Wednesday, 29 August 2018

வேதம் பயில்வோம்-பாகம்-10-ரிக்வேதம்

வேதம் பயில்வோம்-பாகம்-10-ரிக்வேதம்
-
ஐதரேய உபநிஷதம்
-
உலகிலேயே மிகப்பழைய நூல் இந்த சிந்தனைக் கருவூலம்தான். இது எப்போது தோன்றியது என்பது ஒருவருக்கும் தெரியாது. இக்கால ஆராய்ச்சியாளர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். இது எட்டாயிரம் அல்லது ஒன்பதாயிரம் வருடங்களுக்கு முன்பு தோன்றியதாக இருக்கலாம்... ஆனால் அன்று போலவே இன்றும் அவை புதுமை மாறாமல் இருக்கின்றன; ஏன், முன்னைவிட புதுப் பொலிவுடன் திகழ்வதாகவே கூறலாம்.
-
வேதங்கள் யாராலும் எழுதப்பட்டவை அல்ல. என்றென்றும் நின்று நிலவுகின்ற உண்மைகளின் தொகுப்பே வேதங்கள். புவியீர்ப்பு விதி, அது கண்டறியப்படும் முன்னரே இருந்தது, மனித இனம் முழுவதும் அதை மறந்து விட்டாலும் இருக்கும். அவ்வாறுதான் ஆன்மீக உலகின் விதிகளும்... அவை கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னரும் இருந்தன, நாம் அவற்றை மறந்தாலும் இருக்கும் என்று எழுதுகிறார் சுவாமி விவேகானந்தர். ரிஷிகள் அந்த விதிகளை வெளிப்படுத்தினார்கள், அவ்வளவுதான்.
-
அவ்வாறு ரிஷிகள் வெளிப்படுத்திய அந்த உண்மைகள் பின்னாளில் வியாச முனிவரால் நான்காகத் தொகுக்கப்பட்டன. அவை ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள். ஒவ்வொரு வேதமும் மூன்று முக்கியப் பிரிவாக பிரிக்கப்படுகின்றன. அவை சம்ஹிதை (பல்வேறு தேவர்களிடம் பிரார்த்தனைகள்), பிராம்மணம் (யாக விவரங்கள்), ஆரண்யகம் (உபநிஷதங்கள்; அறுதி உண்மையைப்பற்றிய ஆராய்ச்சி).
-
உபநிஷதங்கள்:
-
உபநிஷதங்கள், பிரம்ம சூத்திரம், ஸ்ரீமத் பகவத்கீதை மூன்றும் ப்ரஸ்தான த்ரயம் என்று வழங்கப்படுகின்றன. அறுதிப் பிரமாணமாக அமைந்த மூன்று நூல்கள் என்பது இதன் பொருள்.
-
வேதகாலச் சிந்தனையின் மணிமகுடமாகத் திகழ்பவை உபநிஷதங்கள். அறுதி உண்மையைப் பற்றிய ஆராய்ச்சியில் மனித மனத்தால் தொடக்கூடிய எல்லையை உபநிஷதங்கள் தொட்டுவிட்டன என்றே உலகின் சிந்தனையாளர்கள் கருதுகின்றனர்.
-
உபநிஷதங்கள் பல. அவற்றில் 108 பொதுவாகக் கணக்கில் கொள்ளப்படுகின்றன. அவற்றுள் பதினான்கு உபநிஷதங்கள் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. அவை ஈச, கேன, கட, ப்ரச்ன, முண்டக, மாண்டூக்ய, ஐதரேய, தைத்திரீய, சாந்தோக்ய, பிருஹதாரண்யக, சுவேதாஸ்வதர, கௌசீதகி, மஹாநாராயண, மைத்ராயணி உபநிஷதங்கள் ஆகும். இவற்றுள் முதல் பத்து உபநிஷதங்களுக்கு ஸ்ரீசங்கரர் விளக்கவுரை எழுதியுள்ளார்.
-
14 உபநிஷதங்களும் கீழ்க்கண்ட பட்டியலின்படி நான்கு வேதங்களில் அமைந்துள்ளன.
-
உபநிஷதம் வேதம்
-
ஐதரேய, கௌசீதகி ரிக்
-
ஈச, கட, தைத்திரீய,
பிருஹதாரண்யக, சுவேதாஸ்வதர, யஜுர்
மைத்ராயணீ, மஹாநாராயண
-
கேன, சாந்தோக்கிய சாம
-
ப்ரச்ன, முண்டக, மாண்டூக்ய அதர்வண
-
ஐதரேய உபநிஷதம்: ரிக் வேதத்தைச் சேர்ந்த ஐதரேய ஆரண்யகத்தின் 2-ஆம் பகுதியில் 4-6 அத்தியாயங்களாக அமைந்துள்ளது ஐதரேய உபநிஷதம். இதனை அருளியவர் மஹீதாச ஐதரேயர் என்ற முனிவர் ஆவார். இவர் பூதேவியை வழிபட்டு ஞானம் பெற்றார் என்று கூறப்படுகிறது.
-
இந்த உபநிஷத்தில் மூன்று அத்தியாயங்கள் உள்ளன; மொத்தம் 33 மந்திரங்கள் உள்ளன. முதல் அத்தியாயம் கடவுள் உலகையும் மனிதனையும் உணவையும் படைத்தது பற்றி கூறுகிறது. 2- ஆம் அத்தியாயம், கடவுள் மனிதனுள் புகுந்து உயிர் உருவாதல் என்ற அதிசயச் செயலை நிகழ்த்துவதுபற்றி விவரிக்கிறது. 3-ஆம் அத்தியாயம் மனிதனில் ஆன்மாவாக விளங்குகின்ற பேருணர்வுப்பொருளே இறைவனாகப் பிரபஞ்சத்தில் நிலவுகிறார் என்ற கருத்தைக் கூறுகிறது.
-
மீண்டும்மீண்டும் படித்து, மந்திரங்களின் பொருளை ஆழமாகச் சிந்தித்து, சாதனைகளிலும் ஈடுபட்டால்தான் உபநிஷதங்களை உண்மையாகப் புரிந்து கொள்ள முடியும்; அவற்றின் அற்புதத்தில் ஆழ்ந்து மனம் மகிழ முடியும்.
-
பல மந்திரங்களின் பொருள் சுலபத்தில் அறிந்து கொள்ளத் தக்கதாக இல்லை. பொருள் புரியவில்லை என்பதற்காகச் சேர்ந்துவிடாமல், புரிந்த மந்திரங்களின் பொருளை ஆழ்ந்து சிந்தித்து சாதனைகளில் உயர்வடைய முயற்சிக்க வேண்டும்.
-
சாந்தி மந்திரம்!
-
எந்த ஒன்றையும் செய்யும்போதும் அதற்குரிய மனநிலை இருக்கப்பெறுவது இன்றியமையாதது. எந்தக் காரியத்தைச் செய்கிறோமோ அதற்குரிய மனநிலையை வரவழைத்துக்கொண்டு, அதன்பிறகு அந்தச் செயலில் ஈடுபடுவது சிறப்பான பலனை அளிக்கும். உபநிஷதங்களின் உண்மைப் பொருளை வெறும் புலமையால் உணர முடியாது. பணிவுடனும் வழிபாட்டு உணர்வுடனும் அணுகும்போது மட்டுமே அதனைப் புரிந்துகொள்ள முடியும். அத்தகைய மனப்பான்மையை மனத்தில் கொள்வதற்காக இந்த மந்திரங்கள் முதலில் ஓதப்படுகின்றன.
-
ஐதரேய உபநிஷத்திற்கான சாந்தி மந்திரம் இது:
-
ஓம் வாங்மே மனஸி ப்ரதிஷ்ட்டிதா மனோ மே
வாசி ப்ரதிஷ்ட்டிதம் ஆவிராவீர்ம ஏதி வேதஸ்ய ம ஆணீஸ்த: ச்ருதம்
மே மா ப்ரஹாஸீ: அனேனாதீதேனாஹோ ராத்ரான் ஸந்ததாமி ரிதம்
வதிஷ்யாமி ஸத்யம் வதிஷ்யாமி தன்மாமவது தத்வக்தாரமவது
அவது மாமவது வக்தாரமவது வக்தாரம்
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:
-
பொருள்
-
எனது பேச்சு மனத்தில் நிலைபெறட்டும்; மனம் பேச்சில் நிலைபெறட்டும். சுடரொளிப் பரம்பொருளே, என்னுள் ஒளிர்வாயாக. மனம், பேச்சு ஆகிய இருவரும் வேதங்களின் உண்மையை எனக்குக் கொண்டு வருவீர்களாக. என்னால் கேட்கப்பட்டவை என்னை விட்டு விலகாதிருக்கட்டும். கற்றவற்றை பகலும் இரவும் நான் சிந்திப்பேனாக. நான் வியாவகாரிக உண்மையைச் சொல்வேனாக, பாரமார்த்திக உண்மையைச் சொல்வேனாக. அந்த இறைவன் என்னைக் காக்கட்டும், குருவைக் காக்கட்டும், குருவைக் காக்கட்டும்!
-
உயர் வாழ்க்கையை நாடுபவர்களுக்கு சிந்தனையும் பேச்சு ஒன்றாக இருப்பது மிகவும் அவசியம். சாதாரண வாழ்க்கையிம் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் என்று பிரார்த்திக்கிறார் வள்ளலார். உள்ளும் புறமும் ஒன்றாக இருக்கின்ற நிலையைப் பிரார்த்திக்கின்ற மந்திரம் இது.
-
1:1 படைப்பு பற்றி...
மந்திரம்-1
-
ஓம் ஆத்மா வா இதமேக ஏவாக்ர ஆஸீன்னான்யத் கிஞ்சன மிஷத் ஸ ஈக்ஷத லோகான்னு ஸ்ருஜா இதி (1)
-
பொருள்
-
1. ஆரம்பத்தில் கடவுள் ஒருவர் மட்டுமே இருந்தார்.
இமைக்கின்ற வேறு எதுவும் அப்போது இல்லை.
நான் உலகங்களைப் படைப்பேன் என்று அவர்
நினைத்தார்.
-
படைப்புபற்றி பொதுவாக எல்லா உபநிஷதங்களும் ஆராய்கின்றன. வெளி, காற்று, நெருப்பு, நீர், பூமி என்ற ஐந்தும் (பஞ்ச பூதங்கள்) படைப்பிற்கு அடிப்படை என்ற அளவில் அனைத்து உபநிஷதங்களும் ஒத்திருக்கின்றன. ஆனால் படைப்பு என்ற நிகழ்ச்சியைப் பற்றி ஒவ்வோர் உபநிஷதமும் ஒவ்வொரு கோணத்தில் கூடுகிறது. ஐதரேய உபநிஷத்தின் கருத்தை இங்கே காண்கிறோம்.
-
படைப்பின் ஆரம்பம்பற்றி இங்கே கூறப்படுகிறது. உயிரினங்கள் எதுவும் அப்போது இல்லை. உயிரினங்கள் தான் இமைப்பவை என்று இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன. வேறு எதுவும் இல்லாத அந்த ஆரம்பத்தில், உலகங்களைப் படைக்க வேண்டும் என்று கடவுள் நினைத்தார்.
-
மந்திரம்-2
-
ஸ இமான் லோகானஸ்ருஜத அம்போ மரீசீர்மரமாபோ- ஸதோஸம்ப: பரேண திவம் த்யௌ: ப்ரதிஷ்ட்டாஸந்தரிக்ஷம் மரீசய: ப்ருதிவீ மரோ யா அதஸ்தாத்தா ஆப: (2)
-
பொருள்
-
2. அம்பலோகம், மரீசீலோகம், மரலோகம்,
ஆபலோகம் ஆகிய உலகங்களைக் கடவுள் படைத்தார்.
அம்பலோகம் சொர்க்கலோகத்திற்கு மேலே உள்ளது.
அம்பலோகத்திற்குச் சொர்க்கம் ஆதாரமாக உள்ளது.
மரீசீலோகம் ஒளியுலகங்கள் நிறைந்த இடை
வெளியாம். மரலோகம் என்பது பூமி. பூமிக்குக்
கீழே உள்ளது ஆபலோகம்.
-
புராணங்களில் 14 உலகங்கள் பற்றி கருத்து வருகிறது. அதற்கு மூலமாக உள்ளது இந்த உபநிஷதக் கருத்து. 5 உலகங்கள் இங்கே கூறப்படுகின்றன.
-
1. அம்பலோகம்: அம்பஸ் என்றால் தண்ணீர். அம்பலோகம் என்றால் தண்ணீர் உலகம். இது சொர்க்கத்திற்கு மேலே உள்ள உலகம். தொலைதூரத்திலிருந்து வானம் நீலக் கடலைப்போல் தெரிவதாலோ, அல்லது மழை வானிலிருந்து வருகிறது என்ற சாதாரண நம்பிக்கையின் காரணமாகவோ, மிகவுயர்ந்ததான அம்பலோகம் தண்ணீர் நிறைந்ததாகக் கூறப்படுகிறது.
-
2. சொர்க்கலோகம்: புராணங்கள் இதனை ஸுவர்லோகம் என்கின்றன. தேவர்கள் வாழும் உலகம் இது.
-
3. மரீசீலோகம்: மரீசீ என்றால் ஒளி. பூமிக்கு மேலுள்ள இடைவெளி சூரிய கிரணங்களால் ஒளிமயமாக இருப்பதால் இந்தப் பெயரில் அழைக்கப்பட்டிருக்கலாம்.
-
4. மரலோகம்: மரம் என்றால் மரிப்பவர்கள், அதாவது இறப்பவர்கள், மனிதர்கள். மனிதர்கள் வாழ்கின்ற பூமி.
-
5. ஆபலோகம்: ஆப என்றால் தண்ணீர், பூமிக்குக் கீழே இருப்பதாகக் கருதப்படுகின்ற பாதாளலோகம். கடல்நீர் கீழ் உலகங்கள் வரை பரந்துள்ளது என்ற கருத்தில் தண்ணீர் உலகம் என்று கூறப்பட்டிருக்கலாம்.
-
வேதபாடம் தொடரும்...
---
இந்துமதம் வாட்ஸ்அப் குழுவில் இணைய 9789 374 109 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு உங்கள் வாட்ஸ்அப் மூலம் ரிக்கொஸ்ட் அனுப்பவும்
-

