Monday, 21 July 2025

இந்த உலகத்தின் எதிர்காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதா?

 இந்த உலகத்தின் எதிர்காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதா?

-

சிலர் எதிர்காலத்தை கணித்து சொல்வதை பார்க்கிறோம்.சிலர் 500 ஆண்டுகளுக்கு முன்பே பலவற்றை கணித்திருக்கிறார்கள்.அதன்படிதான் நடக்கவும் செய்கிறது.எதிர்காலத்தில் நடப்பதை அவர்கள் எப்படி அறிந்துகொண்டார்கள்?

-

இந்த உலகம் தோன்றி பல கோடி ஆண்டுகள் ஆகிவிட்டன.ஒடுக்கம் அல்லது கல்பம் முடிய இன்னும் பலகோடி ஆண்டுகள் இருப்பதாக கூறுகிறார்கள்.உதாரணமாக நாம் இதை 10 கோடி ஆண்டுகள் என்று எடுத்துக்கொள்வோம்.ஏற்கனவே பாதி முடிந்துவிட்டது.கடந்த காலத்தில் நடந்த நிகழ்வுகள் எல்லாம் அப்படியே யாருக்கும் தெரியாமல் அழிந்துபோயிருக்குமா? 

-

பழைய காலத்தில் நிகழ்ந்தவை அனைத்தும் முற்றிலும் யாருக்கும் தெரியாமல் அழிந்துபோயிருந்தால் எப்படி ஒருவரால் 500 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததை சொல்ல முடிகிறது. எப்படி ஒருவரால் 500 ஆண்டுகளுக்கு பின்பு நடக்க இருப்பதை சொல்ல முடிகிறது? 

-

எப்படியென்றால் இவைகள் பிரபஞ்சமனம் அல்லது மஹத் என்ற நினைவுகளில் இருக்கும்.இந்த கல்பத்தின் 10 கோடி ஆண்டுகள் ழுழுவதும் அந்த நினைவுகளில் இருக்கும்.அவைகளில் பாதியை நாம் கடந்திருக்கலாம்.மீதி என்ன நடக்க வேண்டும் என்பது அங்கே இருக்கும்.அதன்படி எதிர்காலத்தில் நடக்கும்

-

ஒரு உதாரணம் பார்ப்போம்...ஒன்றாம் வகுப்பு படிக்க சிலர் செல்வதாக வைத்துக்கொள்வோம்.அங்கு இதற்கு முந்தைய வருடம் எப்படி சொல்லிக்கொடுத்தார்களோ,அதேபோல் இந்த வருடமும் சொல்லிக்கொடுப்பார்கள்.அடுத்த வருடமும் அதேபோல்தான்.ஆனால் ஆனால் பாடம் படிக்க வரும் மாணவர்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள்.பாடம் நடத்துபவர்கூட மாறலாம்.ஆனால் ஒன்றாம் வகுப்பு எப்படி நடக்கவேண்டும் என்று ஏற்கனவே நிச்சயிக்கப்ட்டுள்ளதோ அதேபோல்தான் எப்போதும் நடக்கும்.

-

அதேபோல் இந்த பிரபஞ்சத்தில் நடக்கும் நிகழ்வுகள் எல்லாமே ஏற்கனவே நிச்சயிக்கப்ட்டுள்ளன.அதில் வந்திருக்கும் ஆன்மாக்கள் மட்டும் வேறு.சம்பவங்கள் அதேதான்.இந்த 10 கோடி ஆண்டுகளில் நடக்கக்கூடிய சம்பவங்கள் அனைத்தும் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டவைதான்

-

-

நாம் மேலே குறிப்பிட்ட சம்பவங்கள் உண்மைதான்,கற்பனை கதையல்ல என்பது எப்படி தெரியும்? ஒரு மனிதன் யோகப்பாதையின் வழியாக சென்று முக்தியடையவேண்டுமானால் பிரபஞ்சத்தின் வாழ்க்கை முழுவதையும் ஒரே ஆயுளில் வாழ்ந்து முடிக்க வேண்டும்.ஏற்கனவே நடந்து முடிந்த 5 கோடி ஆண்டுகளையும்.இனி நடக்க இருக்கின்ற 5 கோடி ஆண்டுகள் வாழ்க்கையையும் அவன் இந்த ஒரே பிறவியில் வாழ்ந்து முடித்திருக்க வேண்டும்.இதன் மூலம் அவன் இவைகளைபற்றி தெரிந்துகொள்கிறான்.அவரது வாழ்க்கை அனுவத்தை அடிப்படையாக கொண்டே இந்த கருத்து உண்மை என்பதை நாம் அறிகிறோம்.

