Monday, 21 July 2025

ஆன்மீகமும்-விஞ்ஞானமும்-பாகம்-18

 ஆன்மீகமும்-விஞ்ஞானமும்-பாகம்-18

..

ஆண்பெண் தேடல்

..

இயற்கை படைப்பில் மிருகங்களைப் பொறுத்தவரை ஆண் தனியாகவும்,பெண் தனியாகவும் படைக்கப்பட்டுள்ளது.

பெண்ணைத்தேடி ஆண் அலையவேண்டும்,அப்போது போட்டி,போராட்டம்,பொறாமை அனைத்தும் ஏற்படவேண்டும் என்ற ரீதியில் உள்ளது. ஆனால் தாவரங்களைப் பொறுத்தவரையில் பெரும்பாலான தாவரங்கள் ஆண்தன்மை,பெண்தன்மை இரண்டும் சேர்ந்தே படைக்கப்பட்டுள்ளது. அதனால் இனப்பெருக்கத்திற்கான போட்டி,போராட்டம் இல்லை ஆனால் அவைகளால் இடம்பெயர முடியாது. வெயிலோ,பனியோ,புயலோ அவைகளிலிருந்து தப்பித்து செல்ல முடியாது. அவைகள் இயற்கையின் அடிமைகளாக இருக்கின்றன. சுதந்திரம் இல்லை. மிருகங்களுக்கு ஓரளவு சுதந்திரம் இருக்கிறது,ஆனால் முழுமைநிலையில் இல்லை.

.

மனிதன் விலங்கின் வகையை சேர்ந்தவன் என்பதால் ஆண் தனியாகவும். பெண் தனியாகவும் படைக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஒரு உயிர் உருவாகும் ஆரம்பக் கட்டத்தைப் பார்த்தால் அது ஆணாகவும் இல்லை,பெண்ணாகவும் இல்லை. உயிரின் ஆரம்பப்புள்ளியில் பால் வேறுபாடு இல்லை.

..

படைப்பின் ஆரம்பத்தில் முழுமை இருந்தது. அந்த முழுமை இரண்டாக பிரிந்து ஒன்று கவரும் சக்தியாகவும் இன்னொன்று விலக்கும் சக்தியாகவும் மாறியது. மனிதனின் ஒன்று ஆணாகவும் இன்னொன்று பெண்ணாகவும் ஆனது.

..

இந்த உலகில் ஆண் பெண்ணைத்தேடவேண்டும், பெண் ஆணைத்தேட வேண்டும் என்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

மனிதன் ஒரு பிறவியில் ஆணாகப்பிறக்கிறான்,இன்னொரு பிறவியில் பெண்ணாகப் பிறக்கிறான். அதனால் நிறைநிலை அடையும் மனிதனுக்கு ஆண்மனத்தின் இயல்புகளும் தெரியும்,பெண் மனத்தின் இயல்புகளும் தெரியும் ஏனென்றால் அவன் பல பிறவிகளை கடந்து வந்துவிட்டான்.

.

ஆன்மாவின் இயல்பு என்னவென்றால் இந்த ஆண்மை,பெண்மை இரண்டையும் முழுமையாக பெற்றிருப்பதுதான்.

எந்த மனிதன் ஆண்மை,பெண்மை இரண்டையும் முழுமையாக பெற்றிருக்கிறானோ அவனால்தான் ஆன்மாவை அடைய முடியும்.

..

ஸ்ரீராமகிருஷ்ணரிடம் இந்த இரண்டு குணங்களும் முழுமையாக இருந்தது. அவரைப் பார்க்கவரும் பெண்கள்,அவரை பெண்ணாகவே கருதினார்கள். தங்கள் மனத்தில் உள்ள எதையும் அவர்கள் மறைக்காமல் அவரிடம் பேசுவார்கள்.

.

ஸ்ரீராமகிருஷ்ணரின் சிஷ்யையாக,சேவகியாகவே சாரதாதேவி தன்னை கருதினாள்.

ஸ்ரீராமகிருஷ்ணருக்கு மனைவியின் தேவை இல்லை. அவர் ஏற்கனவே முழுமையாக இருந்தார்.

யார் முழுமைபெறவில்லையோ அவர்கள்தான் இன்னொரு துணையைத்தேடி அலைவார்கள்.

பின்னாளில் சாரதாதேவியும் முழுமைநிலையை அடைந்தார்.அவர் ஸ்ரீராமகிருஷ்ணரை குழந்தையாக பாவித்தார்.

..