Saturday, 25 August 2018

வேதம் பயில்வோம்-பாகம்-9-யஜுர்வேதம்

வேதம் பயில்வோம்-பாகம்-9-யஜுர்வேதம்
-
ஈசாவாஸ்ய உபநிஷதம் (ஒளிக்கு அப்பால்)
-
மந்திரம்-17
-
வாயுரனிலமம்ருதமதேதம் பஸ்மாந்தக்ம் சரீரம்
ஓம் (3) க்ரதோ ஸ்மர க்ருதக்ம் ஸ்மர க்ரதோ ஸ்மர க்ருதம் ஸ்மர (17)
-
பொருள்
-
17. இந்த உடம்பு சாம்பலாகிவிடும். உடம்பிலிருந்து
வெளியேறுகின்ற பிராணன் எங்கும் நிறைந்த
அழிவற்ற பிராணனுடன் கலந்துவிடும். ஓம். மனமே!
செய்தவற்றை நினைத்துப் பார், மனமே செய்த
வற்றை நினைத்துப் பார்.
-
ஒரு லட்சியத்தை எடுத்துக்கொண்டு முன்னேறும் போது, சிலவேளைகளில் நாம் லட்சியத்தை

1. ஓர் எழுத்தை உச்சரிப்பதற்கான நேரம் ஒரு மாத்திரை. ஓம் என்பதை 3. மாத்திரை காலம் நீட்டி ஓத வேண்டும்.
-
மறந்துவிடுவதுண்டு; அதுபோலவே சிலவேளைகளில் லட்சிய நாட்டம் நீர்த்துப்போவதும் உண்டு. எனவே தினமும் அதனை நினைவூட்டிக் கொள்வது நல்லது. இது சுய தூண்டுதல் எனப்படுகிறது. இத்தகைய மந்திரங்கள் நமது வேதங்களிலும் உபநிஷதங்களிலும் ஏராளம் உள்ளன. அத்தகையதொரு மந்திரத்தை முனிவர் இங்கே நமக்குத் தருகிறார். உபநிஷதங்களைப் படிக்கும் போது மட்டுமல்லாமல் இவற்றைப் பொருளுணர்ந்து அவ்வப்போது ஓதுவது நாம் நமது லட்சியத்தில் உறுதியாக இருக்க உதவும்.
-
இறைவனை நாடிச் செல்பவர்கள் ஆனாலும் சரி, சாதாரண வாழ்க்கையை நடத்திச் செல்பவர்கள் ஆனாலும் சரி வாழ்வின் நிலையாமையை அவ்வப்போது மனத்திற்கு எடுத்துக் கூறுவது  நல்லது. வாழ்க்கையை எண்ணி பெரிதாக மனம் குமையவோ, அலட்டிக்கொள்ளவோ வேண்டியதில்லை என்ற உண்மை அதனால் நம் மனத்தில் உறுதிப்படுகிறது.
-
ஆண்டியும் சரி அரசனும் சரி அனைவரின் உடம்பும் இறுதியில் சாம்பலாகி மண்ணுடன் மண்ணாகக் கலக்கப் போகிறது. இதுவரை உடம்பையும் மனத்தையும் இயக்கி வந்த பிராணன் உடம்பிலிருந்து வெளியேறப் போகிறது. புலன்கள் ஒடுங்கப்போகின்றன. இதுவரை வாழ்ந்த வாழ்க்கை நம்மை விட்டு அகலப் போகிறது-இந்த உண்மையை ஒவ்வொரு நாளும் சிறிது நேரம் சிந்திப்பது வாழ்க்கைக்கு ஒரு புதிய கண்ணோட்டத்தைத் தரும்.
-
இதுவரை நல்லது செய்யாவிட்டாலும் இனி செய்ய வேண்டும், இதுவரை இறைவனை நாடாவிட்டாலும் இனி நாட வேண்டும், என்று உயர் வாழ்க்கைக்கு ஒரு தூண்டுதலை இத்தகைய சிந்தனை தரும். எனவேதான் இந்தப் பிரார்த்தனையை ஒரு சுய தூண்டுதலாக நாம் கொள்கிறோம்.
-
நெருப்பையைக் கண்டுபிடித்தது மனித வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. நெருப்பைக் கண்டு வியந்த மனிதன் மெல்ல மெல்ல அதை வழிபட ஆரம்பித்தான். கடைசியாக அதை எங்கும் நிறைந்த, எல்லாம் வல்ல இறைவனின் சின்னமாகவே வழிபடுவதை வேதங்களில் காண்கிறோம். அவ்வாறு அக்கினி தேவனை இறைவனாகக் கொண்டு பிரார்த்திக்கின்ற மந்திரம் இது.
-
ஒளிக்கு அப்பாலுள்ள உண்மையைக் கண்ட முனிவர் அந்த உண்மையை நாமும் அடைய வேண்டும் என்ற கருணைப் பெருநோக்கில், இவ்வாறு பிரார்த்தனை செய்யுமாறு நம்மிடம் கூறுகிறார்.
-
மந்திரம்-18
-
அக்னே நய ஸுபதா ராயே அஸ்மான்
விச்வானி தேவ வாயுனானி வித்வான்
யுயோத்யஸ்மஜ்ஜுஹுராணமேனோ
பூயிஷ்ட்டாம் தே நம உக்திம் விதேம (18)
-
பொருள்
-
18. அக்கினி தேவனே, ஒளிப்பொருளே! எங்கள்
எல்லா செயல்களையும் அறிபவன் நீ. வினைப்பயனை
அனுபவிப்பதற்காக எங்களை அனுபவப் பாதை
யில் அழைத்துச் செல். எங்களைக் கொடிய தவறு
களிலிருந்து விலக்கு. உனிக்கு மீண்டும்மீண்டும்
எங்கள் வணக்கங்கள்.
-
தம்மை அனுபவப் பாதையில் அழைத்துச் செல்லுமாறு பிரார்த்திக்கிறார் முனிவர். அனுபவப் பாதை என்பது என்ன?
-
செயல்கள் பலன்களைத் தருகின்றன. நற்செயல்கள் நல்ல பலனையும், தீய செயல்கள் தீய பலனையும் தருகின்றன. பலன்கள் வந்தால் அதை அனுபவித்தேயாக வேண்டும். இதுவரை செய்துள்ள செயல்களை அறிகின்ற இறைவனே! இனி புதிய செயல்கள் செய்து பலன்கள் வராமல், செய்தவற்றிற்கான பலனை அனுபவிப்பதாக மட்டும் எங்கள் வாழ்க்கை அமையட்டும் என்பது இந்தச் சொற்றொடரின் பொருள்.
-
இவ்வாறு இறையருளை நாடி ஒரு பிரார்த்தனை பூர்வமான வாழ்க்கையை நாம் நடத்த வேண்டும் என்ற குறிப்புடன் ஈசாவாஸ்ய உபநிஷதம் நிறைவு பெறுகிறது.
-
சாந்தி மந்திரம்
-
ஓம் பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ண முதச்யதே
பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவாவசிஷ்யதே
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:
----
ஈசாவாஸ்ய உபநிஷதம் நிறைவுற்றது.இனி இன்னொரு உபநிடதத்தை பார்ப்போம்..
-
வேதபாடம் தொடரும்...
---
இந்துமதம் வாட்ஸ்அப் குழுவில் இணைய 9789 374 109 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு உங்கள் வாட்ஸ்அப் மூலம் ரிக்கொஸ்ட் அனுப்பவும்

வேதம் பயில்வோம்-பாகம்-8-யஜுர்வேதம்

வேதம் பயில்வோம்-பாகம்-8-யஜுர்வேதம்
-
ஈசாவாஸ்ய உபநிஷதம் (ஒளிக்கு அப்பால்)
-
ஒளிக்கு அப்பால் உள்ளது என்ன?
-
மந்திரம்-15
-
ஹிரண்மயேன பாத்ரேண ஸத்யஸ்யாபிஹிதம் முகம்
தத் த்வம் பூஷன்னபாவ்ருணு ஸத்யதர்மாய த்ருஷ்ட்டயே (15)
-
பொருள்
-
15. உண்மையின் முகம் பொன்மயமான திரையால்
மறைக்கப்பட்டுள்ளது. சூரியதேவா! சத்திய நிஷ்டை
உடைய நான் அந்த உண்மையைக் காண்பதற்காக
மறைப்பை விலக்குவாய்!
-
இருளிலிருந்து என்னை ஒளிக்கு அழைத்துச் செல்வாயாக (1. தமஸோ மா ஜ்யோதிர் கமய
அப்யாரோஹ மந்திரம், பிருஹதாரண்யக உபநிஷதம், 1.3.28.)என்பதுபோன்ற பிரார்த்தனைகளை நாம் அறிவோம். இது இறைவனை நாடிச் செல்பவனின் ஆரம்ப பிரார்த்தனை. அவன் அறியாமை இருளில் இருக்கிறான். எனவே அந்த இருளிலிருந்து ஒளிக்கு அழைத்துச் செல்லுமாறு அவன் இறைவனைப் பிரார்த்திக்கிறான். பிரார்த்தனை, ஜபம், தியானம் போன்ற பல்வேறு சாதனைகளின்மூலம் அந்த ஒளியைக் காண்கிறான். அந்த ஒளியின் மென்மையையும் வசீகரத்தையும் உணர்த்தவே பொன்மயமான திரை என்று இந்த மந்திரம் குறிப்பிடுகிறது. அந்த மென்மையிலும் வசீகரத்திலும் அவன் தன்னை இழந்து அங்கேயே நிற்கிறான்.
-
ஆனால் உண்மை என்பது இருள் - ஒளி, துன்பம்- இன்பம் போன்ற அனைத்து இருமைகளையும் கடந்தது. எனவே உண்மையை, உண்மைப்பொருளை, உள்ளது உள்ளபடி அறிய வேண்டுமானால் அவன் ஒளியையும் கடந்து சென்றாக வேண்டும். அந்த ஒளி எவ்வளவுதான் இன்பம் தருவதாக இருந்தாலும் அவன் அதைக் கடந்து சென்றேயாக வேண்டும். அதற்காக இறைவனைப் பிரார்த்திக்கின்ற மந்திரம் இது.
-
அறியாமை இருளில் உழல்கின்ற ஒருவன் ஜபம், தவம், வழிபாடு போன்ற சாதனைகளின்மூலம் ஒளிமயமான, தங்கமயமான இறைக் காட்சியைப் பெற முடியும். ஆனால் அதைக் கடந்து செல்வதற்கு நமது முயற்சிகள் எதனாலும் இயலாது. அங்கே இறையருள் ஒன்றே செயல்பட முடியும். எனவேதான் அவரை நோக்கி பிரார்த்திக்கிறான்.
-
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சாதனைக்கால நிகழ்ச்சி ஒன்று இதனை மிகத் தெளிவாக விளக்குகிறது. தோதாபுரி என்பவரின் துணையுடன் வேதாந்த சாதனைகளைச் செய்தார் ஸ்ரீராமகிருஷ்ணர். அவருக்குப் பல்வேறு உபதேசங்களை அளித்த தோதாபுரி, இறுதியாக, இருமைகள் அனைத்தையும் கடந்த நிலையில் உண்மைப்பொருள் அனுபவத்தைப் பெறுமாறு கூறினார். ஸ்ரீராமகிருஷ்ணர் எவ்வளவு முயன்றும் அது முடியவில்லை. ஏனெனில் மனம் அகமுகமானதும் தேவியின் ஒளிமயமான காட்சி அவர்முன் எழுந்தது. அந்தப் பேரொளியைக் கடந்து அவரால் செல்ல முடியவில்லை. கடைசியில் நம்பிக்கையையே இழந்த நிலையில் அவர் தமது இயலாமையைத் தோதாபுரியிடம் தெரிவித்தார். அவ்வளவு வசீகரமான காட்சி அது. இறுதியில் தோதாபுரியின் அருளால் அவர் அந்த ஒளியைக் கடந்து சென்று, உண்மைப் பொருளுடன் ஐக்கியமாகின்ற நிலையை அடைந்தார்.
-
உயர்நிலை பிரார்த்தனையைச் செய்வதற்கான தகுதியையும் இந்த மந்திரத்தில் நாம் காண்கிறோம். சத்திய நிஷ்டை உடைய நான் என்று தனது தகுதியை இங்கே அந்த ரிஷி குறிப்பிடுகிறார். உண்மையில், உண்மைப்பொருளாகிய இறைவனில் நிலைநிற்கின்ற, இறைவனைச் சரணடைந்த வாழ்க்கை இங்கே குறிப்பிடப்படுகிறது. உலகப் பொருட்கள் எதையும் கருதாமல். கடவுள் ஒருவரையே நம்பி வாழ்கின்ற, அவரை ஒளிமயமாக ஏற்கனவே கண்ட ஒருவர் செய்கின்ற பிரார்த்தனை இது.
-
ஒளிக்கு அப்பால் இருப்பது நானே:
-
மந்திரம்-16
-
பூஷன்னேகர்ஷே யம ஸூர்ய ப்ராஜாபத்ய வ்யூஹரச்மீன் ஸமூஹ
தேஜோ யத் தே ரூபம் கல்யாணதமம் தத் தே பச்யாமி
யோஸஸாவஸெள புருஷ: ஸோஸஹமஸ்மி (16)
-
பொருள்
-
16. அனைத்து உயிர்களையும் பேணிக் காப்பவனே,
தனியாகப் பயணிப்பவனே, அனைத்தையும் ஆள்ப
வனே, சூரிய தேவா, பிரஜாபதியின் மகனே! உனது
கிரணங்களை விலக்கிக்கொள். உனது பேரொளியைச்
சுருக்கிக்கொள். மகிமை வாய்ந்த உனது வடிவத்தை
உனதருளால் நான் காண வேண்டும். அந்தச் சூரியனில்
இருப்பது நானே.
-
இறையருள் மட்டுமே வேண்டியது. அதற்காகவே ஒருவன் பிரார்த்திக்க வேண்டும். எல்லா உயிர்களும் முன்வினையின் படியே செயல்படுகின்றன, துன்புறுகின்றன. ஆனால் இறைவன் நினைத்தால், வினைப்பயனை அனுபவிக்க வேண்டிய காலத்தைக் குறைத்து ஒருவனுக்கு விரைவில் அனுபூதியை அளிக்க முடியும் என்பார் அன்னை ஸ்ரீசாரதாதேவி. ஒளிக்கு அப்பால் என்ன உள்ளது என்பதைக் காண்பதற்கு உபநிஷத முனிவரும் இறையருளை வேண்டிப் பிரார்த்திப்பதை இங்கே காண்கிறோம்.
-
ஒளிக்கு அப்பால் இருப்பது என்ன?
-
ஒளிக்கு அப்பால் தம்மையே கண்டதாக உபநிஷத முனிவர் கூறுகிறார். எவ்வளவோ முயற்சிகளுக்குப் பிறகு, ஆன்மீக சாதனைகளுக்குப் பிறகு, இறைக் காட்சிக்குப் பிறகு அறுதி நிலை அனுபூதியாக இந்த முனிவர் தம்மையே காண்கிறார். இதன் பொருள் என்ன?
-
சூரியனில் இருப்பது நானே என்று உபநிஷதம் கூறுவதில் நான் என்பதை நாம் சாதாரணமாகப் புரிந்து கொள்கின்ற நான் என்ற பொருளில் புரிந்துகொள்ளக் கூடாது. பொதுவாக உடல்- மனச் சேர்க்கையையே நான் என்று கூறுகிறோம். இந்த நான் ஒளிக்கு அப்பால் இருக்க முடியாது. எனவே முனிவர் கூறுகின்ற நான் உயர்நிலை நான் ஆகும். சாந்தோக்ய உபநிஷதக் கதை ஒன்றின்மூலம் இதனை சுவாமி விவேகானந்தர் விளக்குகிறார்:
-
ஒரு தேவனும் ஓர் அசுரனும் ஆன்மாவைப்பற்றி அறிவதற்காக முனிவர் ஒருவரிடம் சென்றனர். பல வருடங்கள் கல்வி கற்றனர். இறுதியில் ஒரு நாள் அந்த முனிவர் அவர்களிடம், நீங்கள் தேடும் பொருள் நீங்களே என்று கூறினார். இருவரும் தங்கள் உடம்பே ஆன்மா என்று நினைத்துக்கொண்டனர். மிகுந்த திருப்தியுடன் திரும்பிச் சென்று தங்கள் சுற்றத்தாரிடம், கற்க வேண்டி அனைத்தையும் நாங்கள் கற்றுவிட்டோம். இனி உண்போம், குடித்துக் களிப்போம். நாம்தான் ஆன்மா. நமக்குமேல் எதுவும் கிடையாது என்றனர். அசுரனின் இயல்பே அறிவீனமும் மூடத்தனமும்தானே. அவன் மேற்கொண்டு சிந்திக்கவில்லை. தானே கடவுள், ஆன்மா என்பது உடலே என்ற கருத்தில் பூரண திருப்தி அடைந்துவிட்டான்.
-
தேவன் சற்று தூய இயல்பு படைத்தவனாக இருந்தான். அவனும் முதலில், நானே, அதாவது இந்த உடம்பே பிரம்மம் என்று தவறாக நினைத்தான். ஆனால் சில நாட்களிலேயே, முனிவர் கூறியதன் பொருள் அதுவாக இருக்காது, அதற்குமேல் ஏதோ இருக்கிறது என்பதை புரிந்துகொண்டான். எனவே அவன் முனிவரிடம் மீண்டும் சென்று, சுவாமி, இந்த உடம்பைத்தான் ஆன்மா என்று கூறினீர்களா? ஆனால் எல்லா உடம்புகளும் அழிந்து போவதை நான் காண்கிறேனே! ஆன்மா மரணமற்றது அல்லவா? என்று கேட்டான். அதற்கு அந்த முனிவர் கண்டுபிடி. நீயே அது என்று கூறினார்.
-
அந்தத் தேவனும் உடம்பை இயக்குகின்ற பிராண சக்திகளே ஆன்மா என்பதுதான் முனிவர் கூறியதன் பொருளாக இருக்கும் என்று எண்ணினான். ஆனால் சாப்பிட்டால் பிராண சக்திகள் வலிமையுடன் இருப்பதையும், சாப்பிட்டாவிட்டால் அவை பலவீனம் அடைவதையும் சில நாட்களுள் அறிந்துகொண்டான். எனவே முனிவரிடம் சென்று, சுவாமி, பிராண சக்திகளையா ஆன்மாவென்று கூறினீர்கள்? என்று கேட்டான். அவர் மறுபடியும், நீயே கண்டுபிடி, நீயே அது என்றார்.
-
வீடு திரும்பிய தேவன் யோசிக்கலானான். ஆன்மா என்பது ஒரு வேளை மனமாக இருக்கலாம் என்று நினைத்தான். ஆனால் எண்ணங்கள் இப்போது நல்லதாக, மறுகணமே கெட்டதாக எத்தனையோ விதமாக இருப்பதை வெகுவாக அறிந்துகொண்டான். மாறுகின்ற மனம் ஆன்மாவாக முடியாது என்று கருதிய அவன் முனிவரிடம் சென்று, சுவாமி, மனம் ஆன்மாவாக இருக்க முடியாது என்று நினைக்கிறேன். நீங்கள் அதையா சொன்னீர்கள்? என்று கேட்டான். அவரோ மறுபடியும், நீயே கண்டுபிடி என்று கூறிவிட்டார்.
-
தேவன் வீடு சென்றான். இறுதியில் தானே ஆன்மா என்று தெரிந்து கொண்டான். ஆன்மா எண்ணங்கள் அனைத்திற்கும் அப்பால் உள்ளது, ஒன்றேயானது, பிறப்பு இறப்பு இல்லாதது. அதனை ஆயுதங்கள் வெட்ட முடியாது, தீ எரிக்க முடியாது, நீர் கரைக்க முடியாது, காற்று உலர்த்த முடியாது, அது ஆதி அந்தம் இல்லாதது, அசைக்க வல்லது. அது உடலும் அல்ல, மனமும் அல்ல, இவை அனைத்திற்கும் அப்பால் உள்ளது. இவ்வாறு அறிந்த தேவன் திருப்தி அடைந்தான். உடலை நேசித்தால், பாவம், அந்த அசுரன் உண்மையை அறியவில்லை.
-
ஒளிக்கு அப்பால் என்ன உள்ளது என்பதை அறிய முற்பட்ட முனிவர் அந்தப் பொருள் நானே என்ற அனுபூதி பெறுகிறார்.

