முக்கியமோ அதைவிட்டுவிட்டு வெறும் இயந்திரம்போல் வேலை செய்வதால் என்ன பயன்?

..

இறைநாமத்தை தொடர்ந்து ஜெபம் செய்தால் நினைப்பது நடக்கும் என்று சொல்கிறார்கள். ஜெபம் செய்யும்போது எதையும் நினைக்கக்கூடாது என்பதை மறந்துவிடுகிறார்கள். மனதில் பல்வேறு சிந்தனைகள் ஓட எத்தனை ஆண்டுகள் ஜெபம் செய்தாலும் ஒன்றும் நடக்காது. பத்து நிமிடம் எந்த சிந்தனையும் இல்லாமல் ஜெபம் செய்ய முடியுமா?

..

உடலும் மனமும் நெருங்கிய தொடர்பு உடையது. உடல் பலமாக இருந்தால் மனம் பலமாக இருக்கும். மனம் பலமாக இருந்தால் உடல் பலமாக இருக்கும். மனம் பலவீனமாக உள்ளவர்கள் முதலில் செய்ய வேண்டிய வேலை எதுதேரியுமா? உடலை பலப்படுத்துவதுதான். நல்ல சத்தான உணவை உண்டு. பல்வேறு உடற்பயிற்சிகள் செய்து உடலை பலப்படுத்தவேண்டும். போர்களத்திற்கு செல்லும் வீரனின் உடல் எப்படி பலமாக இருக்குமோ அப்படிஉடலை பலப்படுத்த வேண்டும். அப்படி செய்தால் மனம் பலமடையும்.

இதைவிட்டுவிட்டு வேறு என்ன செய்தாலும் மனம் பலமடையாது. பல்வேறு சிந்தனைகள் மனத்தில் ஓடி அவர்கள் வாழ்க்கையே நரகமாகிவிடும்.

இதேபோல உடல் ஆரோக்கியமாக இருப்பவர்கள், மனத்தை பலப்படுத்துவதற்காக ஆன்மீக கருத்துக்களை சிந்திக்க வேண்டும். ஆன்மாவைப்பற்றி கேட்க வேண்டும். கேட்டதை எப்போதும் சிந்திக்க வேண்டும். இப்படி செய்தால் மனம் பலப்படும். உடல் கட்டுப்பாட்டிற்குள் வரும். ஒழுக்கமான வாழ்க்கை அமையும்.

..

உங்கள் சந்தேகங்களை 9360209541 என்ற வாட்ஸ்அப் எண்ணில் மெசேஜ் மூலமாக கேட்கலாம்

சுவாமி வித்யானந்தர்-கன்னியாகுமரி(17-6-2025)

No comments:

Post a Comment

தூக்கமும் மரணமும்

  தூக்கமும் மரணமும் .. இன்று இரவு நாம் தூங்க செல்கிறோம்.இதோடு நம் வாழ்க்கை முடிந்தது.இனி நாளை காலை நாம் கண்விழிக்க மாட்டோம். தூக்கத்திலே...