இந்த பிரபஞ்சத்தில் எங்கெல்லாம் இயக்கம் இருக்கிறதோ,அங்கெல்லாம் முழுமை இல்லை. எதையோ ஒன்றைத்தேடியே அனைத்தும் அலைந்துகொண்டிருக்கிறது. ஒவ்வொரு அணுவும் முழுமை பெறுவதற்காக போராடிக்கொண்டிருக்கிறது. ஆனால் அவைகளால் முழுமைபெற முடிவதில்லை.

.

அன்புதான் ஆணையும் பெண்ணையும் ஒன்றாக இணைக்கிறது. முழுமையான அன்பில் ஆண்பெண் வேறுபாடு இருக்காது. காமம்தான் மனிதர்களை ஆண்தனியாகவும், பெண் தனியாகவும் பிரிக்கிறது.இந்த உலக இயக்கத்திற்கு காமம்,அன்பு இரண்டுமே தேவை.இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கம்போல சேர்ந்தே இருக்கிறது. ஆனால் அன்பு வெளிப்படும்போது காமம் வெளிப்படாது. அன்பை வளர்க்க வேண்டும் அப்படி வளர்த்தால்,காமம் தலை காட்டது.ஆனால் காமம் இருக்கும்,அது வெளிப்படாது.

.

ஆன்மாவை அடைய அன்பை வளர்த்துக்கொள்வதே வழி.யாரிடம் முழுமையான அன்பு உள்ளதோ அவரை நேசிக்க வேண்டும்,அவரிடம் அன்பு காட்ட வேண்டும். அப்படி செய்தால் அன்பு வளரும். மனிதர்களிடம் முழு அன்பை எதிர்பார்கக் முடியாது. அவர்களிடம் காமமும் இருக்கும் அன்பும் இருக்கும். ஒரு பெண்ணிடம் ஆண் காட்டும் அன்பிலும், ஒரு ஆணிடம் பெண் காட்டும் அன்பிலும் காமம் கலந்திருக்கும். அவர்கள் காமத்தை மட்டுப்படுத்தவில்லை. அதனால் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் காமம் வெளிப்பட்டு,உண்மையான அன்பு மறைந்துவிடுகிறது.

..

காதலர்கள் தங்கள் காதலை தூய புனிதமான காமம் இல்லாத காதல் என்றுதான் ஆரம்பத்தில் நினைக்கிறார்கள்.ஆனால் நாள் ஆகஆக அதில் காமம் கலந்துவிடுகிறது. ஒருவேளை அவர்கள் காதலில் காமம் கலக்காமல் இருந்தால் அவர்கள் தெய்வநிலையை அடைந்துவிடுவார்கள்.

.

ஆன்மா மட்டுமே முழுமையாக இருக்கிறது. யார் இந்த ஆன்மாவை அடைகிறார்களோ அவர்களிடம் மட்டுமே முழுஅன்பு வெளிப்படுகிறது. அவர்களையே நாம் இஷ்டதெய்வமாக,குருவாக வணங்க வேண்டும்.

ஒரு குரு, சீடனை ஆசீர்வதிக்கும்போது குருவின் சக்தி சீடனிடம் செல்கிறது.இதனால் குருவின் மனம் சற்று கீழ்நிலைக்கு செல்கிறது.சீடன் பாவியாக இருந்தால் குருவின் மனம் மிகவும் கீழ்நிலைக்கு சென்றுவிடும். அப்படி சென்றால் குரு வீழ்ச்சியை அழைய நேரும். அவர் காமத்திற்கு வசப்படநேரும்,அவரிடமுள்ள அன்பு மறைந்துவிடும்.

அதனால்தான் சீடனின் தகுதி முக்கியமாக கவனத்தில் கொள்ளப்படுகிறது.

..

இல்லறம் என்பதே இந்த அன்பை வளர்த்துக்கொள்வதற்கான இடம்தான். நமது தர்மசாஸ்திரம் முழுவதும் அதைத்தான் சொல்கிறது. அன்பை வளர்த்துக்கொள்வதன் மூலம் இல்லறத்தில் இருந்தே ஆன்மாவை அடைய முடியும்.

..

உங்கள் சந்தேகங்களை 9360209541 என்ற வாட்ஸ்அப் எண்ணில் மெசேஜ் மூலமாக கேட்கலாம்

சுவாமி வித்யானந்தர்-கன்னியாகுமரி(19-6-2025)

No comments:

Post a Comment

தூக்கமும் மரணமும்

  தூக்கமும் மரணமும் .. இன்று இரவு நாம் தூங்க செல்கிறோம்.இதோடு நம் வாழ்க்கை முடிந்தது.இனி நாளை காலை நாம் கண்விழிக்க மாட்டோம். தூக்கத்திலே...