6. சிந்தனை செய்க!

அனுபூதி பெற்று, வாழ்க்கையின் லட்சியத்தை அடைந்துவிட்ட முனிவர்களை வசந்தகாலத் தென்றலுக்கு ஒப்பிடுகிறார் ஸ்ரீசங்கரர்: அமைதியும் மகிமையும் அடைந்துவிட்ட மகான்கள் இருக்கிறார்கள். தவழ்ந்துவரும் வசந்தம்போல் அவர்கள் மனிதகுலத்திற்கு நன்மை செய்கிறார்கள். இந்த சம்சாரப் பொருங்கடலை அவர்கள் கடந்துவிட்டார்கள்; பிறகும் அவ்வாறே கடக்க வேண்டுமென்று துளிகூட தன்னலமின்றி பாடுபடுகிறார்கள். சூரியனின் சுடுகதிர்களால் பொசுக்கப்பட்ட பூமியை நிலவின் கிரணங்கள் இயல்பாகக் குளிர்விப்பதுபோல், பிறரது துயரைக் களைவதற்காகப் பாடுபடுவது அவர்களின் இயல்பாகிவிடுகிறது (1. சாந்தா மஹாந்தோ நிவஸந்தி ஸந்தோ
வஸந்தவத் லோகஹிதம் சரந்த:
தீர்ணா: ஸ்வயம் பீமபவார்ணம்
ஜனான் அஹேதுனான்யானபி தாரயந்த:
    - விவேகசூடாமணி, 37.)என்கிறார் அவர். அதுபோலவே, இந்த உபநிஷத முனிவரும் அறுதிநிலை அனுபூதியை


அடைந்தபிறகு கருணைக் கண்களுடன் இந்த உலகைப் பார்க்கிறார். உலகம் என்னும் மாய வலையில் சிக்குண்டு மனிதர்கள் படுகின்ற துன்பம் அவரது கண்களில் தெரிகிறது. எனவே அவர்களை எல்லாம் அழைத்து வாழ்க்கையை ஒருமுறை சிந்திக்குமாறு கூறுகிறார் அவர். (17.) அறியாமைச் சேற்றிலிருந்து விடுபட்டு, அறிவொளி பெற்று, அந்த ஒளிக்கும் அப்பாலுள்ள உண்மையை உணர்வதற்கு இறைவனைப் பிரார்த்திப்பதைத் தவிர வேறு வழியில்லை, எனவே பிரார்த்தனை செய்யுங்கள் (18) என்று அழைக்கிறார் அவர்.
----
வேதபாடம் தொடரும்...
---
இந்துமதம் வாட்ஸ்அப் குழுவில் இணைய 9789 374 109 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு உங்கள் வாட்ஸ்அப் மூலம் ரிக்கொஸ்ட் அனுப்பவும்

வேதம் பயில்வோம்-பாகம்-7-யஜுர்வேதம்

வேதம் பயில்வோம்-பாகம்-7-யஜுர்வேதம்
-
ஈசாவாஸ்ய உபநிஷதம் (ஒளிக்கு அப்பால்)
--
உருவ வழிபாடும் அருவ வழிபாடும்:
-
இறைவனை உருவம் உடையவராக வழிபடலாம், உருவ மற்றவராகவும் வழிபடலாம். இரண்டையும் இணைத்துச் செய்தால்தான் மிகவுயர்ந்த பலன் கிடைக்கிறது என்ற உண்மையை எடுத்துக்காட்டுகின்றன இந்த மந்திரங்கள்.
-
மந்திரம்-12
-
அந்தம் தம: ப்ரவிசந்தி யேஸஸம்பூதிமுபாஸதே
ததோ பூய இவ தே தமோ ய உ ஸம்பூத்யாக்ம் ரதா: (12)
-
பொருள்
--
12. யார் அருவக்கடவுளை வழிபடுகிறார்களோ
அவர்கள் காரிருளில் மூழ்குகின்றனர். யார் உருவக்
கடவுளில் ஈடுபடுகிறார்களோ அவர்கள் அதைவிடக்
கொடிய இருளில் உழல்வதைப்போல் துன்புறு
கின்றனர்.
-
அந்திரம்-13
-
அன்ய தேவாஹு: ஸம்பவாதன்யதாஹுரஸம்பவாத்
இதி சுச்ரும தீராணாம் யே நஸ்தத் விசசக்ஷிரே (13)
-
13. உருவ வழிபாட்டால் கிடைப்பது ஒரு பலன்,
அருவ வழிபாட்டால் கிடைப்பது வேறு பலன்
என்கிறார்கள்- எங்களுக்கு அதனை விளக்கிய
மகான்கள் இவ்வாறு கூறினார்கள்.
-
மந்திரம்-14
-
ஸம்பூதிம் ச வினாசம் ச யஸ்தத் வே தோபயக்ம் ஸஹ
வினாசேன ம்ருத்யும் தீர்த்வா ஸம்பூத்யாஸம்ருதமச்னுதே (14)
-
பொருள்
-
14. அருவ வழிபாடு, உருவ வழிபாடு இரண்டையும்
சேர்த்து யார் அறிகிறானோ அவன் உருவ வழிபாட்டால்
மரணத்தைக் கடந்து அருவ வழிபாட்டால் இறவா
நிலையை அடைகிறான்.
-
9-11 மந்திரங்கள் செயல்கள் மற்றும் தியானத்தின் இணைப்பை வலியுறுத்தியதுபோல் இந்த மந்திரங்கள் (12-14) இரண்டுவித வழிபாடுகளின் இணைப்பைக் கூறுகின்றன.
-
ஸம்பூதி என்றால் தோற்றத்திற்கு வந்த நிலை; இறைவன் பல்வேறு வடிவங்களில் தோன்றுகின்ற உருவ நிலை. அஸம்பூதி என்றால் தோற்றத்திற்கு வராத நிலை; எந்த உருவமோ குணமோ அற்ற அறுதி நிலை. இந்த
-
1. மந்திரத்தில் ஸம்பூதி என்று காணப்பட்டாலும் அந்த இடத்தில் அஸம்பூதி என்று வந்தால்தான் சரியாக இருக்கும். எனவே அதில் அ சேர்த்துக்கொள்ள வேண்டும் என்கிறார் ஸ்ரீசங்கரர்: ஸம்பூதிம் ச வினாசம் ச இத்யத்ர அவர்ணலோபேன நிர்தேசோ த்ரஷ்ட்டவ்ய:
-
இரண்டு நிலைகளிலும் இறைவனை நாம் வழிபடலாம். ஒன்று, உருவ வழிபாடும், உருவம், குணம், போன்ற பல்வேறு தன்மைகள் உடைய ஒரு நபராக அவரைக் காண்பது இது. நமது மனத்தால் அறியத்தக்கவராக, வெளிப்பட்ட நிலையில் இறைவனை நாம் இங்கே வழிபடுகிறோம். சிவன், விஷ்ணு, தேவி என்று உருவ நிலையில் இறைவனை வழிபடுவது உருவ வழிபாடு.
-
இரண்டாவதாக, அருவ வழிபாடு. உருவம், குணம் போன்ற அனைத்துப் பண்புகளையும் கடந்த அறுதி நிலையில் இறைவனை அணுகுவது இது. உருவமோ குணமோ இல்லாத ஒன்றை மனித மனத்தால் நினைப்பது சாத்தியமல்ல. எனவே இந்த வழிபாடு மிகவும் உயர்ந்த நிலையில் இருப்பவர்களுக்கு உரியது என்பது சொல்லாமலே விளங்கும். தகுதியின்றி அந்த வழிபாட்டில் ஈடுபடுபவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள். அதனால் தான் அவர்கள் காரிருளில் மூழ்குவதாக சொல்லப்பட்டுள்ளது.
-
உருவ வழிபாட்டில் ஈடுபடுபவர்கள் சிவன், விஷ்ணு என்று பல்வேறு வடிவங்களும் ஒரே உண்மைப் பொருளின் பல்வேறு தோற்றங்களே என்ற உண்மையை உணர்ந்திருக்க வேண்டும். மாறாக, என் தெய்வம் உயர்ந்தவர், உன் தெய்வம் தாழ்ந்தவர் என்று கொள்கை வெறிபிடித்து சண்டையிடக் கூடாது. அறியாமை காரணமாக செய்கின்ற இத்தகைய வழிபாட்டினால் எந்தப் பலனும் கிடைப்பதில்லை. வழிபட்டும் பலனின்றிப் போவதால்தான் இத்தகையோர் இன்னும் கொடிய இருளில் உழல்கிறார்கள். என்று கூறப்பட்டது.
-
எனவே மன இயல்பிற்கு ஏற்ற ஒரு தெய்வத்தை வழிபடுவதில் ஆரம்பிக்க வேண்டும். எத்தனை மதங்களில் எத்தனை தெய்வங்களைக் கும்பிட்டாலும் அவர்கள் அத்தனை பேரும் ஒரே தெய்வத்தின் பல்வேறு தோற்றங்களே என்ற உணர்வு எப்போதும் இருக்க வேண்டும்.
-
அதுமட்டுமின்றி, உருவ நிலையில் மட்டுமல்ல, கடவுளை அருவ நிலையிலும் வழிபடலாம் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இத்தகைய மனநிலையில் தெய்வத்தை வழிபடும்போது நாம் ஆன்மீகத்தில் முன்னேறுகிறோம்; இறையனுபூதி பெறுகிறோம்; மரணத்திற்குக் காரணமான வினைப் பயன்களிலிருந்து விடுபடுகிறோம்.
-
இந்த இறையனுபூதியின் விளைவு என்ன? அழகாக விளக்குகிறார் துளசிதாசர்: இறைவனை நேருக்கு நேராகக் காண்பதன் ஈடிணையற்ற ஒரே பலன் என்ன தெரியுமா? மனிதன் தனது சொந்த ஆனந்தமயமான ஆன்மநிலையில் நிலைபெறுகிறான்.(1. மமதர்சன ஃபல பரம அனூபா ஜீவ பாவ நிஜ ஸஹஜ ஸரூபா-துளசி ராமாயணம், ஆரண்ய காண்டம், 35.5.)  இதன்பிறகே இறைவனை உருவமற்ற நிலையில் வழிபடுவதற்கான தகுதியை அவரது அருளால் பெறுகிறோம். இந்தத் தகுதியுடன் அந்த உயர்நிலை வழிபாட்டில் ஈடுபட்டு இறவாநிலையை அடைகிறோம்.
---
வேதபாடம் தொடரும்...
---
இந்துமதம் வாட்ஸ்அப் குழுவில் இணைய 9789 374 109 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு உங்கள் வாட்ஸ்அப் மூலம் ரிக்கொஸ்ட் அனுப்பவும்

