Monday, 21 July 2025

ஐந்தாம் வேதம் எது?

 ஐந்தாம் வேதம் எது?

..

மிகப்பழைய காலத்தில் வேதங்கள் தொகுக்கப்படவில்லை. பிறகு பல்வேறு இடங்களில் வாழ்ந்த பல்வேறு ரிஷிகளிடம் வெளிப்பட்ட வேதத்தை தொகுத்தார்கள்.இதுதான் ”இருக்” வேதம். இருக்கு என்ற வார்த்தை இதிலிருந்துதான் உருவானது.

..

பிறகு பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு இன்னும் பல ரிஷிகளிடம் வெளிப்பட்ட உண்மைகளை யஜுர்வேதம் என்ற பெயரில் தொகுத்தார்கள். இது மிகப்பெரிய வேதத்தொகுப்பு.இதை மனப்பாடம் செய்வதில் சிரமம் இருந்ததால் இதை இரண்டாக பிரித்தார்கள். அவை சுக்ல யஜுர்வேதம்,கிருஷ்ண யஜுர்வேதம். இன்னும் சில ஆயிரம் ஆண்டுகள் கழித்து சாம வேதத்தை தொகுத்தார்கள். மகாபாரத காலத்தில் அதர்வண வேதம் தொகுக்கப்படவில்லை. மகாபாரதத்தில் பல இடங்களில் மூன்று வேதங்கள் பற்றித்தான் சொல்லப்பட்டுள்ளது.

மகாபாரத காலத்திற்கு பிறகு அதர்வணவேதம் தொகுக்கப்பட்டது.

.

மகாபாரதபோர் நிறைவடைந்ததும் கலிகாலம் துவங்கியது. மனப்பாடம் செய்யும் அளவுக்கு மக்களுக்கு நினைவாற்றல் இருக்காது என்பதால் முதன்முதலில் மகாபாரதம் எழுத்துவடிவில் வந்தது.

விநாயகர் இதை எழுதினார்.

பிறகு இதிலிருந்து பல பிரதிகள் எடுத்துக்கொண்டார்கள்.

இதில் பழைய காலத்து ரிஷிகள் பலரது அறிவுரைகள் உள்ளன.

.

வேதங்களின் சாரமான பகவத்கீதை அதில்தான் உள்ளது. மேலும் அறம்,பொருள்,இன்பம்,வீடு பற்றிய விளக்கங்கள் பிரம்மச்சர்யம்,இல்லறம்,வானப்பிரஸ்தம்,சன்னியாசம் பற்றி  கூறப்பட்டுள்ளது.

கர்மயோகம்,ராஜயோகம்,பக்தியோகம்,ஞானயோகம் பற்றிய பல அற்புத கருத்துக்கள் உள்ளன.

இதோடு நான்கு வர்ணங்களான பிராமணன்,சத்திரியன்,வைசியன்,சூத்திரன் பற்றியும்,அவர்களது கடமைகள் பற்றியும் விளக்கமாக உள்ளது.

அரசனின் கடமை குடிமக்களின் கடமை பற்றி விளக்கப்பட்டுள்ளது.

இதில் விளக்கப்படாத விஷயங்களே இல்லை என்று சொல்லலாம்.

.

திருக்குறள் போன்ற தமிழ் நூல்கள் எல்லாம் மகாபாரதத்தை படித்த பிறகு எழுதப்பட்டவை என்பதை இரண்டையும் படித்தவர்கள் புரிந்துகொள்வார்கள். அந்த அளவுக்கு திருக்குறளின் அளநெறி கருத்துக்கள் அனைத்தும் அப்படியே மகாபாரத அறநெறி கருத்துக்களுடன் ஒத்திருக்கின்றன.ஆன்ம தத்துவம்,பிரபஞ்ச தத்துவம் போன்ற உயர்ந்த தத்துவங்கள் திருக்குறளில் இல்லை.

.

மகாபாரதம் என்றவுடன் அதில் உள்ள கதைகள்தான் பலருக்கு நினைவிற்கு வரும்.ஆனால் அதில் உள்ள உபதேசப்பகுதிகள் மிகப்பெரியவை. கிட்டத்தட்ட மூன்றில் ஒருபகுதி உபதேங்களால் ஆனவை. மிகவுயர்ந்த தத்துவங்கள் அனைத்தையும் பற்றி இந்த உபதேசப்பகுதிகளில் விளக்கப்பட்டுள்ளது.

.

பல உயர்ந்த தத்துவங்கள் மகாபாரதத்தில் இருப்பதால் மகாபாரதத்தை ஐந்தாம் வேதம் என்கிறார்கள்.

விஷ்ணுசகஷ்ரநாமம்,சிவ சகஸ்ரநாமம், போன்றவை இதில் உள்ளன.பகவத்கீதை,அனு கீதை,ஹம்ச கீதை போன்ற பல கீதைகள் இதில் உள்ளன.

.

இவ்வளவு உயர்ந்த கருத்துக்கள் நிறைந்த மகாபாரதம் - சிறந்த சனாதன சாஸ்திரம்.

இந்த ஐந்தாம்வேதம் இதுவரை மக்களிடம் கொண்டு செல்லப்படவில்லை. இது அனைவரையும் சென்றடையவேண்டும். 

உலகம் முழுவதையும் சென்றடையவேண்டும். அதற்கு உங்கள் அனைவரின் உதவியும் தேவை

..

சுவாமி வித்யானந்தர்-கன்னியாகுமரி

No comments:

Post a Comment

தூக்கமும் மரணமும்

  தூக்கமும் மரணமும் .. இன்று இரவு நாம் தூங்க செல்கிறோம்.இதோடு நம் வாழ்க்கை முடிந்தது.இனி நாளை காலை நாம் கண்விழிக்க மாட்டோம். தூக்கத்திலே...