-

இவ்வாறு 10 கோடி ஆண்டுகள் வாழ்க்கையையும் முழுவதும் வாழ்ந்தபின்தான் இறைவனாகின்ற தகுதியை அந்த யோகி பெறுகிறான்.பிரபஞ்ச மனத்தை பற்றி தெரிந்தவனாகிறான்.அப்படிப்பட்டவன்தான் 500 ஆண்டுகளுக்கு பின்பு என்ன நடக்கும் 500 ஆண்டுகளுக்கு முன்பு என்ன நடந்தது என்பதை சொல்ல முடியும்.ஆனால் இந்த விபரங்களை அறிந்துகொள்வதில் ஆர்வம் காட்டினால் அவனால் முக்திபெற முடியாது.உயரத்தை எட்டமுடியாது.எனவே சூட்சுமமாக சில குறிப்புகளை எழுதிவைத்துவிட்டு இறந்துபோகிறார்கள்.மற்றவர்கள் ஏதோ அதிலிருந்து சிலவற்றை தெரிந்துகொள்கிறார்கள்

-

இந்த கல்பத்தின் ஆயுள் 10 கோடி என்று ஒரு உதாரணத்திற்கு கூறினேன்.இந்த கல்பம் முடியும்போது.இந்த பிரபஞ்சம் ஒடுங்கிவிடும்.பிறகு அடுத்த கல்பம் துவங்கும் 10கோடி ஆண்டுகள் நடக்கும்.பின் அது ஒடுங்கும்.இப்படி லட்சக்கணக்கான முறை நடந்திருக்கிறது.இன்னும் லட்சக்கணக்கான முறை நிகழும்.இதற்கு ஒரு முடிவே இல்லை.

-

இப்போது நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த கல்பம் என்பது ஏற்கனவே லட்சக்கணக்கான கல்பங்களுக்கு முன்பு இருந்த ஒரு கல்பத்தின் மறுஉருவாக்கம்தான். இப்போது நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் முன்பு உள்ள சில கல்பத்தில் ஏற்கனவே நடந்ததுதான்.ஆனால் இதில் பயணம்செய்யும் ஆன்மாக்கள்தான் வேறுபடுகின்றன.

-

ஒரு ராட்டினம் இருக்கிறது.அதில் பல தொட்டில்கள் இருக்கின்றன.அது எப்படி சுழலவேண்டும் என்பதும் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அதில் பயணம் செய்பவர்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள்.தொட்டில்கள் மாறாது.உடல் என்பது தொடடில். உங்கள் உடம்பும் என் உடம்பும் ஒரு தொட்டில்.தொட்டில் மாறாது பயணிப்பவர்கள் மாறுகிறார்கள்.உங்களது உடலும் எனது உடலும் புதிதாக இப்போது படைக்கப்பட்டதல்ல. இதேபோன்ற உடல் ஏற்னகவே பலமுறை இந்த உலகத்தில் பிறந்துள்ளது.ஆனால் அந்த உடலுக்குள்ளே பயணம் செய்த ஆன்மாக்கள்வேறு

-

இந்த உலகத்தின் கடந்த காலம் எதிர்காலம் அனைத்தையும் அறிந்தவர் யார்?இந்த உலகத்தின் பதிவுகள் அனைத்தும் ஒரு பெரிய ஹார்ட் டிஸ்க்-ல் ஏற்கனவே பதியப்பட்டுள்ளது.அதற்கு பிரபஞ்சமனம் அல்லது மஹத் என்று பெயர்.. அந்த ஹார்ட்டிஸ்க்-ல் என்ன நடக்க வேண்டும் என்பது ஏற்கனவே புரோகிராம் செய்யப்பட்டுள்ளது.அதன்படி எல்லாம் நடந்துகொண்டிருக்கிறது.இவை அனைத்தையும் அறிய வேண்டிய அவசியம் இல்லை.ஒருவன் அவ்வாறு அதை அறிவதில் ஆர்வம்காட்டினால் .அதுவே அவனுக்கு ஒரு தடையாகமாறிவிடும்.ஆன்மீகத்தில் முன்னேற முடியாது.

இப்போது நடக்கும் கம்பியூட்டர் உலகம் பற்றியெல்லாம் ஏற்கனவே பிரபஞ்ச மனத்தில் பதியப்பட்டிருக்குமா? இதற்கு முன்பு வாழ்ந்த மகான்கள் யாரும் அதைப்பற்றி எதுமே சொல்லவில்லையே!

..

மகான்கள் எதிர்காலத்தில் நிகழப்போகும் நிகழ்வுகளை அறிந்துகொள்ள ஆர்வம் காட்டமாட்டார்கள்.அதை அவர்கள் அறிந்து கூறினால் அது பிரபஞ்ச ரகசியத்தை மீறும் செயலாகிவிடும்.