வேதம் பயில்வோம்-பாகம்-6-யஜுர்வேதம்


வேதம் பயில்வோம்-பாகம்-6-யஜுர்வேதம்
-
ஈசாவாஸ்ய உபநிஷதம் (ஒளிக்கு அப்பால்)
-
மந்திரம்-9
-
அந்தம் தம: ப்ரவிசந்தி யேஸவித்யாமுபாஸதே
ததோ பூய இவ தே தமோ ய உ வித்யாயாக்ம் ரதா: (9)
-
பொருள்
-
9. யார் உயர்நோக்கமின்றிச் செயல்களில் ஈடுபடு
கிறார்களோ அவர்கள் காரிருளில் மூழ்குகின்றனர்.
யார் தகுதி பெறுமுன்னர் தியானத்தில் ஈடுபடு
கிறார்களோ அவர்கள் அதைவிடக் கொடிய இருளில்
உழல்வதைப்போல் துன்புறுகின்றனர்.
-
மந்திரம்-10
-
அன்யதேவாஹுர் வித்யயா அனயதாஹுரவித்யயா
இதி சுச்ரும தீராணாம் யே நஸ்தத் விசசக்ஷிரே (10)
-
பொருள்
-
10. தியானத்தால் கிடைப்பது ஒரு பலன், செயல்
களால் கிடைப்பது வேறு பலன் என்கிறார்கள்-
எங்களுக்கு அதனை விளக்கிய மகான்கள் இவ்வாறு
கூறினார்கள்.
-
மந்திரம்-11
-
வித்யாம் சாவித்யாம் ச யஸ்தத் வேதோபயக்ம் ஸஹ
அவித்யயா ம்ருத்யும் தீர்த்வா வித்யயாஸம்ருதமச்ஷதே (11)
-
பொருள்
-
11. தியானம், செயல்கள் இரண்டையும் சேர்த்து
யார் அறிகிறானோ அவன் செயல்களால் மரணத்தைக்
கடந்து தியானத்தால் இறவாநிலையை அடைகிறான்.
-
இந்த மந்திரங்கள் என்ன சொல்கின்றன?
-
செயல்களும் தியானமும்: 9-11
-
செயல்களின்றி வாழ்க்கை இல்லை. அன்றாடக் கடமைகள், ஜபதவங்கள், சேவை போன்ற எவ்வளவோ செயல்களுடன் நமது வாழ்க்கை பிணைந்துள்ளது. உயர் நோக்கங்களுடன் இணைக்காமல் அவற்றை வெறுமனே செய்துகொண்டே போவதால் இறைநெறியில் முன்னேற முடியாது; இறையுணர்வைப் பெற முடியாது. அதே வேளையில், இறையுணர்வைப் பெற வேண்டும் என்பதற்காக, தகுதி வருமுன்னரே செயல்களை விட்டுவிட்டு தியானத்தில் ஈடுபடுவது ஒரு தவறான, போலித்தனமான முயற்சியாக இருக்கும். எனவே இரண்டும் வாழ்க்கையில் இணைந்து செல்ல வேண்டும். அந்த இணைப்புபற்றி இந்த மந்திரங்கள் கூறுகின்றன.
-
இறைவனை நாடுகின்ற ஒரு செயல் மட்டுமே வித்யை என்று நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன. மற்ற அனைத்தும், அது விஞ்ஞானம், கலை என்று எதுவானாலும், ஏன், வேதங்களைப் படித்தல் போன்றவைகூட அவித்யை என்றே கொள்ளப்படுகிறது. ஜபம், தவம் போன்ற சாதனைகள்கூட இறைவனை நாடி செய்யாவிட்டால் அவித்யையே ஆகும். இந்தச் சாதனைகள் வெறும் கிரியை என்ற அளவில் நின்றுவிடாமல் உயர் நோக்கத்துடன், அதாவது, வித்யையுடன் இணைத்து செய்யப்பட வேண்டும் என்பதை இந்த மந்திரங்கள் வலியுறுத்துகின்றன.
-
தவம், தானம் போன்றவற்றை மூன்றுவிதமாகச் செய்யலாம் என்று கீதை கூறுவதை இங்கே கருத்தில் கொள்ள வேண்டும். தானத்தை எடுத்துக்கொள்வோம். அதனை இறை வழிபாடாகச் செய்யும்போது அக நாட்டத்தையும் மனத் தூய்மையையும் விளைவாகக் கொண்டு வருகிறது. அதே தானத்தைப் பெயர்- புகழுக்காகவும் செய்யலாம். எதிர்பார்த்த பெயர்-புகழ் கிடைக்காத போது அது துன்பம் தருகிறது. பெயர்-புகழ் கிடைக்குமானால் அதனைத் தங்க வைத்துக் கொள்வதற்காக மேலும் முயற்சிகளில் ஈடுபட நேர்கிறது. அதன் விளைவாக வருவது துன்பம். பிறருக்குத் துன்பம் விளைவிப்பதற்காகவே போட்டி மனப்பான்மையுடனோ தானம் செய்யும்போது அதன் விளைவும் பெருந்துன்பமாக உள்ளது.
-
இவ்வாறு தவம், போன்றவற்றை உயர் நோக்கமின்றிச் செய்யும்போது அவை அவித்யை ஆகின்றன. அவற்றை அவித்யை வசப்பட்டுச் செய்பவன் காரிருளில் மூழ்குகிறான். அதாவது அறியாமை வசப்பட்டு மேலும் மேலும் பிறவிகளுக்கு உள்ளாகிறான்.
-
தவம், தானம், ஜபம், சேவை போன்ற சாதனைகள் எதுவும் செய்யாமல் வெறுமனே தியானம் செய்ய முயற்சிப்பவன் வெற்றி பெறுவதில்லை. ஏனெனில் தவம், ஜபம், சேவை போன்ற கிரியைகள் மனத்தைத் தூய்மைப்படுத்துகின்றன; ஆற்றலைத் தருகின்றன. தூய்மையின்மூலம் ஆற்றல் பெற்ற மனத்தினால்தான் தியானம் செய்ய முடியும். தவமும் வித்யையுமே ஒரு சாதகனுக்கு முக்கிய சாதனைகள். தவத்தால் மனத்தின் மாசுகள் அகல்கின்றன; வித்யையால் மோட்சம் பெறுகிறான் (1. தபோ வித்யா ச விப்ரஸ்ய நி:ச்ரேயஸகரம் பரம்தபஸா கில்பிஷம் ஹந்தி வித்யயா அம்ருதம் அச்னுதே -மனு, 12.104) என்கிறார் மனு.
-
மரணத்தைக் கடப்பது என்றால் மரணத்திற்குக் காரணமாக வினைப்பயனிலிருந்து விடுபடுவது.( 2. அவித்யயா வித்யாங்கதயா சோதித கர்மணா ம்ருத்யும் ஜ்ஞானஸங்கோச ரூப ம்ருத்யு ஹேதும் ப்ராக்தன கர்ம- ஸ்ரீவேதாந்த தேசிகர்) எனவே ஜப தவம் போன்ற கிரியைகளை இறைவனை நாடிச் செய்வதால் மனத் தூய்மை பெற்று, தியானத்தால் இறைநிலையை அடைகிறான் என்பது இந்த மந்திரங்களின் கருத்து ஆகும்.
-
வேதபாடம் தொடரும்...
-
இந்துமதம் வாட்ஸ்அப் குழுவில் இணைய 9789 374 109 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு உங்கள் வாட்ஸ்அப் மூலம் ரிக்கொஸ்ட் அனுப்பவும்

Friday, 24 August 2018

வேதம் பயில்வோம்-பாகம்-5-யஜுர்வேதம்



வேதம் பயில்வோம்-பாகம்-5-யஜுர்வேதம்
-
ஈசாவாஸ்ய உபநிஷதம் (ஒளிக்கு அப்பால்)
-
மந்திரம்-8
-
ஸ பர்யகாச்சுக்ரமகாயமவ்ரணம்
அஸ்னாவிரக்ம் சுத்தமபாபவித்தம்
கவிர்மனீஷீ பரீபூ: ஸ்வயம்பூர் யாதாதத்யதோ
ர்த்தான் வ்யததாச் சாச்வதீப்ய: ஸமாப்ய: (8)
-
பொருள்
-
8. (ஆன்ம அனுபூதி பெற்றவன்) அனைத்தின் உட்பொருளையும் காண்கிறான். அவன் மனத்தை வசப்படுத்தியவன்; அனைத்து அறிவையும் உள்ளடக்கியவன்; யாரையும் சாராதவன். அனைத்துப் பொருட்களின் உண்மை இயல்பை அவன் என்றென்றைக்குமாக அறிந்திருக்கிறான். அவன் ஒளிமயமான, உடம்பற்ற, முழுமையான, தசைகள் இல்லாத, தூய, பாவமற்ற இறைவனை அடைகிறான்.
-
கவி: என்றால் க்ராந்த தர்சி; அப்பால் காண்பவன் என்று பொருள். காணும் தோற்றத்துடன் மற்றவர்கள் நின்றுவிடுகிறார்கள். ஆனால் ஆன்ம அனுபூதி பெற்றவன், ஒவ்வொரு தோற்றத்திற்கும் பின்னால் ததும்புகின்ற இறையுணர்வைக் காண்கிறான்.
-
மனீஷி என்றால் மனத்தை வசப்படுத்துவதற்கான புத்தியைப் பெற்றவன். (1. மனஸ ஈசித்ரீ புத்திர்மனீஷா தத்வான் மனீஷீ -ஸ்ரீவேதாந்த தேசிகர்)மனத்தை மனத்தால் வசப்படுத்த முடியாது, அதைவிட ஆற்றல்மிக்க ஒன்று வேண்டும். அதுவே புத்தி. உள்ளுணர்வு என்றும் இது அழைக்கப்படுகிறது. இது எல்லோரிலும் செயல்படத் தொடங்கவில்லை. பிரார்த்தனை, காயத்ரீ மந்திர ஜபம் போன்றவற்றால் இது விழித்தெழுந்து செயல்படத் தொடங்குகிறது.
-
பரிபூ: என்றால் அனைத்து அறிவையும் உள்ளடக்கியவன். உலகில் எத்தனையோ வகை அறிவுகள் உள்ளன. கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு என்பார்கள். நாம் எவ்வளவு அறிந்தாலும் இன்னும் அறிய வேண்டியது எவ்வளவோ இருக்கும்; அவற்றை அறிவதற்கான ஆவலும் இருந்துகொண்டே இருக்கும். ஆனால் ஆன்மாவை அறிந்தவன் தன்னில் திருப்தியுற்று நின்று விடுகிறான். அதனால் ஆன்ம அனுபூதி மற்ற அறிவுகளின் நிறைவாக, அனைத்தையும் உள்ளடக்கியதாக, மற்ற அறிவுகளைவிட உயர்ந்ததாகக் (1. வித்யாந்தரவத: ஸர்வானதிக்ரம்ய வர்த்ததே- ஸ்ரீவேதாந்த தேசிகர்)கூறப்படுகிறது.
-
ஆன்ம அனுபூதி பெற்றவன் தன்னிலும் உலகிலும் இறையுணர்வை உணர்ந்துவிட்டதால் அவன் அதைச் சார்ந்திருக்கிறானே தவிர பொருட்களையும் மனிதர்களையும் சார்ந்து வாழ்வதில்லை. அதனால் அவன் எதையும் சாராதவன் (2. ஸ்வயம்பூ: வன்ய நிரபேக்ஷஸத்தாக: - ஸ்ரீவேதாந்த தேசிகர்) எனப்படுகிறான்.
-
அனைத்திற்கும் மேலாக, அவன் பொருட்களின் உண்மை இயல்பை அறிந்திருக்கிறான். எவை இறை நெறிக்குத் துணை செய்யும், எவை இறைநெறியில் தடையாக இருப்பவை என்பதை அவன் உணர்ந்திருக்கிறான். (3. பரம புருஷார்த்ததயுபாய தத்விரோதி ப்ரப்ருதீன் ஸர்வான் பதார்த்தான் யதாவத் விவிச்ய ஹ்ருதயேன த்ருதவான்- ஸ்ரீவேதாந்த தேசிகர்) இறைநெறியில் செல்பவனுக்கு இந்த மனத்தெளிவு மிகவும் அவசியமானது. வேண்டாதவற்றை விலக்கி அவனால் விரைந்து முன்னேற முடிகிறது.
-
ஆன்ம அனுபூதி பெற்ற இத்தகையவன் இறைவனை அடைகிறான். அந்த இறைவனைப்பற்றி இந்த மந்திரம் மூன்று விஷயங்களைக் கூறுகிறது:
-
1. இறைவன் ஒளிமயமானவர். அவரது ஒளியாலேயே அனைத்தும் ஒளிபெறுகின்றன.
-
2. இவர் என்று இறைவனை அடையாளம் காட்ட முடியாது. உடம்பற்றவர், முழுமையானவர், தசைகள் இல்லாதவர் என்றெல்லாம் கூறுவது இதைத் தெரிவிக்கிறது.
-
3. இறைவன் தூயவர். எந்தப் பாவமும் அவரை அணுக முடியாது.
-
உலகனைத்தையும் ஒளியால் விளங்கச் செய்வதன்மூலம் உலகின் கண்ணாக இருப்பவன் சூரியன். ஆனால் யாருடைய பார்வைக் கோளாறோ, பொருட்களின் குறைகளோ அவனைப் பாதிப்பதில்லை. அதுபோல் எல்லோரிலும் விளங்குகின்ற ஆன்மா சுகதுக்கங்களால் பாதிக்கப்படுவதில்லை ( என்கிறது கட உபநிஷதம், 2.2.11)
-
ஆன்ம அனுபூதி பெற்றவன் இவ்வாறு ஒளிமயமான இறைவனை அடைகிறான்
-----
---
வேதபாடம் தொடரும்...
---
இந்துமதம் வாட்ஸ்அப் குழுவில் இணைய 9789 374 109 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு உங்கள் வாட்ஸ்அப் மூலம் ரிக்கொஸ்ட் அனுப்பவும்

