Sunday, 22 June 2025

பித்ருக்களுக்கு தினமும் உணவிட வேண்டும்

 

பித்ருக்களுக்கு தினமும் உணவிட வேண்டும்

..

துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்

இல்வாழ்வான் என்பான் துணை. -திருக்குறள்

..

துறந்தார்க்கும் என்றால் துறவிகளுக்கு, துவ்வாதவர் என்றால் உணவு இல்லாதவர்களுக்கு,இறந்தார் என்றால் முன்பு வீட்டில் இறந்துபோன பித்ருக்களுக்கு இல்வாழ்வான் என்பான் துணை என்றால் தினமும் சாப்பாடு வழங்க வேண்டும் என்று அர்த்தம்.

.

பித்ருக்களுக்கு தினமும் சாப்பாடு படைக்க வேண்டும் என்பது நமது சாஸ்திரம் சொல்லும் செய்தி.

திருக்குறளை பலர் மொழியெர்த்திருக்கிறார்கள். ஆனால் யாரும் பித்ருக்களுக்கு தினமும் சாப்பாடு படைக்க வேண்டும் என்பதைப்பற்றி பேசவில்லை.இதற்கு காரணம் நமது சாஸ்திரங்களைப்பற்றி அவர்கள் படிக்காததுதான் காரணம்.

.

திருக்குறளை படிப்பதற்கு முன்பு மனுஸ்மிருதி,மகாபாரதத்தில் வரும் நீதி மொழிகள் இவைகளைப் படித்திருந்தால் திருக்குறள் இன்னும் நன்றாக புரியும்.

..

நாம் பல பழங்கங்களை மறந்துவிட்டோம். அதில் முக்கியமான ஒன்று தினமும் தெய்வத்திற்கும்,பித்ருக்களுக்கும் உணவு படைக்க வேண்டும் என்பது. சிலர் தெய்வத்திற்கு தினமும் உணவு படைப்பார்கள். ஆனால் பித்ருக்களுக்கும் உணவு படைக்க வேண்டும். நிறைவேறாத ஆசைகளோடு இறந்தவர்கள் சூட்சும உடலோடு வாழ்ந்துகொண்டிருப்பார்கள். அவர்களுக்கு நமது உதவி தேவை.

அவர்களுக்கு நம்மால் உதவ முடியும். உணவு படைக்கும்போது எல்லா பித்ருக்களையும் மனதில் நினைத்து உணவு படைக்க வேண்டும். அது அவர்களுக்கு மனஅமைதியைக்கொடுக்கும்.

.

எத்தனைகாலம் பித்ருக்கள் ஆவி உடலில் வாழவேண்டும் என்று சிலர் கேட்டிருந்தார்கள்.

.

சில பித்ருக்கள் ஆவி வாழ்க்கையில் சில ஆண்டுகள் வாழ்ந்து பிறகு அப்படியே முக்தி அடைந்துவிடுவார்கள்.

அந்த பித்ருக்களின் பாவங்களை அவர்களது வீட்டில் உள்ளவர்கள் ஏற்றுக்கொண்டால் அந்த ஆவி முக்தி அடைந்துவிடும். மீண்டும் பிறக்கத்தேவையில்லை.

இதனால்தான் நமது நாஸ்திரங்கள் தினமும் பித்ருக்களை நினைத்து உணவு படைக்கும்படி கூறுகின்றன.

ஒருவர் இறந்துபோன பிறகும் நம்மால் அவர்களுக்கு உதவ முடியும்.

பித்ருக்களின் பாவத்தை ஏற்றுக்கொள்ள முடியும். அதேபோல வீட்டில் உள்ளவர்களின் பாவத்தையும் பித்ருக்களால் ஏற்றுக்கொள்ள முடியும். சிலர் இறந்த பிறகும் சூட்சும உடலோடு தவத்தில் ஈடுபட்டிருப்பார்கள். அப்படிப்பட்ட பித்ருக்கள் எந்த வீட்டில் வசிக்கிறார்களோ அவர்களால் அந்த வீடே நன்மையடையும். அந்த வீட்டில் யாராவது தெரியாமல் பாவச்செயல்களை செய்தால் சூட்சும நிலையில் உள்ள பித்ருக்கள் அதை ஏற்றுக்கொண்டு, அதற்காக அவர்கள் துன்பப்படுவார்கள்.

..

அல்ப ஆயுளில் இறந்தவர்களின் ஆவி துன்பத்தில் துடித்துக்கொண்டிருக்கும். அவர்களை நினைத்தும் உணவு படைக்கலாம். அது அவர்களது ஆவியை சாந்தப்படுத்தும். வேதனையைக் குறைக்கும்.

இப்படி செய்யாவிட்டால் இறந்தவர்களின் ஆவியால் ஏற்படும் சாபம் ஏற்படும்.

குடும்பத்தில் நிம்மதி இருக்காது.

அதேநேரம் மிக்கொடியவர்கள் மகாபாவிகள் யாராவது குடும்பத்தில் இறந்துவிட்டால் அவர்களை அப்படியே மறந்துவிடுவது நல்லது. அவர்களுக்கு உணவு படைக்கக்கூடாது. அப்படி செய்தால் அவர்கள் வாழ்நாளில் செய்த பாவங்கள் அனைத்தும் உணவு படைப்பவருக்கு வந்து சேரும்.அந்த குடும்பம் வறுமையில் வாடும்.

..