அதனால்,அவர்கள் உயர்ந்த நிலையிலிருந்து,தாழ்வு நிலையை அடையக்கூடும்.பின்னர் எதிர்காலத்தை அறியும் ஆற்றல் அவர்களைவிட்டு அகன்றுவிடும்.

..

ஸ்ரீராமகிருஷ்ணர் தன் சீடர்களுக்கு சில ரகசியங்களைக்கூற முற்படுவார். அப்போது அவரது வாயை யாரோ அடைப்பதுபோல இருக்கும். அவர் அழுதுகொண்டே சீடர்களிடம் கூறுவார். இதோ பாருங்கள் நான் எல்லா ரகசியங்களையும் உங்களிடம் சொல்ல விரும்புகிறேன்.ஆனால் யாரோ என் வாயை அடைப்பதுபோல உள்ளது. ரகசியங்களை வெளியில் சொல்ல தேவி அனுமதிக்கவில்லை. நான் என்ன செய்யட்டும் என்று சீடர்களிடம் கூறுவார்கள்.

..

பிரபஞ்ச ரகசியங்கள் ரகசியங்களாகவே இருக்கின்றன. அதை அறிபவர் அதை ரகசியமாகவே வைத்திருக்க வேண்டும்.

-

பிரபஞ்ச ரகசியங்களை மனிதர்கள் அறிந்துகொண்டால் பிறகு அவர்கள் செயல்புரிய மாட்டார்கள். வாழவே ஆசைப்பட மாட்டார்கள்.பிறகு படைப்பு என்பது எப்படி நிகழும்? மனிதர்கள் எதுவரை அறிவற்றவர்களாகவே இருக்கிறார்களோ அதுவரைதான் படைப்பு நிகழும்.

..

மகான்கள் சில ரகசியத்தை சொன்னால்கூட மக்கள் அதை நம்பமாட்டார்கள்.அப்படி மக்களின் மனத்தை மாயை சூழ்ந்துள்ளது.

.

இப்போது ஒரு முக்கியமான ரகசியத்தைப் பார்ப்போம். இந்த உலகம் என்பது உண்மையில் நாம் நினைப்பதுபோல இல்லை.இந்த உலக வாழ்வில் நிகழும் அனைத்தும் மஹத் என்ற பிரபஞ்ச மனத்தின் கற்பனைகள்தான்.நாம் உண்மையில் உடலும் அல்ல மனமும் அல்ல. இந்த உடலாகவும் மனமாகவும் இருப்பதாக நினைப்தே மிகப்பெரிய கற்பனை.

நமக்கு ஒரு உடல் இருப்பதாகவும்,நாம் பல செயல்களை செய்வதாகவும் கனவு கண்டுகொண்டிருக்கிறோம் என்று ஒரு உண்மையை மகான் சொன்னால் எத்தனைபேர் நம்புவார்கள்? அப்படி உண்மையிலேயே நம்புபவர்களின் வாழ்க்கை என்னவாகும்? உண்மையில் இதை நம்பினால் அவர்கள் வாழ்க்கை முடிந்துபோகும். மாயை அவர்களை விட்டு அகன்றுவிடும்.அவர்கள் விழிப்படைந்துவிடுவார்கள்.

..

ஆனால் இந்த ரகசியத்தை யாரும் நம்பிவிடக்கூடாது என்பதற்காக மாயை மனிதனை அஞ்ஞானத்தில் ஆழ்த்தி வைத்துள்ளது.

சில உயர்ந்த உண்மைகளை நாம் கூறும்போது சிலரால் அதை தாங்கிக்கொள்ளவே முடிவதில்லை. நமது குழுவைவிட்டு உடனே வெளியேறிவிடுகிறார்கள்.இது தான் மாயையின் வேலை.

..

ஒருமுறை நமது குழுவில் உள்ள ஒருவர் ஒரு மெசேஜ் அனுப்பியிருந்தார். உங்கள் குழுவைவிட்டு உடனே வெளியேறுகிறேன். உங்கள் குழுவில் இனிமேலும் இருந்தால் இந்த உலக வாழ்வில் என்னால் வாழ முடியாது.

.

ஞானம் பெற மனிதர்கள் விரும்பமாட்டார்கள். இயற்கை அல்லது மாயை மனிதன் ஞானம் பெற அவ்வளவு எளிதில் அனுமதிக்காது. 

-

சுவாமி வித்யானந்தர்(23-5-2018)

No comments:

Post a Comment

தூக்கமும் மரணமும்

  தூக்கமும் மரணமும் .. இன்று இரவு நாம் தூங்க செல்கிறோம்.இதோடு நம் வாழ்க்கை முடிந்தது.இனி நாளை காலை நாம் கண்விழிக்க மாட்டோம். தூக்கத்திலே...