Wednesday, 22 August 2018

வேதம் பயில்வோம்-பாகம்-4-யஜுர்வேதம்

வேதம் பயில்வோம்-பாகம்-4-யஜுர்வேதம்
-
ஈசாவாஸ்ய உபநிஷதம் (ஒளிக்கு அப்பால்)
--
மந்திரம்-3
-
அஸுர்யா நாம தே லோகா அந்தேன தமஸாவ்ருதா:
தாக்ம் ஸ்தே ப்ரேத்யாபிகச்சந்தி யே கே சாத்மஹனோ ஜனா: (3)
-
பொருள்
-
3. அசுரர்களின் உலகங்கள் காரிருளினால் மூடப்பட்டுள்ளன. ஆன்மாவை அழிப்பவர்கள் மரணத்திற்குப் பிறகு அந்த உலகங்களை அடைகிறார்கள்.
-
ஆசை வசப்பட்டு, உடம்புடனும் மனத்துடனும் நம்மைப் பிணைத்துக்கொண்டு, உலகின் சுகபோகங்களை நாடி புற வளர்ச்சியில் கவனம் செலுத்துந்தோறும் நாம் மேன்மேலும் பிறவிகளுக்கு உள்ளாகிறோம். மாறாக, ஆன்மாவுடன் நம்மை ஒன்றுபடுத்திக்கொண்டு அக வளர்ச்சியில் நாட்டம் செலுத்துந்தோறும் இறைநிலையை அடைந்து மரணத்தை வெல்கிறோம். அதாவது பிறவியற்றவர்கள் ஆகிறோம்.
-
இவ்வாறின்றி ஆன்மாவை நினைக்காமல் உடம்பே எல்லாம் என்று வாழ்பவர்களை இது மந்திரம் ஆன்மாவை அழிப்பவர்கள் என்று குறிப்பிடுகிறது. ஆன்மாவை அழிக்க முடியாது; அழிப்பதற்கு நிகரான குற்றத்தைச் செய்பவர்கள் என்பது பொருள். அத்தகையவர்கள் மரணத்திற்குப் பிறகு இருண்ட உலகங்களை அடைகிறார்கள். அதாவது தொடர்ந்து பிறவிக்கு உள்ளாகி, துன்பத்தில் உழல்கிறார்கள். இந்தத் துன்பத்திலிருந்து விடுபட வேண்டுமானால் அக வளர்ச்சியை நாட வேண்டும், ஆன்மாவைத் தேட வேண்டும்.
-
நாம் யார்?

உடம்பு, மனம், பிராணன், புத்தி, ஆன்மா என்ற ஐந்தின் தொகுதியே நாம். மனம், பிராணன் மற்றும் புத்தியின் தொகுதி ஜீவன் அல்லது உயிர் எனப்படுகிறது. எங்கும் நிறைந்தவரான இறைவன் நம்மில் ஆன்மாவாக உள்ளார். நம்மில் உள்ள அந்த இறையம்சமே ஆன்மா. அதுவே நமது உண்மை இயல்பு. அந்த ஆன்மாவே நாம் என்பதை உணர்வதுதான் உலகில் இறைவனைக் காண்பதற்கான முதற்படி.
-
ஆன்மாவின் இயல்பு பற்றி பார்ப்போம்
-
மந்திரம்-4

அனேஜ தேகம் மனஸோ ஜவீயோ
நைனத்தேவா ஆப்னுவன் பூர்வமர்ஷத்
தத்தாவதோஸன்யானத்யேதி திஷ்ட்டத்
தஸ்மின்னபோ மாதரிச்வா ததாதி (4)

4. ஆன்மா அசைவற்றது, ஒன்றேயானது, மனத்தை
விட விரைவானது. புலன்கள் அதனை அடைய
இயலாது. அது நிலையாக நின்றபடியே அனைத்
திற்கும் முன்னால் செல்கிறது; ஓடுகின்ற அனைத்தை
யும் முந்துகிறது. அது நிலையாக இருப்பதால்
பிராணன் அனைத்தையும் இயக்குகிறது.
-
ஒரு பொருள் அசையவோ இயங்கவோ வேண்டுமானால் அந்த இயக்கத்திற்கு ஓர் இடம் வேண்டும். எங்கும் நிறைந்த ஒன்று எங்கே அசையும்? எனவேதான் ஆன்மா அசைவற்றது.
-
மனம் புறத்திலுள்ள ஒரு பொருளை நினைவுக்கும் போது, அது வெளியில் சென்று அந்தப் பொருளின் வடிவை எடுப்பதாக நமது தத்துவ நூல்கள் கூறுகின்றன. இதுவரை விஞ்ஞானம் கண்டறிந்துள்ள ஒலியின் வேகத்தைவிட, ஒளியின் வேகத்தைவிட மிகமிக வேகமாக மனம் சென்று அந்தப் பொருளின் வடிவை எடுக்கிறது. அவ்வளவு வேகமாக மனம் சென்றாலும், மனம் செல்வதற்கு முன்பே அங்கே ஆன்மா அதாவது இறைவன் உள்ளார். எனவே தான் மனத்தைவிட விரைவானது, நிலையாக நின்றபடியே அனைத்திற்கும் முன்னால் செல்கிறது, ஓடுகின்ற அனைத்தையும் முந்துகிறது என்றெல்லாம் கூறப்பட்டது.
-
புலன்களால் ஆன்மாவை அறிய இயலாது. ஒவ்வொரு கருவியும் ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்ய வல்லது. தொலைநோக்கிக் கருவியால் தூரத்திலுள்ள பொருளை மட்டுமே பார்க்க முடியும்; அருகில் உள்ளவற்றைப் பார்க்க இயலாது. நுண்ணோக்கியால் மிகச் சிறியனவற்றைக் காண முடியும். அதுபோல் புலன்கள் புற உலகை அனுபவிப்பதற்காகப் படைக்கப்பட்டவை. அகவுலக உண்மைகளையோ ஆன்மாவையோ காண அவற்றால் இயலாது. இதையே பகவான் ஸ்ரீகிருஷ்ணர் கீதையில், உனது இந்தக் கண்ணினால் என்னைப் பார்க்க இயலாது. எனவே உனக்கு தெய்வீகக் கண்ணைத் தருகிறேன் என்று அர்ஜுனனிடம் கூறுகிறார்.
-
எந்த ஓர் இயக்கமும் நடைபெற வேண்டுமானால் இயங்காத ஒன்று அதற்கு ஆதாரமாக வேண்டும். ரயில் ஓட வேண்டுமானால் அசையாத தண்டவாளம் வேண்டும். திரைப்படம் இயங்க வேண்டுமானால் அசைவற்ற திரை ஆதாரமாக வேண்டும். அவ்வாறே, இந்த உலகின் இயக்கங்கள் அனைத்திற்கும் காரணமாகவே உள்ளது பிராணன். அசைகின்ற பிராணன் இயங்குவதற்கு அசைவற்ற ஆதாரமாக உள்ளது ஆன்மா.
-
மந்திரம்-5
-
ததேஜதி தன்னைஜதி தத்தூரே தத்வந்திகே
தத்ந்தரஸ்ய ஸர்வஸ்ய தது ஸர்வஸ்யாஸ்ய பாஹ்யத: (5)
-
பொருள்
-
5. அது அசைகிறது,  அது அசைவதில்லை. அது தூரத்தில் உள்ளது, மிக அருகில் உள்ளது. அது அனைத்தின் உள்ளே உள்ளது, அனைத்தின் வெளியிலும் உள்ளது.
-
ஆன்மா, கடவுள் போன்ற உண்மைகள் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை. இவற்றை அறிவினால் புரிந்துகொள்ள முடியாது என்றே வேதங்கள், உபநிஷதங்கள் முதலான அனைத்து சாஸ்திரங்கள் கூறுகின்றன. அவ்வாறு புலன்களும் எட்டாத ஒன்றைப் புலன்களால் விளக்க முற்படுகின்ற மந்திரம் இது. ஆன்மா எங்கும் நிறைந்ததாக இருப்பதால் இந்த முரண்பட்ட கருத்துக்கள் அனைத்தும் சாத்தியமாகின்றன.
-
பிரபஞ்சத்தின் இயக்கங்கள் அனைத்திற்கும் ஆதாரமாக இருப்பது ஆன்மா (4) எனவே ஆன்மா அசைகிறது. ஆன்மா என்ற நிலையில், அதாவது எங்கும் நிறைந்த நிலையில் அதற்கு அசைவில்லை.
-
நம் ஒவ்வொருவரின் உள்ளேயும் ஆன்மா உள்ளது. எனவே அது மிக அருகில் உள்ளது. ஆனால் நாம் அதை உணராத நிலையில் அது மிகவும் தூரத்தில் உள்ளது.
-
அதுபோலவே இறைவன் என்ற நிலையில் அது எங்கும் நிறைந்ததாக இருப்பதால் அனைத்தின் உள்ளேயும் உள்ளது, வெளியேயும் உள்ளது.
-
மந்திரம்-6
-
யஸ்து ஸர்வாணி பூதான்யாத்மன்யேவானுபச்யதி
ஸர்வபூதேஷு சாத்மானம் ததோ ந விஜுகுப்ஸதே (6)
-
6. யார் எல்லா உயிரினங்களையும் ஆன்மாவிலும்,
ஆன்மாவை எல்லா உயிரினங்களிலும் காண்கிறானோ
அவன் யாரையும் வெறுப்பதில்லை.
-
எல்லா உயிர்களிலும் ஆன்மாகிய நானே இருக்கிறேன் என்று உணர்பவன் யாரையும் வெறுபப்தில்லை.உயிர்களை வெறுப்பது என்பது என்னை வெறுப்பதாகும்.உயிர்களை நேசிப்பது என்பது என்னை நேசிப்பதாகும்
-
ஆன்மாவாகத் தன்னை உணர்ந்தவன்,அதாவது ஆன்ம அனுபூதி பெற்றவன் பெறும் பலன் என்ன? அவன் உலகின் துன்பங்களிலிருந்து விடுபடுகிறான்.
-
மந்திரம்-7
-
யஸ்மின் ஸர்வாணி பூதான்யாத்மைவாபூத் விஜானத:
தத்ர கோ மோஹ: க: சோக ஏகத்வமனுபச்யத: (7)
-
பொருள்
-
7. ஆன்மாவே எல்லா உயிரினங்களாகவும் ஆகியிருக்கின்ற ஒருமையுணர்வைப் பெறுகின்ற ஒருவனுக்கு என்ன மனமயக்கம்? என்ன கவலை?
-
பிடிக்காத ஒன்றை வெறுக்கிறோம். ஒன்றை மற்றொன்றாகக் காண்பதால் மனமயக்கம் உண்டாகிறது. விரும்பிய ஒன்று கிடைக்காதபோது கவலை ஏற்படுகிறது. ஆன்ம அனுபூதி பெற்றவனுக்கு இந்த மூன்றும் இல்லை என்று 6-7 மந்திரங்கள் கூறுகின்றன.
-
ஆன்ம அனுபூதி, இறைக் காட்சி என்றெல்லாம் கூறப்படுவது ஓர் அக அனுபவம், உணர்வில் ஒரு மாற்றம் என்பதை நினைவில்கொள்ள வேண்டும். குழந்தையும், வாலிபனும், வயோதிகனும் ஒரே உலகில்தான் வாழ்கிறார்கள். ஆனால் அவர்கள் காண்கின்ற உலகம் ஒன்றல்ல. அவர்களின் காட்சி வெவ்வேறாக அமைவதற்குப் புறவுலகம் காரணம் அல்ல; அவர்களது உணர்வின் விரிவே, உணர்வின் மாற்றமே காரணம். வீட்டினரை மட்டுமே நேசிக்கின்ற நாம் நமது உணர்வு விரியவிரிய படிப்படியாக சுற்றத்தினரை, நண்பர்களை, பிறரை, நாட்டை, உலகை நேசிக்கிறோம். சுற்றியிருப்பவர்களிடம் எந்த மாற்றமும் ஏற்படவில்லை; மாற்றம் நம்மிடமே நிகழ்ந்தது- நமது உணர்வு விரிந்தது.
-
ஆன்ம அனுபூதியில் உணர்வு விரிந்து அதன் எல்லைகளைத் தொட்டுவிடுகிறது. இனி எந்த மாற்றமும் ஏற்பட முடியாத அறுதி மாற்றம் அது. இனி விரிய முடியாத அளவுக்கு விரிந்துவிட்ட நிலை அது. பிரபஞ்சமே அவர்களுடையதாகி விடுகிறது; அவர்கள் எங்கும் தன்னையே, தனது உணர்வையே காண்கிறார்கள். ஆனால் அவர்களிடம் பற்று இல்லாததால் உலகின் இன்ப துன்பங்கள் எதுவும் அவர்களைப் பாதிப்பதில்லை. எனது செல்வத்திற்கு எல்லையே இல்லை. ஆனால் உண்மையில் எனது என்று எதுவும் இல்லை. எனவே, மிதிலை நகரமே பற்றியெரிந்தால்கூட நான் எøதாயும் இழப்பதில்லை (1. அனந்தம் பத மே வித்தம் யஸ்ய மே நாஸ்தி கிஞ்சனமதிலாயாம் ப்ரதீப்தாயாம் ந மே கிஞ்சித் ப்ரதஹ்யதே    -மகாபாரதம், சாந்தி பர்வம், 17.18.)என்று மிதிலை மன்னர் ஜனகர் கூறுவதாக மகாபாரதம் தெரிவிக்கிறது. ஆன்ம அனுபூதி பெற்றவர்கள், இவ்வாறு சுகம்- துக்கம், வெற்றி- தோல்வி, நன்மை-தீமை போன்ற இருமைகளைக் கடந்துவிடுகிறார்கள்; வெறுப்போ, மனமயக்கமோ, கவலையோ இல்லாதவர்களாகி விடுகிறார்கள்
---
வேதபாடம் தொடரும்...
---
இந்துமதம் வாட்ஸ்அப் குழுவில் இணைய 9789 374 109 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு உங்கள் வாட்ஸ்அப் மூலம் ரிக்கொஸ்ட் அனுப்பவும்