எல்லோரும் நல்லவர்களாக இருக்க முடியாது. தெரியாமல் செய்யும் தவறுகளுக்கு பரிகாரங்கள் உண்டு. தெரிந்து செய்யும் தவறுகளுக்கு தண்டனைகள்தான் உண்டு. தண்டனைகளை அனுபவிப்பதன் மூலம்தான் அந்த பாவம் சரியாகும்.

எனவே பித்ருக்களில் யார் நல்லவர்களோ அவர்களை மட்டுமே வழிபடவேண்டும். தீயவர்களை கண்டிப்பாக வழிபடக்கூடாது. இதை சிலர் மறந்துவிடுகிறார்கள். கெட்டவனை நினைப்பது மனிதனைக்கெடுக்கும். கெட்டவனுக்கு உணவிடுவது குடும்பத்தைக்கெடுக்கும்,கெட்டவளை வாழவைப்பது நாட்டைக்கெடுக்கும்.

..

பித்ருக்களுக்கு உணவு படைப்பது எப்படி?

.

1.வீட்டின் ஒரு அறையில், காற்றோட்டமான வெளிச்சமான இடத்தில்,வாசலைப் பார்த்து,ஒரு மூலையில்,ஒரு மேஜைமீது ஒரு விளக்கு ஏற்றிவைக்க வேண்டும்.2.ஒரு இலை அல்லது ஒரு தட்டு வைத்து அதில் மதியம் சமைக்கும் சூடான உணவிலிருந்து சிறிது வைக்கவேண்டும்.சைவம் உண்பவர்கள் சைவம் படைக்கலாம். அசைவம் உண்பவர்கள் அசைவம் படைக்கலாம். பக்கத்தில் டம்ளரில் சிறிது தண்ணீர் வைக்கவேண்டும். 3. இன்னும் சாந்தியடையாமல் இருக்கும் முன்னோர்களை(நல்லவர்களை),ஒருவரை அல்லது பலரை மனதால் நினைத்து, வாருங்கள் வந்து உண்ணுங்கள் என்று வேண்டிக்கொள்ள வேண்டும்.4. இதன்பிறகு நாமும் மற்றவர்களும் உணவு உண்ணத்தொடங்க வேண்டும்.வீட்டில் உள்ள எல்லோரும் உணவு உண்டு முடிதத்பிறகு. 5. பித்ருக்களுக்கு படைக்கப்பட்ட உணவை யாரும் உண்ணக்கூடாது. அதை அப்படியே எடுத்து காகங்களுக்கும்,பறவைகளுக்கும் இடவேண்டும்.

பித்ருக்களுக்கு படைக்கப்பட்ட உணவை ஏன் உண்ணக்கூடாது? பித்ருக்கள் அந்த உணவின் சூட்சும பகுதியை உண்பார்கள். அதனால் அது எச்சிலாக்கப்பட்ட உணவு. அந்த உணவை நாம் உண்டால் நமது பக்திக்கு பாதிப்பு ஏற்படும் என்று ஸ்ரீராமகிருஷ்ணர் கூறுவார். எனவே பித்ருக்களுக்கு படைக்கப்பட்ட உணவை எச்சில் உணவாகக் கருதி அதை பறவைகளுக்கு அல்லது மிருகங்களுக்கு கொடுக்கலாம்.

6. பித்ருக்களுக்கு படைக்கும் பாத்திரங்களை மற்றவர்கள் பயன்படுத்தாமல் அதை தனியாக எடுத்து வைக்க வேண்டும்.

7. தினமும் கண்டிப்பாக இதை பின்பற்ற வேண்டும். பண்டிகை நாட்களில் புதிய உடைகள் வாங்கி அடை பித்ருக்களுக்கு படைக்கலாம். பிறகு அதை ஏழைகளுக்கு(நல்லவர்களுக்கு) வழங்கிவிட வேண்டும்.

8.பித்ருக்களுக்கு முக்தி கிடைக்க வேண்டும் என்று மனதால் நினைத்து, அவர்களுக்காக விரதம் இருக்கலாம்.

கோவில்களில் வழிபடும்போது பித்ருக்களுக்கு முக்தி கிடைக்க வேண்டும் என்று நினைத்து வழிபடலாம், இப்படி செய்தால் பித்ருக்கள் விரைவில் முக்தி அடைவார்கள்.

9.பித்ருக்களின் பாவங்கள் தீர்வதற்காக வருடத்திற்கு ஒருமுறை நல்லவர்களுக்கு அன்னதானம் இடலாம், அல்லது நல்ல ஏழை குழந்தைகள் படிப்பதற்கு பணஉதவி செய்யலாம். அல்லது நல்லவர்கள் நடத்தும் அமைப்புகளுக்கு பணஉதவி செய்யலாம்.

..

மேலே சொல்ப்பட்டுள்ள விசயங்களை நன்றாக படித்து புரிந்துகொண்டு. நமது சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளதுபடி, எந்த ஜாதியை சேர்ந்தவர்களதக இருந்தாலும் பின்பற்றலாம்.

1.தெய்வங்களுக்கும்,2.துறவிகளுக்கும்,3.பித்ருக்களுக்கும்,4.வறியவருக்கும்,5.மிருகங்களுக்கும் உணவிட வேண்டும்.

இதை செய்தால் எல்லா நன்மைகளும் ஏற்படும்.

..

சுவாமி வித்யானந்தர் (23-6-2025)

No comments:

Post a Comment

பித்ருக்களுக்கு தினமும் உணவிட வேண்டும்

  பித்ருக்களுக்கு தினமும் உணவிட வேண்டும் .. துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை. -திருக்குறள் ...