Tuesday, 21 August 2018

வேதம் பயில்வோம்-பாகம்-3-யஜுர்வேதம்


வேதம் பயில்வோம்-பாகம்-3-யஜுர்வேதம்
-
ஈசாவாஸ்ய உபநிஷதம் (ஒளிக்கு அப்பால்)
--
நாம் யார், எங்கிருந்து வந்தோம், எங்கே போய்க் கொண்டிருக்கிறோம், எங்கே போக வேண்டும் என்ற எதுவும் தெரியாத நிலையில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அவ்வளவு ஏன், அடுத்த கணம் என்ன நடக்கப் போகிறது என்பதுகூட நமக்குத் தெரியாது. அதனால்தான் உபநிஷத ரிஷி, இறைவா! அறியாமை இருளிலிருந்து என்னை அறிவின் ஒளிக்கு அழைத்துச் செல்வாய் (1. தமஸோ மா ஜ்யோதிர் கமய-அப்யாரோஹ மந்திரம், பிருஹதாரண்யக உபநிஷதம், 1.3.28.)என்று பிரார்த்தனை செய்கிறார்.
-
அத்தகைய பிரார்த்தனைகளின் பலனாக, ஜபம் தவம் போன்ற ஆன்மீக சாதனைகளின் பலனாக இறைவனின் அருட்கிரணம் நம்மில் பட்டு நமது உணர்வின் ஒளியைத் தூண்டுகிறது. நமக்கு ஒளியின் காட்சி, ஒளிமயமான இறைவனின் காட்சி கிடைக்கிறது; அறியாமை இருள் விலகுகிறது; எல்லாம் நமக்குப் புரிகிறது.
-
ஆனால் ஒளியின் காட்சியுடன் நமது பயணம் நின்று விடவில்லை. அறுதி உண்மை என்பது அனைத்தையும் கடந்தது; இருள்- ஒளி, துன்பம்-இன்பம், தீமை- நன்மை போன்ற அனைத்து இருமைகளுக்கும் அப்பாற்பட்டது. அந்த இடத்தை அடையும்போதுதான் நமது பயணம் லட்சியத்தை அடைகிறது. எனவே, ஒளிமயமான காட்சியைப் பெற்ற முனிவர் தன்னை ஒளிக்கும் அப்பால் அழைத்துச் செல்வதற்குப் பிரார்த்திக்கிறார்.
-
ஒளிக்கு அப்பால் இருப்பது என்ன?
-
ஒளிக்கு அப்பால் தம்மையே காண்பதற்காக உபநிஷத முனிவர் கூறுகிறார். அறுதிநிலை அனுபூதி இது. இதனைப் படிப்படியாக இந்த உபநிஷதத்தில் நாம் காண்கிறோம்.
-
அறுதி உண்மையான பரம்பொருளை அடைய வேண்டுமானால் முதலில் ஒளியை அடைந்தாக வேண்டும். அதற்கு வாழ்க்கையையே வழியாக இந்த உபநிஷதம் சொல்கிறது. வாழ்க்கையிலிருந்து விலகி ஓடுவதல்ல; வாழ வேண்டிய முறையில் வாழ்க்கையை வாழ்வது எப்படி என்பதை அறிந்து, அதன்படி வாழ்ந்தால் அதுவே ஓர் ஆன்மீக சாதனையாகி விடுகிறது; ஒளியை அடைவதற்கான, இறையனுபூதிக்கான ஒரு வழியாகிவிடுகிறது. உரிய முறையில் வாழ்வது என்பதை இரண்டு படிகளாக முதல் இரண்டு மந்திரங்கள் கூறுகின்றன.
-
தியாகத்துடன் அனுபவி:
-
மந்திரம்-1
-
ஓம் ஈசாவாஸ்யமிதக்ம் ஸர்வம் யத் கிஞ்ச ஜகத்யாம் ஜகத்
தேன த்யக்தேன புஞ்ஜீதா மா க்ருத: கஸ்யஸ்வித் தனம் (1)

பொருள்-
-
1. மாறுகின்ற இயல்புடைய இந்த உலகில் உள்ள
அனைத்தும் இறைவனால் நிறைக்கப்பட வேண்டும்.
அத்தகைய தியாக சிந்தனையுடன் உலகை அனுபவி.
பணம் யாருடையது? அதற்காக(பணத்திற்காகவும் உலகியல் விசயங்களுக்காகவும்) ஆசைப்படாதே.
-
உலகமும், அதன் செல்வங்களும், அது தரும் சுகபோகங்களும் எல்லாம் மாறுபவை. அதாவது நிலையற்றவை. நிலையான இன்பம், அமைதி எதையும் இந்த உலகிலிருந்து நாம் எதிர்பார்க்க முடியாது. ஆனால் நிலைத்த இன்பத்தையும் அமைதியையும்தான் நாம் ஒவ்வொரு வரும் தேடுகிறோம். அதனைப் பெற என்ன வழி?
-
அனைத்தையும் இறைவனால் நிறைக்க வேண்டும். இதன் பொருள் என்ன? விளக்குகிறார் சுவாமி விவேகாந்தர்:
-
அனைத்தையும் இறைவனால் நிறைக்க வேண்டும்; ஒருவகை போலியான இன்ப நோக்காகவோ, இல்லை, துன்பங்களைக் கண்டும் காணாததுபோல் இருக்கும் பாசாங்காகவோ அல்ல. <உண்மையிலேயே எல்லாவற்றிலும் இறைவனைக் காண்பதன் மூலம் இதைச் செய்ய வேண்டும்.... இதன் பொருள் என்ன? நீ உன் மனைவியோடு வாழலாம்; அவளைக் கைவிட வேண்டும் என்பதல்ல. ஆனால் அவளிடம் கடவுளைக் காண வேண்டும்..
-
. உங்கள் குழந்தைகளில் இறைவனைக் காணுங்கள். எல்லாவற்றிலும் இப்படியே. வாழ்விலும் சாவிலும் இன்பத்திலும் துன்பத்திலும் எல்லாவற்றிலுமே இறைவன் சமமாக நிறைந்திருக்கிறார். கண்களைத் திறவுங்கள், அவரைப் பாருங்கள்.
-
நாம் நமது கற்பணையால், நமது அனுமானத்தால் உருவாகிக் கொண்டிருக்கும் உலகத்தைத் துறந்துவிட வேண்டும். ஏனென்றால் இந்த அனுமானம் முழுமையற்ற அனுபவத்தை ஆழமற்ற அறிவை நமது சொந்த பலவீனத்தை அடிப்படையாகக் கொண்டது. இதைத் துறந்துவிடுங்கள். நாம் இதுவரை நினைத்துவந்த, எல்லோரும் உடும்புப்பிடியாகப் பிடித்துக் கொண்டிருக்கின்ற உலகம் நம்முடைய கற்பனையில் தோன்றிய பொய்யான உலகம். அதை விட்டுவிடுங்கள். நன்றாகக் கண்களைத் திறந்து பாருங்கள். இப்படிப்பட்ட ஓர் உலகம் எப்போதுமே இருக்கவில்லை என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். அது ஒரு கனவு, மாயை. இருந்தது கடவுள் மட்டுமே. குழந்தையில், மனைவியில், கணவரில் எல்லாவற்றிலும் இருப்பவர் அவரே. நல்லவரில் இருப்பதும் அவரே, தீயவரில் இருப்பதும் அவரே, பாவத்தில் இருப்பதும் அவரே, பாவியாக இருப்பதும் அவரே. வாழ்விலும் அவரே இருக்கிறார். சாவிலும் அவரே இருக்கிறார்.
-
எங்கும் இருப்பவர் அவர். எல்லாம் அவருடையது; வேறு யாருடையதும் அல்ல. எனவே நமக்கென்று வாய்த்த செல்வத்திலும் ஆசை கொள்ளாமல் அனைத்தும் இறைவனுக்கு உரியவை என்ற தியாக சிந்தையுடன் உலகை அனுபவிக்குமாறு கூறுகிறது உபநிஷதம். இது முதற்படி.
-
தியாகத்தால் பற்றின்மை வருகிறது.எல்லாம் இறைவனுடையது என்ற தியாக சிந்தையுடன் வாழ்வதால் பற்றின்மை உண்டாகிறது.
-
மந்திரம்-2
-
குர்வன்னேவேஹ கர்மாணி ஜிஜீவிஷேச்சதக்ம் ஸமா:
ஏவம் த்வயி நான்யதேதோஸஸ்தி ந கர்ம லிப்யதே நரே (2)

பொருள்
-
2. கடமைகளைச் செய்தபடியே நூறு ஆண்டுகள்
வாழ விரும்பு. (உலகை அனுபவித்து வாழ விரும்பு
கின்ற) உன்னைப் போன்றவர்களுக்கு இதைத்தவிர
வேறு வழி இல்லை. (இவ்வாறு வாழ்வதால்)
கடமைகள் உன்னைப் பற்றுவதில்லை.
-
உலகில் வாழ வேண்டும். அதற்கு வேலை செய்தாக வேண்டும். கடமைகளைச் செய்யாமல் யாரும் வாழ முடியாது. எந்த வேலையைச் செய்தாலும் அதற்கு விளைவு ஒன்று இருக்கும். அது நல்லதாக இருக்கலாம், கெட்டதாக இருக்கலாம், இரண்டும் கலந்ததாக இருக்கலாம்; ஆனால் விளைவு ஒன்று இருந்தே தீரும். விளைவு எதுவானாலும் அது நம்மைப் பிணைக்கிறது; மனத்தில் ஒரு பதிவை உண்டாக்குகிறது. அந்தப் பதிவு, நாம் மேலும் அந்தச் செயலைச் செய்யுமாறு தூண்டுகிறது. மீண்டும் நாம் அந்த வேலையைச் செய்கிறோம். இவ்வாறு வேலைகள் தொடர்கின்றன. இது, தொடர்ந்த பிறவிக்கு வழியாகிறது.
-
ஆனால் உலகை இறைவனுக்கு உரியதாகக் கண்டு, அவரது சொத்திற்கும் சுகத்திற்கும் ஒரு பொறுப்பாளனைப் போல் வாழ்ந்தால், அந்த ரீதியில் வேலை செய்தால் அந்த வேலையின் பலன் நம்மைப் பிணைக்காது. பலன் நம்மைப் பிணைக்காதலால் அத்தகைய வேலை அக வளர்ச்சிக்கான ஓர் ஆன்மீக சாதனையாக ஆகிவிடுகிறது
---
வேதபாடம் தொடரும்...
---
இந்துமதம் வாட்ஸ்அப் குழுவில் இணைய 9789 374 109 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு உங்கள் வாட்ஸ்அப் மூலம் ரிக்கொஸ்ட் அனுப்பவும்

Wednesday, 15 August 2018

அன்னை சாரதாதேவியின் உபதேசங்கள்-பாகம்-5


அன்னை சாரதாதேவியின் உபதேசங்கள்-பாகம்-5
-
உங்கள் உடம்பு என்பது வேறென்ன மகளே, அதுவும் என் உடம்பே அல்லவா! உங்கள் உடம்பு நல்ல நிலையில் இல்லாவிட்டால் நானும் கஷ்டப்படத்தானே வேண்டும்
-
சாதனை வாழ்வில் பெரும்பாலான தடைகள் அகத்திலிருந்தே வருகின்றன.புறத்தடைகள் குறைவே.ஆனால் தடைகள் எவையானாலும் ஜபம் செய்யச்செய்ய.தியானமும் தாரணையும் பழகப்பழக அவை ஒவ்வொன்றாக விலகிவிடும்
-
கடமைகளை செய்துகொண்டே போ. மனத்தின் அழுக்குகள் அப்படியே இருக்கின்றனவா,போய்விட்டனவா என்றெல்லாம் கவலைப்பட்டுக்கொண்டிருக்காதே.தென்னை மட்டை பழுத்தால் தானாக வீழ்ந்துவிடும்
-
உங்கள் அனைவரின் வாய்மூலமாகவும் நான் சாப்பிடத்தானே செய்கிறேன்.நீங்கள் சாப்பிட்டாலே நான் சாப்பிட்டதுபோல்தான்.
-
அவதாரபுருஷரை எல்லோராலும் அறிந்துகொள்ள முடியுமா என்ன? ஏதோ ஓரிருவரால் மட்டுமே முடியும்.மனித குலத்தின் நன்மைக்காக அவர்கள் எவ்வளவு பாடுபடுகின்றனர்.எவ்வளவு கஷ்டங்களை அனுபவிக்கின்றனர்
-
குருதேவரின் தொண்டையிலிருந்து ரத்தம் கொட்டியது.அப்போதும் அவர் பேசுவதை நிறுத்தவில்லை.அவர்களுக்கு எப்படி நன்மை உண்டாகும் என்பதுபற்றியே சிந்தித்தார்
-
உலகில் வாழ வேண்டுமானால் கொஞ்சம் இந்தப்பக்கம் அந்தப்பக்கம் பார்த்து வாழவேண்டும்.கவனமின்மையை விடவேண்டும்.எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.அப்போதுதானே மற்றவர்களுடன் வாழமுடியும்.
-
நான் ஒரு வாய் வழியாககத்தான் சாப்பிடுகிறேனா? அப்படியா நீ நினைத்துக்கொண்டிருக்கிறாய்? நானேதான் அனைவருமாக ஆகியிருக்கிறேன்.
-
மீண்டும் மீண்டும் வர வேண்டியிருக்கிறது.இதிலிருந்து விடுதலையே கிடையாதா? எங்கே சிவன்,அங்கே சக்தி-சிவசக்தி ஒன்றாக வருகிறார்கள்.மீண்டும் அதேசிவன் அதேசக்தி.தப்பவே முடியாது.ஆனால் உலகம் இதை புரிந்துகொள்வதில்லை
-
குருதேவர் உலகிற்காக எவ்வளவு துயரங்களை அனுபவித்தார்.எவ்வளவு தவங்கள்.அவருக்கு தவங்கள் தேவை இருந்ததா என்ன? இருந்தாலும் தவம் செய்தார்.அவர் தவம் செய்தது உலக மக்களுக்காக மட்டுமே.சாதாரண மனிதர்களால் தவங்கள் செய்ய முடியுமா என்ன?அவர்களிடம் வேகம் எங்கே.ஆற்றல் எங்கே?அதனால்தானே குருதேவர் எல்லாம் செய்ய வேண்டியிருந்தது.
-
ஒரே சந்திரன் தினம்தோறும் உதிப்பதில்லையா? இறைவனால் தப்ப முடியாது.அவர் பிடிபட்டுவிட்டார்.உயிரினங்கள் அனைத்தும் அவருடையவை அவர் கவனிக்காவிட்டால் யார் கவனிப்பது?
-
எப்போது என்னை அழைப்பாயோ அப்போது நான் உன் அருகில் வருவேன்.இதை மனத்தில் வைத்துக்கொள்.ஒருபோதும் மறக்காதே.அழைத்தால் அவர் வருவார்.கல்பத்தரு அல்லவா அவர்
-
மீண்டும் மீண்டும் பிறக்கிறேன் மலைமலையாய் துன்பங்களை தாங்குகிறேன்.எத்தனை நாள் இந்த வேதனையைத் தாங்குவேன்.இந்த வேதனைகள் உயிர்களுக்கு மட்டும்தானா?இறைவனுக்கும்தான்.குருதேவர் எவ்வளவு கஷ்டப்பட்டார்.யார் இதை புரிந்துகொள்வார்கள்?
-
கடவுளிடம் உயிர்கள் பட்டுள்ள கடன் தீரவே தீராதா என்று சிலவேளைகளில் தோன்றுகிறது.தீராது எத்தனை தவங்கள் செய்தாலும் அவரிடம் பட்டுள்ள கடனைத் தீர்க்க முடியாது. ஏனென்றால் உயிர்களும் அவருடையவை அல்லவா
-
எவ்வளவு சோகம்! எவ்வளவு தாபம்! எவ்வளவு வேதனைக்கனல்கள்! இவற்றிலெல்லாம் வறுபட்டு இங்கே வருகிறார்கள்.குருதேவர் அல்லாமல் வேறு யார் அவர்களின் வேதனைத் தீயை அணைப்பார்கள்?அவரைவிட அதிகம் வேதனையை அனுபவித்தவர் யார்?அதனால்தான் மக்களின் வேதனைகளை புரிந்துகொள்கிறார்
-
ஒருமுறை நான் என்ன கண்டேன் தெரியுமா? குருதேவரே எல்லாமாக ஆகியிருப்பதைக் கண்டேன்.எந்தப் பக்கம் பார்த்தாலும் அவரே.குருடனும் அவரே,முடவனும் அவரே.அவரைத்தவிர வேறு எதுவும் இல்லை.படைப்பு அவருடையது.அவரே எல்லாமாக ஆகியிருக்கிறார் .
-
உண்மையில் துன்பங்களை அனுபவிப்பது உயிர்கள் அல்ல,உயிர்களாக ஆகியிருக்கும் (குருதேவரே)இறைவனே அதை அனுபவிக்கிறார்.அதனால்தான் யார்வந்து அழுதாலும் அவர்களைத் தூக்கிவிட வேண்டியுள்ளது.அவரது பொருளால் அவருக்கே சேவை செய்கிறேன்.
-
என்னைத் தூங்கச் சொல்கிறார்கள்.என்னால் தூங்க முடியுமா? தூங்குவதைவிட்டுவிட்டு அந்த நேரத்திலும் ஜபம் செய்தால் உயிர்களுக்கு நன்மை உண்டாகுமே என்று தோன்றுகிறது.
-
சாரைசாரையாக எறும்புகள் போய்க்கொண்டிருந்தது.ராது அவற்றைக் கொல்லப்போனாள்.எனக்கு என்ன தெரிந்தது தெரியுமா? அங்கே எறும்புகளையே நான் காணவில்லை.அவையெல்லாம் குருதேவர்.குருதேவரின் அதே கைகள்,கால்,முகம்,கண்,எல்லாம் அவருடையவை.ராதுவை தடுத்தேன்.எல்லா உயிர்களுமாக அவரே இருக்கிறார்.என்னால் பெரிதாக என்ன செய்துவிட முடியும்.எத்தனைபேரைக் காப்பாற்றுவேன்?எல்லோருடைய பொறுப்பையும் அவர் என்னிடம் தந்துள்ளார்.எல்லோரையும் காப்பாற்ற முடியுமானால் எவ்வளவோ நன்றாக இருக்கும்.
-
நான் புறப்படத் தயாரானேன்.அப்போது அன்னை சிரித்தபடியே “அன்னையும் பிள்ளையும்” என்று கூறி ஆசீர்வதித்தார்.“அன்னையும் பிள்ளையும்,அன்னையும் பிள்ளையும்” என்ற வார்த்தை மட்டும் மீண்டும் மீண்டும் என்னுள் ஒலித்துக்கொண்டே இருந்தது...
-
தொகுப்பு...சுவாமி வித்யானந்தர்.வாட்ஸ் அப்- 9789374109

அன்னை சாரதாதேவின் அன்புமொழிகள்-பாகம்-1


அன்னை சாரதாதேவின் அன்புமொழிகள்-பாகம்-1
-
ஒரு கணம்கூட வேலை செய்யாமல் இருப்பது நல்லதல்ல.பற்றில்லாமல் வேலை செய்யச்செய்ய கர்மத்தளை உடைபடுகிறது.பிறகு பற்றற்றநிலை ஏற்படுகிறது.
-
ஏதோ காரணத்திற்காக நளினி கோபத்துடன் வந்து அமர்ந்தாள்.அன்னை அதை கண்டித்தார்.பெண்களுக்கு இவ்வளவு கோபம் கூடாது.பொறுமை வேண்டும்.சிறுவயதில் பெற்றோர்,இளமையில் கணவன் இவர்களின் பாதுகாப்பு பெண்களுக்கு கட்டாயம் தேவை
-
மந்திரம் தந்திரம் எல்லாம் ஒன்றுமில்லை மகளே! பக்தியே எல்லாம். குருதேவரே எல்லாம்.குருவும் அவரே,இஷ்டதெய்வமும் அவரே.அவரே எல்லாம்
-
வாழ்க்கையில் அடிபட்டு அதன்பிறகு பலர் இறைவா என்பார்கள்.ஆனால் சிறுவயதில் மனம் புத்தம்புது மலராக இருக்கும்போதே அதை பகவானிடம் சமர்ப்பிப்பவனே பாக்கியவான்
--
கணவனும் மனைவியும் ஒற்றுமையாக இருந்தால்தான் ஆன்மீக முன்னேற்றம் ஏற்படும்
--
ஒருவர் தனது புண்ணிய பாங்களைக் குறித்துப் பேசினால் கேட்பவர்களும்கூட அவற்றில் ஏதோ கொஞ்சமாவது பங்கை ஏற்றே தீரவேண்டும்.
ஒருவன் உன்னிடம் தன் பாவத்தை சொல்வதாக வைத்துக்கொள்வோம்,பின்பு எப்போது அவனை நினைக்க நேர்ந்தாலும் அவனது பாவமும் சேர்ந்தே நினைவில் வரும்.அது உன் மனத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
---
பணத்தில் என்ன இருக்கிறது மகளே! குருதேவரால் பணத்தை தொடக்கூட இயலாது.கை பின்னுக்கு இழுத்துக்கொள்ளும்.இந்த உலகம் உண்மையில்லை கடவுள் ஒருவரே உண்மை என்பார் அவர்
-
எங்கே இருந்தாலும் மகிழ்ச்சியுடன் இருக்கும் வகையில் உன் மனத்தை அமைத்துக்கொள்ள வேண்டும்.
--

அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-2


அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-2
-
மகளே,இந்த உலகில் கணவனாகட்டும்,மகனாகட்டும்,உடம்பாகட்டும்,எதுவும் உண்மையல்ல.இந்த மாயைகளின் பந்தத்தை வெட்ட முடியாவிட்டால் சம்சாரக்கடலை கடக்க முடியாது.
-
இந்த உடம்புதான் நாம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோமே அதுதான் பெரிய மாயை.கடைசியில் இந்த மாயையும் வெட்டி எறிந்துவிட வேண்டும்.மகளே இந்த உடம்பு என்பது என்ன? கடைசியில் ஒருபிடி சாம்பல்தான்.இதற்குபோய் இவ்வளவு கர்வம் எதற்கு?
-
கஸ்தூரி மான் தன்னிடமிருந்து வரும் மணத்தை வெளியிலிருந்து வருவதாக நினைத்து தேடுகிறது.அதுபோல இறைவன் மனித உடம்பில்தான் இருக்கிறார்.அவரை அறியாமல் எங்கெங்கோ அலைகிறான்.
--
உனக்கு யார் இல்லாமல்போனாலும் ஒரு அம்மா இருக்கிறாள் என்பதை நினைவில் வைத்துக்கொள்.குருதேவரை நினைப்பவர்களை கடைசிநாளில் அவர் காட்சிதந்து தன்னுடன் அழைத்துசெல்வார்.இதை அவரே என்னிடம் சொல்லியிருக்கிறார்
--
எனக்கு தெரிந்தவரை குருதேவர் கவலையாக இருந்து நான் பார்த்ததே இல்லை.எவ்வளவு அற்புதமான விசயங்களை என்னிடம் பேசுவார்.
--
தெய்வீக விசயங்களைத்தவிர குருதேவர் வேறு எதையும் பேசுவதில்லை.ஒருநாள் என்னிடம்,மனித உடம்பு நிலையற்றது.இதோ இருக்கிறது.அடுத்தக்கணம் இல்லாமல்போகிறது.உலகில் பிறந்து துன்பத்தீயில் வேகிறது.இப்படியோர் உடம்பை மீண்டும் ஏன் உற்பத்தி செய்ய வேண்டும்? என்றார்
-
இல்லறத்தார்கள் கருப்புத்துணி போன்றவர்கள்.மேலும் கருப்பு புள்ளி பட்டாலும் வெளியே தெரியாது.சந்நியாசிகள் வெள்ளைத்துணி போன்றவர்கள்.ஒரு கறுப்பு புள்ளி பட்டாலும் வெளியில்தெரியும்.உலகம் காத்திலும் பணத்திலும் முழ்கிக்கிடக்கிறது.அதனால்தான் துறவியே எச்சரிக்கையாக இரு என்பார் குருதேவர்
--

அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-3


அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-3
-----
குதேவரின் பிள்ளைகள் வாழ்கின்ற இடத்திற்கு(தன்னிடம்) வந்திருக்கிறாய்.இங்கே உனக்கு மன அமைதி கிடைக்கவில்லை என்றால் வேறு எங்கிருந்து கிடைக்கும்? என்ன அற்ப வாழ்க்கை வாழ்கிறாய்?
--
உன் மனத்தில் பாவம் உள்ளது.அதனால்தான் மனஅமைதி கிடைக்கவில்லை.எந்த வேலையும் செய்யாமல் சும்மா இருந்ததால் மூளை சூடாகிவிட்டது.அதனால்தான் தீய எண்ணங்கள் உன்மனத்தில் எழுகின்றன
-
குருதேவரின் லீலையை பார்த்தாயா அம்மா!எப்படிப்பட்ட உறவினருடன் நான் வாழவேண்டியிருக்கிறது.ஒருத்திக்கு ஏற்கனவே பைத்தியம்.இன்னொருத்தி பைத்தியநிலையை நெருங்கிக்கொண்டிருக்கிறாள்.இன்னொருத்திக்கு உருப்படியான புத்தி சிறிதுகூட இல்லை.
-
மகளே! இந்த மானிடப் பிறவியைப் பெறுவது பெரிய பாக்கியம்.சாதனைகளில் ஆழ்ந்து ஈடுபடு.பாடுபட வேண்டும்.பாடுபடாமல் ஏதாவது நடக்குமா?
-
பால்போல் நிலவு காய்கின்ற இரவுகளில் நிலவொளியில் அமர்ந்து கூப்பிய கரங்களுடன் சந்திரனைப் பார்த்து, உனது ஒளிபோல் என் உள்ளத்தையும் களங்கமற்றதாக ஆக்குவாய் என்று பிரார்த்திப்பேன்
-
சாதனைகள் செய்யச்செய்ய,என்னுள் இருபப்வர் யாரோ அவரே உன்னுள்ளும் இருக்கிறார்,ஒரு மீனவனிலும் தோட்டியிலும் இருக்கிறார் என்பதைக் காண்பாய்.அப்போது பணிவு பிறக்கும்.
-
ஆகா,குருதேவர் என்னை எப்படி நடத்தினார்.என் மனம் புண்படும் வகையில் ஒரு வார்த்தைகூட சொன்னது கிடையாது.எனக்கு எது நன்மையை செய்யுமோ அதை மட்டுமே செய்தார்.வேலை செய்யாமல் சோம்பியிருந்தால் தீய எண்ணங்கள் மனத்தில் எழும் என்பார் அவர்
--
ஆகா! தட்சிணேசுவரத்தில் கழித்த நாட்கள்தான் எவ்வளவு அற்புதமானவை.குருதேவர் பாடுவார்.நான் நகபத் வரந்தாவில் மறைத்திருந்த மூங்கில் தட்டியின் பின்னால் மணிக்கணக்கின் நின்று அதனை கண்டு மகிழ்வேன்.அவரை கைகள்கூப்பி வணங்குவேன்.என்னவோர் ஆனந்தம்.மக்கள் இரவு பகலாக வருவார்கள்.இறைவனைப்பற்றி பேசுவார்கள்.
-
மனம் ஒரு மதயானை போன்றது.அதனால்தான் எல்லாவற்றையும் விவேகத்துடன் அணுகவேண்டும்.உண்மை எது எண்மையற்றது எது என்பதை ஆராய்ந்து அறிய வேண்டும்.இறைவனைப்பெறுவதற்கு மிகுந்து பாடுபட வேண்டும்.
--
தட்சிணேசுர நாட்களில் என்மனம் எப்படி இருந்தது! யாரோ புல்லாங்குழல் வாசிப்பார்கள்.இறைவனே புல்லாங்குல் வாசிப்பதாக எனக்கு தோன்றும்.உடனே கடவுளை காணவேண்டும் என்ற வேட்கை எழும்.அப்படியே நான் சமாதியில் ஆழ்ந்துவிடுவேன்
--

அன்னை சாரதாதேவியின் அன்பு மொழிகள்-பாகம்-4




அன்னை சாரதாதேவியின் அன்பு மொழிகள்-பாகம்-4
-
காவி உடை தரித்திருந்த ஒருவரைப்பார்த்து அனை்னை கூறினார்--இப்படி செய்யாதீர்கள்.முதலில் உண்மைப்பொருளின் அனுபூதி பெறுங்கள்.பின்பு காவி உடை அணிந்து மக்களிடம் செல்லலாம் .உங்கள் கால்களில் தலைவைத்து மக்கள் வணங்குவார்கள்.அதை ஏற்றுக்கொள்ளும் ஆற்றல் இல்லாவிட்டால் வீழ்ச்சி ஏற்படும்
-
பணம் இருப்பவன் கொடுப்பதன்மூலம் சேவை செய்யட்டும்.அது இல்லாதவன் ஜபதபங்களின் மூலம் சேவை செய்யட்டும், அதுவும் முடியாவிட்டால் இறைவனை சரணடை என்பார் குருதேவர்.
-
என்னைக் காக்க ஒரு தாயோ தந்தையோ யாரோ ஒருவர் இருக்கிறார் என்ற எண்ணம் மனத்தில் இருந்தாலே போதும்.
-
மனத்தை நிலைநிறுத்தி ஒருமுறை இறைவனின் நாமம் சொல்லி அவரை அழைப்பது லட்சம்முறை ஜபம் செய்வதற்குச் சமம்.மனம் ஈடுபடாமல் நாள்முழுவதும் ஜபம் செய்து என்ன பயன்?
-
பிள்ளைகள் பிறப்பதே ஒரு பாவம்தான்.உலகமே ஒரு மாயாஜாலம்,ஆனால் இது மாயாஜாலம் என்பது மனிதனுக்குப் புரியவில்லை என்பதுதான் வருத்தத்திற்குரிய விஷயம் என்பார் குருதேவர்
-
உலகியல் வாழ்க்கையில் ஏதாவது சுகம் இருக்கிறதா? இப்போது இருக்கிறது,மறு கணம் இல்லை.இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டுவிட்டவர்கள் என்ன செய்ய முடியும்? உண்மை புரிந்தாலும் அவர்களால் எதுவும் செய்ய முடியாது.
-
மகளே (இளம் பக்தை) குடும்ப வாழ்க்கை அப்படி பெரிதாக உன்னை என்ன செய்துவிடும்.நீ இல்லறத்தில் வாழ்வதும் மரத்தடியில் வாழ்வதும் ஒன்றுதான்.குடும்ப வாழ்க்கை இறைவனிலிருந்து வேறுபட்டதா? எல்லாவற்றிலும் அவரே இருக்கிறார். நீ ஒரு பெண்.நீ எங்கே போக முடியும்? வீட்டை துறந்து சென்றால் பல்வேறு விபரீதங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.
-
அவர் எங்கே எப்படி வைக்கிறாரோ அங்கேயே மகிழ்ச்சியுடன் வாழ்.இறைவனைநாட வேண்டும். அவரைப்பெற வேண்டும்-இதுவே லட்சியம். அவரிடம் நீ பிரார்த்தனை செய்வாயானால் உன் கையைப்பிடித்து அவரே அழைத்து செல்வார்.அவரைச் சரணடைந்து உன்னால் வாழ முடியுமானால் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை.
-
குருவும் சீடனும் சேர்ந்து வாழ்வது நல்லதல்ல.ஏனென்றால் அன்றாட சாதாரண வாழ்க்கையை காண்கின்ற சீடன் அவரை சாதாரண மனிதனாக கருதக்கூடும்.அது சீடனுக்கு பாதகமாக அமையும்.ஆகவே சீடன் குருவிலிருந்து சற்று விலகி வாழ்ந்து அவ்வப்போது அவரை சந்திப்பது நல்லது.அதேவேளைில் சீடன் குருவை அவ்வப்போது சந்திக்காமலும் இருக்க்ககூடாது.
-
மகளே! நானும் என் வாழ்நாள் முழுவதும் ஆன்மீகத்தில்தான் இருக்கிறேன். நீ வயதில் மிகவும் இளையவள்.ஆன்மீகத்தை நாடி இங்குமங்கும் அலைவது உனக்கு ஆபத்தாகவே முடியும்.நான் சொல்வதை கேள்.நீ எந்த நிலையில் வாழ்ந்தாலும் உலகின் கறை உன்னை படியாது..குருதேவர் இருக்கிறார் எதற்கும் பயப்படாதே.எதற்கும் கலங்காதே
-
-
ஸ்ரீராமகிருஷ்ணரின் ஆன்மீகக்குழுவில் இணைய 9789 374 109 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் அனுப்பவும்

Friday, 3 August 2018

ஸ்ரீமத் பகவத்கீதை-அத்தியாயம்-7


ஸ்ரீமத் பகவத்கீதை-அத்தியாயம்-7

-
ஸ்ரீகிருஷ்ணர் சொன்னது
-
7.1 பார்த்தா, என்னிடம் மனதைவைத்து என்னை அடைக்கலம் புகுந்தவனாக, யோகம் பயின்று என்னை முற்றிலும் அறிவது எப்படி என்பதை சொல்கிறேன் கேள்
-
7.2 நான் உனக்கு விஞ்ஞானத்துடன் கூடிய இந்த ஞானத்தை முழுவதும் சொல்கிறேன். இதை அறிந்த பிறகு, இங்கு மேலும் அறியவேண்டியது வேறு ஒன்றும் இருக்காது
-
7.3 ஆயிரக்கணக்கான மனிதர்களுள் யாரோ ஒருவர் முக்தியடைவதற்காக முயற்சிக்கிறான். முயற்சிக்கின்ற நல்லவர்களில் யாரோ ஒருவன் என்னை உள்ளபடி அறிகிறான்
-
7.4 நிலம், நீர், அக்னி,காற்று,வானம்(இவை பஞ்சபூதங்கள்),மனம்,புத்தி, அகங்காரம் என்று என்னுடைய பிரகிருதி எட்டுவிதமாக பின்னப்பட்டிருக்கிறது (மூலப்பொருள் கூட்டுப்பொருள் என்று இரண்டு உள்ளன. வானம்,அக்னி மூலப்பொருள். நீர்,நிலம்,காற்று இந்த மூன்றும் மற்றவைகளுடன் கலந்து கூட்டுப்பொருளாக உள்ளன)
-
7.5 ஆனால் இது (மேலே சொன்ன எட்டும் ) கீழானது. இதிலிருந்து வேறானதும் உயிர்களின் ஜீவனான என்னுடைய மேலான பிரகிருதியை(சாங்கிய தத்துவத்தை படிக்கவும்) அறிவாயாக. தோள்வலிமையுடையோய், இந்த பிரபஞ்சம் இதனால் தாங்கப்படுகிறது.
-
7.6 எல்லா உயிர்களும் இந்த இரண்டு யோனிகளை பிறப்பிடமாக கொண்டுள்ளது என்று அறிந்துகொள்(மேலே சொன்ன எட்டுக்கும் ஒரு யோனி பிறப்பிடம். பிரகிருதிக்கு இன்னொரு யோனி பிறப்பிடம்). நான் பிரபஞ்சம் முழுவதற்கும் வெளிப்படுவதற்கும்,அதுபோல பிரபஞ்சம் முழுவதும் ஒடுங்குவதற்கும் காரணம்
-
7.7 தனஞ்சயா, என்னைவிட மேலானது வேறு ஒன்றும் இல்லை. நூலிலே மணிகளை கோர்த்துவைத்ததுபோல, இவையாவும் என்னிடம் கோர்க்கப்பட்டிருக்கின்றன
-
7.8 பார்த்தா, நான் நீர்களில் ரசமாகவும்(சுவை), சந்திர சூரியர்களில் ஜோதியாகவும்(ஒளி), எல்லா வேதங்களில் பிரணவ மந்திரமாகவும்(ஓம்) வானத்தில் ஒலியாகவும், மனிதர்களில் ஆண்மையாகவும் இருக்கிறேன்
-
7.9 மண்ணில் நறுமணமாகவும், தீயில் சுடராகவும்(சுடர் வீட்டை பிரகாசிக்க செய்கிறது) இருக்கிறேன். எல்லா உயிர்களிலும் ஜீவனாகவும், தபஸ்விகளின் தவமாகவும் இருக்கிறேன்
-
7.10 பார்த்தா என்னை எல்லா உயிர்களினுடைய ஆதிவித்து என்று அறி. புத்திமான்களின் புத்தியாக இருக்கிறேன்
தேஜஸ்விகளின் தேஜஸ்(பிரம்ச்சர்யத்திலிருந்து வரும் ஆற்றல்) ஆக இருக்கிறேன்
-
7.11 பரதத் தலைவா, பலவான்களுடைய ஆசையும்,ராகமும் (கண்ணில் பட்டதை  தனதாக்கிகொள்ளுதல்) தீங்கப்பெற்ற பலமாக இருக்கிறேன். உயிர்களிடத்தில் தர்மத்திற்கு முரணாகாத காமமாக இருக்கிறேன்
-
7.12 இன்னும்  சத்துவகுணத்தில், ரஜோ குணத்தில்,தமோ குணத்தில் உருவான பொருட்கள் அனைத்தும் என்னிடமிருந்தே தோன்றியவைகள் என்று அறிக. ஆனால் நான் அவைகளை சார்ந்து இல்லை. அவைகள் என்னை சார்ந்துள்ளன.
-
7.13 இந்த முக்குணங்களால் உருவான (சத்வம்,ரஜஸ்,தமஸ்) பொருட்களால் மயங்கி, இதற்கு மேலாக இருக்கும் அழிவற்றவனான என்னை அறிவதில்லை.
-
7.14 உண்மையில் குணங்களால் ஆன என்னுடைய இந்த தேவமாயை தாண்டமுடியாதது. யார் என்னையே சரணடைகிறார்களோ அவர்களே இந்த மாயையை தாண்டுகிறார்கள்.
-
7.15 பாபச் செயல்களை செய்யும் மூடர்கள், மனிதர்களில் மட்டமானவர்கள், மாயையினால் ஞானம் அபகரிக்கப்பட்ட அசுர இயல்னை அடைந்தவர்கள் என்னை போற்றுவதில்லை
-
7.16 அர்ஜுனா, துன்புற்றவன், ஞானத்தை தேடுபவன், பொருட்களை தேடுபவன், ஞானத்தை அடைந்தவன் என நான்குவிதமாக நல்லவர்கள் என்னை போற்றுகிறார்கள்
-
7.17 அவர்களுள் நித்தியயுக்தனான. மாறாத பக்தியுள்ள,ஞானி மேலானவன். ஏனெனில் நான் ஞானிக்கு மிகப்பிரியமானவன் அவனும் எனக்கு பிரியமானவன்.
-
7.18 இவர்கள் எல்லோரும் நல்லவர்களே ஆயினும் ஞானி என் சொரூபமோனவன் என்பது என் கருத்து. ஏனென்றால் யோகத்தில் நிலைபெற்றிருக்கும்  அவன், மிகஉயர்ந்த நிலையில் இருக்கும் என்னில்
நிலைபெற்றிருக்கிறான்.
-
7.19 பல பிறவிகளின் இறுதியில் ஞானி எல்லாம் வாசுதேவனே(இறைவனே) என்று என்னை வந்தடைகிறான். அந்த மகாத்மா கிடைப்பதற்கு அரியவன்.
-
7.20 அந்த அந்த ஆசைகளால், அறிவற்றவர்கள், அந்த அந்த நியமத்தை கடைபிடித்து தங்களது இயல்பினால் தூண்டப்பட்டு பிற தேவதைகளை போற்றுகிறார்கள்
-
7.21 எந்த எந்த பக்தன் எந்த எந்த வடிவத்தை நம்பிக்கையோடு வழிபட விரும்புகிறானோ, அவர்களுடைய அந்த அந்த நம்பிக்கையை நான் அசையாததாகச் செய்கிறேன்.
-
7.22 அந்த பக்தன் சிரத்தையோடு கூடியவனாய் அந்த தேவதையை ஆராதிக்கிறான். ஆனாலும் (அந்த தேவதை மூலம்) அவன் விரும்பும் ஆசைகளை வழங்குபவன் நானே
-
7.23 ஆனால் அற்ப புத்தியுள்ள அவர்கள் அடையும் பலன் குறைவானது. தேவர்களை (சூடசும உடலில் வாழும் முன்னோர்களை) வணங்குபவர்கள் தேவர்களை அடைகிறார்கள். என் பக்தன் என்னை அடைகிறான்.
-
7.24 என்னுடைய அழிவற்ற ஒப்பற்ற மேலான நிலையை அறியாத அறிவற்றவர்கள், கண்ணுக்கு தென்படாத என்னை, கண்களுக்கு தென்படும் இயல்பை அடைந்தவனாக எண்ணுகின்றனர்.(இறைவன் கண்களுக்கு தென்படாதவர்)
-
7.25 யோகமாயையினால் நன்கு மூடப்பட்டுள்ள நான் எல்லோருக்கும் தெரிவதில்லை. இந்த மூட உலகம்(மக்கள்) பிறவாத அழியாத என்னை அறிவதில்லை
-
7.26 அர்ஜுனா, சென்றனவும், இருப்பனவும், வருவனவாவும் ஆகிய உயிர்களை நான் அறிவேன். ஆனால் என்னை யாரும் அறியார்
-
7.27 அர்ஜுனா, விருப்பு வெறுப்பிலிருந்து உண்டாகும் இருமை (நன்மை-தீமை,லாபம்-நஷ்டம்,விருப்பு-வெறுப்பு போன்ற) மோகத்தால் எல்லா உயிர்களும் பிறக்கும்போதே மோகமடைகின்றன
-
7.28 ஆனால் புண்ணிய கர்மங்களுடைய எந்த ஜனங்களுக்கு பாபம் முடிவடைகிறதோ, இருமை மோகத்திலிருந்து விடுதலையடைந்த அவர்கள், உறுதியான விரதமுடையவர்களாய் என்னை வழிபடுகிறார்கள்.
-
7.29 முதுமையிலிருந்தும், மரணத்திலிருந்தும் விடுபடுவதற்கு என்னை வழிபட்டு, யார் முயற்சி செய்கிறாரோ அவர்கள்  பிரம்மத்தையும், தன்னையும், உலகிலுள்ள கர்மங்களையும் அறிகிறார்கள்
-
7.30 யார் என்னை அதிபூதம், அதிதெய்வம், அதியக்ஞம் ஆகியவற்றுடன் கூடியவனாகவும் அறிகிறார்களோ, யோகத்தில் நிலைநின்ற மனதையுடைய அவர்கள் சாகும் தருவாயில் என்னை அறிகின்றனர்.
-
அத்தியாயம் ஏழு நிறைவுற்றது.
-